மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்

மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

தின்பண்டங்கள் விற்கும் கடைவீதிக்குள்ள நுழைஞ்ச குழந்தை மாதிரி மனசு குஷியா இருந்துச்சு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்ள நுழைஞ்சபோது. இங்க, சமீபத்துல நடந்த தேசிய விதைத் திருவிழாவுலதான் இந்த அனுபவம் கிடைச்சது. இந்தியா முழுவதுமுள்ள பாரம்பர்ய விதை சேகரிப்பாளர்கள் தங்களோட விதைச் சேகரிப்பைக் காட்சிக்கு வெச்சிருந்தாங்க. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், உத்தரகாண்ட், மேற்கு வங்கம்னு ஒவ்வொரு மாநில விதை அரங்கையும் சுத்திப் பார்த்துக்கிட்டு வந்தேன்.

‘‘இதோ இங்கே ஓர் அதிசயம் இருக்கிறது. கவனமாகப் பாருங்கள்’’னு சொன்னாரு மேற்கு வங்க மாநில அரங்கில் இருந்தவர். விதவிதமான நெல் ரகங்களுக்கு மத்தியில் ஆங்கிலம், பெங்காலி மொழிகளில் நோட்டீஸ் இருந்துச்சு. அந்த நோட்டீஸுகுள்ள ‘பிழைக்கும் வழி’னு தமிழ் எழுத்து கண்ணைச் சுண்டி இழுத்துச்சு. என்னோட கண்ணுல தெரிஞ்ச ஆச்சர்யத்தைப் பார்த்த அந்த நண்பர், அது சம்பந்தமா பேசத் தொடங்கினாரு.

மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்

‘‘தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பெருமைகொள்ள வேண்டிய தகவல் இது. வழக்கமான நெல் விவசாயத்தைவிட விதை, தண்ணீர், நேரம் என அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுப்பதுதான் எஸ்.ஆர்.ஐ (SRI-System of Rice Intensification) எனப்படும் ‘ஒற்றை நாற்று நடவு முறை’. இந்த முறையானது ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர் தீவில் நடைமுறையில் இருக்கிறது என்றும், அதை

1960-களில் பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தினார் என்றும்

மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்

சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக... அதாவது 1905-ம் ஆண்டிலேயே ஒற்றை நாற்று முறையில் நடவு செய்திருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். இந்தத் தகவல் ஆச்சர்யமாகத்தானே உள்ளது. இனி தமிழ்நாட்டில் யாரும் மடகாஸ்கர் முறையில் ஒற்றை நாற்று நடவு செய்துள்ளோம் எனச் சொல்லாதீர்கள்’’னு அன்புக் கட்டளை போட்டுவிட்டு, கதையைத் தொடர்ந்தாரு. ‘‘1912-ம் ஆண்டு வெளிவந்த ‘பிழைக்கும் வழி’ என்ற தமிழ் மாத இதழில், ‘ஒற்றை நாற்று நடவு’ மற்றும் ‘கெஜ நடவு’ என்ற தலைப்புகளில் சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. (‘பிழைக்கும் வழி’ இதழில் வெளியான ஒற்றை நாற்று நடவு குறித்த தகவல்களைச் செப்டம்பர் 25, 2009 மற்றும் அக்டோபர் 25  தேதியிட்ட பசுமை விகடன் இதழ்களில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் உட்பட சிலர் எழுதியுள்ளனர்).

ஒற்றை நாற்று நடவு பற்றிக் குழந்தை வேலுடையார் என்பவரும், கெஜ நடவைப் பற்றி வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரும் தங்களுடைய அனுபவங்களை அதில் பதிவு செய்துள்ளனர். இந்தத் தகவலைத்தான் எங்கள் தாய்மொழியான பெங்காலியில் மொழி பெயர்த்து நாடு முழுக்கக் கொடுத்துவருகிறோம். தமிழர்களின் இந்த அரிய கண்டுபிடிப்பைப் பெருமையாகச் சொல்லிவருகிறோம். தமிழ்நாட்டைப்போல, மேற்கு வங்க மாநில மக்களுக்கும் அரிசிதான் பிரதான உணவு’’னு மணக்க மணக்க பேசினாரு அந்த நபர். இவ்வளவு ஆர்வமா பேசுறீங்களே, நீங்க இயற்கை விவசாயம் செய்றீங்களா, இல்ல விதை சேகரிக்கும் தன்னார்வலரா?னு ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டேன்.

மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்

‘‘என்னுடைய பெயர் முனைவர் அனுபம் பால், மேற்கு வங்க மாநில வேளாண்மைத் துறையின் உதவி இயக்குநர்”னு பதிலுக்கு என்மேல ஓர் ஆச்சர்ய குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, மேலும் பேச்சைத் தொடர்ந்தாரு.

‘‘இந்தியாவிலேயே முதல்முறையாகப் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரிக்கும் பணியினை மேற்கு வங்க மாநில அரசின் வேளாண்மைத் துறை செயல்படுத்தி வருகிறது. நதியா மாவட்டத்திலுள்ள ஃபுலியா என்ற இடத்தில் விவசாயப் பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு ஏறத்தாழ 420 பாரம்பர்ய நெல் ரகங்கள் உள்ளன. இதில், உங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சீரகச் சம்பாவும் அடக்கம். மேற்கு வங்க மாநிலத்தில் இப்போது, ‘காலாபாட்’ என்ற கறுப்பு அரிசி மிகவும் பிரபலம். ஏறத்தாழ தமிழ்நாட்டில் உள்ள கறுப்புகவுனி அரிசி போலத்தான் இருக்கும். வாசனை கொண்ட இந்தக் கறுப்பு அரிசியில் புற்றுநோயைத் தடுக்கும் திறன், இரும்புச்சத்து... என நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒடிசா மாநிலத்திலிருந்து இந்த ரகத்தைச் சேகரித்து வந்து பயிரிட்டோம். இந்த ரகத்தின் பூர்வீகம் மகாராஷ்டிரா மாநிலம்தான். மேற்கு வங்கத்திலுள்ள கடைகளில், இந்த காலாபாட் அரிசி ஒரு கிலோ 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. ‘பிழைக்கும் வழி’ மூலம் நெல் மகசூலைக் கூட்டும் நுட்பத்தை உலகுக்கு வழிகாட்டிய தமிழ்நாட்டு மண்ணில் நின்று பாரம்பர்ய விதைகளின் மகிமையைப் பற்றிப் பேசுவது இனிமையாகத்தான் இருக்கிறது’’னு நெகிழ்ச்சியுடன் சொன்னாரு.