
ஆண்மை பெருக்கும் தூதுவேளை... - மூலம் போக்கும் நாய்வேளை..! மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

தமிழ்ப் பெயர் தாவரவியல் பெயர்
* தூதுவேளை - SOLANUM TRILOBATUM
* நல்வேளை - CLEOME GYNANDRA
* நாய்வேளை - CLEOME VISCOSA
ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் தூதுவேளை, நல்வேளை, நாய்வேளை ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.
தூதுவேளை
தூதுவளை, தூதளை, தூதளம்... எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் தாவரம், தூதுவேளை. இது தூண்டில் வடிவ முட்கள்கொண்ட புதர்க்கொடி தாவரம். இதன் இலைகளிலும் முட்கள் இருக்கும். ஊதா நிறப் பூக்களையும், சிறகு வடிவிலான இலைகளையும், சிவப்பு நிறப் பழங்களையும் கொண்டிருக்கும். இதில், வெள்ளை நிறப்பூக்களை உடைய இனம், அரிய இனம். வேர், இலை, கொடி, பூ, காய், பழம் ஆகிய அனைத்துப் பாகங்களுமே சிறந்த மருத்துவப் பயன் உடையவை. இத்தாவரம், தொண்டைச் சளியையும் தொண்டைச் சதையையும் கரைக்கும் தன்மை கொண்டிருப்பது, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தூதுவேளையை அப்படியே முழுக் கொடியாக எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாறு எடுத்தும், குடிநீராகத் (கசாயம்) தயாரித்தும், உலர்த்திப் பொடியாக்கியும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. பல சித்த மருந்துகளில் தூதுவேளை சேர்க்கப்படுகிறது.
தூதுவேளை இலையை நெய்யில் வதக்கித் துவையலாகவோ குழம்பாகவோ, இரவு உணவோடு சேர்த்து உண்டு வந்தால், தொண்டையில் சளி கட்டாது. இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும். குரல்வளம் சீராகும். உடல் வலிமை அடையும். இது, போகம் விளைவிக்கும் கீரைகளில் ஒன்று என்பதால், இதை சாப்பிட்டு வருபவர்களுக்குக் காமம் பெருகும். ஆண்மை அதிகரிக்கும். தமிழ்நாட்டில், தூதுவேளை இலையைப் பச்சடி, துவையல் எனச் சமைத்து அன்றாட உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
நெஞ்சுச்சளி, புளிச்ச ஏப்பம், இருமல், நீர்க்கோவை, உடல்வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு பிடி தூதுவேளை இலையுடன் சிறிது பசுநெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால், குணமடையும்.

தூதுவேளைக் கொடியைக் குறுக அரிந்து, இடித்துச் சாறுபிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 5 மில்லி சாற்றைச் சம அளவு தேனுடன் கலந்து, மூன்று வேளை உணவுக்குப் பிறகு உண்டு வந்தால், நாள்பட்ட இருமல் குணமாகும். தினந்தோறும் சாறெடுக்க முடியாதவர்கள், 1 லிட்டர் தூதுவேளைச் சாற்றுடன் 1 லிட்டர் சுத்தமான நாட்டுப் பசுமாட்டு நெய் கலந்து, அடுப்பிலேற்றிக் காய்ச்சி, நெய்யாக வைத்துக் கொள்ளலாம். இதைக் காலை, மாலை வேளைகளில் 1 தேக்கரண்டி அளவு உண்டு வரலாம். இளைப்பு, ஆஸ்துமா இளைப்பு, காசநோய், இருமல் ஆகியவற்றைக் குணமாக்கும். காசநோயாளிகள், இதைத் தொடர்ந்து உண்டு வந்தால், மெலிந்த உடல் பருமனாகும். எடை கூடும். காசநோய்க்குச் சாப்பிடும் மாத்திரையுடன் இதையும் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

