மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம் பயணம் துரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று, ஒருநாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

இந்தமுறை, ஒருநாள் விவசாயிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்... காவலர் சசிகுமார், தொழிலதிபர் சரவணகுமார், இல்லத்தரசி சந்தியா மற்றும் அவரது மகள் வித்யா, ஐ.டி ஊழியர் பிரதீப்ராஜ், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ரகுநாதன் அவரது மனைவி தேன்மொழி ஆகியோர். இவர்களைத் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள காவேரிராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள முன்னோடி இயற்கை விவசாயி பாரதியின் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றோம்.

1998-ம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பாரதி, இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார். 150 ஏக்கரில் மா, சப்போட்டா, நெல்லி, தென்னை எனச் சாகுபடி செய்துவருகிறார். இவரது தோட்டத்தில் 25 ரக மா மரங்கள் உள்ளன.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

காலை 10 மணியளவில் ஒருநாள் விவசாயிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு பாரதியின் பண்ணையை அடைந்தோம். பாரதியைச் செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, “எல்லோரும் தோட்டத்தைச் சுத்திப் பாத்துட்டு இருங்க, கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என்றார்.

நாம் செல்வதற்கு முந்தையநாள் பெய்த கோடைமழையினால் சற்று இதமான சூழல் நிலவியது. ஒருநாள் விவசாயிகள் அனைவரும் உற்சாகமாகப் பண்ணையைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தனர். பலத்த காற்று வீசியிருந்ததால் மரத்திலிருந்து ஏராளமான பழங்கள் உதிர்ந்திருந்தன. அவற்றைச் சுவைத்துக் கொண்டே தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தனர் ஒருநாள் விவசாயிகள். கிட்டத்தட்ட பண்ணைக்குள்ளேயே இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற களைப்பில் அனைவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒய்வெடுக்க ஆரம்பித்த நேரத்தில் பாரதி வந்துசேர்ந்தார்.

அவரிடம் ஒருநாள் விவசாயிகள் அனைவரையும் அறிமுகப்படுத்தினோம். எல்லோரையும் பார்த்து, “மாம்பழம் சாப்பிட்டீங்களா, சுவையா இருந்துச்சா?” என்று கேட்டார் பாரதி.

“ரொம்பச் சுவையா இருந்துச்சு” என்று அனைவரும் சொல்ல, “இவ்ளோ பழங்கள் கீழ விழுந்து கிடக்கு... அதை எடுத்து விற்பனை செய்யமாட்டீங்களா?” என்று கேட்டார் சசிகுமார்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

“கீழ விழுந்த மாம்பழங்களுக்கு விலை கிடைக்காது. போன வருஷம் இப்படி விழுந்த மாம்பழங்களைக் கோயம்பேடு சந்தைக்குக் கொண்டு போனப்போ கிடைச்ச விலை போக்குவரத்துக்கும் கமிஷனுக்குமே போதல. அதனால, மண்ணுக்கு உரமாகட்டும்னு அப்படியே விட்டுட்டேன். இந்த வருஷம் கலெக்டரைப் போய்ப் பார்த்து இந்த மாதிரி காத்துல பழங்கள் கீழே விழுந்துருச்சுனு சொன்னேன். அவர் நான் சொல்ல வந்ததை முழுசாக் கேக்காம ‘காத்துல பழங்கள் விழுந்தா அதுக்கெல்லாம் நிவாரணம் கிடைக்காது’னு சொன்னார். அதுக்கப்புறம் நான் நிவாரணம் கேட்டு வரல. அந்தப் பழங்களை மாவட்டத்துல இருக்குற ஸ்கூல் பசங்களுக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன். எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் நீங்க தகவல் மட்டும் கொடுங்கனு சொன்னேன். அவர் கல்வித்துறை மூலமா தகவல் கொடுத்ததும், எல்லாரும் வண்டிகள்ல வந்து மாம்பழங்களை எடுத்துட்டுப் போனாங்க. கிட்டத்தட்ட 350 டன் மாம்பழங்களைப் பள்ளி மாணவர்களுக்காகக் கொடுத்துவிட்டேன். கீழே விழுந்ததுல சேதமாகிப் போன பழங்களை அப்படியே மண்ணுல விட்டுட்டோம். நீங்க பார்த்தது நேத்து அடிச்ச காத்துல விழுந்த பழங்கள்” என்ற பாரதி தொடர்ந்து...

