சிறு... குறு விவசாயிகளுக்கு 100%... மற்றவர்களுக்கு 75%... மானியம் வாங்கலையோ...மானியம்!
##~## |
'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, தொலைபேசிக் கட்டணத்தைக் கட்டிவிட்டு, நகரப் பேருந்தில் வந்து இறங்கவும், 'காய்கறி’ கண்ணம்மா வந்து சேரவும் சரியாக இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து இருவரும் பேசிக் கொண்டே தோட்டத்துக்கு வந்து சேர காலையிலேயே தோட்டத்துக்கு வந்து விட்ட 'ஏரோட்டி' ஏகாம்பரம், வரவேற்பு கொடுக்க... மாநாடு அமர்க்களமாக ஆரம்பமானது.
''என்னங்கய்யா... பொசுக்குனு பால் விலை, பஸ் டிக்கெட் எல்லாத்தையும் ஏத்திப்புட்டாங்களே'' என்றார், காய்கறி.
''ஆரம்ப ஜோரு... அப்புறம் பாருனு சும்மாவா சொன்னாங்க. இன்னும் போகப்போக... ஏகப்பட்ட அதிரடியெல்லாம் இருக்குனு பேசிக்கறாங்க. மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளையெல்லாம் கூட்டி மாநாடு போட்டு... புதுசு புதுசா திட்டங்களையெல்லாம் அறிவிச்சாங்க. 'விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப்பேன். அதிகாரிகள் எல்லாம் விவசாயிகளோட கைகோத்து நடைபோடணும், அப்படி, இப்படினு ஆயிரத்தெட்டு அறிவிப்பு விட்டாங்க. கடைசியில பார்த்தா... நம்ம தலையிலயே கைவெச்சுட்டாங்க'' என்று வருத்தம் காட்டினார் வாத்தியார்.
''அதான், 'ஆவின் நிறுவனம் நட்டத்துல இருக்கு... போக்குவரத்து நிறுவனத்தையெல்லாம் மூடற அளவுக்கு நிலைமை மோசமா இருக்கு... அதனாலதான் இந்த விலை உயர்வு. தமிழ்நாட்டு மக்களாகிய உங்கக்கிட்ட வராம நான் வேற யாருகிட்டே போவேன்'னு முதலமைச்சரம்மா உருகி உருகி அறிக்கை விட்டிருக்காங்களே... அது போதாதா? நீ என்னடான்னா... நம்ம தலையில கைவெச்சுட்டாங்கனு சொல்றியேய்யா. எப்பவுமே வாத்தியாருங்க... கெவருமென்ட்டு வேலை பார்க்கறவங்கள்லாம், அம்மாவுக்கு எதிராத்தான் பேசுவீங்க...'' என்று எசப்பாட்டு பாடினார், ஏரோட்டி.

இதைக் கேட்டதுமே கோபம் பொத்துக் கொள்ள... ''ம்... ஒண்ணைய மாதிரி ஆளுங்க இருக்கற வரைக்கும் அய்யாவுக்கும் கொண்டாட்டம்... அம்மாவுக்கும் கொண்டாட்டம்தான். பஸ் கட்டணம்... பால் விலை ஏறுனா... கொதிக்கறது நாமதான். ஆனா, இதைப் பத்தி கவலையேபடாமா ஒரு கூட்டம் கால் மேல கால் போட்டுக்கிட்டு வாழ்ந்துகிட்டிருக்கு. அவங்க தலையில கை வெக்க வேண்டியதுதானே! அதாவது, ஆவின்லயும், போக்குவரத்து நிறுவனத்துலயும் தேவையே இல்லாம ஏகப்பட்ட பதவிகளை உருவாக்கி, அதுலயெல்லாம் வேண்டப்பட்ட ஆளுங்கள உக்கார வெச்சுருக்காங்க.