தூதுவேளையை வேருடன் பிடுங்கி அப்படியே நிழலில் காயவைத்து, இடித்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 10 பங்கு எடுத்துக்கொண்டு, அதனுடன் 1 பங்கு திப்பிலிப்பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்பொடியைக் காலை மற்றும் மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் 3 கிராம் முதல் 5 கிராம் வரை, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், பருத்த உடல் மெலியும். உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும்.
தூதுவேளை காய்களை மோர், உப்பு சேர்த்து ஊறவைத்து, வெயிலில் உலர வைக்க வேண்டும். இவற்றை வற்றலாக்கி, எண்ணெயில் வறுத்து, உணவுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும். மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவு உண்டாகும். ‘ஹிஸ்டீரியா’ நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இது நல்ல பலனைக் கொடுக்கும்.
பத்து தூதுவேளைப் பூக்களைப் பாலில் போட்டுக் காய்ச்ச வேண்டும். பூக்கள் வெந்தவுடன் அதனுடன் சிறிது கற்கண்டுப்பொடி கலந்து உண்டுவந்தால், முகம் பொலிவடையும். ஆண்மை பெருகும். இதை 3 மாதங்கள் வரை தொடர்ந்து உண்டுவரலாம்.
காம்பு நீக்கி ஆய்ந்த தூதுவேளைப் பூ, தேங்காய்ப் பூ (தேங்காய்த் துருவல்), முருங்கைப் பூ ஆகியவற்றில் தலா ஒரு பிடி எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். அதைப் புட்டு அவிப்பதுபோல ஆவியில் வேக வைத்து... அதனுடன், இரண்டு தேக்கரண்டி நெய், தேவையான அளவு சீனிக்கல்கண்டுத்தூள் சேர்த்துக் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்கள் பெருகும். உடல் பொலிவு பெறும். இம்மருந்தை அவரவர்கள் உடல் வலிமைக்குத் தக்கபடி 4 முதல் 6 வாரங்கள் வரை சாப்பிடலாம். எண்ணெய்க் குளியல் செய்யும் நாளில் இம்மருந்தை சாப்பிடக்கூடாது.

தைவேளை
கார்த்திகை மாதத்தில் மழை பெய்தவுடன் பூமித்தாயின் மடியிலிருந்து கிளம்புகிற முதல் தாவரம், ‘தைவேளை’தான். தொடர் மழைக் காலங்களில், இச்செடிகளின் இலைகள் பெரிதாகி வளர்ந்துகொண்டேயிருக்கும்.
தை மாதத்தில் இந்தச் செடிகள் பூத்துக் குலுங்கும். அதனால் ‘தைவேளை’, `நல்வேளை’ என்னும் பெயர்கள் உண்டாகின. 5 கூட்டிலைகளுடன் உயரமாக வளரும். வெள்ளை நிற அழகிய மலர்களையும், கொத்தவரங்காயை ஒத்த தோற்றத்தில் காய்களையும் கொண்டிருக்கும். இதன் தண்டில் பிசுபிசுப்பான திரவமும் காரமான மணமும் இருக்கும். நம் முன்னோர், இதன் தண்டில் குழம்பு செய்து சாப்பிட்டுள்ளனர். இன்றும், சில பகுதிகளில் உடல்வலி, கை கால் உளைச்சல் உள்ளவர்கள், தைவேளை ரசம் செய்து சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். காதில் சீழ் வடிந்து குத்தல், குடைச்சல் இருந்தால், 2 துளி தைவேளை இலைச்சாற்றைக் காதில் விடலாம். சாற்றை விட்டவுடன் சிறிது எரிச்சல் உண்டாகும். பிறகு, எரிச்சல் நீங்கி வலி குறையும். இதுபோன்று தொடர்ந்து செய்துவந்தால், காதில் சீழ்வடிவது முழுமையாகக் குணமாகும். ஒவ்வொரு முறையும் சாறு விடுவதற்கு முன் காதுகளைச் சுத்தம் செய்து, சாற்றை விட்டவுடன் பஞ்சுகொண்டு காதை அடைக்க வேண்டும்.
சீழ்ப் பிடித்த கட்டிகள்மீது தைவேளை இலையை அரைத்துப் பற்றுப் போட்டால் கட்டிகள் உடைந்து ஆறிவிடும்.
தைவேளைப் பூவை லேசாக வதக்கிச் சாறு பிழிந்துகொள்ள வேண்டும். அதில் 10 துளி எடுத்து தாய்ப்பாலுடன் கலந்து, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் புகட்டினால் சளிக்கட்டு, மூச்சுத்திணறல் ஆகியவை உடனே நீங்கும்.
பூக்களில் நெய்விட்டு வதக்கித் துவையல் செய்து, சாதத்துடன் கலந்து உண்டு வந்தால் வாதவலி, உளைச்சல் குணமாகும். இதன் விதைகளை நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சிறுவர்களுக்கு இந்தப் பொடியில் அரை கிராம் அளவு எடுத்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் என மூன்று நாள்கள் கொடுத்து, நான்காம் நாள் 5 மில்லி விளக்கெண்ணெய்க் கொடுத்தால் பேதியாகி வயிற்றில் இருக்கும் புழு, பூச்சிகள் அனைத்தும் கூண்டோடு வெளியேறும். பெரியவர்கள், 4 கிராம் பொடியையும் 15 மில்லி விளக்கெண்ணெயையும் எடுத்துக் கொள்ளலாம்.
தைவேளையின் விதைகளை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து, புழுநெளியும் படுக்கைப்புண்கள், மதுமேகப்புண்கள்மீது பூசி வர ஆறும். தைவேளை விதைப்பொடியில் 4 கிராம் எடுத்து 2 கிராம் உப்பு சேர்த்து 70 மில்லி தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 நாள்கள் குடித்துவந்தால், சுளுக்கு வலி குணமாகும்.