“நான் வியாபாரிகளுக்கு, கமிஷன் கடைக்காரங்களுக்குப் பழங்களை விற்பனை செய்றதில்லை. நேரடியா இங்கே நுகர்வோருக்குத்தான் கொடுக்கிறேன். அதுவும் ஒருத்தருக்கு இவ்வளவுதானு நிர்ணயிச்சுக்  கொடுப்பேன். மொத்தமா கொடுக்க மாட்டேன்.இடைத்தரகர்களால தான் விவசாயிகளுக்கு ரொம்பப் பாதிப்பு. அதில்லாம நாங்க இயற்கை விவசாயத்துல விளைவிக்கிற பழங்களை வியாபாரிகளுக்குக் கொடுத்தா அவங்க ரசாயனம் பயன்படுத்திப் பழுக்க வெப்பாங்க. அதனால வியாபாரிகளுக்குக் கொடுக்குறதில்ல. இப்படி விற்பனை செய்றப்பவே மா மூலமா வருஷத்துக்கு 20 லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கிது” என்றார்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

“இயற்கை விவசாயத்துக்கு என்ன இடுபொருள்களைப் பயன்படுத்துறீங்க?” என்று கேட்டார் ரகுநாதன்.

“யூரியா, டி.ஏ.பி-னு ரசாயன உரத்தைப் பயன்படுத்தாம இருந்தாலே அது இயற்கை விவசாயம்தான். தொழுவுரம், மண்புழு உரம், கொம்புச்சாண உரம்னு பயன்படுத்திதான் இயற்கை விவசாயம் செய்றேன். எல்லாத்தையும் இங்கேயே தயார் பண்ணிக்குவோம். பண்ணைக்கு வெளியே இருந்து எந்தப்பொருளும் வரக் கூடாதுங்கிறதுதான் இயற்கை விவசாயத்துல முக்கியமான விஷயம். எங்க பண்ணைக்குக் மின்சாரம்கூட வெளியில் இருந்து வர்றதில்ல. பண்ணை முழுக்கச் சோலார் மின்சாரம்தான் பயன்படுத்துறோம்” என்றார். “யூரியா இல்லாம விவசாயம் செய்ய முடியுமா, என்ன?” என்று கேட்டார் தேன்மொழி.

அவரைப் பார்த்துச் சிரித்த பாரதி “மண்ணுல நுண்ணுயிர்களைப் பெருக்கி மண்ணை வளமாக்குறதுதான் விவசாயத்துக்கு முக்கியம். அது இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தினாத்தான் சாத்தியம். ரசாயன உரம் பயன்படுத்தினா மண் கெட்டுப்போகும். மாட்டுச் சாணம், மண்புழு உரம், தாவரக் கழிவுகள்னு போட்டாலே மண் நல்லா வளமாகும். அடுத்து மண்ணுகேத்த பயிர்களைச் சாகுபடி பண்ணணும். இது சரளை மண்ணுங்கிறதால மா, சப்போட்டா, நெல்லி, தென்னைனு மரப்பயிர்களை நட்டிருக்கேன். யூரியா போட்டாதான் மகசூல் அதிகரிக்கும்னு சொல்வாங்க. ஆனா, அது உண்மையில்லை. இயற்கை விவசாயத்துலயும் நல்ல மகசூல் எடுக்கலாம். ஆரோக்கியமான, சத்தான, விஷமில்லாத விளைபொருள்களை உற்பத்தி பண்ணணும்னா இயற்கை விவசாயம்தான் செய்யணும்” என்றபடி அனைவரையும் தென்னந்தோப்புக்குள் அழைத்துச்சென்றார்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

“கொய்யா, மா, தென்னைனு கலந்து கலந்து நட்டிருக்கீங்க” என்றார் நித்யா.

“விவசாயத்துல கலப்புப் பயிர்ச் சாகுபடி ரொம்ப முக்கியம். விளைபொருளுக்கு விலை இல்லாத சமயத்துல, இன்னொரு பயிர் கைகொடுக்கும். அதைவிட வெவ்வேறான பயிர்கள் இருந்தால்தான் பல்லுயிர்ச்சூழல் இருக்கும்” என்றார்.

“மா சாகுபடி எப்படிச் செய்றது?” என்று ஒருநாள் விவசாயிகள் கேட்க, அனைவரையும் மரத்தடியில் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் பாரதி.

