மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்!

மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும்  வெட்டிவேர் மகத்துவமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

மீபத்துல, சிதம்பரம் பகுதியில உள்ள ஒரு நண்பரைப் பார்க்க போயிருந்தேன். அந்தச் சமயத்துல அவரு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தாரு. ‘‘நீங்களும் வாங்களேன்... ஓர் எட்டு போயிட்டு வந்திடுவோம்’’னு என்னோட பதிலைக் கூட எதிர்பார்க்காம காருக்குள்ள இழுத்து உட்கார வெச்சாரு. அவர் அந்தப் பகுதியில ஏராளமான நில புலனுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல... அறப்பணிகளுக்கும் முன்னாடி நின்னு வேலை பார்ப்பவர். இதனால, கோயிலுக்குள்ள போன உடனே ராஜ மரியாதை கிடைச்சது. பொன்னம்பலத்துல இருந்த நடராஜரை உத்துப்பார்த்தேன். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் மேல வித்தியாசமான பொருளை மாலை கட்டி போட்டிருந்தாங்க. தரிசனம் முடிஞ்சு கிளம்பும்போது நடராஜர் மேல இருந்த அந்த மாலைகள் ரெண்டை எடுத்துக்கிட்டு வந்து, அந்த நண்பருக்கும் எனக்கும் அணிவிச்சாரு தீட்சிதர். அப்பதான் தெரிஞ்சது அந்த மாலையை வெட்டிவேர் மூலமா கட்டியிருக்காங்கன்னு. என்னோட முகத்துல தெரிஞ்ச ஆச்சர்யத்தைப் பார்த்த தீட்சிதர், ‘‘சுவாமி நடராஜருக்கு வெட்டிவேர் மாலை அணிவிக்கிறதுதான் சிறப்பு. கோயிலுக்கு வர்ற முக்கியமானவங்களுக்கும் வெட்டிவேர் மாலை அணிவிச்சு மரியாதை செய்யறது வழக்கம். தில்லை காளிக்கும் வெட்டிவேர் மாலை சாற்றுவது பாரம்பர்ய வழக்கம்’’னு சொன்னாரு.

மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும்  வெட்டிவேர் மகத்துவமும்!

காலம் காலமா வெட்டிவேர் வளர்ந்த பகுதியா கடலூர் இருந்திருக்கணும். அதனாலதான் நடராஜருக்கு மட்டுமல்லாம, தில்லை காளிக்கும் வெட்டிவேர் மாலையை அணிவிக்கிற பழக்கம் உருவாகியிருக்கு. ஆனா, இடைப்பட்ட காலத்துல சிதம்பரம் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்துல வெட்டிவேர்ச் சாகுபடி காணாம போயிருக்கு. இப்போ திரும்பவும்  வளரத் தொடங்கிடுச்சு. போன வருஷம் கூட வெட்டிவேர்ச் சாகுபடியில சாதனை செய்த கடலூர் மாவட்டம், நடுத்திட்டுப் பகுதி விவசாயிகளை வீடியோ கான்பஃரன்ஸ் மூலமா பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுப் பத்திரம் வாசிச்சாரே... ஆக வெட்டிவேர் சங்கதி கூட சிதம்பர ரகசியம்தான்னு அந்தத் தீட்சிதர்கிட்ட என் பங்குக்குச் சொல்லி வெச்சேன்.

வீட்டுக்கு வரும் வழி முழுக்க வெட்டிவேர் பத்தின பேச்சுதான் ஓடுச்சு. அந்த நண்பரும் வெட்டிவேர் சம்பந்தமான தகவல்களைப் பகிர்ந்துக்க ஆரம்பிச்சாரு. காரணம் அவரும் தீவிரமான வெட்டிவேர் விவசாயி.

‘‘வெட்டிவேர் 12 மாதப் பயிர். ரசாயன உரத்தால பாதிக்கப்பட்ட மண்ணை மீட்டெடுக்கக் கூடிய சக்தி வெட்டிவேருக்கு உண்டு. அதாவது, இயற்கை விவசாயத்துக்கு மாற இருக்கிற நிலத்துல வெட்டிவேரை ஒருமுறை சாகுபடி செஞ்சா, மண்ணுல உள்ள ரசாயனத்தை உறிஞ்சு எடுத்திடும். இந்த வெட்டிவேரின் மகத்துவத்தை அறிந்த தாய்லாந்து மன்னர் குடும்பத்தினர் www.vetiver.org என்ற இணைய தளத்தை நடத்த நிதி உதவி செய்கிறார்கள். வெட்டி வேர் சம்பந்தப்பட்ட வண்டி வண்டியான தகவல்கள் இந்த இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இத்தனைக்கும், இந்த வெட்டிவேர் தமிழ்நாட்டில் தோன்றிய தமிழ் மண்ணுக்குச் சொந்தமான பயிர்.

இதை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தி, புண்ணியம் கட்டிக் கொண்டவர் ‘டி க்ரிம்ஸா’ என்ற வெளிநாட்டுக்காரர். உலக வங்கிக் குழு இந்தியாவுக்கு வந்தபோது அதில் ஒருவராக டி க்ரிம்ஸா வந்துள்ளார். தமிழ்நாட்டின் எல்லை அருகே, கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டல்பேட்டை பகுதியில் வெட்டிவேரை மண் அரிப்பு தடுக்க நடவு செய்துள்ளதைப் பார்த்துள்ளார். இதன் பயன்பாடுகள் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு அமெரிக்காவுக்குச் சில வெட்டிவேர் நாற்றுகளை எடுத்துச்சென்றுள்ளார். இதெல்லாம் நடந்தது 1980-ம் ஆண்டுவாக்கில் என்பதைக் கவனிக்கவும். வெட்டிவேர் குறித்த தகவல்களை ‘ஏ ஹெட்ஜ் அகெய்ன்ஸ்ட் சாய்ல் எரோஷன்’ (A Hedge Against Soil Erosion) என்ற தலைப்பில் மண் அரிப்பைத் தடுக்கும் வெட்டிவேரின் அருமை பெருமைகளை ஓர் ஆராய்ச்சி நூல் வடிவில் எழுதி வெளியிட்டார்.

இதன்பிறகு உலகம் விழித்துக்கொண்டு வெட்டிவேரைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. ஆனால், அந்த வெட்டிவேர் உருவான மண்ணில் அதைச் சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை சொற்பம்தான்...’’ எனச் சொல்லி ஆதங்கப்பட்டுவிட்டு, வெட்டிவேர் செய்யும் வேலைகளைப் பட்டியல் போட்டுச் சொன்னார், ‘‘1. மண் அரிப்பைத் தடுக்கிறது 2. மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது, 3. நிலத்தடி நீர் உயர உதவுகிறது 4. மண் வளத்தைப் பாதுகாக்கிறது 5. மூடாக்கு இடப் பயன்படுகிறது 6. கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொன்னால் சென்னையில் ஓடும் கூவம் போன்ற கழிவு நிறைந்த நதிகளையும் சுத்திகரித்துத் தூய்மைப்படுத்தும் சக்தி வெட்டிவேருக்கு உண்டு’’னு முத்தாய்ப்பான தகவலைச் சொல்லி முடிச்சாருங்க.