நாய்வேளை
தண்ணீர் ஓடும் இடங்களில் பரவலாகக் காணப்படும் தாவரம், நாய்வேளை. இதை நாய்க்கடுகு என்றும் சொல்வார்கள். மழை பெய்தவுடன் எல்லா இடங்களிலும் முளைக்கும். 3 இலைகளைக்கொண்ட இத்தாவரம், 2 அடி உயரம் வரை வளரும். மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டிருக்கும் இதன் காய்கள், கொத்தவரைபோல மேல்நோக்கி காணப்படும்.
விதைகள் கடுகுபோல இருக்கும். இந்த மூலிகையை உள்ளுக்கு (வாய் வழியாக) பயன்படுத்தக் கூடாது. இதன் இலைகளைப் பறித்து ஒரு சின்னவெங்காயம் சேர்த்து, நன்கு அரைத்து நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ள வேண்டும். இளஞ்சூட்டுடன் அதிக வலியுடன்கூடிய மூலக்கடுப்பு, மூல முளைக்கட்டிகள் மீது பூசி, கோவணம் கட்டிவந்தால் குணமாகும். நல்வேளை கொண்டு தயாரிக்கப்படும் அனைத்துப் புற மருந்துகளையும் நாய்வேளை கொண்டும் தயாரிக்கலாம்.
அடுத்த இதழில் புளி, கொடம்புளி மற்றும் புளிமா ஆகிய மூலிகைகளைப் பற்றிப் பார்ப்போம்.
- வளரும்

கபத்தலைவலி நீக்கும் தைவேளை
தலைவலியுடன் கண்ணெரிச்சல், தலைச்சுற்றல், குமட்டல் ஆகியவை ஏற்பட்டால், அது பித்தத்தலைவலி. வாந்தி எடுத்த பிறகு, இந்தத் தலைவலி குணமாகிவிடும். இதற்குப் பித்தத்தைத் தணிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தலைவலியில் இன்னொரு வகை, கபத்தலைவலி. தலையில் அதிகமான நீர் சேர்ந்து தலைப்பாரமாகவும், மூக்கில் நீர் வடிந்து கொண்டும் இருப்பது கபத்தலைவலி. இதைத் தைவேளை கொண்டு குணமாக்கலாம்.
தைவேளை இலைகளைப் பறித்து இடித்துச் சாறுபிழிந்து சக்கையை மட்டும் எடுத்து தலைமுழுவதும் பற்றுப்போட்டு... ஒரு மண்தட்டு அல்லது சட்டியைத் தலைமேல் கவிழ்த்தி, ஒரு துணியால் இறுகக் கட்டி வைத்துவிட வேண்டும். பதினைந்து நிமிடங்களில் தலையில் உள்ள நீரெல்லாம் வெளிவந்து குளித்ததுபோல ஆகிவிடும். பிறகு, தலையை நன்கு துடைத்து விட வேண்டும்.
இவ்வாறு காலை மற்றும் மாலை என இருவேளை 3 முதல் 5 நாள்கள் செய்துவந்தால், கபத்தலைவலி, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் ஆகியவை குணமாகும்.
உடல் பருமனாகத் தூதுவேளை நெய்!
நான்கு ஆண்டுகள் வளர்ந்த தூதுவேளைக் கொடியை வேருடன் பிடுங்கி உலர்த்தி, இடித்துத் தூள் செய்துகொள்ள வேண்டும்.
560 கிராம் வெள்ளைச் சர்க்கரையைச் சிறிது தண்ணீர் சேர்த்து பாகுபோல் காய்ச்சி, அதில் 280 கிராம் தூதுவேளைப் பொடி, 280 கிராம் மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிண்டி, 175 கிராம் நெய் சேர்த்து இறக்க வேண்டும்.
இதை ஆறவைத்து பீங்கான் பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும். இதில், மூன்றரை கிராம் முதல் 5 கிராம் வரை எடுத்து காலை, மாலை என இருவேளை ஒரு மண்டலம் (48 நாள்கள்) உண்டுவந்தால், இளைத்த உடல் பருக்கும். இதே மருந்தில் நெய்க்குப் பதிலாகத் தேன் சேர்த்து உண்டு வந்தால், பருத்த உடல் இளைக்கும்.
தூதுவேளைப் பூ லேகியம்
தூதுவேளை பூக்களில் 200 பூக்கள் எடுத்துக்கொண்டு, அவற்றை 350 மில்லி பசும்பாலில் இட்டுக் காய்ச்சி, அதனுடன் 60 கிராம் வெள்ளைச் சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்ச வேண்டும். பிறகு அதில், லேகியப்பதம் இருக்கும்படி, பசுநெய் 30 கிராம் சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த லேகியத்தில் நெல்லிக்காயளவு எடுத்து... காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சில் கட்டிய கபம், ரத்தத்தில் சேர்ந்துள்ள நாள்பட்ட விஷம், நீர்க்கோவை ஆகியவை நீங்கி உடல் உறுதியும் பொலிவும் பெறும்.