லட்சம் லட்சமா சம்பளம்கிற பேருல பணம் போயிக்கிட்டிருக்கு. வேலையே பார்க்காம, அதைப்பத்தி துளிகூட சங்கடப்படாம ஒரு கூட்டம் சம்பளத்தை மட்டும் வாங்கிக்கிட்டு உக்கார்ந்திருக்கு. அப்புறம் மந்திரியோட எடுபிடி காருக்கு டீசல், மச்சானோட காருக்கு டீசல், டிரைவேராட காருக்கு டீசல்னு ஆட்சியில உக்கார்ந்ததும், போக்குவரத்து கழக டெப்போவுல இருந்து ஓசியில போட்டுக்கறாங்க. இப்படி நிர்வாகத்துல ஆயிரத்தெட்டு ஓட்டை உடைசல்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதையெல்லாம் மாத்தவே முடியல. நிர்வாகச் சீர்கேடுகள கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுத்தாலே... பால் விலையையும், பஸ்கட்டணத்தையும் ஏத்த வேண்டியிருந்திருக்காது... வேணும்னா, குறைக்கக் கூட செய்திருக்கலாம். ஆனா, அம்மாவுக்கு அய்யாவுக்கும் அதையெல்லாம் செய்ய தைரியமே வராதே!'' என்று சீறித் தள்ளினார் வாத்தியார்.
''அட என்னய்யா இது, விஜயகாந்த் கணக்கா, பொளந்துகட்ட ஆரம்பிச்சுட்டீர்? அடுத்தத் தடவை கறுப்பு எம்.ஜி.ஆர். கட்சி சார்புல நீ போட்டியிட்டா... ஒனக்குத்தான்யா என் ஓட்டு?'' என்று வாத்தியாருக்கு திருஷ்டி கழித்தார் காய்கறி.
நிதானத்துக்கு திரும்பிய வாத்தியார், ''இதுல ஒரு ஆறுதல் என்னான்னா... பால் கொள்முதல் விலையில ரெண்டு ரூபாயைக் கூட்டி இருக்கறதுதான்'' என்றார் நிம்மதி பெருமூச்சு விட்டவராக.
''கோட்டையில மீட்டிங் போட்டாங்களே.... புதுசா நமக்கு ஆகுற மாதிரி திட்டம் ஏதாச்சும் போட்டாங்களா?'' என்று கேட்டார் காய்கறி.
''அந்தந்த மாவட்டத்துல கலெக்டர்கள் கேட்ட கோரிக்கைகள் எல்லாத்தையும் நிறைவேத்தியிருக்காங்க. இதுல உபயோகமான ஒரு திட்டம்னா, ரேஷன் கடையிலயே காய்கறி விக்கப்போற திட்டம்தான். காய்கறி, உணவுப் பொருட்களோட விலையெல்லாம் திடீர் திடீர்னு தாறுமாறா ஏறிப்போயிருதுல்ல. அதைக் கட்டுப்படுத்தறதுக்காகத்தான் இந்தத் திட்டமாம்.
ஒவ்வொரு மாவட்டத்துலயும் கலெக்டர் தலைமையில ஒரு குழு இதுக்காக அமைக்கப் போறாங்களாம். காய்கறிகளை விவசாயிகள் எடுத்துட்டுப் போறதுக்கு அரசாங்கமே வாகனங்களையும் ஏற்பாடு பண்ணப் போறாங்களாம்'' என்று வாத்தியார் சொல்ல...
''அப்ப உன்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ஆப்பா?' என்று காய்கறியைக் கலாய்த்தார், ஏரோட்டி.
'எங்களுக்கெதுக்கு ஆப்பு. முக்குக்கு முக்கு இருக்குற பலசரக்கு கடைகள்ல எல்லாம் காய்கறி வித்தாலும், எங்கள்ட்டயும் வாடிக்கையா காய் வாங்குற ஆளுங்க இருக்கத்தான செய்யுறாங்க. அதில்லாம சும்மா ஜீனி, மண்ணெண்ணெய் வாங்க ரேஷனுக்கு போனாலே, மணிக்கணக்கா காத்திருக்கணும்.
எந்த சாமான் வாங்குனாலும், நமக்குத் தேவையில்லாத சோப்பு, கோதுமை மாவு, உப்பு, டீத்தூள்னு எதையாவது நம்ம தலையில கட்டி விடுவாங்க. இல்லாட்டி, நாம கேக்குற சாமான்கள் கிடைக்காது. ஆக, ரேஷன் கடையில காய்கறி விக்கிறதால... பெருசா ஒண்ணும் ஆகப்போறதில்லை. ஒங்கப்பனே வந்தாலும், எங்க பொழப்புல மண் அள்ளி போடமுடியாது. நீ அநியாயத்துக்கு சந்தோஷப்பட்டுக்காதே'' என்று நறநறத்தார் காய்கறி.
