மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - அசத்தலான இயற்கைப் பண்ணை!

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - அசத்தலான  இயற்கைப் பண்ணை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - அசத்தலான இயற்கைப் பண்ணை!

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்மேட்டுப்பாத்தியில் கீரைகள்... வட்டப்பாத்தியில் காய்கறிகள்... பயணம்ஜி.பழனிச்சாமி - படங்கள்: க.தனசேகரன்

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது ‘பசுமை விகடன்’ ஒரு நாள் விவசாயி என்ற பெயரில் அவர்களைத் தகுதியுள்ள விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் தில்லை சிவக்குமார், கல்லூரி மாணவர் சுதன், சமூக ஆர்வலர் மங்கையர்க்கரசி, எஸ்டேட் உரிமையாளர் செல்வி சேகரன், தனியார் பள்ளி நிர்வாகி கலைச்செல்வி, காய்கறி வியாபாரி கிருஷ்ணவேணி, குடும்பத்தலைவி சாந்தி மற்றும் காளான் விற்பனையாளர் லோகநாதன் ஆகியோர்தான் இந்த முறை ஒரு நாள் விவசாயிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.

இவர்களை நாம் அழைத்துச் சென்றது, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைச்சாரலில் பொட்டிரெட்டிபட்டி கிராமத்திலுள்ள ‘சத்தியமூர்த்தி இயற்கை வேளாண் பண்ணை’க்கு. பண்ணைக்குள் நுழைந்ததும், அனைவருக்கும் இளநீர் கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார், பண்ணையின் உரிமையாளர் அனிதா.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - அசத்தலான  இயற்கைப் பண்ணை!

ஒரு நாள் விவசாயிகள், இளநீரைக் குடித்துக் கொண்டே, அனிதாவிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களுக்குத் தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார், அனிதா, “என்னோட ஊரு ஈரோடு. பரம்பரையான விவசாயக் குடும்பம். எனக்கு விவசாயத்துல பெரிய ஈடுபாடெல்லாம் இல்லை. படிச்சு முடிச்சதும் கல்யாணம் ஆயிடுச்சு. கல்யாணம் முடிஞ்சு கணவரோட ஊரான நாமக்கல்லுக்கு வந்துட்டேன். கணவர் குடும்பத்துக்கு வியாபாரம்தான் தொழில். இதோட பல ஏக்கர்ல இங்க இயற்கை விவசாயமும் செஞ்சிட்டிருந்தாங்க. இது நாப்பது ஏக்கர் பண்ணை. 2012-ம் வருஷம் நம்மாழ்வார் ஐயா இங்க வந்து ரெண்டு நாள் தங்கி, மொத்த பண்ணையையும் ஒரு இடம் பாக்கியில்லாமல் சுத்திப் பார்த்தார். கிளம்பும்போது, ‘முழு இயற்கை விவசாயப்பண்ணையா வடிவமைக்கத் தேவையான அத்தனை அம்சங்களும் இங்க இருக்கு. சிலுசிலு ஈரக்காத்து, பண்ணைக்குள்ள ஓடுற சிற்றோடை. மாசுபடாத மண்ணுனு எல்லாமே சூழலுக்கு உகந்ததா இருக்கு. இதைக் கெட்டுப்போக விட்டுடாதீங்க’னு சொன்னார். என்னோட மாமனாருக்கும் கணவருக்கும் ஐயா சொன்னதுல முழு உடன்பாடு. ஆனா, அதை எடுத்துச் செய்ய அவங்களுக்கு நேரமில்லை. அதனால நான் களமிறங்கிட்டேன்.

