மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19

புளி, கொடம்புளி, புளிமா, புளிச்சக்காய்... நல்மருந்தாகும் புளி வகைகள்!மருத்துவம் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு, படங்கள்: எல்.ராஜேந்திரன்

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் புளி, கொடம்புளி மற்றும் புளிமா ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

அனைத்துவிதமான சமையலிலும் இடம் பிடிக்கும் ஒரு முக்கியப் பொருள் புளி. தற்போது நாம் பயன்படுத்தும் புளி, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சூடான் நாட்டிலிருந்து அரேபிய வணிகர்கள் மூலம் அறிமுகமானது என்று சொல்லப்படுகிறது. இந்தப்புளியின் வருகைக்கு முன்னர் புளிப்புச் சுவைக்காகக் கொடம்புளி, புளிமா, புளிச்சக்காய் ஆகியவற்றைத்தான் நம் முன்னோர் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், இவை மூன்றும் நம் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19

சித்தமருத்துவ நூல்களில், ‘பத்திய காலங்களில் ‘பழம்புளி’யைச் சேர்த்துக் கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். தவிர, பழம்புளியைக் கொண்டு சில தீநீர் (‘தீநீர்’ என்பது மணமுள்ள பொருள்களைக் கொதிக்க வைத்து, அதன் ஆவியை குளிர்வித்து பெறப்படும் திரவம்). வகைகளின் செய்முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. பழம்புளி என்பதை ஐந்து ஆண்டுகளான புளி என்று சிலர் பொருள்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால் இது தவறானது. குறுந்தொகையில், ‘பசும்புளி வேட்கை கடுஞ்சூல் மகளிர்’ என்ற சொற்றொடர் வருகிறது. இதை வைத்துப் பார்த்தால் கொடம்புளி, புளிச்சக்காய், புளிமா ஆகியவற்றைத்தான் ‘பசும்புளி’ எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஏனெனில், இவை மூன்றுமே மரத்தில் பச்சை நிறத்திலிருக்கின்றன. கொடம்புளியை உலரவைத்த பிறகுதான் கறுப்பு நிறத்துக்கு மாறுகிறது. அதனால், பசும்புளி என்கிற சொல்லாடல் கொடம்புளியைத்தான் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்றும் நம் ஊர்களில் நடைமுறையிலிருக்கும் ஒரு வழக்கத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதிய பேருந்து நிலையம் ஒன்று திறப்பு விழா கண்ட மறுநாளே, ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையம் ‘பழைய பேருந்து நிலையம்’ என பெயர் மாற்றம் ஆகிவிடும். அதுபோல, புதிய வரவான அரேபிய புளி புழக்கத்துக்கு வந்தவுடன், ஏற்கெனவே இருந்துவந்த ‘கொடம்புளி’ பழம்புளி ஆகிவிட்டது.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19

சித்தமருத்துவப் பதார்த்த குணவிளக்க நூலில்,
‘புத்தியும் மந்த மாகும் பொருமியே உடலுமூதும்
பத்தியம் தவறும் சன்னி பாதமாம் சுரங்கள்வீறும்
சர்த்தியும் பித்துந் தீரும் தனுவெலாம் வாதமேறும்
மத்திபந் தாதுபுஷ்டி வருந்திரை நரைபுளிக்கே’


- தேரையர் குணவாகடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் பொருள், ‘புளியை (தற்போது புழக்கத்தில் உள்ள புளி) உண்டு வருவதால் புத்தி மந்தமாகும். உடல் குண்டாகும். பத்தியம் தவறும். சுரம், சன்னி முதலியவை அதிகரிக்கும். வாந்தியும் பித்தமும் குறையும். மூட்டுகளிலெல்லாம் வாதம் அதிகரிக்கும். தாது புஷ்டி குறையும், நரை, திரை உண்டாகும்’ என்பதாகும்.

