மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!

ஓவியம்: ஹரன் - படம்: வீ.சிவக்குமார்
சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சீக்கிரமே வியாபாரத்தை முடித்துவிட்டு வந்திருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். சற்று நேரத்தில் மிதிவண்டியில் வந்து சேர்ந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி.
“வாங்கய்யா… உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்” என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த நன்னாரி சர்பத்தை டம்ளர்களில் ஊற்றி, இருவருக்கும் கொடுத்துவிட்டு, “நானே வீட்டுல காய்ச்சினது, சாக்ரீம் பவுடரெல்லாம் சேர்க்காம, சுத்தமான சர்க்கரைப் போட்டுக் காய்ச்சிருக்கேன். உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி. ஜில்லுனு இருக்கணுங்கிறதுக்காகப் பாத்திரத்தை ஈரத்துணி சுத்தி எடுத்துட்டு வந்தேன்” என்றார்.
அதைக் குடித்துக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.
“வழக்கமா ஒவ்வொரு வருஷமும் ஜூன் பன்னிரண்டாம் தேதி மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா மாவட்டங்கள்ல குறுவை சாகுபடி செய்றதுக்காகத் தண்ணீர் திறப்பாங்க. அதுவும் அணையில் 52 டி.எம்.சி அளவுக்கு மேல், தண்ணீர் இருந்தால்தான் தண்ணீர் திறப்பாங்க. அந்தத் தண்ணீரை நம்பித்தான் டெல்டா மாவட்டங்கள்ல கிட்டத்தட்ட நாலு லட்சம் ஏக்கர் நிலத்துல குறுவை சாகுபடி செய்வாங்க.

2011-ம் வருஷம் ஆறு நாள் முன்னாடியே அதாவது, ஜூன் ஆறாம் தேதியே தண்ணீர் திறந்தாங்க. அதுக்கப்புறம் அணையில் தண்ணீர் இல்லாததால ஜூன் பன்னிரண்டாம் தேதி தண்ணீர் திறக்காம, அஞ்சு வருஷமா தாமதமாத்தான் திறந்திட்டு வர்றாங்க.
கடந்த அஞ்சு வருஷமாவே டெல்டா மாவட்டங்கள்ல குறுவை சாகுபடி நடக்கல. இப்போ மேட்டூர் அணையில் 4 டி.எம்.சி அளவுக்கும் குறைவாத்தான் தண்ணீர் இருக்கு. தென்மேற்குப் பருவமழை ஆரம்பிச்சாலும் ஜூன் பன்னிரண்டாம் தேதிக்குள்ள அணைக்கு 52 டி.எம்.சி தண்ணீர் வர வாய்ப்பில்லை. அதனால, இந்த வருஷமும் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் கிடைக்கிறது கஷ்டம்தான். தொடர்ந்து ஆறாவது வருஷமா குறுவை சாகுபடி தடைபடுது. இந்த வருஷமும் அறுபது கோடி ரூபாய் செலவில் குறுவை தொகுப்புத் திட்டத்தை, வேளாண்மைத் துறை செயல்படுத்தப் போகுது” என்றார், வாத்தியார்.
அதை ஆமோதித்த ஏரோட்டி, “இந்த வருஷம் மே மாசம் முப்பதாம் தேதி கேரளாவுல தென்மேற்குப் பருவமழை துவங்கும்னு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிச்சிருக்கு. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் தென்மேற்குப் பருவமழை மூலமாத்தான் அதிகமான தண்ணீர் கிடைக்கும். அந்தமான்ல முன்னாடியே தென்மேற்குப் பருவமழை ஆரம்பிச்சிடுச்சு. கேரளாவில் பருவமழை பெய்ய ஆரம்பிச்ச பிறகுதான், தமிழ்நாட்டுல மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த வருஷம் ஓரளவு நல்ல மழை கிடைக்கும்னு சொல்றாங்க” என்றார்,
அடுத்த செய்தியை ஆரம்பித்த வாத்தியார், “தமிழ்நாட்டுல, பெரும்பாலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமா விவசாயத்துக்குத் தேவையான உரங்களை விற்பனை செய்றாங்க. அதில்லாம தனியார் உரக்கடைகள்லயும் உரங்களை விற்பனை செய்வாங்க. இதுவரை, உரத்துக்கான மானியத்தை உரம் தயாரிக்கிற நிறுவனங்களுக்கு நேரடியா கொடுத்துட்டு இருந்துச்சு மத்திய அரசு. அதனால, கூட்டுறவு சங்கங்கள்லயும், தனியார் உரக்கடைகள்லயும் மானிய விலையிலேயே விவசாயிகளுக்கு உரத்தை விற்பனை செஞ்சுட்டு இருந்தாங்க.
குறைவான விலையில் உரம் கிடைச்சதால, சிலர், குறிப்பிட்ட உரங்களை வாங்கி வெடிமருந்து தயாரிக்கிற தொழில் சாலைகளுக்குக் கள்ளச் சந்தையில் விற்பனை செஞ்சுட்டு இருந்தாங்க. காலங்காலமா நடந்த இந்த மோசடியால மத்திய அரசுக்கு ஏகப்பட்ட பண நஷ்டம். இதைத் தடுக்குறதுக்காக விவசாயிகளுக்கான உர மானியத்தை நேரடியா அவங்க கணக்குல, வரவு வைக்கிற திட்டத்தைக் கொண்டு வந்திருக்காங்க. அதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு. அதுக்கிடையில் ஆதார் அட்டை வெச்சுருக்குற விவசாயிகளுக்கு மட்டும் மானிய விலை உரத்தை, விற்பனை செய்யணும்னு மத்திய அரசு உத்தரவு போட்டிருக்கு. இதுமூலமா ஒருத்தரே அதிகளவு உரம் வாங்குறதைத் தடுக்க முடியும்.

