மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி...  சோகத்தில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!

ஓவியம்: ஹரன்

நிலத்துல எரு கொட்டிக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். நிலத்தின் அருகே இருந்த திட்டில் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. தூரத்தில் கூடையைத் தூக்கிக் கொண்டு வந்துகொண்டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. காய்கறி வந்து சேர்ந்ததும், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் வாத்தியார்.

“திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்துக்குப் பக்கத்துல இருக்கிற எஸ்.அத்திக்கோம்பை கிராமத்துல வருஷா வருஷம் உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா ஒரு வாரத்துக்கு நடக்கும். அந்தத் திருவிழாவையொட்டி ஒரு வாரம் முழுசும் பெரியளவுல மாட்டுத்தாவணி (மாட்டுச்சந்தை) நடக்கும். இந்த வருஷம் ஜூன் 20-ம் தேதி திருவிழா தொடங்குச்சு. சுத்துப்பட்டுல நடக்கிற பெரிய மாட்டுச் சந்தைங்கிறதால முதல் நாளே கூட்டம் அலைமோதுச்சு. திருவிழா தொடங்குறதுக்கு நாலஞ்சு நாளைக்கு முன்னாடியே மாடுகளைக் கொண்டு வந்துட்டாங்க.

மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி...  சோகத்தில் விவசாயிகள்!

வழக்கத்தைவிட இந்த வருஷம் அதிகளவுல மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. குறிப்பா காங்கேயம் காளைகள் அதிகமா வந்திருந்தன. நிறைய நாட்டு மாடுகள், எருமைகள், பசுக்கள், பந்தய மாடுகள், உழவு மாடுகள், கன்றுக்குட்டிகள்னு சந்தை களை கட்டியிருந்துச்சு” என்றார் வாத்தியார்.

“ஆமாய்யா... நானும் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். ஏகப்பட்ட மாடுகள் வந்திருந்துச்சு. மாடுகளுக்குக் கட்டுற தாம்புக்கயிறு, சாட்டைனு ரோடு முழுக்கவே எக்கச்சக்கமான கடைகள் போட்டிருந்தாங்க. ஒருத்தர் பூச்சிக்காளை கொண்டு வந்திருந்தார். நல்ல பொலிகாளை. அந்தக் காளையோட விலை ஒண்ணேகால் லட்ச ரூபாய்னு கேட்டதும் மயக்கமே வந்துடுச்சு. காங்கேயம் கன்னுக்குட்டிகளையே ஜோடி நாப்பதாயிரம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய்னு சொன்னாங்க. பெரிய மாடுகளை ஜோடி ஒரு லட்ச ரூபாய்னு சொன்னாங்க. கடுமையான வறட்சிங்கிறதால தான் மாடுகள் அதிகளவு விற்பனைக்கு வந்திருந்துச்சு” என்றார் ஏரோட்டி. ‘‘திண்டுக்கல் பகுதியில விளைஞ்ச இமாம்பசந்த் மாம்பழங்களுக்குத் தனி ருசியே இருக்கு; சாப்பிட்டுப் பாருங்க’’ என்று இருவருக்கும் மாம்பழங்களைக் கொடுத்தார் காய்கறி.

மாம்பழத்தை ருசித்தபடியே அடுத்த செய்தியை ஆரம்பித்த வாத்தியார், “மேட்டூர் அணைக்குப் பக்கத்துல இருக்கிற கொளத்தூர், கோல்நாயக்கன்பட்டி, நவப்பட்டி கிராமங்கள் காவிரிக் கரையோரம் அமைஞ்சிருக்கிறதால விவசாயம்தான் அங்க பிரதானம். நிறைய பேர் பருத்தி விவசாயம் செய்றாங்க. போன வருஷம் பருத்திக்கு நல்ல விலை கிடைச்சதால, இந்த வருஷமும் பருத்திச் சாகுபடி செய்ய முடிவெடுத்து,  கிட்டத்தட்ட 400 ஏக்கர் நிலத்துல பருத்தி விதைச்சிருக்காங்க. பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘ஆர்.சி.ஹெச்-659’ங்கிற ரகத்தைத்தான் விதைச்சாங்களாம்.

இந்தப் பருத்திச் செடிகள்ல பிஞ்சு வைக்கிற சமயத்துல செம்பேன் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டிருக்கு. இந்தச் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலைகள்ல இருக்கிற பச்சையத்தை உறிஞ்சிடுறதால இலைகளெல்லாம் கருகிப்போய்ப் பிஞ்சு நிலையிலேயே அழிஞ்சுட்டிருக்குதாம். வேளாண்மைத்துறை அதிகாரிகளும் இதுக்குச் சரியான தீர்வைச் சொல்லாததால விவசாயிகள் புலம்பிக்கிட்டிருக்கிறாங்க” என்றார்.

“பூச்சி தாக்காதுனு சொல்லித்தான் மரபணு மாற்று பி.டி பருத்தியைக் கொண்டு வந்தாங்க. ஆனா, அதுலேயும் பூச்சிகள் வந்து நஷ்டமானதுலதான் கர்நாடகா மாநிலத்துல ஏகப்பட்ட பருத்தி விவசாயிகள் தற்கொலை செஞ்சுகிட்டாங்க. இதெல்லாம் தெரிஞ்சும் நாம சுதாரிக்காம விட்டா, தப்பு நம்ம மேலதான். அதிக மகசூல் கிடைக்கும்னு ஆசை காட்டுனதுல மயங்கி பி.டி பருத்தியைத் தலையில கட்டிவிட்டிருப்பாங்க. நாட்டு ரகப் பருத்தியை இயற்கை முறையில சாகுபடி செஞ்சா, இந்த மாதிரிப் பிரச்னைகள் எல்லாம் வரவே வராது” என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே பலமாகத் தூறல் விழ, அனைவரும் கொட்டகையை நோக்கி ஓடினர். அன்றைய மாநாடும் அத்தோடு முடிவுக்கு வந்தது.

மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி...  சோகத்தில் விவசாயிகள்!

ஆந்திர அரசின் வேளாண் ஆலோசகராக சுபாஷ் பாலேக்கர் நியமனம்!

நூறு சதவிகித இயற்கை விவசாய மாநிலமாக ஆந்திராவை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கரை அரசு வேளாண் ஆலோசகராக நியமித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார் சுபாஷ் பாலேக்கர். அப்போது, ஆந்திர மாநிலத் தலைநகரான அமராவதியில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகத்தைத் தொடங்க வேண்டும் என்றும், அரசு வகுக்கும் வேளாண் கொள்கைகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் பாலேக்கரிடம் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். அதோடு, பல்கலைக்கழகத்துக்காக 100 ஏக்கர் அளவு நிலம் ஒதுக்கப்படுவதோடு, 100 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ந்த இதழில் ‘இ.எம்’ தொடர் இடம் பெறவில்லை.