அகத்தியர் குணவாகடத்தில்,
‘தீதில் பழம்புளியைச் சேர்க்கத் திரிதோடம்
வாதமொடு சூலைகபம் மாறுங்காண் - ஓதுசுரஞ்
சர்த்தியென்ற தோடமிவைச் சாந்தமாங் கண்ணோய்போய்
பித்தமென்ற பேரொழியும் பேக’
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19

இதன் பொருள், ‘தீமைகளற்ற பழம்புளியை உண்டு வந்தால் உடலை இயக்குகிற வளி (வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) ஆகிய முக்குற்றங்களும் மாறி, வலி (சூலை) குறையும். சுரம், வாந்தி முதலிய நோய்கள் விலகும். கண்ணோய்கள் குணமாகும். பித்தநோய்கள் அனைத்தும் விலகும்’ என்பதாகும்.

இவ்விரண்டு பாடல்களையும் கவனித்தாலே நமது பழம்புளியான கொடம்புளிக்கும் தற்போதைய புளிக்கும் உள்ள குண வேறுபாடுகளை நன்கு புரிந்துகொள்ளலாம்.

என்னோடு நெருங்கிய தொடர்புடைய பொதிகைமலை காணிக்குடி மக்களைக் கடந்த 30 ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். ‘நாட்டுப்புளியையும் ரேசன் கடை அரிசியையும் எங்க மக்கள் திங்க ஆரம்பிச்ச பிறகுதான் எல்லா நோயும் வந்தது’ என்று என்னிடம் சொல்வார்கள்.

புளியும் உப்பும் வாழ்நாள் முழுவதும் நாம் உண்டு வரக்கூடிய உணவுப் பொருள்கள். பழம்புளியாகிய கொடம்புளியை உணவுடன் சேர்த்து தினமும் உண்டுவந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராது. இதனால் ரத்தஅழுத்தம், இருதய அடைப்பு, பக்கவாதம் முதலான நோய்கள் தடுக்கப்படுகின்றன. உண்மையில்,  உடல் நலன் மீது அக்கறை இருப்பவர்கள் சாப்பிட வேண்டியது கொடம்புளிதான். இதைச் சாப்பிட ஆரம்பித்த மூன்றே மாதங்களில் நிறைய மாற்றங்களை உணர முடியும். உடல் மெலிய விரும்புபவர்களுக்கு நான்  கொடம்புளியைத் தான் பரிந்துரைக்கிறேன். மூன்றே மாதங்களில் உடல் மெலிவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19

கொடம்புளி உண்டு வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள், தீராத தலைவலி முதலியவையும் குணமாகும். கேரள மாநிலத்தில் இதை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். கொங்கணி மொழி பேசும் மக்கள்  கொடம்புளியில் இன்னொரு வகையான ‘கொக்கும்’ என்ற புளியைத்தான் பயன்படுத்துகின்றனர். கொடம்புளியை ஒரு கைப்பிடியளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி, 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, இதைப் பிசைந்து கரைசல் எடுக்க வேண்டும். இந்தக் கரைசலைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். பிழிந்த கொடம்புளியில் சிறிது வெந்நீர் சேர்த்து, மீண்டும் புளிக்கரைசல் எடுக்க முடியும். இப்படி ஐந்து நாள்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைமாறாக் காடுகளில் கொடம்புளி மரங்கள் நீர்நிலை ஓரங்களில் இயல்பாகவே வளர்கின்றன. இதைத் தனிப்பயிராகத் தோப்பாக வளர்க்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. உடல் எடைக் குறைப்புப் பிரச்னையில் கொடம்புளியைத் தனி மருந்தாக எடுத்துக்கொண்ட சிலரை ஆய்வுக்குட்படுத்திய போது, அவர்களுக்கிருந்த புற்றுநோய்களும் ஹெச்.ஐ.வியால் ஏற்படும் நோய்களும் குணமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19

தற்போது பயன்படுத்தி வரும் புளியும் நமக்குப் பல பலன்களைக் கொடுக்கிறது. புற மருத்துவச் சிகிச்சைகளில் நாட்டுப்புளிக்கு முக்கிய இடமுண்டு. புளியைக் கெட்டியாகத் தண்ணீரில் கரைத்து, கொதிக்க வைத்துக் குழம்புப் பதத்தில் இறக்கிக்கொள்ள வேண்டும். சுளுக்கு, அடிபட்டதால் ஏற்படும் வீக்கம், ரத்தக்கட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட உடல்பாகங்களின்மீது இப்புளிக்கரைசலை உடல் தாங்கும் சூட்டில் பூசினால், விரைவில் குணமாகும்.

