மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்!

மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக  நாவல் எழுதிய எழுத்தாளர்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

‘‘உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையாவது டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ (Resurrection) நாவலை வாசித்துப் பாருங்கள்’’னு பேராசிரியரும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளருமான முனைவர் கு.ஞானசம்பந்தன் ஒருமுறை சொல்லியிருந்தாரு. அப்படி என்னதான், அந்தப் புத்தகத்துல இருக்குதுன்னு படிக்கத் தொடங்கினேன். அதுக்கு முன்னாடி அந்த நாவலை ஏன் டால்ஸ்டாய் எழுதத் தொடங்கினாருங்கிற தகவலே நெகிழ்ந்து போக வெச்சது. அதைச் சுருக்கமா பார்க்கலாம்.

17-ம் நூற்றாண்டில் ரஷ்யாவின் தெற்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்த கால்நடை மேய்ப்பவர்களும் விவசாயிகளும் உருவாக்கிய ஒரு மதப்பிரிவே டுகோபார்ஸ். கிறிஸ்துவர்களாக இருந்தாலும் மதச்சடங்குகள், கட்டுப்பாடுகளை எதிர்த்தனர் மனிதனின் மனமே ஆலயம் (‘உள்ளம் ஒரு பெருங்கோயில்’ என்று நம்ம ஊர் திருமூலர் சொல்லியதைச் செயலில் செய்தார்கள்) மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்; எளிமையாகவும் பரஸ்பர அன்பும் கருணையும் நிரம்பியதாகவும் இருக்க வேண்டும்; வன்முறை, கொலை கூடாது; மனிதர்களில் உயர்வு தாழ்வு கிடையாது என வித்தியாசமாக வாழ்ந்தார்கள்.

மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக  நாவல் எழுதிய எழுத்தாளர்!

இந்த மக்கள் கடுமையான உழைப்பாளிகள். விவசாயத்தில் நல்ல தேர்ச்சி கொண்டவர்கள். விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு... வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரித்தல், காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்வதுடன் அதை பதப்படுத்தியும் பயன்படுத்தினார்கள். உடைகளைத் தாங்களே நெய்து கொள்வது. விவசாயத்துக்குத் தேவைப்படும் உபகரணங்கள் மரச்சாமான்களை உள்ளூரிலேயே செய்து கொள்வது எனச் சுயதேவைகளுக்காக எவரிடமும் கையேந்தி நிற்காமல் வாழ்ந்தார்கள். அம்மக்களிடம் புகையிலை மற்றும் மதுப்பழக்கம் அறவே கிடையாது.

மக்கள் வசிக்கும் கிராமங்களின் வீதிகள் பெரியதாக இருக்க வேண்டும். மண்ணில்தான் வீடுகட்ட வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு மேலே உடையோ, உடைமைகளோ வைத்துக்கொள்ளக் கூடாது. பணத்தை ஒருபோதும் பெரிதாக நினைக்கக்கூடாது. அதை சேமித்தும் வைக்கக் கூடாது. கால்நடைகள் மற்றும் விவசாய உடைமைகளைப் பொதுவில் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் தங்களால் முடிந்தளவு ஏதாவது ஒரு வேலையைச் செய்ய வேண்டும். வயதானவர்களை ஊர்மன்றம் பராமரிக்கும். ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய அவர்களே குழு அமைத்துக் கொண்டார்கள். ஆகவே, அரசாங்கத்தின் எந்த உதவியும் தேவைப்படவில்லை. தங்களுக்கான அடிப்படை வசதிகளை அவர்களாகவே அமைத்துக் கொண்டார்கள். ரஷ்ய அரசும் இந்த மக்களைக் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி மற்றும் நிலஅளவை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என எதையும் அவர்கள் வசித்த பகுதியில் செயல்படுத்த அனுமதிக்கவில்லை. ஆக, ரஷ்யாவில் ஒரு தனிநாடு போலவே அமைதியாக வாழ்ந்தார்கள்.

