மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்!

மரம் செய விரும்பு!  - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்!

சுற்றுச்சூழல் ‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

‘தாய் நிலம் தந்த வரம், தாவரம்’ என்பார்கள். ஆம், நிலத்தில் முளைக்கும் ஒவ்வொரு தாவரமும் ஏதோவொரு வகையில் பயனளிக்கக் கூடியவையாகத்தான் இருக்கின்றன. மண், தட்பவெப்பநிலை... போன்ற காரணிகளைப் பொறுத்து, ஒவ்வொரு பகுதிக்குமான பிரத்யேகத் தாவரங்கள் இருக்கின்றன. பெரும்பாலான தாவரங்கள், மனித முயற்சி இல்லாமலேயே வளர்ந்து பலனளிக்கின்றன. அப்படித் தானாக முளைத்துப் பலன்தரும் மரங்களில் முக்கியமானவை கருவேலம், வெள்வேல் ஆகியவை. சமீப காலமாகத் தமிழகத்தில் சீமைக்கருவேல மரம் குறித்து அதிக விவாதம் செய்யப்படுகிறது. பலருக்கும் சீமைக்கருவேலம் - கருவேலம் ஆகியவற்றுக்கிடையில் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. அதனால், தற்போதைய சூழ்நிலையில், கருவேலம் மற்றும் வெள்வேல் ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

மரம் செய விரும்பு!  - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்!

கருவேலம்

கரிசல் மண்ணுக்கும் கண்மாய்களுக்கும் பிரத்யேகமாக இயற்கை படைத்திருக்கும் கொடைதான் கருவேல மரம். கருவை மரம், நாட்டு கருவேல மரம் எனப் பல்வேறு பெயர்களில்  இது அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பர்ய மரங்களுள் இதுவும் ஒன்று. கருவேல மரத்தின் தாவரவியல் பெயர், ‘அக்கேசியா நிலோடிக்கா’. கருவேல மரங்கள் ‘அக்கேசியா’ இனத்தைச் சேர்ந்தவை. அக்கேசியா என்றால் முள் நிறைந்தவை என்று பொருள். உலகளவில் 600 அக்கேசியா இனங்கள் இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 500 இனங்கள் இருக்கின்றன.

இம்மரத்தில் இருப்பது போலவே, வெளிநாட்டிலிருந்து வந்து, நம் நாட்டில் பரப்பப்பட்ட சீமைக்கருவேல மரங்களிலும் முட்கள் இருந்ததால்தான் அதை, சீமைக்கருவேல் என அழைக்க ஆரம்பித்தனர். பிறகு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. சீமைக்கருவேல மரத்தின் அறிவியல் பெயர், ‘புரொசோபிஸ் ஜுலிஃப்ளோரா’.

மரம் செய விரும்பு!  - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்!



ஆடு மாடுகளுக்குச் சத்துள்ள தழை மற்றும் நெற்று (முற்றிய காய்); தேனீக்களுக்குப் பூக்கள் மூலமாக மகரந்தம்; அரக்குப் பூச்சி வளர்ப்புக்கு ஏற்ற தழைக்கொப்புகள்; தோல் பதனிட பட்டை; ஆரஞ்சு மிட்டாய்கள் தயாரிக்க மற்றும் பசை தயாரிக்க எனப் பல்வேறு  பொருள்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது, கருவேலம். தவிர, இம்மரக்கூழிலிருந்து பேப்பர், ரேயான் தயாரிக்கிறார்கள். கட்டட சாமான்கள், வேளாண் கருவிகள் செய்யவும் இம்மரம் ஏற்றது. இதன் இலைகளுக்கு நிலத்தின் களர் தன்மையை நீக்கும் தன்மையுண்டு. இதன் நெற்று, புரதச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், ஆடுகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுகின்றன.

1980-களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரி, புறம்போக்கு நிலங்களில் அதிகளவு கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டன. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் தமிழ்நாடு வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை இணைந்து கருவேலம் தோப்புகளை உருவாக்கின. பத்து ஆண்டுகள் வளர்ந்த மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தைக் கிராமப் பஞ்சாயத்துக்கு 60 சதவிகிதமும், வனத்துறைக்கு 40 சதவிகிதமும் என்ற கணக்கில் பிரித்துக் கொள்வார்கள். இதனால், கிராமப் பஞ்சாயத்துகளின் வருமானம் அதிகரித்தது. கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பும் சிறப்பாக இருந்தது. இப்படிக் கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் கருவேல மரங்களின் பங்கு கணிசமாக இருந்தது.

