மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!

மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!

ஓவியம்: ஹரன்

த்திரி வெயில் சுள்ளென்று அடித்ததால், சூட்டைத் தணிப்பதற்காகத் தடுப்பணையில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்துவிட்டு துணிகளை அலசிக்கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். ‘காய்கறி’ கண்ணம்மாவும், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் மேலேறி வந்த ஏரோட்டி, “என்ன, நிலாக் காய்ஞ்சுட்டு இருக்குனு நினைப்பா... சாவகாசமா நடந்து வந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.

“உன்னையப் பாக்கணும்னுதான் வெயிலுன்னும் பார்க்காம வந்துட்டு இருக்குறோம், நீ எகத்தாளம் பேசிட்டு இருக்குற” என்றார், வாத்தியார். அப்படியே பேசிக்கொண்டே மூவரும் தோட்டத்துக்குள் வந்து அமர்ந்தவுடன், கம்பங்கூழை எடுத்து வந்தார், ஏரோட்டி. அதை ஆளுக்குக் கொஞ்சமாகக் குடித்தனர். கூழைக் குடித்துவிட்டு, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.

“மதுரையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட முதலமைச்சர் பழனிசாமிகிட்ட கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, ஒரு மனு கொடுத்திருக்கார். அதுல ‘கடுமையான வறட்சியால, கரும்பு விவசாயிகள் இந்த வருஷம் வாங்கின கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுறாங்க. அதனால கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தராமல் வெச்சிருக்கிற 510 கோடி ரூபாய் பாக்கித் தொகையை உடனே கொடுக்கச் சொல்லி அரசாங்கம் உத்தரவு போடணும். அதோட, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் கொள்முதல் விலை கொடுக்க ஏற்பாடு செய்யணும்’னு கோரிக்கை வெச்சிருக்கார்” என்றார்.

மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!

“ஆமா, உடனே செஞ்சுட்டுதான் மறுவேலை பாக்கப்போறார், முதலமைச்சர்” என்ற ஏரோட்டி, அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

“விவசாயிகள் தற்கொலை அதிகரிச்சுட்டே இருக்கு. அதைத் தடுக்கணும்னு மக்கள் அமைப்பு ஒண்ணு, உச்ச நீதிமன்றத்துல பொதுநல வழக்குப் போட்டிருந்தது. அந்த வழக்குக்காக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செஞ்சது. அதுல, ‘சொந்தக் காரணங்களுக்காகத்தான் விவசாயிகள் தற்கொலை செஞ்சிருக்காங்க’னு சொல்லியிருந்துச்சு. அடுத்து நடந்த விசாரணைக்கு அப்புறம் நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘குற்றம் குறை கண்டுபிடிக்கிறதுக்காக இந்த வழக்கை விசாரணை செய்யலை. தற்கொலை செஞ்சுக்கிட்ட விவசாயிகளோட குடும்பத்துக்கு ஏதாவது நன்மை கிடைக்கணுங்கிறதுக்காத்தான், வழக்கை நடத்துறோம். விவசாயிகள் தற்கொலை விவகாரத்துல, தமிழக அரசு வார்த்தை ஜாலங்கள் காட்டுறதை ஏத்துக்க முடியாது. விவசாயிகளோட கஷ்டங்களைப் போக்குறதுக்குத் தீர்க்கமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கணும்’னு உத்தரவு போட்டிருக்கார்” என்றார்.

“நீதிமன்றம் சொல்றதையெல்லாம் உடனே செஞ்சிடுவாங்களா என்ன?” என்று கேட்ட வாத்தியார் அடுத்த செய்திக்குத் தாவினார்.

“மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துங்கனு மத்திய அரசும் மாநில அரசும் மாறி மாறி விளம்பரம் பண்றாங்க. ஆனா, அதுக்கான முயற்சிகளை எடுக்க மாட்டேங்கிறாங்க. தமிழ்நாட்டுல விவசாயப் பயன்பாட்டுக்காகக் கிட்டத்தட்ட 20 லட்சம் பம்ப்செட்கள் மின்சாரத்துல இயங்கிட்டு இருக்கு. இதுல, பெரும்பாலான பம்ப்செட்டுகள், இலவச மின்சார இணைப்புலதான் இயங்குது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கிறதுக்காக வேளாண்மைப் பொறியியல் துறை மூலமா, மானிய விலையில் சோலார் பம்ப்செட் வழங்குற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திட்டு இருக்கு. இந்தத் திட்டத்துல சேருறதுக்காக இதுவரை ரெண்டு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் விண்ணப்பி ச்சிருக்காங்க. ஆனா, சில ஆயிரம் பேருக்குத்தான் இதுவரை சோலார் பம்ப்செட் கொடுத்திருக்காங்களாம். சோலார் பேனல் கிடைக்கலைனு காரணம் சொல்லி தாமதப்படுத்திட்டு இருக்கிறாங்களாம்” என்றார்.

“நம்ம நாட்டுல விவசாயிகளோட பிரச்னைகளுக்கு முடிவே இருக்காது போல” என்று சொன்ன காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு வெள்ளரிப் பிஞ்சுகளை எடுத்துக்கொடுத்துவிட்டு...