எதற்காகவும் யாரிடமும் கையேந்தி நிற்காமல், இயற்கையை மட்டும் நம்பி வாழும் மக்களை எந்த நாட்டு அரசுதான் சும்மா விடும்? கலகம் செய்கிறார்கள், நாட்டின் ஒற்றுமையைக் கெடுக்கிறார்கள் எனச் சொல்லி ரஷ்ய அரசாங்கம், இம்மக்களை அடித்துத் துன்புறுத்தியது. ஆனாலும், அதை எதிர்த்து இந்த மக்கள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஒரு கட்டத்தில் துன்புறுத்தி சோர்ந்து போன ரஷ்ய அரசாங்கம், இவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்தது.

இதன்படி, நாற்பது ஆயிரம் மக்கள் தொகை கொண்ட டுகோபார்ஸ் மக்களை, இனி ஒருபோதும் ரஷ்யாவிற்குத் திரும்பி வரக்கூடாது; தங்களது பயணச் செலவைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் நாட்டை விட்டுத் துரத்த முடிவு செய்தது. இந்த மக்களைக் குறித்துக் கேள்விப்பட்ட கனடா அரசு, தங்கள் நாட்டில் அம்மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்தது. கனடா செல்ல ரஷ்யாவிலிருந்து சுமார் ஆறாயிரம் மைல் கப்பல் பயணம் செய்ய வேண்டும். பணத்தைச் சேமித்து வாழும் பழக்கமில்லாத இந்த மக்கள், பயணச் செலவுக்குப் பணம் இல்லாமல் வெறும் கையுடன் நின்றனர்.

இந்தச் சமயத்தில்தான் இம்மக்களைப் பற்றிக் கேள்விப்பட்ட எழுத்தாளர் டால்ஸ்டாய், தன் எழுத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில், இந்த மக்களுக்கு உதவ திட்டமிட்டார். இதற்காக ஒரு நாவலை எழுதி, அதைத் தொடராக வெளியிடவும் முன்வந்தார். 1899-ம் ஆண்டு ‘புத்துயிர்ப்பு’ நாவல் ‘நீவா’ என்ற இதழில் தொடராக வெளிவரத் தொடங்கியது. இந்த தொடர்கதைக்கு வழங்கப்பட்ட சன்மான தொகையை டுகோபார்ஸ் மக்களிடம் டால்ஸ்டாய் ஒப்படைத்தார். அந்த மக்கள் கனடாவுக்குச் சென்று சேர்ந்தனர்.

ரஷ்யாவிலிருந்து சென்ற டுகோபார்ஸ் மக்கள், கனடாவில் இருபதாயிரத்துக்கும் அதிகமாக வசித்து வருகிறார்கள். இயற்கையுடன் வாழ்ந்த விவசாயிகளுக்கு உதவி செய்த டால்ஸ்டாய்க்கு சிலை வைத்து வழிபடுகிறார்கள். இயற்கையை நேசிப்பது, விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நல்ல விஷயங்களை டால்ஸ்டாயிடம் இருந்து கற்றுக் கொண்டதாக மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார். அந்த டால்ஸ்டாய், இந்த வாழ்வியல் முறைகளை டுகோபார்ஸ் மக்களிடம்தான் கற்றுக் கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

கனடா நாட்டுக்கு இம்மக்கள் குடிபுகுந்தவுடன், அந்நாட்டு அரசு இவர்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்தது. அதை எதிர்த்து உலகிலேயே முதல் முறையாக நிர்வாணமாகப் போராடினார்கள் டுகோபார்ஸ் மக்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இம்மக்களின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது, அடைக்கலம் கொடுத்த கனடா அரசு. ஆனால், நம் விவசாயிகள் தலைநகரில் நிர்வாணமாக போராட்டம் நடத்தி மாத கணக்காகியும் மவுனம் காப்பது ஏன்?