
தோல் நோய்க்குச் சங்கன் குப்பி... கபம் போக்கும் முள் சங்கன்!மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

தமிழ்ப் பெயர் தாவரவியல் பெயர்
சங்கன் குப்பி CLERODENDRUM INERME
முள் சங்கன் AZIMA TETRACANTHA
சங்குப்பூ CLITORIA TERNATEA
ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர் இன்ன தாவரம், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பதுதான் வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தை யும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக் கிறோம். இத்தொடரில் உள்ள மருத்துவக் குறிப்புகள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் சங்கன் குப்பி, முள் சங்கன், சங்குப்பூ ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.
சங்கன் குப்பி
படர்ந்து வளரக்கூடிய புதர்த் தாவரம் இது. பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. மதில் சுவர்போல இச்செடிகளை வெட்டி அழகுபடுத்தி வளர்ப்பார்கள். இதன் இலைகள், வெகுட்டலான மணம் கொண்டிருப்பதால் பீச்சங்கன், பீநாறிச்சங்கன் என்று இதை அழைக்கிறார்கள். சென்னை, மெரினா கடற்கரையில் சாலையோரத் தடுப்புச் சுவர் தாவரமாக வளர்க்கப்பட்டுள்ளது. இது மணற்பாங்கான நிலத்தில் செழித்து வளரும். ஆடு மாடுகள் இதைச் சாப்பிடுவதில்லை. அடர்ந்த புதர்த் தாவரமாக வளர்வதால், உயிர்வேலி அமைக்க ஏற்றது. இதன் இலை, வேர் ஆகிய இரண்டுமே சிறந்த மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கின்றன.
இதை, ‘தோல் நோய் மருத்துவர்’ என்று கூடச் சொல்லலாம். கரப்பான், காளாஞ்சகப்படை (சொரியாசிஸ்), விஷக்கடி, ஊறல், தடிப்புகள் போன்ற அனைத்துவிதமான தோல் நோய்களுமே ‘அலர்ஜி’யால்தான் வருகின்றன என்று ஆங்கில மருத்துவத்தில் காரணம் சொல்வார்கள். பாரம்பர்ய மருத்துவத்தில், இவை விஷத்தால் உண்டாகிறது எனக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சங்கன் குப்பி இலைகளைப் பறித்துச் சிறிது மோர் அல்லது நீராகாரம் விட்டுத் துவையல்போல அரைத்து, 40 நாள்கள் வரை தினமும் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சிறு நெல்லிக்காயளவு உண்டுவந்தால் ரத்தம் சுத்தமாகி தோல் நோய்கள் குணமாகத் தொடங்கும். ‘அகத்தியர் குழம்பு’ எனும் சித்த மருந்தைச் சங்கன் குப்பி இலைத்துவையலோடு சேர்த்து மூன்று நாள்கள் சாப்பிட்டால் பேதியாகும். இப்படிப் பேதியான பிறகு மருந்து எடுத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்.

‘வாதமலாது மேனி கெடாது’ என்பது சித்தர்களின் அறிவியல் கோட்பாடு. கேடடைந்த வாதக்குற்றத்தைத் தன்னிலைப்படுத்த, ‘பேதியால் வாதந்தாழும்’ எனும் கோட்பாட்டுக்கிணங்க, பேதிக்கு மருந்து எடுத்துக்கொண்டு, பிறகு மருந்து உட்கொள்வது நலம்.
சங்கன் குப்பி இலைகளைப் பச்சையாக அரைத்துக் கரப்பான், படைகள் மீது பூசி, அரை மணி நேரம் கழித்துக் கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்து வந்தால் குணமாகும்.
சங்கன் குப்பி இலைகளைத் தண்ணீரில் போட்டுச் சூடுபடுத்தி மிதமான சூட்டில் குளித்து வந்தால், உடலில் ஏற்படும் சொறி, எரிச்சல் ஆகியவை குணமாகும். தினமும் சங்கன் குப்பி இலையைத் தேடிச் சென்று பறிக்க இயலாத வர்கள், இந்த இலைச் சாற்றுடன் சமஅளவு சிற்றாமணக்கு எண்ணெயைச் சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி வைத்து இரவு படுக்கப்போகும் முன் 5 மில்லி அளவு குடித்து, தோல் நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

சங்கன் குப்பிச் செடியின் இலை, தண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு, கால் லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி ஒரு ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இக்கஷாயத்தை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துவந்தால் நாள்பட்ட காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் விப்புருதி எண்ணெய், மதனகாமேதவர இளகம், சித்தவல்லாதி இளகம், மாந்த எண்ணெய், கருவளர்க்கும் எண்ணெய், மேகாரி தைலம், பூவரசங்காய் எண்ணெய், இடிவல்லாதி மெழுகு, பேய்ச்சொறி சூரணம்... என நூற்றுக்கணக்கான மருந்துகளில் சங்கன் குப்பி இலை மற்றும் வேர் சேர்க்கப்படுகின்றன.
