மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!

மண்புழு மன்னாரு: வினோபா போட்ட  ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!

மாத்தி யோசி

ஹாராஷ்ட்ரா மாநிலத்துல இருக்கிற வார்தா காந்தி ஆஸ்ரமத்துல நடந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். நிகழ்ச்சி முடிஞ்சதும், ‘‘இவ்வளவு தூரம் வந்துட்டு, பக்கத்திலுள்ள பௌனார் ஆஸ்ரமத்தைப் பார்க்காமல் போகக் கூடாது’’னு அன்புக் கட்டளை போட்டார், வார்தா ஆஸ்ரமத்தில தன்னார்வ தொண்டரா இருந்த நண்பர். சரி, ஒரு எட்டு போயிட்டு வந்திடலாம்னு புறப்பட்டோம். பயண நேரத்துல பெளனார் ஆஸ்ரமம் சம்பந்தமான தகவலை, அந்த நண்பர் சொல்லத் தொடங்கினாரு...

‘‘காந்தியடிகளின் முக்கியச் சீடர்களில் ஒருவரான வினோபா, 1938-ல் பௌனார் என்ற இடத்தில் ஆஸ்ரமத்தை நிறுவினார். காந்தியடிகளின் அரசியல் சீடர் ஜவஹர்லால் நேரு என்றால், ஆன்மிகச் சீடர் வினோபாதான்.

மண்புழு மன்னாரு: வினோபா போட்ட  ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!

1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றபோது கைது செய்யப்பட்டு வேலூர், சியோனி ஆகிய ஊர்களிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டார். வேலூர் சிறையில் இருந்தபோது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றார். 1951-ல் தெலங்கானாவில் உள்ள போச்சம்பள்ளியில் அவருடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த எளிய மக்களிடம், ‘உங்களின் முக்கியத் தேவை என்ன’ என்று வினோபா கேட்டார். ‘விவசாயம் செய்ய நிலம் வேண்டும்’ என்றார்கள்.

‘இதற்கு உங்களுடைய பதில் என்ன’ என்று கிராமத்திலுள்ள வசதியான நபர்களிடம் கேட்டார் வினோபா.

‘என்னுடைய 100 ஏக்கர் நிலத்தைத் தருகிறேன்’ என்று ராமச்சந்திர ரெட்டி என்கிற நிலச்சுவான்தார் சொன்னார். வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த வினோபா, அங்குதான் ‘பூமிதான இயக்க’த்தைத் தொடங்கினார். இதன்மூலம் தினமும் 200 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரையிலான நிலங்கள் தானமாகக் கிடைத்து வந்தன. உத்தரப்பிரதேசத்தின் மங்ராத் என்ற கிராமத்திலுள்ள மக்கள் தங்களுடைய முழுக் கிராமத்தையே தானமாகக் கொடுத்தனர். பூமிதான இயக்கத்தின் மூலம் சுமார் 41,94,271 ஏக்கர் நிலங்களை நாடு முழுக்க நடந்து தானமாகப் பெற்றார் வினோபா. அந்த நிலங்களின் மதிப்பு இன்று சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாட்டில் மட்டும் வினோபாவின் சர்வோதயா இயக்கம், ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்றுள்ளது.

காற்று, தண்ணீர், வானம், சூரிய ஒளிபோல நிலமும் இயற்கையின் கொடை. அதைத் தனிப்பட்ட நபர்களின் பேரில் சொந்த சொத்தாக அனுபவிப்பது கூடாது என்ற உயரிய நோக்கத்தை ‘பூமிதான இயக்கம்’ வலியுறுத்துகிறது. ‘காந்தியம்’ என்பது கம்யூனிஸத்தின் அகிம்சை வடிவம் என்பதை வினோபாவின் செயல்கள் மூலம் அறிந்தகொள்ள முடியும்.

மண்புழு மன்னாரு: வினோபா போட்ட  ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!

இந்த ஆஸ்ரமத்தில் ஒவ்வொர் ஆண்டும் வினோபா இயற்கையுடன் கலந்த தினமான நவம்பர் 15-ம் தேதி, அவரின் சீடர்கள், ‘மித்ர மேளனம்’ என்ற பெயரில் ‘நண்பர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியை நடத்துகின்றனர். எழில் கொஞ்சும் வினோபாவின் ஆஸ்ரமம், வார்தாவில் ஓடும் தாம் நதிக்கரையில் அமைந்துள்ளது. தற்சார்பு என்ற சொல்லுக்கு இலக்கணமாக இன்றளவும் இந்த ஆஸ்ரமம் இருக்கிறது.

மண்புழு மன்னாரு: வினோபா போட்ட  ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!


உப்பு, தீப்பெட்டி தவிர ஆஸ்ரமத்தின் எளிமையான தேவைகள் அனைத்தும், அதன் வளாகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. வார்தா மண்ணை மிதிக்கும் காந்திய சீடர்கள், வினோபாவின் ஆஸ்ரமத்துக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்’’ என அந்த நண்பர் சொல்லி முடிக்கும்போது, எங்கள் வண்டி அதன் வளாகத்துக்குள்ளே நுழைந்தது. ஆஸ்ரமத்தைச் சுற்றிப் பார்க்கும்போது, கூடுதலான பிரமிப்பு உருவானது. அங்கே இருந்த விவசாயப் பண்ணையைப் பார்க்கும் போது, இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்துச்சு.

‘‘நான் ஆச்சார்யா வினோபாவோட சீடன். பி.எஸ்ஸி விவசாயப் படிப்பு முடிந்ததும், வினோபாவைச் சந்திக்கச் சென்றேன். ‘சுபாஷ்... நீ விவசாயப் பட்டம் வாங்கியிருக்கிறாய். இந்தப் பட்டம் பெற்றவர்களுக்கு வேளாண் அதிகாரி வேலை கிடைக்கும். ஆனால், நீ அந்த வேலையில் சேரக் கூடாது. ஏழைகளுக்காகவும் பழங்குடி மக்களுக்காகவும் பாடுபட வேண்டும்’ என்று வினோபா கட்டளையிட்டார். அதன்படியே களத்தில் இறங்கினேன். மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என வினோபா அன்று போட்ட விதைதான், என்னை விவசாயிகளுக்காக ஆராய்ச்சி செய்ய வைத்தது. அந்தக் கடுமையான ஆராய்ச்சி, ஜீரோ பட்ஜெட் என்ற இயற்கை வேளாண்மை நுட்பத்தைக் கண்டுபிடிக்க உதவி செய்தது. இப்போது ஜீரோ பட்ஜெட் ஓர் இயக்கமாக மாறி இந்தியாவைத் தாண்டி, பல நாடுகளில் பின்பற்றும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது’’னு மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கர், வினோபா பத்தி சொல்லுவார். அந்த ஆஸ்ரமத்தைச் சுற்றிப் பார்க்கும்போது, பாலேக்கர் சொன்ன அந்தத் தகவல்கள் காதுகள்ல ஒலிச்சுக்கிட்டே இருந்தன.