
புறா பாண்டி
‘‘எங்கள் தோட்டத்திலுள்ள ஐந்து வயது அல்போன்சா மாஞ்செடிகளில் தண்டுத் துளைப்பான் தாக்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமாகச் சொல்லுங்கள்?’’
கே.சுதா, திருவள்ளூர்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப.ச.சண்முகம் பதில் சொல்கிறார்.
‘‘மாவில் விளைச்சலைப் பாதிக்கும் முக்கியமான காரணிகளில் தண்டுத் துளைப்பான் பாதிப்பும் ஒன்றாகும். மா ரகங்களில் அல்போன்சா, அதிகளவில் தண்டுத் துளைப்பான் பாதிப்புக்குள்ளாகிறது. பாதிக்கப்பட்ட மரங்களின் கிளைகள் மேலிருந்து கீழ்நோக்கி காய்ப்பதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. மரத்தின் வயது, காய்க்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு மரம் இறந்தால் ரூ.2 முதல் 4 லட்சம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படுகின்றன.

வயதான மரங்களை மட்டும் தாக்கி வந்த, தண்டுத் துளைப்பான்கள் தற்போது பரப்பளவு அதிகரித்த காரணத்தினாலும், புதிய ரகங்களைப் பயிரிடுவதாலும் இளம் மரங்களைக்கூட தாக்குகின்றன. விவசாயிகள் தண்டுத் துளைப்பானின் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகித்தாலும் முழுமையான கட்டுப்பாடு கிடைப்பதில்லை. தற்போது, ரசாயன மற்றும் இயற்கை முறையில் இதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் புழக்கத்தில் உள்ளது. முதலில் ரசாயன முறைப் பற்றிப் பார்க்கலாம்.
பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி நிறுவனம், அறிமுகப்படுத்தி உள்ள ரசாயன அடைப்பான் மருந்தை (Healer Cum Sealer) உபயோகப்படுத்துவது பற்றிய செயல் விளக்கம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் தோட்டங்களில் மேற் கொள்ளப்பட்டது. இதில் 80 சதவிகித மரங்கள் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன. இதன் மூலம் ஒரு மரத்துக்கு 200 ரூபாய் செலவாகும்.

தண்டில் துளைகள் காணப்படுதல், மரத் துகள்கள், வண்டின் எச்சம் போன்றவை மரப் பட்டையின் மேலோ, மரத்தின் அடியிலோ காணப்படுதல், பாதிக்கப்பட்ட இடத்தில் பிசின் போன்ற திரவம் வடிதல், பாதிப்பின் ஆரம்பக்கட்டத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், பாதிப்பு பாதியாக இருக்கும்போது நுனிக்கிளைகள் மேலிருந்து கீழாகக் காய்ந்து போதல், பாதிப்பின் இறுதிக்கட்டத்தின்போது வேகமாக மரம் காய்தல்... போன்றவை தண்டுத் துளைப்பான் தாக்கியுள்ளது என்பதற்கான அறிகுறிகளாகும்.
முதலில், மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதி யிலிருந்து மரத்துகள்கள், வண்டின் எச்சம் மற்றும் பிசின் போன்றவற்றைக் கத்தியைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். மரத்தின் அடிப்பகுதியிலுள்ள கிளைகள் மற்றும் இதரப் பொருள்களை அகற்ற வேண்டும். இது மருந்தை அளிப்பதற்கு எளிதாக இருப்பதோடு, மீண்டும் தண்டுத் துளைப்பான்களில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் கண்டறிய உதவும்.
மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் அரிவாள் அல்லது கோடரி கொண்டு, பாதிக்கப்படாத திசுக்கள் தெரியும் வரை நீக்கிவிடவும். இப்படிச் செய்யும்போது பெரிய வெட்டுக்காயம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் புழுக்கள் தென்பட்டால் அழித்துவிட வேண்டும். மரத்தின் உள்ளே குகை போன்று பாதிப்புகள் தென்படும் இடங்களில், சிறிய இரும்புக் கம்பியைக் கொண்டு உள்ளிருக்கும் புழுக்களை அழிக்க வேண்டும்.
அடைப்பான் மருந்து 250 கிராமை 100 மில்லி தண்ணீரில் கலந்து ரொட்டி மாவு பதத்துக்குத் தயாரிக்க வேண்டும். இதைச் சிறுசிறு உருண்டைகளாக்கி, துளைகளில் நிரப்ப வேண்டும். துளைகள் முழுவதும் நிரம்பும் வரை, மருந்தை இட வேண்டும். துளைகளில் இடைவெளியில்லாமல் மருந்து நிரப்பப் பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அடைப்பான் மருந்து 750 கிராமை 750 மில்லி தண்ணீரில் கலக்க வேண்டும். இதனுடன் 40 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தைக் கலக்க வேண்டும். இந்த மருந்தைத் தூரிகைகள் கொண்டு பூச வேண்டும். பூசும்போது இடைவெளியில்லாமல் மருந்தைப் பூச வேண்டும்.