தூதுவேளை கற்பம்
மூலிகையைக் காயகல்பமாகத் தயாரித்து உடலைத் தேற்றுவதற்காகவும், நோய்கள் வராமல் தடுப்பதற்காகவும் பயன்படுத்த முடியும். காயம் என்பது மனித உடல். இதைப் பிணி, நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவை அணுகாதவண்ணம் பாதுகாப்பதுதான் காயகல்பம்.
மனித உடலைக் கல்சிலைபோல உறுதியாக்குவதே காயகல்பமுறை. இது சித்தர்கள் பயன்படுத்திய உன்னத முறை. மூலிகைகள் மட்டுமல்லாமல் இரும்பு, தங்கம், பாதரசம் முதலான உலோக, பாடாண, உப்புப் பொருள்களைக் கொண்டும் 108 காயகல்ப முறைகளைச் சித்தர்கள் வகுத்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான், தூதுவேளை காயகல்பம்.
இதுகுறித்து, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சித்தமருத்துவ மாமேதை அப்துல்லா சாயுபு, ‘அனுபோக வைத்திய நவநீதம்’ என்ற நூலில் எழுதியுள்ளார். ‘தூதுவேளை சமூலத்தை (முழுச்செடியை வேருடன் பிடுங்கி வந்து) நிழலில் உலர்த்தி இடித்துத் துணியில் சலித்துப் பீங்கான் பாத்திரம் அல்லது மரப்பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
இதில், மூன்றரை கிராம் முதல் ஏழு கிராம் வரை எடுத்து 100 மில்லி எருமை மோரில் கலக்கி குடிக்கக் கரப்பான் நோய் தீரும்.
பேயன் வாழைப்பழத்தில் கலந்து உண்டுவந்தால், விந்து ஒழுகல் தீரும். வேப்பம் பூ சாற்றில் கலந்து உண்டுவந்தால், குன்மநோய் தீரும். காசுகட்டித்தூளுடன் சம எடையில் கலந்து உண்டுவந்தால், சிலந்தி நோய் தீரும். பசுவின் நெய்யில் கலந்து உண்டு வர உடம்பு பெருக்கும். தேனில் கலந்து உண்டு வந்தால், உடம்பு இளைக்கும்.
தலா மூன்றரை கிராம் அளவு அரிசித் திப்பிலித்தூள், தூதுவேளைத்தூள் ஆகியவற்றைத் தேனில் குழைத்து உண்டுவந்தால், இருமல் தீரும். வெந்நீரில் கலந்து சாப்பிட்டுவந்தால் பித்தம் தீரும்.
மாட்டுச் சிறுநீரில் கலந்து உண்டு வந்தால், பாண்டுநோய் (ரத்தச்சோகை) தீரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வேளைச்சேரி
தூதுவேளை, நல்வேளை, நாய்வேளை ஆகியவை தவிர, வேளை எனும் பெயரில் முடியக்கூடிய தாவரங்கள் இன்னும் பல உண்டு. அவற்றில், காய்வேளை, முட்காய்வேளை மற்றும் கொள்ளுக்காய்வேளை போன்றவை குறிப்பிடத்தக்கவை. சென்னையில் இன்று ‘வேளச்சேரி’ என்று அழைக்கப்படும் பகுதியின் உண்மையான பெயர், ‘வேளைச்சேரி’ என்பதாகும். வேளைச்செடிகள் நிறைந்த பகுதி என்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.