மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!

மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

தி மனிதன் தனது தேவைகளுக்கு இயற்கையை மட்டுமேதான் நம்பியிருந்தான். அக்காலத்தில் உண்ண, உடுத்த, வசிக்க என அனைத்தையுமே குறைவில்லாமல் கொடுத்தது, இயற்கை. அறிவு அகண்டு விசாலமான பிறகுதான் ‘இயற்கை என்ன கொடுப்பது, நாம் எடுத்துக்கொள்வோம்’ என்ற எண்ணத்தில் எதேச்சதிகாரப் போக்கில் செயல்பட ஆரம்பித்தான் மனிதன். அதன் விளைவு பருவநிலை மாறி, பூமி சூடாகி, காற்றும் மாசாகிக் கிடக்கிறது. சுத்தமான காற்றுக்காகவும் தண்ணீருக்காகவும் அலையும் அவலநிலை உருவாகியிருக்கிறது. வனங்களையும் மரங்களையும் வகை தொகையில்லாமல் அழித்தொழித்து விட்டு, காலம் போன கடைசியில் மரக்கன்றுகளை நடவு செய்து பிராய்ச்சித்தம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு தாவரத்துக்கும் ஒரு தேவையை உருவாக்கி வைத்திருக்கிறது, இயற்கை. மருந்து, உணவு, இயற்கைச் சாயம், உரம், எரிபொருள் எனப் பலவிதமான தேவைக்கும் மரங்கள் இருக்கின்றன. அந்த வகையில், மனிதனின் ஆழ்மனதை ஒருமுகப்படுத்தி, அவனுக்குள் உள்ள காந்த சக்தியைத் தூண்டும் மரம்தான் ருத்திராட்சம். இலியோகார்பஸ் கனிடிரிஸ் ராக்ஸ்ப் (Elaeocarpus Ganitris Roxb) என்ற தாவரவியல் பெயர் கொண்டது இம்மரம்.

மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!

மரங்களில் அதிசயமானதும் அபூர்வசக்தி வாய்ந்ததுமானது ருத்திராட்சம். ‘ருத்திரன்’ என்றால் சிவன், ‘அட்சம்’ என்றால் கண் என்று பொருள். ருத்திராட்ச மரம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, பழனிமலை, ஆனைமலைப் பகுதிகளில் உள்ள சோலைக்காடுகளில் அதிகமாக இருக்கிறது. நேபாளம், அஸ்ஸாம் மற்றும் விந்திய மலைக்காடுகளிலும் இம்மரம் உள்ளது. இந்த மரங்கள், மிகவும் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும். ருத்திராட்சத்தின் சிறப்பு, அதன் விதைகள். இந்த மரத்திலிருந்து கிடைக்கும் பழத்தைக் காயவைத்தால் கிடைக்கும் ருத்திராட்சக் கொட்டை தெய்வீக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகெங்கும் சிவனடியார்களின் அடையாளமாக ருத்திராட்சக் கொட்டை விளங்குகிறது. இதைக் கை, கழுத்தில் அணியும்போது, கொட்டையில் உள்ள முகப்புகள் அக்குபஞ்சர் போல் செயல்பட்டு, மனித உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!


ருத்திராட்சத்தில், பலவித சூட்சுமமான சக்திகள் இருக்கின்றன என்று பலர் அனுபவ ரீதியாகச் சொல்கிறார்கள். அறிவியல் ஆராய்ச்சிகளும் இந்த விதையில் பல ஆபூர்வ சக்திகள் இருக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. இதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தவர், வாரணாசி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த முனைவர் கஹாஸ்ராய். அவர் தன்னுடன் சில ஆய்வாளர்களை இணைத்துக்கொண்டு, ருத்திராட்சம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஆராய்ச்சியின் முடிவில், ருத்திராட்சக் கொட்டையில், சக்திமிக்க மின்காந்தப் பண்புகள் (Electro Magnetic), காந்தமுனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic), மின்சாரம் பாயும் தன்மை (Inductive) ஆகியவை இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

ருத்திராட்சக் கொட்டையின் முகப்பு மற்றும் முகப்பின் மேற்பரப்பிலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மேலே சொன்ன தன்மைகள் அமையும். ருத்திராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு சீராக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் சரிசெய்யப்படுகிறது. மேலும் இதன் முகப்புகள் உடலில் உராய்வதன் மூலம், மன அமைதி கிடைப்பதாகவும் நிரூபித்துள்ளார்கள்.