மரத்துக்குத் தொடர்ச்சியாகத் தண்ணீர் ஊற்ற வேண்டும். மானாவாரியாக இருந்தால் வாரம் ஒருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும். அடைப்பான் மருந்து கொடுத்த மரத்தைச் சுற்றிச் சோதனை செய்து, பாதிக்கப்பட்ட திசுக்கள் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். இது புழுக்கள் உயிருடன் இருக்கின்றனவா அல்லது இறந்துவிட்டனவா என்பதை அறிய உதவும். பாதிக்கப்பட்ட திசுக்கள் இருந்தால், மீண்டும் மருந்து வைக்க வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் என்றால், கடைகளில் கிடைக்கும் ‘நிம்பிசிடின்’ என்ற வேம்பு கலந்த பூச்சிவிரட்டியை 5 மில்லி என்ற அளவில் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 100 மில்லி தண்ணீர் கலந்து தண்டுத் துளைப்பான் துளைக்கப்பட்டுள்ள மரத்தினுள்ளே செலுத்த வேண்டும்.
இதற்கு முன்பாகப் பாதிக்கப்பட்ட மரத்தை ரசாயன முறையில் சொல்லி உள்ளதைப் போலச் சுத்தப்படுத்த வேண்டும். வேம்பு மருந்தைத் துளையில் செலுத்திய பிறகு, ஈரக்களிமண் கொண்டு, துளையை மூடிவிடவும். தண்டுத் துளைப்பான் மூலம் பாதிக்கப்பட்ட மரங்களில் பூஞ்சைத் தாக்குதலும் ஏற்படலாம். இதைத் தடுக்க, மரத்தின் மீது சூடோமோனஸ் என்ற உயிர் பூஞ்சணக்கொல்லியுடன், சிறிது மைதா மாவு கலந்து பசை போலத் தடவிவிட வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், மா மரங்களுக்கு வேம்பு மற்றும் புங்கன் பிண்ணாக்கைச் சம அளவில் கலந்து, மரத்துக்கு 5 கிலோ வீதம் இடலாம். இதன்மூலம் பூச்சி, நோய்கள் தாக்குவதைத் தடுக்க முடியும்.
மரங்கள், பாதிப்பிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள் நான்கு மாதத்துக்குப் பின்பே தெரியும். மரப்பட்டையினுள் பாதிக்கப்பட்ட திசுக்கள் முழுமையாக மறைந்துவிடும். பாதிக்கப்பட்ட மரம் முதல் ஆண்டு விளைச்ச லில் பாதியைக் கொடுக்கும். படிப்படியாகக் குணமடைந்து முழு விளைச்சலையும் கொடுக்க ஆரம்பிக்கும். பத்து வயது மரத்தில் பாதிப்பிலிருந்து அதைக் குணப்படுத்தினால் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பலனளிக்கும்.’’
தொடர்புக்கு, வேளாண்மை அறிவியல் மையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
தொலைபேசி: 04342 245860

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.