மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது!

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது!

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம் பயணம்ஜி.பழனிச்சாமி - படங்கள்: க.தனசேகரன்

 விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வமிருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது ‘பசுமை விகடன்’. ‘ஒருநாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களைத் தகுதியுள்ள விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

ஒருநாள் விவசாயிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தில்லை சிவக்குமார், சுதன், மங்கையர்க்கரசி, செல்வி சேகரன், கலைச்செல்வி, கிருஷ்ணவேணி, சாந்தி, லோகநாதன் ஆகியோரை நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்தி இயற்கை வேளாண் பண்ணைக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்தது குறித்துக் கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே...

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது!

பசுமைக் குடிலுக்கு அருகே, டிராக்டருடன் பொருத்தப்பட்ட இயந்திரத்தில், பண்ணைக்கழிவுகளைத் தூளாக்கிக்கொண்டிருந்தார், பண்ணைப் பணியாளர் ஒருவர். அனைவரையும் அங்கு அழைத்துச் சென்ற அனிதா, “ரொம்பப் பக்கத்துல நெருங்காம தள்ளி இருந்து பாருங்க. இல்லைனா துப்பட்டா, தலை முடியை மெஷின் உள்ளே இழுத்துடும்” என்று எச்சரிக்கை செய்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

“தென்னை மரங்கள்ல இருந்து விழுகிற மட்டைகள், தேங்காய் உரிக்கிறப்போ கிடைக்கிற உரி மட்டைகள் எல்லாத்தையும் இதுல கொடுத்துத் தூளாக்கலாம். தென்னை மட்டைகளை மூடாக்காக நிலத்துல பரப்புறப்போ அது மட்க ரொம்ப நாளாகும். அதுக்குள்ள பூச்சிகள், பாம்புகள் அடையும். ஆனா, அதை இப்படித் தூளாக்கிப் போடுறப்போ சீக்கிரமா மட்கிடும். தென்னை மரத்தைச் சுத்தி வட்டப்பாத்தி எடுத்து அதுல இந்தத் தூளைக் கொட்டி வெச்சா மரத்துக்கு உரமாகிடும். தோப்பும் சுத்தமா இருக்கும்” என்று அனிதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த பணியாளர் ஒருவர், “உணவு தயாராகி விட்டது’’ என்றார்.

ஒருநாள் விவசாயிகள் அனைவரும், பம்ப்செட் தண்ணீரில் கை கால்களைக் கழுவிவிட்டு, மதியச் சாப்பாட்டை நிதானமாக உண்டனர். உண்ட களைப்பு தீர சற்று நேரம் மரத்தடியில் ஓய்வு எடுத்தனர்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது!

சற்று நேரத்திலேயே அனைவரும் அடுத்த சுற்றுக்குத் தயாராகிவிட, அனைவரையும் தென்னந்தோப்புக்குள் அழைத்துச் சென்றார், அனிதா. “எவ்வளவு வறட்சி வந்தாலும், நம்மாழ்வார் ஐயா சொல்லிக் கொடுத்த மூடாக்கு மந்திரத்தைக் கடைப்பிடிச்சாப் போதும். தென்னை மரங்களைக் காப்பாத்திடலாம்” என்ற அனிதாவிடம் “மூடாக்கு எப்படிப் போடுறது” என்று கேட்டார், மங்கையர்க்கரசி.

“ஒவ்வொரு தென்னை மரத்தைச் சுத்தியும் வட்டப்பாத்தி எடுத்து அதுலதான் தண்ணீர் விடுவோம். ஒரு மரத்துக்கு ஒரு நாளைக்கு 120 லிட்டர் தண்ணீர் கொடுக்கிறோம். அப்பதான் நல்ல மகசூல் கிடைக்கும். வெயில் காலத்துல மரத்துக்குப் பாய்ச்சுற தண்ணீர் உடனே ஆவியாகிடும். அப்படி ஆவியாகிறதைத் தடுக்கணும்னா மூடாக்கு அவசியம். இலைதழைக் கழிவுகள், தூளாக்கின மட்டை எல்லாத்தையும் மரத்தோட தூரைச் சுத்திக் கொட்டி வைக்கிறதுதான் மூடாக்கு. இதுல தண்ணீர் ஆவியாகாம இருக்கிறதோட, இந்தக் கழிவுகள் மட்கி உரமாகவும் ஆகிடும். தொடர்ந்து மூடாக்குப் போட்டுக்கிட்டே இருக்கிறப்போ, மண் வளமாகிடும்” என்று சொன்ன அனிதா, அனைவரையும் மாட்டுத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது!