அதைக் கண்டுகொள்ளாத ஏரோட்டி, ''பால் விலை ஏறின மறுநாளே கறவை மாடு விலையெல்லாம் ஏறிப்போச்சு. கோபிச்செட்டிபாளையம் பக்கத்துல இருக்குற மொடச்சூர்ல இந்த வாரம் கூடுன சந்தையில மாட்டுக்கு ஏழாயிரம் ரூபாய் வரை கூடுதலா விலை போயிருக்கு. ஜெர்சி பசுவெல்லாம் 38 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போயிருக்கு. கலப்பினப் பசுவெல்லாம் 45 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கூட விலை போச்சாம்'' என்றார்.
'அது கிடக்கட்டும்யா. இன்னொரு முக்கியமான விஷயம் சொல்றேன் பாரு'' என்ற வாத்தியார்,
''ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணை விஷயத்துல முரண்டுபிடிச்சுக்கிட்டிருக்கற கேரளா, போன வாரத்துல வந்த லேசான நில நடுக்கத்தை வெச்சுக்கிட்டு புதுசா புருடா விட ஆரம்பிச்சுட்டாங்க. நவம்பர் 20-ம் தேதி அணையைப் பார்வையிட்டாங்க கேரளா அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், கேரள அணைகள் பாதுகாப்புக் குழுத் தலைவர் பரமேஸ்வரன் நாயர் மூணு பேரும். அதுக்குப் பிறகு, 'நில நடுக்கத்தால 17, 18-ம் பிளாக்குகள்ல சேதம் ஏற்பட்டு, நீர்க்கசிவு'னு பேட்டி கொடுத்திருக்கார் அமைச்சர்.
ஆனா, அவங்களோட அணைக்குப் போன, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியாறு வைகை கண்காணிப்புப் பொறியாளர் மோகனசுந்தரம், பெரியாறு அணை இன்ஜினீயர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிங்க, 'அப்படி எதுவும் இல்லை'னு மறுத்துருக்காங்க'' என்றார்.
''இவய்ங்க திருந்தவே மாட்டாய்ங்களா'' என்று திட்டித் தீர்த்த ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். ''பதவி ஏத்த பிறகு நடந்த விவசாய மானியக் கோரிக்கையில, 'தீவன அபிவிருத்தித் திட்டம்'னு ஒரு அறிவிப்பை இந்த ஆட்சியில வெளியிட்டாங்க. மாநிலம் முழுக்க ஜரூரா அதை செயல்படுத்த ஆரம்பிச்சுட்டாங்களாம். இதன்படி ஏகப்பட்ட மானியம் கொடுக்கறாங்களாம்.
இதை வாங்கறதுக்கு... தண்ணி வசதியோட, குறைஞ்சபட்சம் 1 ஏக்கர் அளவுக்கு சொந்த நிலம் வெச்சிருக்கணும். தொடர்ந்து மூணு வருஷத்துக்குக் குறையாம தீவனபயிர் சாகுபடி பண்ணணும். அரசாங்கத்தோட இலவச கால்நடைகள் வழங்கும் திட்டத்துல பயனடைஞ்ச விவசாயிகளுக்கு முன்னுரிமை கிடைக்குமாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 30 சதவிகிதம் இடஒதுக்கீடும் இருக்காம்'' என்று சொல்லி இடைவெளிவிட,
''அட அற்புதமானத் திட்டமா இருக்கே....'' என்று தலையாட்டினார் வாத்தியார்.
தொடர்ந்த ஏரோட்டி, ''இறவைப் பாசனத்துல கோ-3, கோ-4 மாதிரியான தீவனப்பயிரோட வேலிமசால், குதிரைமசால் கலந்து சாகுபடி செய்றதுக்கு... கால் ஏக்கருக்கு 2 ஆயிரத்து 590 ரூபாய் மானியம் கிடைக்குமாம்.
மானவாரியில சோளம், மக்காச்சோளத்தோட தட்டைப்பயறு கலந்து சாகுபடி செய்றதுக்கு... கால் ஏக்கருக்கு ஆயிரத்து முன்னூத்தம்பது ரூபாய் மானியம் கிடைக்குமாம். ஏற்கெனவே சாகுபடி பண்ணிக்கிட்டிருக்குற தீவனப்பயிர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்புல இயந்திர நீர்த் தெளிப்பான் கருவி கொடுக்கப் போறாங்களாம். இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், மத்தவங்களுக்கு 75% மானியமும் கிடைக்குமாம். புல் வெட்டுற கருவிக்கும் மானியம் உண்டு.