புளியங்கொட்டைகளைத் தண்ணீரில் ஊறவைத்து அரைத்துப் பசைபோல வைத்துக் கொண்டு தொடக்க நிலை யானைக்கால் வீக்கத்தின்மீது பூசி வந்தால், வீக்கம் அதிகமாகாது. புளியம்பூக்கள் போட்டுக் குழம்பு, ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் சுவையின்மை நீங்கி, நன்கு பசி உண்டாகும். சித்த மருந்துகளில் மா மருந்தான சேராங்கொட்டை மருந்துகளைச் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்பட்டு உடலின்மேல் சிவப்புநிறத் தடிப்புகள் தோன்றினால், புளியிலையைக் கஷாயம் செய்து குடித்தும் தடிப்புகள் உள்ள உடல்பாகங்களின்மீது ஊற்றியும் வந்தால் அவை மறையும்.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19


புளியிலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வாதவலி, வீக்கம், மூட்டுவீக்கம் உள்ள இடங்களின்மீது வைத்துக் கட்டினால் குணமாகும். உள்நாக்கு வளர்ச்சி ஏற்பட்டால் உடனே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால் புளி, உப்பு இரண்டையும் சம எடை அளவில் எடுத்துப் பசைபோல் அரைத்துப் பூசினால், உள்நாக்கு வளர்ச்சி குணமாகிவிடும். அதோடு 15 மில்லி ஓமவல்லி இலைச்சாற்றைத் தினமும் காலை, மாலை இருவேளைகள் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். புளியிலைகளின் கொழுந்தைத் துவையலாக அரைத்து, உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் தணியும். வயிற்று மந்தம் நீங்கி நன்கு பசி உண்டாகும்.

புளிமா

அதிக புளிப்புச்சுவையுள்ள மாங்காயைப் போன்று இருக்கும் மரவகை புளிமா. சித்தமருத்துவ பாடநூலான ‘குணபாடம் – மூலிகை’ என்ற நூலில் புளிமா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலங்களில் தமிழ் மக்களும் இதைப் பயன்படுத்தி வந்ததால், இலக்கணத்துக்கான நன்னூல் விதிகளில்கூட ‘புளிமா’ என குறிப்பிடப் பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளின் ஏரிக்கரையோரங்களில் அதிகமாகக் காணப்படும். இதைக் கேரள மாநிலத்தில் ‘அம்பளம்’ என்பார்கள். அம்பளக்காய் ஊறுகாய் என்பது கேரள உணவில் முக்கியமானது. புளிமா மரத்துளிர் இலைகள் சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். இலைகள் மிகவும் புளிப்பாக இருக்கும். இதன் இலை மற்றும் காய் கொண்டு ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்க்கசப்பு நீங்கும். இம்மரம் தமிழகத்தில் அருகிவிட்டது. இருப்பினும் தமிழகத் தட்பவெப்ப நிலையில் நன்கு வேகமாக வளரும்.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19

புளிச்சக்காய், தமரத்தம்புளி

புளிச்சக்காய், தமரத்தம்புளி ஆகிய இரண்டும் இந்தோனேசிய தீவுகளிலிருந்து நம் நாட்டுக்கு வந்த தாவரங்கள். தமரத்தம்புளி, ‘கேரம்போலா’, ‘ஸ்டார் புரூட்’ என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது. புளிச்சக்காய், தமரத்தம்புளி ஆகிய இரண்டுமே அதிகமான புளிப்புச்சுவை கொண்டவை. அதனால், இவற்றை அதிகமாக உண்ணக் கூடாது. அப்படி உட்கொண்டால் தொண்டைப் பகுதியில் புண் ஏற்பட்டு காய்ச்சல் வரக்கூடும். இவை இரண்டையுமே பெரும்பாலும் உணவுக்காக நாம் பயன்படுத்துவது இல்லை. கடலூர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இந்த வகை மரங்கள் உள்ளன.