முள் சங்கன்
இதுவும் அனைத்து பக்கங்களிலும் கிளை பரப்பி உயரமாகவும் படர்ந்து வளரக்கூடியதாகவும் உள்ள புதர்த் தாவரம். ஒவ்வோர் இலைக் கோணத்திலும் நான்கு முள்கள் இருக்கும். எனவேதான் ‘டெட்ராகேன்தா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதுவும் மிகச்சிறந்த வேலித் தாவரம். இதைக்கொண்டு வேலி அமைத்துவிட்டால், எவரும் உள்ளே நுழைய முடியாது. அந்தளவுக்கு அடர்த்தியாகவும், முள்கள் நிறைந்த புதராகவும் காணப்படும். இதன் இலை, வேர், வேர்ப்பட்டை ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் வாய்ந்தவை. இதன் இலைகள், சளி சம்பந்தமான கப நோய்களை முழுவதுமாகக் குணமாக்குகின்றன. முள் சங்கன் இலை, தூதுவளை இலை ஆகிய இரண்டிலும் கைப்பிடியளவு எடுத்து நன்கு அரைத்து ஐந்து கிராம் அளவு உட்கொண்டு வந்தால், நாள்பட்ட சளி நோய்கள் குணமாகின்றன. இந்த இலைகளை அம்மைப் புண்கள் மீது பூசினால், எரிச்சல் குணமாகும். கரப்பான் புண்கள் மீது பூசி வர, புண்ணில் உள்ள செதில்கள் நீங்கும்.

பிரசவித்த நாள் தொடங்கி ஏழு நாள்கள் வரை முள் சங்கன் இலை, வேப்பிலை ஆகிய இரண்டையும் ஒரு கைப்பிடியளவு பறித்து வந்து, நன்கு அரைத்து ஐந்து கிராம் அளவு வெறும் வயிற்றில் காலை, மாலை என இரு வேளைகள் சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால், கர்ப்பாசய அழுக்குகள் தடையின்றி நீங்கும். தாய்க்கு ஜன்னி இழுப்பு வராது. இம்மருத்துவமுறை, நரிக்குறவ மக்களிடம் இன்று வரை புழக்கத்தில் உண்டு. இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவரும் அம்மக்களில் குழந்தை பிரசவித்த மூன்று மணி நேரத்திலேயே வழக்கமான வாழ்க்கை முறைக்குத் திரும்பி விடுகிற பழக்கம் உள்ளது.
முள் சங்கன் இலை, வேர்ப்பட்டை ஆகியவற்றைச் சம எடையளவு எடுத்துத் தண்ணீர் விட்டு அரைத்து, சுண்டைக் காயளவு மாத்திரையாக உருட்டி நிழலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். காலை, இரவு உணவுக்குப் பிறகு ஒரு மாத்திரை வீதம் உண்டு வந்தால், பக்கவாத நோயால் உறுப்புகளில் ஏற்படும் விறைப்புத்தன்மை குறையும்.
முள் சங்கன் வேர்ப்பட்டையைக் குடிநீர் செய்து நல்லெண்ணெயுடன் காய்ச்சி தைலமாக வைத்துகொண்டு தலையில் தேய்த்தால், தலையில் ஏற்படும் காளாஞ்சகப்படை, தலைமுடி உதிர்தல், புழுவெட்டு, செம்பட்டை முடி ஆகியவை குணமாகும். பக்கவாதம், சரவாங்கிவாதம் போன்ற பெரும் வாத நோயாளிகளின் உடல் முழுவதும் ஒரு மதமதப்பு, எரிச்சல், திமிர் காணப்படும். இதனால் சில நோயாளிகள் கண்ணீர் விட்டு அழுவதும் உண்டு. முள் சங்கன் வேர்ப்பட்டையை நன்கு அரைத்து மூன்று முதல் ஐந்து கிராம் அளவு எடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்துவர இந்த நோய்கள் குணமாகும். கன்னப்புற்றுநோயைக் குணமாக்கும் சித்திரமூலக் குளிகை தயாரிக்க, முள் சங்கன் இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து வாதநோய்கள், தோல்நோய்கள், மகப்பேறு நோய்கள், காசநோய், தலையில் தோன்றும் நோய்கள் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிற முள் சங்கன் தாவரம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. இயற்கை உயிர்வேலிகள் அமைக்க இவற்றைப் பயன்படுத்தினால் இத்தாவரத்தைக் காப்பாற்ற முடியும்.