பசுமை விகடன்ல வெளியாகுற தகவல்களைப் படிச்சும், முன்னோடி விவசாயிகள்கிட்ட போன்ல ஆலோசனைகள் கேட்டும் இயற்கை விவசாயத்தை முழுசா செய்ய ஆரம்பிச்சேன். போன மாசம்கூட வானகத்தில் நடந்த ஒரு மாச இயற்கை வேளாண்மை பயிற்சியில் கலந்துக்கிட்டு பல தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுகிட்டு வந்திருக்கேன்” என்ற அனிதா, அனைவரையும் காய்கறித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

“ஏழாயிரத்து ஐநூறு சதுரடியில இந்தக் காய்கறித்தோட்டத்தை அமைச்சிருக்கோம். இதுல இருந்து வருஷம் முழுவதும் வீட்டுக்குத்தேவையான அளவு காய்கறிகள், கீரைகள் கிடைச்சுட்டே இருக்கும்” என்ற அனிதாவிடம்,  “அதெப்படி வருஷம் முழுவதும் கிடைக்கும்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார், மங்கையர்க்கரசி.

“அதுதான் கலப்பு பயிர் காய்கறி சாகுபடி. இதுவும் நம்மாழ்வார் ஐயா சொல்லிக் கொடுத்ததுதான். ஒரே விதமான காய்கறிகளை மட்டும் விதைச்சா, அதுல காய்ப்பு முடிஞ்சதும் காய்க் கிடைக்கிறது நின்னுடும். இங்க நிறைய வகையான காய்கறிகள் இருக்கு. அதனால ஒண்ணு மாத்தி ஒண்ணு கிடைச்சுட்டே இருக்கும். சுழற்சி முறையில காய்கறிகளை விதைச்சுட்டே இருக்குறதால காய் கிடைச்சுட்டே இருக்கும்” என்றார், அனிதா.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - அசத்தலான  இயற்கைப் பண்ணை!

“என்னென்ன காய்கறிகள் இருக்கு?” என்று கேட்டார், கிருஷ்ணவேணி.

“வாங்க காட்டுறேன்” என்றபடி அனைவரையும் பாத்திக்குள் அழைத்துச் சென்றார், அனிதா. “வட்டப்பாத்தி, மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்தினு மூணு முறையில பாத்திகள் அமைச்சு கீரை, காய்கறிகளைச் சாகுபடி செய்றேன். புடலை, பீர்க்கன், பூசணி, பாகல், கொடி அவரைனு கொடி வகைப் பயிர்கள், வரப்பு ஓரங்களில் குச்சியில பந்தல் போட்டு படர விட்டிருக்கேன். செங்கீரை, பாலக் கீரை, புளிச்சக் கீரை, மிளகுதக்காளி கீரை நாலும் மேட்டுப்பாத்தியில இருக்கு. இப்போ, செங்கீரைதான் பறிப்பில் இருக்கு” என்று சொல்லிக்கொண்டே கீரையைப் பறித்துக் காட்டிய அனிதா, “எங்க... எல்லோரும் பறிங்க பார்க்கலாம்” என்றார். அனைவரும் அதன்படி கீரையை அறுவடை செய்தனர்.

தொடர்ந்து, கத்திரி, மிளகாய், வெண்டை, சின்ன வெங்காயம், அன்னாசி, கரும்பு, செடி முருங்கை, தர்பூசணி அனைத்தையும் காட்டிய அனிதா, “இது எல்லாமே நாட்டு ரகங்கள்தான்” என்றார்.

“நாட்டுரக விதைகளெல்லாம் எங்க கிடைக்குது?” என்று கேட்டார், லோகநாதன்.