“இதுல கலோரி ரொம்பக் குறைவு. அதனால எவ்வளவு வேணுமானாலும் சாப்பிடலாம். உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி. நா வறண்டு போறதைத் தடுக்கும். வெயில் காலத்துல சாப்பிட ஏத்த காய் இது. சீக்கிரம் செரிமானம் ஆயிடும். வயித்துப் புண்ணைச் சரிப்படுத்தும். நீர்க்கட்டு இருக்கிறவங்க இதைச் சாப்பிட்டால் குணமாகும். சிறுநீரக, கல்லீரல் நோய்களைச் சரிசெய்யும். தாகத்தைத் தணிக்கும். மலச்சிக்கலை சரிசெய்யும். விதையோடு சேர்த்து சாறு எடுத்துக் குடிச்சா, கொழுப்பு கரைஞ்சு உடல் எடை குறையும். சிவப்பணுக்கள் அதிகரிக்கும். தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால், வாய்ல இருக்கிற கிருமிகள் அழிஞ்சு வாய் துர்நாற்றம் சரியாகும்” என்று வெள்ளரி குறித்த சில தகவல்களை அடுக்கினார்.

“பார்றா, டிவியில பேசுற சித்த வைத்தியர் கணக்கா மாறிட்ட” என்று சொன்ன ஏரோட்டி, வெள்ளரியைச் சுவைத்துக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

“விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யறதுக்கும், குளங்களைத் தூர்வாருவதற்கும், விவசாயிகள் அதிகளவுல வண்டல் மண்ணை எடுத்துக்கிறதுக்கும் மாநில தொழில்துறைச் செயலகம், மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டிருக்கு. அதன்படி, புன்செய் நிலம் வெச்சிருக்கிறவங்க, 222 கன சதுர மீட்டர் அளவு மண் எடுத்துக்கலாம். நன்செய் நிலம் வெச்சிருக்கிறவங்க, 185 கன சதுர மீட்டர் அளவு மண் எடுத்துக்கலாம். முன்னாடி ஒரு விவசாயி 10 டிராக்டர் அளவுதான் மண் அள்ள முடியும். இப்போ 30 டிராக்டர் வரை மண் எடுத்துக்கலாம். இதுக்குப் பொதுப்பணித்துறை நிர்ணயிக்கிற கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்” என்றார்.

“நல்ல விஷயம்தான். விவசாயிக்கும் வண்டல் மண் கிடைச்சுடும்; குளத்தைத் தூர்வாரின மாதிரியும் ஆகிடும். ஆனா, இதுல ஊழல் இல்லாம உண்மையில் விவசாயிகளுக்குப் பலன் கிடைச்சா சரிதான்” என்ற வாத்தியார், அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

“விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகவோ, வேற பயன்பாட்டுக்கோ மாத்துறதா இருந்தா, கலெக்டர்கிட்டேயும் நகரமைப்புத் துறை இயக்குநர்கிட்டேயும் அனுமதி வாங்கியாகணும்னு தமிழக அரசு அறிவிச்சிருக்கு. ‘விவசாய நிலத்தை வேறு தேவைக்குப் பயன்படுத்த, உள்ளூர் திட்ட அமைப்புக்கிட்ட 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கணும். அந்த விண்ணப்பத்தை உள்ளூர் திட்ட அமைப்பு ஆய்வு செஞ்சு, நகரமைப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பணும்.

நகரமைப்பு இயக்குநர், அதை விசாரிச்சுட்டு அந்த நிலம் பத்தின விஷயங்களைக் கலெக்டர்கிட்டேயும், வேளாண் இணை இயக்குநர்கிட்டேயும் அறிக்கை கேட்டு அனுப்பணும். அந்த நிலத்தைக் கலெக்டர் நேரடியாகப் பார்த்து, பட்டா, சிட்டா, அடங்கல் எல்லாத்தையும் ஆய்வு செஞ்ச பிறகு, அந்த நிலம் விவசாயத்துக்குத் தகுதி இல்லைனு உறுதி செஞ்சு அறிக்கை கொடுக்கணும். அதுக்கப்புறம்தான், நகரமைப்புத்துறை இயக்குநர் முன் அனுமதி அளிக்கிறது குறித்து முடிவு எடுக்கணும். ஆறு, கால்வாய், குளம், குட்டைகள வீட்டுமனைகளா மாத்தக்கூடாது’னு அரசாணையில சொல்லியிருக்கு. அதனால, இனிமே விவசாய நிலம், வீட்டு மனையா மாத்தப்படுறது குறைய வாய்ப்பிருக்கு” என்றார், வாத்தியார்.

“வெயில் அதிகமா இருக்கு, மாடுகளை அவுத்து தண்ணி காட்டிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு ஏரோட்டி எழுந்து செல்ல, மாநாடு முடிவுக்கு வந்தது.

‘விளையும் விலையும்’ தொடர் இந்த இதழில் இடம் பெறவில்லை.