ஏற்கெனவே இந்தத் திட்டத்தை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள்ல கொண்டு வந்துட்டாங்க. தமிழ்நாட்டுல ஜூன் ஒண்ணாம் தேதியிலிருந்து அமலுக்கு வருது. ஜூன் ஒண்ணாம் தேதிக்கு அப்புறம், ஆதார் அட்டை வெச்சிருக்கவங்க மட்டும்தான் மானிய விலையில் உரம் வாங்க முடியும். மத்தவங்க கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்” என்றார்.
“ரேஷன் கடையில சாமான் வாங்கணும்னா ஆதார், பள்ளிக்கூடத்துல சத்துணவு சாப்பிடணும்னா ஆதார், உரம் வாங்கணும்னாலும் ஆதார்னு, ஆதார் அட்டை இல்லாம மனுஷன் இந்தியாவில் வாழ முடியாதுபோல இருக்கே” என்று அலுத்துக்கொண்டார், காய்கறி.
“இன்னும் என்னென்னத்துக்கு ஆதார் அட்டையைக் கேக்கப் போறாங்களோ தெரியல...” என்ற ஏரோட்டி, அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.
“நீலகிரி மாவட்டத்தில், கிட்டத்தட்ட அறுபது ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், தேயிலைச் சாகுபடி செய்றாங்க. விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கிறதுக்காகக் குன்னுார்ல இருக்கிற தேயிலை வாரியம், ஒவ்வொரு மாசமும் தேயிலைக்குச் ‘சராசரி குறைந்தபட்ச விலை’யை நிர்ணயிக்கும். விவசாயிகளுக்கும் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் அந்த விலை விவரத்தை அனுப்பி வைப்பாங்க.
இந்த மாசம் ஒரு கிலோ பசுந்தேயிலைக்குப் பதினஞ்சு ரூபாய்னு விலை நிர்ணயிச்சுருந்தாங்க. ஆனா, தனியார் தொழிற்சாலைகள், இந்த விலைக்குக் கொள்முதல் பண்றதில்லையாம். ஒரு கிலோ தேயிலைக்குப் பத்து ரூபாயில் இருந்து பன்னிரண்டு ரூபாய் வரைதான் கொள்முதல் விலையாகக் கொடுக்குறாங்களாம். இதனால சின்ன விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியா கடும் பாதிப்பாம்.
அதே நேரத்துல கூட்டுறவு சங்கங்கள் மூலமா இயங்குற ‘இன்கோ டீ தொழிற்சாலைகள்ல, தேயிலை வாரியம் நிர்ணயிக்கிற விலையைக் கொடுத்து வாங்குறாங்களாம். ஆனா, பல காரணங்களால நீலகிரி மாவட்டத்துல இருக்கிற, இன்கோ தொழில் சாலைகள் இயங்குறதில்லையாம். அதனால, தனியார் தொழிற்சாலை களுக்குத்தான் விவசாயிகள் கொடுக்க வேண்டியிருக்குதாம். ரொம்பக் கஷ்டத்துல இருக்குறாங்க தேயிலை விவசாயிகள்” என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சடசடவென ஆரம்பித்தது, கோடை மழை. அத்தோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

கால்நடைப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டுமா?
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை இளங்கலை; உணவு தொழில்நுட்பம்; பால் தொழில்நுட்பம்; கோழியின வளர்ப்பு ஆகிய நான்கு படிப்புகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இந்தப் படிப்புகளை மேற்கொள்ள விரும்புவர்கள், www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, புகைப்படம் ஒட்டி, சான்றிதழ் நகல்களை இணைத்து… ‘தலைவர், சேர்க்கைக் குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51’ என்ற முகவரிக்கு, ஜூன், 6-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த ஆண்டின் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு(கவுன்சலிங்) முடிந்த பிறகு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு தொடங்கும்.