“இங்கே மொத்தம் அஞ்சு நாட்டு மாடுகள் இருக்கு. அதுல ரெண்டு இப்ப கறவையில இருக்கு. இதுல கிடைக்கிற பாலை எங்க வீட்டுக்குப் பயன்படுத்திக்கிறோம். மாடுகள்ல இருந்து கிடைக்கிற சாணம், சிறுநீர் வயலுக்குத் தொழுவுரமாகவும், ஜீவாமிர்தம் தயாரிக்கிறதுக்காகவும் பயன்படுத்திக்குவோம். இயற்கை விவசாயத்துக்கு நாட்டு மாடுகள்தான் முக்கியம். ஒரு நாட்டுப்பசு இருந்தா, முப்பது ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயம் செய்ய முடியும்னு பாலேக்கர் சொல்வார். மண்ணுல நுண்ணுயிர்களைப் பெருக்கி வளப்படுத்துற ஆற்றல் நாட்டு மாடுகள்ல கிடைக்கிற கழிவுகளுக்குத்தான் இருக்கு.

நாட்டுப்பசுவோட சாணம், சிறுநீர் கொண்டு தயாரிக்கிற ஜீவாமிர்தக் கரைசலுக்கு அபரிமிதமான ஆற்றல் இருக்கு. விதைகளை விதை நேர்த்தி செய்ய பீஜாமிர்தமும், அடியுரமாகக் கொடுக்கக் கனஜீவாமிர்தமும் உற்பத்தி செஞ்சுக்கலாம்” என்றார். அதற்குள் தேநீர் நேரம் நெருங்கி விட, அனைவருக்கும் நாட்டுப்பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தேநீர் பரிமாறப்பட்டது. அதை அனைவரும் சுவைத்துக் குடித்தனர்.

அடுத்ததாகச் சென்ற இடம் மாந்தோப்பு. “மரத்துல பழம் இருந்தா வேணுங்கிறவங்க பறிச்சுச் சாப்பிட்டுக்கலாம்” என்று அனுமதி கொடுத்தார் அனிதா. அனைவரும் பழங் களைத் தேடிப்பிடித்துப் பறித்துச் சுவைக்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது!

“எப்படி இவ்வளவு சுவையா இருக்கு?” என்று கேட்டார் கிருஷ்ணவேணி.

“மண்புழு உரம், ஜீவாமிர்தம்னு இயற்கை இடுபொருள்கள்ல விளையுறதாலதான் இந்த இயற்கையான ருசி கிடைக்குது. அதுவும் நீங்க சாப்பிட்டது மரத்திலேயே பழுத்த பழம். இயற்கையா பழுக்கும்போது சுவை தானாகவே அதிகரிக்கும். இந்த மாந்தோப்பு மொத்தம் 10 ஏக்கர். மொத்தத்தையும் குத்தகைக்கு விட்டுட்டோம். ஆனா, ரசாயன உரம் மட்டும் பயன்படுத்தக்கூடாதுன்னு நிபந்தனை போட்டிருக்கோம். இங்கே கிளிமூக்கு, அல்போன்ஸா, செந்தூரா, பங்கனப்பள்ளி ரகங்களைக் கலந்து நட்டிருக்கோம்” என்ற அனிதா, “வாங்க, பண்ணைக் குட்டையைப் பார்ப்போம்” என்று அனைவரையும் அழைத்துச் சென்றார்.