“ஏப்ரல், மே மாதங்கள்ல மா நடவு செய்யக்கூடாது. மா சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் நல்ல இடைவெளி தேவை. ஒவ்வொரு மரத்துக்கும் 25 அடியிலிருந்து 30 அடி வரை இடைவெளி இருக்குற மாதிரி நடவு செய்யணும். ரெண்டு அடி சதுரம், ரெண்டு அடி ஆழத்துல குழி எடுத்து, அதுல இலைதழைகள், மாட்டு எரு எல்லாத்தையும் போட்டுக் கன்றை நடவு செய்யணும். செடி காயாத அளவுக்குத் தண்ணி பாய்ச்ச வேண்டியது அவசியம். நடவு செஞ்சதுல இருந்து ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒவ்வொரு செடிக்கும் மூணு கிலோ தொழுவுரம் போட்டு, மண் அணைச்சு விடணும். எட்டாம் மாசம் பக்கக்கிளைகளை வெட்டி, மரம் நேரா போற மாதிரி கவாத்து செய்யணும். ஒன்றரை வருஷம் வரைக்கும் தொடர்ந்து கவாத்து செய்யணும். மரத்துல ஆறு கிளைகள் இருந்தாலே போதுமானது. அதேமாதிரி தெளிவான இலைகளை மட்டும் விட்டுட்டு, மத்த இலைகளைக் கழிச்சுடணும். கிளைகள், இலைகளுக்குள்ள சூரிய வெளிச்சமும் காற்றும் தாரளமாப் போகணும்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

அப்போதான் பூச்சிகள் வராது. மகசூலும் நல்லா இருக்கும். அப்பப்போ களைகளை எடுத்து மரத்தைச் சுத்தி மூடாக்காப் போட்டுடணும். இப்படிப் பராமரிச்சா நாலு வருஷத்துலயே மரம் காய்க்க ஆரம்பிச்சிடும். மீன் அமினோ அமிலம் தெளிச்சா மகசூல் நல்லா கிடைக்கும். பூச்சிகள் தாக்கினா மூலிகைப் பூச்சிவிரட்டி பயன்படுத்தலாம்” என்றார்.

மதியநேரம் ஆனவுடன் அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, அனைவரையும் சப்போட்டா தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார் பாரதி. மரத்திலேயே பழுத்திருந்த சப்போட்டா பழங்களை அனைவரும் சுவைக்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

“சப்போட்டா எல்லா வகையான மண்ணுலயும் நல்லா வரும். ஆனா, வடிகால் வசதி இருக்கணும். சப்போட்டாவிலும் உயரமாப் போற கிளைகளை நீக்கிடணும். மரம் முழுக்க வெயில்படுற அளவுக்குக் கவாத்து செய்யணும். ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் சப்போட்டா சீசன். பூக்குற சமயத்துல மீன் அமினோ அமிலம் தெளிச்சுவிட்டா மகசூல் நல்லா கிடைக்கும்” என்றார் பாரதி.

அவரை இடைமறித்த பிரதீப்ராஜ், “மீன் அமிலம் எப்படித் தயாரிக்கிறது?” என்று கேட்டார். உடனே அனைவரையும் அழைத்துச் சென்று மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் விதம் குறித்துச் சொல்லிக் கொடுத்தார் பாரதி. மீன் அமினோ அமிலம் தயாரிப்பதைக் கற்றுக்கொண்ட ஒரு நாள் விவசாயிகள், தோப்பில் விழுந்திருந்த மாம்பழங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் பண்ணையின் பணியாளர்கள் ரகம் வாரியாகவும் தரம் வாரியாகவும் பிரிக்கும் விதம் குறித்துச் சொல்லிக்கொடுத்தனர்.

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

தோட்டத்தில் ஆடுகள், நாட்டு மாடுகள், கழுதைகள், குதிரைகள் என வளர்த்து வருகிறார் பாரதி. அதுகுறித்துப் பேசியவர், “முன்னாடி இங்க ஒட்டகம் வெச்சிருந்தேன். அதுவே எனக்கு அடையாளமாவும் இருந்துச்சு. இப்போ ஒட்டகத்துக்குப் பதிலா குதிரைகளை வளர்த்துட்டு இருக்கேன். தோட்டப் பரப்பு அதிகங்கிறதால பழங்களை எடுத்துட்டு வர்றதுக்காகக் கழுதைகளை வளர்க்க ஆரம்பிச்சோம். இப்போ வண்டிகள்லதான் பழங்களை எடுத்துட்டு வர்றோம். இவ்வளவு வருஷம் நமக்காக உழைச்ச கழுதைகளை எப்படி விக்குறதுனு இங்கேயே விட்டுட்டோம்.

