
புறாபாண்டி
இந்த இதழ் ‘ஜீரோ பட்ஜெட்’ சிறப்பிதழ் என்பதால், இங்கு இடம்பெறும் அனைத்துக் கேள்விகளுக்கும் ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் பதில் சொல்கிறார்.

‘‘நெல் சாகுபடி செய்துள்ளோம். பாசன நீருடன் எத்தனை முறை ஜீவாமிர்தத்தைக் கலந்து பாய்ச்ச வேண்டும். கன ஜீவாமிர்தத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்லுங்கள்.’’
எம்.கலைச்செல்வி, அரக்கோணம்.
‘‘ஜீரோபட்ஜெட் இயற்கை வேளாண்மை முறையில், ஒவ்வொன்றையும் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நெற்பயிர் உட்பட நீர்ப் பாசனம் செய்யும் வயல்களுக்கு மட்டுமே ஜீவாமிர்தக் கரைசல் ஏற்றவை. ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை 15 நாள்களுக்கு ஒருமுறை பாசன நீருடன் கலந்துவிடலாம். இதன் மூலம் மண்வளம் பெருகி, நல்ல விளைச்சலும் கிடைக்கும். ஜீவாமிர்தக் கரைசலிலுள்ள பொருள்கள் நுண்ணுயிர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. இதனால், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாகப் பெருகி, நெற்பயிரின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே, 15 நாள்கள் இடைவெளியில் மாதம் இரண்டு முறை பாசன நீருடன் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிடவும். அறுவடைக் காலம் வரையிலும் இப்படிப் பாய்ச்சி வரலாம். இதன் மூலம் நிலம் வளமாகி, அடுத்து சாகுபடி செய்யப்படும் பயிரும் செழித்து வளரும். நிலத்துக்கு ஜீவாமிர்தத்தை அதிகம் பாய்ச்சினாலும் பயன் உண்டு. அளவுக்கு மீறினாலும் ஆபத்தில்லை.
அடுத்து கனஜீவாமிர்தம். இது மானாவாரி நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் இடுபொருள். மானாவாரி நிலத்தில் நீர்ப் பாசனம் செய்ய வசதி இருக்காது. அதுபோன்ற நிலங்களில் நுண்ணுயிரிகளைப் பெருக்கவே கனஜீவாமிர்தத்தைப் பயன்படுத்த வேண்டும். பயிர் விதைப்புச் செய்வதற்கு முன்பு ஏக்கருக்கு 100 கிலோ கனஜீவாமிர்தத் தூளை வயலில் தூவி விட வேண்டும். விதைப்புச் செய்து ஒரு மாதம் கழித்து, ஏக்கருக்கு 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி விடுங்கள். இதுவே அந்த வயலுக்குப் போதுமானதாகும். ஜீவாமிர்தம் பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்குமோ... அதே பலன் இதிலும் கிடைக்கும். வானம் பார்த்த நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள், இதைத் தயாரித்துப் பயிர்செய்து, நல்ல விளைச்சல் எடுக்கலாம்.’’

“எங்கள் தோட்டத்திலுள்ள ஆறு வயது கொண்ட மா மரங்களில் பூ பூத்தவுடன் உதிர்ந்து விடுகின்றன. இதனால், மகசூல் குறைவாகக் கிடைக்கின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லுங்கள்?’’
ஆர்.குணசேகரன், போச்சம்பள்ளி.
“பொதுவாக மண்ணில் போதுமான சத்துகள் இருந்தால்தான், அவற்றை எடுத்துக் கொண்டு மாமரம் காய்த்துக் குலுங்கும். நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, சத்துப் பற்றாக்குறையால்தான் மா மரத்தில் பூக்கள் கொட்டுகின்றன எனத் தெரிகின்றது. எனவே, உடனடியாகப் பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விடுங்கள். அடுத்த 15 நாள்கள் இடைவெளியில் ஜீவாமிர்தக் கரைசலை நேரடியாக இலை வழியாகத் தெளிக்கவும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால், உங்கள் நிலத்திலுள்ள மண் வளமானதாக மாறும். நுண்ணுயிர்கள் பெருகும். மண்புழுக்களின் நடமாட்டம் அதிகரிக்கும். இதனால், மா மரத்துக்குத் தேவையான சத்துகள் மண்ணில் உருவாகும். அடுத்த பருவத்தில், மா மரங்களில் காய்ப்புத் திறன் அதிகரிக்கும்.”

