மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்...  தவிப்பில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!

ஓவியம்: ஹரன்

வாய்க்கால் தண்ணியை வயலுக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தார் ஏரோட்டி. முன்னரே வந்துவிட்ட காய்கறி கண்ணம்மா, காய்களை அடுக்கிக் கொண்டே ஏரோட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். இவர்கள் இருப்பதை தூரத்திலிருந்து பார்த்த வாத்தியார், அருகில் வந்தார். வந்தவுடன், சூடான ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்...  தவிப்பில் விவசாயிகள்!

“நிலத்தடி நீர்மட்டம் குறைவா இருக்குறதால தண்ணீரைக் சிக்கனமா பயன்படுத்தணுங்கிற நோக்கத்துல மத்திய, மாநில அரசுகள் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மானியம் கொடுத்துட்டு இருக்குறாங்க. சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவிகித மானியமும், மற்ற விவசாயிகளுக்கு எழுபத்தஞ்சு சதவிகித மானியமும் கிடைச்சுட்டு இருக்கு. முன்னாடி எழுத்து மூலமாதான், இந்த மானியத்துக்கு விண்ணப்பம் கொடுத்துட்டு இருந்தாங்க. அதுல சீனியாரிட்டியில் முறைகேடு நடக்குதுனு புகார் எழுந்ததால, ஆன்லைன்ல மட்டுமே மானியத்துக்கு விண்ணப்பிக்க முடியும்னு அரசு அறிவிச்சுச்சு. ஆன்லைன்ல முறைப்படி பதிவு செஞ்சதும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களும், வேளாண் பொறியியல் துறை அலுவலர்களும் சேர்ந்து ஆய்வு செஞ்சு அனுமதி கொடுக்கணும். ஆனா, பல மாவட்டங்கள்ல ஆன்லைன்ல விண்ணப்பிச்சும் ரொம்ப நாளா அதிகாரிகள் ஆய்வுக்கு வரலைனு குற்றச்சாட்டுக் கிளம்பியிருக்கு. வேளாண் பொறியியல் துறையில் ஆள்கள் பற்றாக்குறையாலதான் தாமதம்னு சொல்றாங்க. காலிப்பணியிடங்கள்ல போதுமான பணியாளர்களை நிரப்பினால்தான் தாமதமில்லாம சொட்டுநீர் மானியம் கிடைக்கும்கிற நிலை உருவாகியிருக்கு” என்றார்.

“எங்க போனாலும் விவசாயிகளுக்குப் பிரச்னைதான்” என்ற ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

“விவசாயிகள் நீர்நிலைகள்ல இருந்து வண்டல் மண் எடுத்துக்கலாம்னு அறிவிச்சதுல, மாநிலம் முழுவதுமே விவசாயிகளுக்குச் சந்தோசம்தான். எல்லா மாவட்டங்கள்லயும் அரசாங்கமே விழா நடத்தி, விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதி கொடுத்தாங்க. விவசாயிகளும் ரொம்ப ஆர்வமா அள்ளிக்கிட்டு இருக்காங்க. அதனால, நீர்நிலைகள் தூர் வாரப்படுறதோட ஆழமும் அதிகரிக்குது. ஆனா, பவானி சாகர் அணைப் பகுதியில் விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளுறதுக்குச் சில விவசாயிகளே பிரச்னை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அணையில் நீர்மட்டம் குறைஞ்சா, பொதுப்பணித்துறை மூலமா நீர்தேக்கப் பகுதிகள்ல மானாவாரி விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு அனுமதி கொடுப்பாங்க. அப்படி அனுமதி வாங்கிச் சில விவசாயிகள் பவானிசாகர் அணையில் விவசாயம் செஞ்சுட்டு இருந்தாங்க. இவங்களுக்கு ரெண்டு, மூணு வருஷத்துக்கு முன்னாடியே குத்தகைக் காலம் முடிஞ்சுடுச்சு. ஆனாலும், அவங்க இடத்தைக் காலி செய்யாம இன்னமும் ஆக்கிரமிச்சு வெச்சிருக்காங்க.

இப்படி விவசாயம் செய்ய அனுமதி வாங்கின விவசாயிகள், அணையில் இருக்குற தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது. ஆனா, அங்க எல்லோருமே டீசல் மோட்டார் மூலமா அணையில இருக்குற தண்ணீரை எடுத்துதான் விவசாயம் செய்றாங்க. இதையெல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுக்கவே இல்லை.

இப்போ, விவசாயிகள் ஒரு யூனிட் வண்டல் மண்ணுக்கு 106 ரூபாயைக் கட்டிட்டு அணைக்குள்ள மண் அள்ள வர்றப்போ, அணைப்பகுதியை ஆக்கிரமிச்சு வெச்சுருக்குற விவசாயிகள் பிரச்னை செஞ்சு அள்ள விடறதில்லையாம். மீறி அள்ளுனா, ஒரு லாரிக்கு 200 ரூபாய் கொடுக்கணும்னு அடாவடி செய்றாங்களாம்.

இதைப்பத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள்கிட்ட புகார் கொடுத்தாலும் அவங்க கண்டுக்கறதில்லையாம். அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கூட்டு இருக்குதுனு விவசாயிகள் புலம்புறாங்க” என்று ஏரோட்டி சொல்லி முடிக்கும்போதே, லேசாக தூறல் விழ, “மழை கனமா பெய்றதுக்குள்ள, வேறெடத்துக்கு போயிடலாம்” என்று காய்கறி சொல்லவும், அனைவரும் எழுந்து ஓட, அத்துடன் அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.