ருத்திராட்ச மரங்களின் விதைகள் ஒரேவிதமாக இருந்தாலும், ஒவ்வொரு மரத்தின் விதைகளின் முகப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்த விதையின் மேல்பகுதிகளில் ஆழமாகக் கோடு போட்டது போல ஒரு அடையாளம் இருக்கும். இதுபோன்ற கோடுகளால் பிரிக்கப்பட்டு இருப்பதை முகப்பு அல்லது முகம் என்கிறார்கள். ஒரு விதையில் எத்தனை பிரிவு இருக்கிறதோ அத்தனை முகம் கொண்டது என்கிறார்கள். ஒவ்வொரு முகத்தை அணிவதற்கும் ஒரு பலனைச் சொல்கிறது, இந்துமதம்.

மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!

இதில், ஒரு முகம் முதல் பதினெட்டு முகம் வரையில் இருக்கின்றன. ஒரு முக ருத்திராட்சம் மிகவும் அபூர்வம். ‘ஏக முக ருத்திராட்சம்’ எனப்படும் இது, பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றக்கூடிய, விலை மதிப்பில்லாத பொருளாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய தன்மை பெற்றது இந்த ஏக முக ருத்திராட்சம் என்பது, இந்துக்களின் நம்பிக்கை. ருத்திராட்ச மணிகள், தங்களைச் சுற்றியுள்ள வெப்பத்தைக் கிரகித்துக்கொண்டு சுற்றுப்புறத்தை குளிர்விக்கும் தன்மை கொண்டவை.

தேக்கு மரத்துடன் ஒப்பிடும்போது, இது 60 சதவிகித வலுவும், 55 சதவிகிதப் பளுதாங்கும் தன்மையும் கொண்டது. இம்மரத்தின் பழம், கடினமான ஓட்டுடன் கரு நீல நிறத்தில் இருக்கும். இதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியில் புளிப்பான சாறு நிறைந்திருக்கும். மூளையில் திசுக்கள் பாதிக்கப்படுவதால் உண்டாகும் காக்கா வலிப்பு நோய்க்கு, இந்தச் சாறு அருமையான மருந்து. மேலும் கடுமையான சளி, நரம்பு வலி ஆகிய நோய்களுக்கும் இந்தச் சாறு நல்ல மருந்து.

மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!ருத்திராட்ச மணியை ஐந்து நிமிடங்கள் ஊற வைத்த நீரைக் குடித்தால், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் என்கிறது, சித்த மருத்துவம். ருத்திராட்ச மணிகளை ஊற வைத்த நீரில் கொஞ்சம் மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் கடுமையான இருமலும் கட்டுப்படும்; வாந்தியும் தணியும். ருத்திராட்சக் கொட்டையைத் தேன் தடவி உரைத்து நாக்கில் தடவினால் விக்கல், பித்த மயக்கம், மரணத்தைத் தருகிற கபம் ஆகியவை குணமாகும்.

ருத்திராட்ச விதைகளை நாற்றாங்காலில் விதைத்து, கன்றுகளாக வளர்த்து நடவு செய்ய வேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலையின் காப்புக்காடுகளிலும் தனியார் நிலங்களிலும் பணப்பயிராக இதை நட்டு, மரத்திலிருந்து கிடைக்கும் விதைகள் மூலம் வருமானம் பார்க்க முடியும். இந்த மரத்திலிருந்து பலவகையான மரச்சாமான்களும் செய்யலாம்.

- வளரும்

மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!

உண்மையான ருத்திராட்சத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

இளைஞர்கள் மத்தியில் தற்போது ஆபரணங்களோடு ருத்திராட்சக் கொட்டையை இணைத்து அணியும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்திச் சந்தையில் போலியான ருத்திராட்சக் கொட்டைகளை விற்பனை செய்கிறார்கள்.

உண்மையான ருத்திராட்சத்துக்குத்தான் மின்காந்த சக்தி இருக்கும். இரு தாமிர கம்பிகளுக்கு இடையில் ஒரு ருத்திராட்சத்தை வைத்துத் தூக்கும்போது, ருத்திராட்சம் சுழல்வதை வைத்து மின் காந்த சக்தி இருப்பதை அறியலாம். தவிர, நன்கு விளைந்த ருத்திராட்சத்தைத் தண்ணீரில் போட்டால் முழுமையாக மூழ்கிவிடும். இதை வைத்தும் உண்மையானதா என்று கண்டுபிடிக்கலாம்.