பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்காத அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து எப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்பது குறித்து, நீலகிரி மாவட்டத் தேயிலை சாகுபடியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மஞ்சை மோகன் தலைமையில் ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட தேயிலைச் சாகுபடியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மஞ்சை மோகன் கூறுகையில், ‛விவசாயச் சங்கங்களை ஒருங்கிணைத்து நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் பல்வேறு பாேராட்டங்களை நடத்தியும், எவ்வித பயனும் இல்லை. எனவே, சங்கங்களால் முடியாததைக் கட்சியால் செய்துவிடலாம் என்றுதான் படுக தேச பார்ட்டி என்ற கட்சியைத் தொடங்கினேன். கட்சி மூலமாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.
இதற்காகத்தான் படுக தேச பார்ட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலைத் துாளை கிலோ ரூ.150-க்கு குறைவில்லாமல் விற்பனை செய்வதில்லை. குறிப்பாக, பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் `இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளேன்டேஷன் மேனேஜ்மென்ட்’ பரிந்துரைபடி, ஒரு கிலோ பசுந்தேயிலை பறிக்க ரூ.14.50 பைசா செலவாகிறது. ஆனால், தற்போது பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 9 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு தேயிலைத் தாேட்ட உரிமையாளர், எப்படி தேயிலை பறிப்பவர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியும்.
எனவே, பசுந்தேயிலை கிலோவுக்கு நிரந்தரமாக, ரூ.30 நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல வாரம் ஒரு நாள் நடைமுறையில் உள்ள தேயிலைக்கான ஏல மையங்களைத் தினந்தோறும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், அனைத்து தேயிலை விவசாயிகள் சங்கத் தலைவர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலாேசனைக் கூட்டம், வரும் ஜூலை 20-ம் தேதி ஊட்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க எப்படியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்தும், அடுத்த கட்டப்போராட்டங்கள் குறித்தும் முடிவு எடுக்கப்படும். பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காதபட்சத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாெதுமக்களை ஒருங்கிணைத்து, அரசு வழங்கியுள்ள ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை நீலகிரி மாவட்டக் கலெக்டரிடம் ஒப்படைத்து எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம்’’ என்றார்.