இங்க நாலு பக்கமும் தடுப்பு அமைச்சு எளிமையான முறையில் ஆடுகளை வளர்க்கிறோம். காலையில ஆடுகளை மேய்ச்சலுக்குத் திறந்துவிட்டா சாயங்காலம் வந்துடும். மாசம் ரெண்டு ஜோடி ஆடுகளை விற்பனை செய்வோம்.

இங்க இருக்குற மாடுகள் எல்லாமே கிர், சிந்தி, சாஹிவால்னு நாட்டு மாடுகள்தான். இந்த ரக நாட்டு மாடுகள் பால் நிறையக் கொடுக்கும். ஆடு மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்கள் இங்கேயே இருக்குறதால எங்களுக்குத் தீவனச்செலவே கிடையாது. இந்த மாடுகள்கிட்ட கிடைக்கிற சாணம், சிறுநீர் மூலமாத்தான் பஞ்சகவ்யா, மண்புழு உரம் எல்லாத்தையும் தயார் செய்றோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மழைக்கான அறிகுறிகள் தொடங்க, ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் பாரதியிடம் விடைபெற்றுக் கிளம்பினர். 

தொடர்புக்கு:
பாரதி,
செல்போன்: 93805 33376

மாவில் அதிக விளைச்சலுக்கான வழி

மாவில் அதிக விளைச்சல் எடுப்பதற்கான நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டார், பாரதி. “செப்டம்பர், அக்டோபர் மாதத்துல மரத்துக்கு தொழுஉரம் வைக்கணும். நவம்பர், டிசம்பர் மாசங்கள்ல பூ அதிகமாக எடுக்குங்கிறதால, மரங்களுக்குச் சுத்தமாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.

அதன் பிறகு எவ்வளவு தண்ணி கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு மாமரம் மகசூலைக் கொடுக்கும். நவம்பர் டிசம்பரில் மழை அதிகமாக இருந்தால் சில நேரங்கள்ல விளைச்சல் குறைவாக இருக்கும். அதேபோல அந்த நேரத்துல உயிர் உரங்கள கொடுத்தால், பூச்சித் தாக்குதலில் இருந்து பூக்கள் தப்பிக்கும். பிஞ்சுகள் வர ஆரம்பித்த பிறகு, பஞ்சகவ்யா கொடுக்கலாம். இதனால் காயின் வளர்ச்சி நல்லா இருக்கும். இத முறைப்படி செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.”

ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்!

ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள்:

சசிகுமார்:
“எனக்குக் கும்பகோணம்தான் பூர்வீகம். நிலம் வங்க முயற்சி செய்துகிட்டிருக்கேன். ஆறு வருஷமா ‘பசுமை விகடன்’ படிச்சிட்டிருக்கேன். நிறைய பண்ணைகளுக்குப் போயிருக்கேன். ஆனா, இதுமாதிரி பெரிய பண்ணையை இன்னிக்குதான் பார்க்கிறேன்”

சரவணகுமார்: “ரொம்ப நல்ல அனுபவம். மரப்பயிர்களைப் பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன்.”

சந்தியா:
“இந்த நாளுக்காக ரொம்ப நாளா காத்துட்டு இருந்தோம். விவசாயத்தைப் பத்திச் சுத்தமா தெரியாது. இப்போ விவசாயம் செய்யணும்னு ஆசை வந்துருக்கு. அரக்கோணம் பக்கத்துல நிலம் தேடிட்டு இருக்கோம்.”

நித்யா: “நான் பார்த்த பண்ணையிலேயே இதுதான் பெரிசு. மா மரத்துல 25 ரகங்கள் இருக்குனு இன்னிக்குத்தான் தெரிஞ்சிகிட்டேன்.”

பிரதீப் ராஜ்:
“ரொம்ப உபயோகமான நாளா இருந்தது. மீன் அமினோ அமிலம் தயாரிக்கிறதை இங்கதான் தெரிஞ்சிகிட்டேன்.”

ரகுநாதன்: “இங்க பார்த்ததுக்கு அப்புறம் விவசாயம் செய்யணும்னு நம்பிக்கை வந்திருக்கு.” 

தேன்மொழி:
“நாங்க நிலம் வாங்க முயற்சி செய்துகிட்டு இருக்கோம். கலப்புப்பயிர், மரப்பயிர்னு சாகுபடி செய்யப் போறோம்.”

நீங்களும் ஒருநாள் விவசாயி ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை)

மாணவர், வேலை தேடிக்கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.