மரம் செய விரும்பு!  - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்!



கருவேல மரம் வளர்ப்பு முறையாக நடந்ததால், கண்மாய்கள் உள்ளிட்ட நீராதாரங்களில் ஆக்கிரமிப்புகளுக்கு வழியில்லாமல் இருந்தது.  சில சமூகவிரோதிகள் பல்வேறு காரணங்களைக் கூறி, கண்மாயில் கருவேல மரங்கள் நடுவதைத் தடுத்துவிட்டனர். கண்மாய்களின் காவல் வீரர்களாக இருந்த கருவேல மரங்களின் அழிவுக்குப் பிறகு, கண்மாய்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்விட்டன.

கருவேல விதையின் தோல் கடினமாக இருப்பதால், விதைகளை நேரடியாக விதைக்கும்போது, முளைக்கக் காலதாமதமாகும். இதன் நெற்றுகளை ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்து, அவற்றின் கழிவுகளிலிருக்கும் விதைகளைச் சேகரித்து விதைக்கும்போது சீக்கிரம் வளரும். நேரடியாக விதைக்க வேண்டுமென்றால், சாணத்தில் விதையைக் கலந்து, கோணிப் பையில் போட்டு, விதையின் தோல் மிருது வாகும் வரை நீர் தெளித்து வர வேண்டும். பிறகு, விதைகளை எடுத்து விதைக்கலாம். நீரைக் கொதிக்கவைத்து இறக்கி, அதில் விதைகளை 24 மணி நேரம் ஊறவைத்தும் விதைக்கலாம்.

மரம் செய விரும்பு!  - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்!

வெள்வேலம்

வெள்வேல மரங்கள், பல இடங்களில் இயற்கையாகவே வளர்ந்திருப்பதைக் காண முடியும். கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் வெள்வேலம் செழித்து வளர்ந்திருக்கும். கொங்கு மண்டலத்தில், மானாவாரி நிலங்களில் உயிர்வேலி அமைக்கப்பட்டு, அதற்குள் இம்மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கும். அதற்குள் மேயும் கால்நடைகளுக்கு இதன் நெற்றுகள் சிறந்த நொறுக்குத்தீனியாக இருந்து வருகின்றன. இதன் விதைகள் பறவைகள், ஆடு மாடுகள் மூலமாகப் பரவுகின்றன. இது பத்து மீட்டர் உயரமுடைய மரம். இதன் சிறப்பே, அதன் ஆரம்பகால வளர்ச்சிதான். விதை முளைத்த பிறகு உருவாகும் கிளைகள் மிகவும் மெல்லியவை. அவை கிடைமட்டத்தில் நான்கு பக்கமும் படர்ந்து கொண்டு, நடுவில் உள்ள குருத்து பகுதியைப் பாதுகாக்கும். இதன் மூலமாக நடுக்குருத்துப் பாதிக்கப் படாமல் மரம் வேகமாக வளரும்.

வறண்ட பூமியிலும் வளர்ந்து, ஆடுகளுக்குத் தழையும், மாடுகளுக்கு நெற்றும் தந்துதவும் அற்புதமான மரம் வெள்வேலம். இதன் பட்டை, சாராயம் காய்ச்ச மூலப்பொருளாகப் பயன்படுகிறது. இந்த மரத்தை வளர்க்க நினைப்பவர்கள், விதைகளை நேரடியாக விதைப்பது சிறந்தது. ஒரு கிலோவில் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் விதைகள் இருக்கும். இதன் முளைப்புத்திறனும் அதிகம்.

- வளரும் 

தமிழர்களின் திலகம்!

கருவேல மரத்துக் காய்களைக் கொஞ்சம் நீரூற்றி இடித்து, வடித்துக் கொட்டாங்குச்சிகளில் ஊற்றி, ஊறவைத்த நீரை வெயிலில் காய வைத்தால், கெட்டியாகி விடும். இதை, திலகமாக நெற்றிக்கு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் முன்னோரிடம் இருந்திருக்கிறது. இந்த மரம், எத்தனை வைரம் பாய்ந்திருந்தாலும் வீடுகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்பார்கள். காரணம், காயக்காய இது முறுக்கிக்கொள்ளும் தன்மை யுடையது. இதன் குச்சிகளைப் பல் துலக்கப் பயன்படுத்தலாம். இதனால்தான் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என சொல்லி வைத்தார்கள்.