சங்குப்பூ
கோயில் நந்தவனங்கள், வேலிச்செடிகள் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படும் கொடி இது. சங்கு வடிவில் பூக்கள் காணப்படுவதால் சங்குப்பூ என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் பூப்பூக்கும் இனத்தை ‘செருவிளை’ என்றும் நீல நிறத்தில் பூப்பதை ‘கருவிளை’ என்றும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. மருத்துவ நூல்களில் காக்கணம், காக்கணத்தி என்ற பெயர்களில் இது வழங்கப்படுகிறது. இதன் இலை, விதை, வேர் மூன்றும் சிறந்த மருத்துவப் பயன் உடையவை. நீல நிறப்பூவைவிட வெண்ணிறப்பூ பூக்கும் தாவரமே மருத்துவத்துக்குச் சிறந்தது என மூத்த மருத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர்.
பெருவாரியாகப் பயன்படுத்திப் பார்க்கையில் இவையிரண்டுமே மிகச் சிறப்பாகத்தான் உள்ளன. இதன் இலைகளுடன் உப்பு சேர்த்து அரைத்து, நெரிக்கட்டிகள் மீது பூசி வந்தால் வீக்கம் கரையும். யானைக்கால் நோயின் தொடக்க நிலைகளில் இதன் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டினால் வீக்கம் குறையும். இதன் வேரை, பால் ஆவியில் அவித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, இரண்டு கிராம் அளவு காலை, மாலை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும். 15 நாள்கள் முதல் 40 நாள்கள் வரை சாப்பிட வேண்டியிருக்கும்.
குழந்தைகளின் வலிப்பு நோய்க்கு இதன் விதைப்பொடி சூரணம் நல்ல மருந்து. இதன் விதைகளைச் சேகரித்துப் பசு நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு 300 மில்லி கிராம் முதல் 500 மில்லி கிராம் அளவு வரை எடுத்துத் தேனில் கலந்து, ஆண்டுக்கணக்கில் கொடுத்துவர வலிப்பு நோய் குணமாகும். ஆங்கில மருந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு இம்மருந்தையும் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் பலன் தெரியும்.
சங்குப்பூ விதைத்தூள் 140 கிராம், இந்துப்பு 140 கிராம், சுக்குத்தூள் 20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். யானைக்கால் நோயின் தொடக்கக் காலத்தில் (ஆறு மாதங்களுக்குள்) இப்பொடியை மூன்று கிராம் அளவு சாப்பிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு கிராம் அளவு மருந்தின் அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால், நன்கு பேதியாகி யானைக்கால் வீக்கம், நெரிக்கட்டி வீக்கம் ஆகியவை குறையும்.
அடுத்த இதழில் தைவேளை, நல்வேளை, நாய்வேளை மற்றும் தூதுவளை ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.
- வளரும்
பேறுகால நோய்களுக்குச் சித்த மருந்துகள்
சித்த மருத்துவத்தில் பேறுகாலச் சமயத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. இதை ‘அகத்தியர் கர்ப்பக்கோள்’ எனும் நூல் முழுமையாக விவரிக்கிறது. கருத்தரித்தலைக் கண்டறிந்தது முதலே, ஒவ்வொரு மாதமும் ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்குச் சிறந்த கைமருந்துகள் கூறப்பட்டுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாப் பெண்களுக்கும் இம்மருத்துவ முறைகள் நன்கு தெரிந்து இருந்தன.
கடந்த இரண்டு தலைமுறையாகப் பெண்களுக்கு, இத்தொடர்பு விட்டுப்போய்விட்டது. பிரசவத்தைத் தொடர்ந்து கர்ப்பாசய அழுக்குகள் தடையின்றி வெளியேறுவதற்கான லேகியம் இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. நடகாய லேகியம், நடகாயக் குழம்பு, பேறுகால இளகம், பேற்று இளகம் என்று பல்வேறு பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன.
பொதுவாக, எல்லா நாட்டுமருந்துக் கடைகளிலும் நாம் கேட்டவுடன், ஒரு பட்டியல்படி சுமார் 30 முதல் 35 கடைச்சரக்குகளை வகைக்கு 10 முதல் 50 கிராம் வரை கொடுப்பார்கள். அவற்றை வாங்கி வந்து, பொடி செய்து பனைவெல்லப்பாகில் போட்டுக் கிளறி, லேகிய பதத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரசவித்த தாய்கள் இம்மருந்தைக் காலை, மாலை என இரு வேளைகள் உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் கர்ப்பாசய அழுக்குகள் தடையின்றி வெளியேறும். அடிவயிறு கனம் குறையும். பிரசவித்த தாயின் உடல் மெலிந்து தாய்ப்பால் சுரப்புச் சீராக இருக்கும்.