நாலு பசு மாடு வெச்சுக்கிட்டு, ஒரு ஏக்கருக்குக் குறையாம தீவன சாகுபடி பண்றவங்களுக்கு ஊறுகாய்ப்புல் தயாரிக்க 30 ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போறாங்களாம். தேவைப்படுறவங்க அந்தந்தப் பகுதியில இருக்குற கால்நடை உதவி டாக்டர் அல்லது வேளாண் வளர்ச்சி அலுவலர்கிட்ட உரிய ஆவணங்களோட நவம்பர் 30-ம் தேதிக்குள்ள விண்ணப்பிக்கலாமாம்'' என்றார்.
''சும்மா சொல்லக்கூடாதுய்யா... உருப்படியானத் தகவலை, வரிவிடாம கொத்திக்கிட்டு வந்து, வரி பிசகாம சொல்லி அசத்திட்டியே...'' என்று ஏரோட்டியைத் தட்டிக் கொடுத்தார் வாத்தியார்.
''இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு... இந்த அதிகாரிங்க இதுலயும் என்னென்ன கோல்மால் பண்ணப் போறாங்களோ?'' என்றபடியே, கூடையைத் தூக்கிக் கொண்டு காய்கறி கிளம்ப... முடிவுக்கு வந்தது மாநாடு.
''இரண்டு ரூபாய ஏமாற்றம்!''
பொங்கும் பால் விவசாயிகள்!
பாலின் விற்பனை விலையை, அதிரடியாக லிட்டருக்கு 6 ரூபாய் 25 காசு உயர்த்தியிருக்கும் தமிழக அரசு... 'நலிவடைந்து வரும் ஆவின் நிறுவனத்தைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை. அதேபோல விவசாயிகளுக்கும் கொள்முதல் விலையில் ஒரு லிட்டர் பாலுக்கு 2 ரூபாய் உயர்த்திக் கொடுத்திருக்கிறோம்' என்று மெள்ள பழியைத் தூக்கி, விவசாயிகளின் மீது போட்டிருக்கிறது.
இந்நிலையில், ''இரண்டு ரூபாயைக் கொடுத்து எங்களை ஏமாற்றுகிறது அரசு'' என்று பொங்க ஆரம்பித்துள்ளனர் பால் விவசாயிகள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய, கோயம்புத்தூர் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கக் காப்பாளரும், முன்னாள் கோயம்புத்தூர் ஆவின்தலைவருமான எஸ்.ஆர். ராஜகோபால், ''ஒரு லிட்டர் பசும்பாலுக்கான கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கான விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறது அரசு. ஆனால், 'பசும்பால் ஒரு லிட்டருக்கு 25 ரூபாயும், எருமைப்பால் ஒரு லிட்டருக்கு 30 ரூபாயும் கொள்முதல் விலையாகத் தரவேண்டும்’ என்று நீண்ட நாட்களாகப் போராடி வருகிறோம். எனவே, இரண்டு ரூபாயை உயர்த்தியிருப்பது எங்களை ஏமாற்றும் செயல்.
ஆவின் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு கூறுவது தவறு. தமிழகத்தில் இயங்கி வரும் 17 ஆவின் ஒன்றியங்களில் சிலவற்றைத் தவிர, மற்ற அனைத்தும் நல்ல லாபத்தில்தான் இயங்குகின்றன. உதாரணமாக... கோயம்புத்தூர் ஆவின் ஒன்றியம், ஆண்டுக்கு 15 கோடி முதல் 18 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டி வருகிறது. தனியார் நிறுவனங்கள் எல்லாம் கொள்ளை லாபத்தில் இயங்கும்போது... ஆவின் மட்டும் எப்படி நஷ்டத்தைச் சந்திக்கும்?' என்று கோபமாகக் கேட்டார்.
இப்பிரச்னை பற்றிப் பேசும் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி, ''கட்டுப்படியான விலையில்லாவிட்டால்... எப்படி பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்? தொலைநோக்குப் பார்வையோடு... மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பது, மாட்டுத் தீவனங்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்ட நல்ல முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். அதைவிடுத்து, 'தீவன அபிவிருத்தித் திட்டங்கள்' என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது... பால் உற்பத்திக்கு எந்த வகையிலும் கைகொடுக்காது'' என்றார், காட்டமாக.
-ஜி. பழனிச்சாமி