“முதல் போகத்துக்கு விதைக்கிறதுக்கு மட்டும் இயற்கை விவசாயிகள்கிட்ட விதைகளை வாங்கிட்டு வந்தேன். அதுக்கப்புறம் இங்க இருக்குற செடிகள்ல இருந்தே விதைகளை எடுத்துக்கிறேன். அப்படியே செடியிலேயே பழுக்கவிட்டு அதுல இருந்து விதை எடுத்துக்கலாம். அங்க பாருங்க, அந்தப் புடலங்காய் முத்திப் போய்த் தொங்கிட்டு இருக்குது பாருங்க. அதை விதைக்குத்தான் விட்டிருக்கேன். இதைப்பறிச்சு துண்டு துண்டா வெட்டி சுத்தமான தண்ணீர்ல போட்டு கசக்குனா விதைகள் பிரிஞ்சு வந்துடும். தண்ணீரை வடிகட்டி விதைகளை எடுத்து, பஞ்சகவ்யா கரைசலில் முக்கி எடுத்து நிழலில் காய வெச்சு, காத்து படாதபடி பருத்தித் துணியில் முடிஞ்சி வெச்சிடணும். அதை அடுத்த போகத்துல விதைச்சுக்கலாம். எந்த நாட்டு ரகக் காயாக இருந்தாலும் அதுல விதை எடுத்துக்க முடியும்” என்றார்.

“வீரிய ரக விதைகளுக்கும் நாட்டு ரக விதைகளுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டார், சுதன்.

“அதிக விளைச்சலுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது வீரிய விதைகள். இந்த விதைகளுக்கு மறு முளைப்புத் திறன் இருக்காது. ஒவ்வொரு முறையும் விதை வாங்கித்தான் விதைக்கணும். ஆனா, நாட்டு ரகம் அப்படியில்லை. விவசாயிகள் சுயசார்போட இருக்கணும்னா நாட்டு ரகங்களைத்தான் விதைக்கணும். இதுவும் நம்மாழ்வார் சொல்லிக் கொடுத்ததுதான்” என்றார், அனிதா.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - அசத்தலான  இயற்கைப் பண்ணை!

“நாட்டுரகக் காய்கறிகளுக்கு நோய் தாக்குதல் வருமா... வந்தா என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டார், சாந்தி.

“பூச்சி, புழு, பூஞ்சணத் தாக்குதல் எல்லாமே நாட்டுரகக் காய்கறிகள்லயும் வரும். அததுக்குத் தகுந்த இயற்கை வழிமுறைகள் இருக்கு. அதை ஒழுங்கா கடைப்பிடிச்சாப் போதும். காய்கறிகளை விதைக்கிறப்பவே பாத்திக்கு ஒரு ஆமணக்குச் செடி இருக்குற மாதிரி ஆமணக்கு விதைகளை விதைச்சு விட்டுடுவேன். வயலுக்கு வர்ற பூச்சிகள் இந்த ஆமணக்குச் செடிகள்லதான் முதல்ல உட்காரும். அங்கேயே அதுக்குத் தேவையான உணவு கிடைச்சிடறதால, மத்த காய்கறிகளுக்குப் பூச்சிகள் வராது. ஆமணக்கு மூலமா ஒரு குறிப்பிட்ட அளவு வருமானமும் கிடைச்சுடும். அதையும் மீறி காய்கறிச் செடிகள்ல பூச்சி, புழுக்கள் தாக்கினா... 4 லிட்டர் வேப்பெண்ணெய், 1 லிட்டர் புங்கன் எண்ணெய் ரெண்டையும் கலந்து அதோட கொஞ்சம் காதி சோப்பைக் கரைச்சு வெச்சுக்குவேன். இந்தக் கரைசல்ல 100 மில்லியை எடுத்து 10 லிட்டர் தண்ணீர்ல கலந்து செடிகள் மேல புகை மாதிரி தெளிச்சா, அசுவினி, அந்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈன்னு எல்லா பூச்சிகளும் ஓடிப்போயிடும்” என்றார், அனிதா.

“40 ஏக்கருக்கும் எப்படிப் பாசனம் செய்றீங்க, அவ்வளவு தண்ணி இருக்கா?” என்று கேட்டார், செல்வி சேகரன்.

“வெள்ளாமை இருக்கிற நிலத்தின் அடி மண்ணுல எப்பவும் ஈரப்பதம் இருந்துட்டே இருக்கணும். அதனால, மழை இல்லாத காலங்கள்ல வாரம் ரெண்டு தடவை பாசனம் செஞ்சுடுவேன். 40 ஏக்கர்லயும் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுருக்கேன். அதனால, இருக்குற தண்ணீரைச் சிக்கனமா பயன்படுத்த முடியுது” என்ற அனிதா, “இந்தக் காய்கறித் தோட்டத்தைப் பார்த்து அதே மாதிரி நீங்க வீட்டுல மாடித்தோட்டமாவது போடுவீங்களா” என்று கேட்டார்.

