மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி!

மரம் செய விரும்பு! - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி!

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ல்லா மரங்களும் மனிதர்களுக்கு நன்மைதான் செய்கின்றன. அவற்றில் தீயது என எதுவுமேயில்லை. ஆனாலும், சில மரங்களை நாம் பயன்பாட்டிலிருந்து தள்ளியே வைக்கிறோம். அப்படிப்பட்ட மரங்களில் முக்கியமானது எட்டி மரம்.

‘எட்டி காய்த்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன’ என்பது  பழமொழி. தமிழ்மொழியின் சிறப்பைப் பாருங்கள். பெயரிலேயே அதன் செயலை விளக்கும் விதமாக, மனிதர்களிடமிருந்து எட்டியேயிருக்க  வேண்டும் என்பதற்காகவே இந்த மரத்துக்கு ‘எட்டி’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த மரத்தின் காய்கள் கொடிய விஷமுடையவை. அந்தக் காலத்தில் தற்கொலைக்கு முயற்சி  செய்பவர்களின் தேர்வாக இருந்திருக்கிறது எட்டிக்காய். அதனால், இந்த மரம் மனித மனத்தில் மரண பயத்தை உண்டாக்கிவிட்டது போலும். ஆனால், கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும் என்பதுபோல, கொடிய விஷமுள்ள எட்டியில் மனித உடல் நலனுக்கான பல மருத்துவப் பொருள்களும் இருக்கின்றன. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட வெளிநாட்டினர், எட்டியிலிருந்து ஏராளமான மருந்துப் பொருள்களைத் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.

மரம் செய விரும்பு! - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி!

எட்டி மரத்தின் தாயகம் நம் இந்தியாதான். இம்மரம் இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகள், இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியாவின் தென் பகுதிகள் ஆகிய பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது.

‘தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத்துடன் ஆலகால விஷமும் வெளிவந்தது. அந்த ஆலகால விஷத்தால் உலக மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகச் சிவபெருமானே அதை உட்கொண்டார். அந்த ஆலகால விஷத்தின் அடையாளம்தான் எட்டி மரம்’ என்கிறது புராணக்கதை.

இலையுதிர் காடுகள் மற்றும் பசுமைமாறா சோலைக் காடுகளின் அருகில் இந்த மரங்கள் வளரும். இவை, 50 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியவை. இதற்கு, ‘காஞ்சிகை’ என்ற பெயரும் உண்டு. இதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்கும். தொடக்கத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த மரம், நாளடைவில் கறுமை நிறமடையும். ஒரு கன மீட்டர் மரத்தின் எடை சராசரியாக 960 கிலோ இருக்கும். இது நீடித்து நன்கு உழைக்கக்கூடியது. இந்த மரக்கட்டைகளைக் கரையான் அரிக்காது. இதை அனைத்து வகையான மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுத்தலாம்.

மரம் செய விரும்பு! - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி!

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, எட்டியில் உள்ள விஷம், பல்வேறு விஷங்களுக்கு முறி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷக்கடிகளுக்கு எட்டி மரத்தின் வேர்ப்பட்டை பயன்படுகிறது. எட்டி மரத்தின் வடபாகம் செல்லும் வேரின் பட்டையை உரித்து, அதை எலுமிச்சைப் பழச்சாற்றில் ஊறவைத்து ‘எட்டி வேர்ச் சூரணம்’ தயாரிக்கப்படுகிறது. தும்பை இலை, சிவனார் வேம்பு இரண்டையும் சம அளவு எடுத்துக் கஷாயமாகக் காய்ச்சி, அதில் இரண்டு கிராம் எட்டி வேர்ச் சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால் கொடிய பாம்புக்கடி விஷமும் இறங்கும். வலி, வீக்கம் ஆகியவையும் குறையும்.

வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்று வலி, குடல் எரிச்சல், மன அழுத்தம், தலைவலி, மூச்சுத்திணறல் ஆகியவற்றுக்கு எட்டியில் உள்ள அல்கலாய்டுகள்(இயற்கையாக  தாவரங்களிலிருக்கும் வேதிப்பொருள்) பயன்படுகின்றன. ஹோமியோபதி மருத்துவத்தில் மேற்கண்ட பிரச்னைகளுக்காக ‘நக்ஸ் வாமிகா’ (Nux Vomica) என்ற மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்து எட்டியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. எட்டிவேர் சூரணப்பொடி இரண்டு கிராம் எடுத்து, உப்பு அல்லது வெற்றிலையில் வைத்துத் தின்றால், தேள்கடி விஷம் முறியும். எட்டி இலையைத் தவறாக உண்டுவிட்டால்... அதற்கு முறி மருந்து வெற்றிலைச்சாறாகும். மிளகு, வெந்தயம் சேர்த்துக் கஷாயம் காய்ச்சிக் குடித்தாலும், எட்டி இலையின் விஷம் முறியும். நக்ஸ் வாமிகா எனும் ஹோமியோபதி மருந்து, அனைத்து நஞ்சுகளையும் முறிக்கும் தன்மை வாய்ந்தது.

மரம் செய விரும்பு! - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி!

எட்டி மரத்தின் விதை, வேர், பட்டை, இலை, கனி அனைத்திலும் அல்கலாய்டுகள்  (இயற்கை வேதிப்பொருள்) இருக்கின்றன. இந்த அல்கலாய்டுகளில் முக்கியமானவை ஸ்டிரிக்னைன் (Strychnine), புரூசைன் (Brucine) ஆகியவை. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் பல லட்சம் டன் எட்டி விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கேரளாவில் எட்டிப் பட்டை அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மத்திய அரசின் சோதனைக்கூடத்தில், எட்டி விதையிலிருந்து ஸ்டிரிக்னைன் மற்றும் புரூசைன் ஆகியவை தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு வருகின்றன.

மரம் செய விரும்பு! - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி!


இந்த அல்கலாய்டுகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து, இஸ்ரேல், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் பெருமளவில் இவற்றை இறக்குமதி செய்கின்றன. இதன் மூலமாக நமக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆனால், அந்நாடுகள் நாம் அனுப்பும் அல்கலாய்டுகளைப் பயோ டெக்னாலஜி முறையில் மருந்துகளாக மாற்றி, நம் நாட்டுக்கு அனுப்பி, அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

இந்த மரம் மானாவாரி நிலங்கள், வறண்ட செம்மண்ணில் வளரும். இதிலிருந்து பெறப்படும் காய்கள், அதிக வருமானத்தைக் கொடுக்கும். விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து, உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு இதைப் பயிரிடுவது நல்லது. எட்டியை நாற்று மூலமாகவும் வேர் சிம்புகள் மூலமாகவும் நடவு செய்யலாம். விதை சேகரிக்க மரத்திலிருந்து நன்கு பழுத்த கனிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கிலோ எடையுள்ள கனிகளில் 600 முதல் 900 விதைகள் வரை இருக்கும். இந்த விதைகளை முளைக்க வைத்து நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம். வேர் சிம்புகளைப் பெற, மழைக்காலத்தில் மரத்தைச் சுற்றியுள்ள வேர்களில் வெட்டுக்காயம் ஏற்படுத்தினால், அதிலிருந்து புதிதாகச் சிம்புகள் வரும். இந்தச் சிம்புகளைச் சிறிது வேர்ப்பகுதியுடன் எடுத்து நடலாம்.

- வளரும்

எட்டியின் மருத்துவப் பயன்!

‘ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ் வாமிகா’ (Strychnos Nux Vomica) என்ற தாவரவியல் பெயர் கொண்டது எட்டி. இதை ஆங்கிலத்தில் பாய்ஷன் நட் (Poison Nut), கியுக்கர் பட்டன்ஸ் (Quaker Buttons) எனவும் குறிப்பிடுகிறார்கள்.

வெப்பத்தை உண்டாக்குவது இதன் பொதுவான குணம். எட்டி இலையை வெந்நீரில் போட்டுக் குளித்தால் நரம்பு வலி தீரும். இதன் வேர்ப்பட்டையுடன், எலுமிச்சைச் சாறு கலந்து தயாரிக்கப்படும் மாத்திரை காலரா நோயைக் குணமாக்குகிறது. தொழுநோயாளிகளுக்கு வழங்கப்படும் சில பஸ்பங்கள், செந்தூரம், மாத்திரைகள் ஆகியவற்றில் எட்டிப் பழச்சாறு கலக்கப்படுகிறது.