மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்!

நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற  சிறகு அவரைக்காய்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்!

புறா பாண்டி

நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற  சிறகு அவரைக்காய்!

‘‘வீட்டுத்தோட்டத்தில் சிறகு அவரை செடியை வளர்க்கலாமா? இதன் பயன்பாடுகள் குறித்து விளக்கமாகச் சொல்லவும்.’’

நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற  சிறகு அவரைக்காய்!கே.ஆர்.நவநீதன்,
சென்னை.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் வி.வீரப்பன் பதில் சொல்கிறார்.

‘‘மலேசியா நாட்டுக்குப் பயணம் செய்தபோதுதான், இந்தச் சிறகு அவரைக்காய் (Winged Beans) பற்றிக் கேள்விப்பட்டேன். அங்கு இந்த அவரைக்காய்தான் பிரதான உணவாக உள்ளது. இந்தியாவிலும் இது பயிரிடப்படுகிறது என்ற தகவல் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நம்ம ஊர் அவரைக் கொடிபோலப் படர்ந்து காய்க்கும். இதன் தாவரவியல் பெயர், ‘சொபோகார்பஸ் டெட்ராகோனலோபஸ்’ (Psophocarpus tetragonolobus) ஆகும்.

தமிழில் இதன் வடிவத்தை வைத்து ‘சிறகு அவரை’ என்றும் மலையாளத்தில் ‘சதுரவரை’ என்றும் வடமாநிலங்களில் ‘கோவாபீன்’ என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ‘நியூகினியா’ என்றாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும், வெப்ப மண்டலங்களான தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற  சிறகு அவரைக்காய்!

சிறகு அவரைக்காய், பயறு வகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. தனக்குத் தேவையான தழைச்சத்தை வேரில் வாழும் பாக்டீரியாக்களின் துணையுடன் தயாரித்துக்கொள்ளும் தன்மைகொண்டது. பூச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்ட பயிர் இது. ஒருமுறை விதை ஊன்றினால் போதும், அடுத்த முறை விதைக்கத் தேவையில்லை. மீண்டும் நீர்ப்பாசனம் செய்து, இயற்கை உரங்கள் வைத்தால், துளிர்விட்டு வளர்ந்து, விளைச்சல் கொடுக்கத் தொடங்கும். விதைத்த 90-ம் நாளில் நீல நிறப் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற இரண்டாம் வாரத்தில் 15-லிருந்து 22 செ.மீ. நீளமுடைய, மிருதுவான காய்கள் உருவாகும். ஒரு செடியிலிருந்து நான்கு முதல் ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும்.

இவற்றின் இலைகள், பூக்கள், வேர்க்கிழங்குகளைக்கூட உணவாகப் பயன்படுத்தலாம். சோயாபீன்ஸ்போலவே அதிகளவில் புரதச்சத்து (40%) கொண்டது. இலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் தாதுப்பொருள்களான சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, போலிக் அமிலங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள தட்ப வெப்ப நிலைக்கு சிறகு அவரைக்காய்ச் சிறப்பாக விளைச்சல் கொடுக்கும். ஆடிப்பட்டத்தில் தான் இதை விதைக்க வேண்டும். இந்தச் சிறகு அவரைக்காயைப் பற்றி, சில ஆண்டுகளாகப் பட்டுக்கோட்டை, கரம்பயம், ஆம்பலாப்பட்டு, தம்பிக்கோட்டை, பரக்கலக்கோட்டை... பகுதிகளில் பரிசோதனை அடிப்படையில் வளர்த்து பார்த்தோம். நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட மிக சிறப்பாகவே விளைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக வீட்டுத்தோட்டங்களுக்கு ஏற்ற காய்கறிச் செடிகளில் இதுவும் ஒன்று என்பதை அறிந்து கொண்டோம். மேலும், இதை தென்னை மரங்களில் ஏற்றி சிறந்த உயிர் மூடாக்காகவும், மூடுபயிராகவும் வளர்க்கலாம். இதனால் தென்னையில் தோன்றும் வாடல், சாறுவடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். பசுந்தழை உரமாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம். மனிதர்களுக்கும் சிறகு அவரைக்காய்ச் சிறந்த உணவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.’’

தொடர்புக்கு, செல்போன்: 80128 92818.

நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற  சிறகு அவரைக்காய்!

‘‘சமீபத்தில்தான் அசோலாவைப் பற்றிக் கேள்விப்பட்டோம். எங்களிடம் கறவை மாடுகள் உள்ளன. அசோலாவைக் கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்கலாமா?’’

நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற  சிறகு அவரைக்காய்!ஆர்.சுகுணா, புதுச்சேரி.

அசோலா வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘அசோலா’ பாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

‘‘பார்ப்பதற்குக் கம்மல் போல இருப்பதால் ‘கம்மல் பாசி’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். அய்யா ‘இயற்கை வேளாண்மை விஞ்ஞானி’ நம்மாழ்வார் இதைக் கம்மல் பாசி என்றே அழைத்து வந்தார். ஆரம்பக்காலங்களில் நெற்பயிர்களுக்கு மட்டும்தான், அசோலாவை உரமாகப் பயன்படுத்தினோம். நம்மாழ்வார் அய்யாதான் ஆடு, மாடு, கோழி, மீன்களுக்கும்கூட அசோலாவைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார். இதன் பிறகு, கால்நடை வளர்ப்பவர்களும் அசோலாவை வளர்க்கத் தொடங்கினார்கள்.

இதைப் பால் மாடுகளுக்குக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைப்பதை அனுபவபூர்வமாகப் பார்த்துள்ளோம். அசோலா கொடுப்பதால் 25% தீவனச் செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்தும் நாம் சாப்பிடலாம்.

ஒருமுறை வளர்க்கத் தொடங்கிவிட்டால், பலமுறை வளர்ந்துப் பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும். குறைந்த செலவில், எளிய முறையில் அசோலாவை வளர்க்க முடியும். அதற்குத் தொட்டியில் 7 சென்டி மீட்டர் முதல் 10 சென்டிமீட்டர் உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும். பாலித்தீன் ஷீட் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தியும் தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். சூரியஒளி படும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.

தொட்டியில் இருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, பாறைத்தூள் ஒரு கைப்பிடி, அசோலா ஒரு கைப்பிடி போட்டுக் கலக்கிவிடவும். அடுத்த ஒரே வாரத்தில் பத்து மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டும் என்றால், சாணம் மற்றும் பாறைத்தூளைத் தொட்டியில் போட்டால் போதும். அப்படியே பெருக ஆரம்பித்துவிடும்.

இந்த அசோலாவை நெல் வயலுக்கு இட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும். வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது, அசோலாவை மிதித்து விட வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என முக்கியமான சத்துகள் அடங்கிய அருமையான உயிர் உரம்தான் அசோலா. அசோலாவை ஒருமுறை வளர்க்க தொடங்கிவிட்டால், அதை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். செலவு குறைந்த இந்த அற்புதமான அசோலாவை அனைத்து விவசாயிகளும் வளர்த்து பயன்பெறலாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 97903 69233.

நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற  சிறகு அவரைக்காய்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.