“மலையில இருந்து வடிந்து வர்ற மழைத்தண்ணீர் இந்தப் பண்ணைக் குட்டைக்கு வந்து சேர்ந்திடும். ஒரு துளிகூட வீணாகாத அளவுக்குச் சரியா வாய்க்கால்கள் அமைச்சிருக்கோம். இதுமாதிரி மொத்தம் 10 பண்ணைக்குட்டைகள் இருக்கு. எங்க நிலத்துக்குள்ள விழுகிற மழைத்தண்ணீரும் நிலத்துக்குள்ளேயே சேகரமாகிடும். அதனால, இங்கே இருக்கிற ஐந்து போர்வெல்கள்லயும் எப்பவும் தண்ணீர் இருக்கும். இந்த மாதிரி அவங்கவங்க நிலத்துக்கேத்த அளவுக்குப் பண்ணைக் குட்டை அமைச்சு மழைத்தண்ணீரைச் சேகரிக்க ஆரம்பிச்சுட்டால் தண்ணீர் பஞ்சமே இல்லாம போயிடும்” என்றார் அனிதா.

பண்ணைக் குட்டையைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. அனைவரும் கிளம்ப ஆயத்தமாகினர். அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பி வைத்தார் அனிதா.

ஒருநாள் விவசாயிகளின் அனுபவங்கள்!

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது!

மங்கையர்க்கரசி: “வருஷம் முழுக்கக் காய்கறி கிடைக்கிற மாதிரி யான கலப்பு காய்கறிப் பயிர்ச் சாகுபடி பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அடுத்ததா, பண்ணைக் குட்டை இருந்தா பஞ்சம் வராதுங்கிறதையும் தெளிவாப் புரிஞ்சிட்டேன்.”

செல்வி சேகரன்: “இயற்கை விவசாயம் பத்தின பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். கொல்லிமலையில் இருக்கிற எங்க பண்ணையை, இயற்கை விவசாயத்துக்கு மாத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். வாய்ப்புக்கொடுத்த ‘பசுமை விகட’னுக்கு நன்றி.”

கலைச்செல்வி: “நாமக்கல்லதான் இருக்கேன். ஆனா, இந்தப் பண்ணையைப் பத்தி இப்போதான் கேள்விப்படறேன். அதுவும் இப்படி ஓர் இயற்கை பண்ணையைப் பார்க்கிற வாய்ப்பு, பசுமை விகடன் மூலம்தான் கிடைச்சது. விவசாயத்தை விட்டு விலகி வந்துட்ட எனக்குத் திரும்பவும் விவசாயம் செய்யணும்னு ஆசை வந்திருக்கு.”

கிருஷ்ணவேணி: “காவிரிக்கரையில் இருக்கிற எங்க தென்னந் தோப்பு வறட்சியால் வாடிட்டு இருக்கு. இங்க தெரிஞ்சுக்கிட்ட மூடாக்கு நுட்பத்தைக் கடைப்பிடித்துத் தென்னை மரங்களைக் காப்பாத்த முயற்சி எடுக்கப் போறேன்.”

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது!

சாந்தி: “மறுமுளைப்புத் தன்மை இருக்கிற நாட்டு ரக விதைகள் பத்தியும் விதை நேர்த்தி பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன்.”

தில்லை சிவக்குமார்: “நம்மாழ்வார் ஐயா, இது மாதிரி பயிற்சி கொடுக்கக்கூடிய, பல இயற்கை விவசாயிகளை உருவாக்கியிருக்கிறது பிரமிப்பான விஷயம்.”

லோகநாதன்: “காளான் வளர்த்துட்டு இருக்கேன். எனக்கு இப்போ பசுமைக்குடில் விவசாயத்து மேல ஆர்வம் வந்திருக்கு.”

சுதன்: “இயற்கை விவசாயம் பத்தி அரிச்சுவடியே தெரியாம இருந்த எனக்கு, நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறதுக்கு வாய்ப்பா இந்தப் பயிற்சி அமைஞ்சது.”

நீங்களும் ஒருநாள் விவசாயி ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை. சனி, ஞாயிறு விடுமுறை)

மாணவர், வேலை தேடிக்கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.