‘‘என் நிலத்தின் மண்வளம் பி.ஹெச்-7.5 என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது. நிலத்தில் வளம் இல்லை என வல்லுநர்கள் சொல்கிறார்கள். இந்த நிலத்தை வளமாக்க வழி சொல்லுங்கள்?’’
கே.சிவராமன், ஊத்துக்கோட்டை.
“ஜீரோபட்ஜெட் முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், உங்கள் நிலத்தில் மண்பரிசோதனை செய்ய வேண்டாம் என்றுதான் சொல்லி வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் மண்பரிசோதனை என்பதே தேவையில்லாத ஒன்று. அப்படியே செய்தாலும் முழுமையான அளவில் அதைச் செய்ய வேண்டும். முறையாகச் செய்ய வேண்டும்.
ஆனால், நம் நாட்டில் உள்ள வல்லுநர்கள் பெரும்பாலும், அப்படியெல்லாம் செய்வதே இல்லை. பரிசோதனை என்பதைப் பெயருக்கு செய்து பார்த்துவிட்டு, ஏதாவதொரு பரிந்துரையை எழுதிக் கொடுத்துவிடுகிறார்கள். இதனால், மண்பரிசோதனை முடிவுகளைப் பார்த்தவுடன், விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகின்றன. பணத்தைக் கொடுத்து மன உளச்சலை ஏன் வாங்கிக்கொள்ள வேண்டும். இதைவிட, ஜீரோ பட்ஜெட் முறையில் நிலத்துக்குச் செய்யவேண்டிய விஷயங்களைச் சரிவரச் செய்துவந்தால், நிலத்தில் நாட்டு மண்புழுக்களின் எண்ணிக்கை பெருகி, அது தரமான நிலமாக மாறிவிடும். மண்பரிசோதனைக்கும் அவசியம் இருக்காது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். மண்ணின் கார, அமில நிலையைத்தான் ஆங்கிலத்தில் பி.ஹெச். ( PH-Potential of Hydrogen) என்கிறார்கள். பொதுவாக நல்ல வளமுடைய நிலத்தின் பி.ஹெச். 7.0 என்ற அளவில் இருக்கும். விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலத்தின் பி.ஹெச். 10 என்ற அளவில் இருக்கும். நவீன அறிவியல் அளவுகோலின்படி பார்க்கும்போது உங்கள் நிலத்தின் மண், ஓரளவு நன்றாகவே உள்ளது. அதை முழுமையாக வளப்படுத்த முறையான ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுங்கள். இத்துடன் உங்கள் நிலத்தின் வரப்போரங்களில் முருங்கையை ஊடுபயிராகச் சாகுபடி செய்யுங்கள்.
முருங்கை ஓர் அற்புதமான மரம். காற்றில் உள்ள தழைச் சத்துகளைக் கிரகித்து மண்ணில் சேர்க்கும் தன்மைகொண்டது. இதனால்தான் முருங்கை மரத்தின் அருகே வளரும் பயிர்கள் செழிப்பாக வளர்கின்றன. முருங்கையைப் பொறுத்தவரை நடவு செய்த ஆறு மாதத்தில் காய்ப்புக்கு வந்துவிடும். ஆண்டுக்கு இரு முறை காய்க்கும். ஒரு காய்ப்பு முடிந்தவுடன் மரத்தைக் கவாத்துசெய்து விட்டால், அடுத்த முறை நன்றாகக் காய்க்கும். கவாத்துச் செய்யும்போது கிடைக்கக்கூடிய இலை, தழை, கிளைகளை மூடாக்காகப் பயன்படுத்தலாம்.
மேலும், தட்டைப்பயறு என்ற காராமணியையும் நிலத்தில் ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். தட்டைப்பயறும் காற்றிலுள்ள தழைச்சத்தை இழுத்து மண்ணை வளப்படுத்தும். இது அற்புதமான உயிர் மூடாக்கு பயிர். களைச்செடிகள் அதிகமுள்ள இடத்தில் இதை விதைக்கலாம். இதன் தழைகள் கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகும். தட்டைப்பயறு மனிதர்களுக்கு ஏற்ற புரதம் நிறைந்த உணவு. ஆக, மண்ணுக்கும் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் நன்மை செய்யும் தட்டைப்பயறு வகையை ஜீரோபட்ஜெட் சாகுபடி செய்யும் விவசாயிகளைக் கட்டாயம் விதைக்கச் சொல்லி வருகிறேன். இப்படி நிறைய நுட்பங்கள் ஜீரோபட்ஜெட் முறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.”

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.