அனைவரும் ஒருமித்த குரலில், “கட்டாயம் செய்வோம்” என்றனர்.

அடுத்து அனைவரையும் 25 சென்ட் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த பசுமைக்குடிலுக்கு அழைத்துச் சென்றார், அனிதா.

“சாதாரணமா வெட்டவெளியில் விவசாயம் செய்றதுக்கும் பசுமைக் குடிலுக்குள்ள விவசாயம் செய்றதுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டார், தில்லை சிவக்குமார்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - அசத்தலான  இயற்கைப் பண்ணை!

“திறந்த வெளியில் 1 ஏக்கர் நிலத்தில் எடுக்குற மகசூலை 25 சென்ட் அளவு பசுமைக்குடில்ல இருந்து எடுத்திடலாம். பசுமைக் குடிலுக்குள் பூச்சிகள் தாக்காது. பயிருக்குத் தேவையான சீதோஷ்ண நிலையை உருவாக்கித் தர முடியும். பாசனம் செய்ற தண்ணீர் ஆவியாகாது. அதனால, குறைஞ்ச அளவு தண்ணீரே போதுமானதா இருக்கும். வாய்க்கால், வரப்பு அமைக்கத்தேவையில்லை. நீளமா பாத்தி அமைச்சு அதுல விவசாயம் செய்றதால, குறைஞ்ச பரப்பிலேயே அதிகச் செடிகளை நட முடியும். அதனாலதான் மகசூலும் அதிகமாகக் கிடைக்குது. மழை, வெயில்னு எதுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை. எவ்வளவு மழை பேஞ்சாலும் செடிகளுக்குப் பாதிப்பு இருக்காது. கடுமையான வெயில் அடிச்சாலும் செடிகள் கருகாது.

செயற்கையா சீதோஷ்ண நிலையை உருவாக்கித் தர்றதால பட்டம், பருவமெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. திறந்த வெளியில் மழைக் காலத்துல ஒரு பயிர் வளராதுனு வெச்சுகோங்க. அதே பயிரை, பசுமைக்குடிலுக்குள்ள மழைக் காலத்திலேயும் வளர்த்துட முடியும். பசுமைக்குடில் அமைக்கத் தோட்டக்கலைத்துறை மூலமா மானியமும் கொடுக்கிறாங்க. சமவெளிப்பகுதிகள்ல மிளகாய், வெங்காயம், தக்காளி, வெள்ளரினு பசுமைக்குடிலுக்குள்ள சாகுபடிப் பண்ணலாம். மலைப்பகுதிகள்ல கேப்ஸிகம், கொய்மலர்கள்னு சாகுபடி செய்யலாம். இங்க தக்காளி போட்டிருந்தோம். காய்ப்பு முடியுற தறுவாயில் இருக்கு. இன்னும் ஒரு அறுவடை வரும். அதுக்கப்புறம் வேற பயிர் எதையாவது சாகுபடி பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்று பசுமைக் குடிலுக்கு நீண்ட விளக்கம் அளித்தார், அனிதா.

ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் பசுமைக்குடிலுக்குள் சென்று சுற்றிப் பார்த்து வந்தனர்.

பண்ணைக்கழிவுகளைத் தூளாக்கும் இயந்திரம், தென்னைச் சாகுபடி, நாட்டு மாடுகள் போன்றவை குறித்த தகவல்கள், ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள் ஆகியவை அடுத்த இதழில்...

- பயணம் தொடரும்

நீங்களும் ஒரு நாள் விவசாயி ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை. சனி, ஞாயிறு விடுமுறை)

மாணவர், வேலை தேடிக்கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.