சரக்கொன்றைப் புளி

சித்திரை, வைகாசி மாதங்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் பொன்னிறத்தில் பூ பூக்கும் ஒரு மரம் சரக்கொன்றை. இம்மரத்தில் காய்க்கும் நீளமான காய்களைப் பழுத்த பிறகு உடைத்துப் பார்த்தால், விதைகளுக்கிடையில் புளி போன்ற சொதசொதப்பான சதை காணப்படும். இதுதான், ‘சரக்கொன்றைப் புளி’ என அழைக்கப்படுகிறது. இந்தப் புளியில் சிறிதளவு எடுத்து துவையலாக அரைத்துச் சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கும். ஆனால், குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும். அளவு கூடினால் பேதியாகும். சிறுநீரக நோய்களைக் குணமாக்கும் மருந்தான நீர்முள்ளிக் கஷாயத்தில் சரக்கொன்றைப் புளி சேர்க்கப்படுகிறது.

ஆனைப்புளி, பொந்தம்புளி

ஆப்பிரிக்க நாட்டிலிருந்து நம் நாட்டுக்குப் பரவிய ஓர் அதிசய மரம். இது 70 அடி முதல் 80 அடி உயரம் வரை வளரக்கூடியது. இம்மரத்தில் அதிக பொந்துகள் இருப்பதால் ‘பொந்தம்புளி’ எனவும், இதன் காய்கள் அளவில் பெரிதாக இருப்பதால் ‘ஆனைப்புளி’ எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புளிச்சதையை அப்படியே அரைத்தோ காயவைத்துப் பொடி செய்தோ சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் நீங்கும்.  தமிழகத்தில் தர்மபுரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இம்மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது இம்மரம் என்பது குறிப்பிடத்தக்கது.

- அடுத்த இதழில் நிறைவுறும்  

அது காசுக்கட்டியல்ல!

கடந்த இதழில், நல்மருந்துத் தொடர் பகுதியில் தூதுவேளை கற்பம் குறித்த பெட்டிச் செய்தி இடம் பெற்றிருந்தது. அதில், காசுக்கட்டித்தூள் என்பது ‘பொட்டாசியம் பெர்மாங்கனேட்’ என்று தவறான தகவல் இடம் பெற்றுவிட்டது. காசுக்கட்டிக்கும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுக்கும் சம்பந்தமில்லை. ‘அகேசியா கட்டச்சு’ எனப்படும் ‘செங்கருங்காலி’ மரப்பட்டையைக் காய்ச்சிப் பெறப்படும் சத்துப்பொருளின் பெயர்தான் காய்ச்சுக்கட்டி. இது மருவிக் காசுக்கட்டி ஆகிவிட்டது. தவறான தகவல் இடம் பெற்றமைக்கு வருந்துகிறேன்.

-பி.மைக்கேல் செயராசு

பானக்காரம்!

புளி கொண்டு தயாரிக்கப்படும் முக்கியமான பானம் பானக்காரம் (பானகம்). முன்பு வீடுதோறும் புழக்கத்தில் இருந்த பானக்காரம், தற்போது திருவிழா சமயங்களில் மட்டும் வழங்கப்படுகிற பானமாக ஆகிவிட்டது.

10 கிராம் புளி, 100 கிராம் கருப்பட்டி ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்தால் பானக்காரம் தயார். வெயில் சமயங்களில் வெளியே சென்றுவந்தால் சிலருக்கு உடல் சூடாகி கண்களில் எரிச்சல் உண்டாகும். அந்தமாதிரி சமயங்களில் பானக்காரத்தைக் குடித்தால், உடனடியாகக் கண்கள் குளிர்ச்சியாவதுடன் கண்ணெரிச்சலும் நீங்கும். உடற்சூட்டால் உண்டாகும் சிறுநீர்த்தாரை எரிச்சலையும் பானக்காரம் குணப்படுத்தும். பானக்காரத் தயாரிப்பில் நாட்டுப்புளிக்குப் பதிலாகக் கொடம்புளியைப் பயன்படுத்துவது சிறப்பு.

புளி - TAMARINDUS INDICA
கொடம்புளி - GARCINIA CAMBOGIA
புளிமா - SPONDIAS PINNATA
புளிச்சக்காய் - AVERRHOA BILIMBI
தமரத்தம் புளி - AVERRHOA CARAMBOLA
சரக்கொன்றைப் புளி - CASSIA FISTULA
ஆனைப்புளி, பொந்தம்புளி - ADANSONIA DIGITATA