மஞ்சள், பூண்டு, அரத்தை, சிறுநாகப்பூ, சதகுப்பை, சுக்கு, மிளகு, வால்மிளகு, திப்பிலி, கடுக்காய்த்தோல், நெல்லிவற்றல், தான்றிக்காய்த்தோல், சீரகம், கறுஞ்சீரகம், பெருஞ்சீரகம், ஆசாளி, வாய்விளங்கம், கடுகு, காயம், மல்லி, ஏலம், கிராம்பு, ஓமம், குரோசாணி ஓமம், கசகசா, தாளிசபத்திரி, சாதிபத்திரி, லவங்கபத்திரி, வசம்பு, தக்கோலம், தேசாவரம், ஜாதிக்காய், கார்போக அரிசி, வலம்புரிக்காய், மாசிக்காய், அதிவிடயம், அக்கரகாரம், கிச்சிலிக்கிழங்கு ஆகியவற்றைப் பொடித்துக் குழம்பு சமைத்து உண்பதும் உண்டு. சுகப்பிரசவமெனில் குழந்தை பிரசவித்த மறுநாளே இம்மருந்தை ஆரம்பித்துவிடலாம்.
அறுவைசிகிச்சை மூலம் மகப்பேறு நடந்திருந்தால் 21-ம் நாள் முதல் இம்மருந்தைச் சாப்பிட ஆரம்பிக்கலாம். இம்மருந்துகள், உடலில் வாயுவைச் சேரவிடாது. செரிமானச் சக்தியைச் சிறப்பாக வைத்திருப்பதால் தாய்சேய் நலன் பேணப்படுகிறது.

‘அழுத பிள்ளை சிரிச்சுதாம், கழுதைப்பாலைக் குடிச்சுதாம்!’
மேகநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளில் இரு வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளன. அவை செங்கிரந்தி, கருங்கிரந்தி எனப் பாலவாகட நூல் குறிப்பிடுகிறது. பேச்சு வழக்கில், இதைச் செவ்வாப்பு, கருவாப்பு என்று சொல்வார்கள். பிறந்த குழந்தையின் உடல் முழுவதும் சிவப்பு நிறத் தடிப்புகள் இருப்பது, செங்கிரந்தி. கறுப்பு நிறத் தடிப்புகள் இருந்தால், கருங்கிரந்தி.
ஐந்து மில்லி சங்கன் குப்பி வேர்ச்சாற்றைத் தாய்ப்பாலுடன் கலந்து கொடுத்தால் செங்கிரந்தி குணமாகும். கருங்கிரந்தி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும். ஐந்து மில்லி கழுதைப்பால், இரண்டு மில்லி ஓணான் ரத்தம் ஆகியவற்றைக் கலந்து சில வேளைகள் கொடுத்தால் கருங்கிரந்தி குணமாகும். இதனால்தான், ‘அழுத பிள்ளை சிரிச்சுதாம், கழுதைப்பாலைக் குடிச்சுதாம்’ என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர்.
கருங்கிரந்திக்குச் சரியான நேரத்தில் மருத்துவம் செய்யாவிடில் குழந்தை இறந்துபோக வாய்ப்புண்டு. அதனால்தான், இன்றளவும் கிராமங்களில் பிறந்த குழந்தைக்கு ஒரு சங்களவு கழுதைப்பால் அல்லது ஐந்து மில்லி பாலாடை கொடுத்து வருகிறார்கள்.
பச்சிளம் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்!
‘பச்சிளம் குழந்தைகளுக்குப் பச்சிலை மருந்து கொடுக்கலாமா?’ எனச் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்களே குழம்புவதுண்டு. சித்த மருத்துவத்தில் ‘பாலவாகடம்’ எனும் நூல்கள் உள்ளன. இவற்றில் குழந்தைகளுக்கான மருத்துவம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த மணித்துளி முதலே குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், துன்பங்களைப் பற்றித் தெளிவாக இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விளைவாக இம்மருந்துகள் புறந்தள்ளப்பட்டுவிட்டன. இவற்றை மீண்டும் புதுப்பிப்பதன் மூலம், குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் ஏராளமான தேவையற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தவிர்க்க முடியும். பச்சிளம் குழந்தைகளுக்குச் சித்த மருத்துவரின் ஆலோசனைபடி தாராளமாக பச்சிலை மருந்து கொடுக்கலாம்.