மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'

மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன்

ருந்து என்ற சொல்லின் அடிப்படையே மரம்தான். அதாவது ‘மரத்திலிருந்து’ என்ற சொல்லே சுருங்கி, காலப்போக்கில் ‘மருந்து’ என அழைக்கப்படுவதாக ஒரு பேச்சு உண்டு. அது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால், ஆதிகாலத்தில் மனிதனுக்குப் பிணி போக்கும் மருத்துவர்களாகத் திகழ்ந்தவை மரங்களும் மூலிகைச் செடிகளும்தான். அந்தக் காலத்திலும் சரி, இந்த நவீன காலத்திலும் சரி... தாவரங்களிலிருந்து பெறப்படும் பொருள்களை வைத்துத்தான் பெரும்பாலான நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'

ஆதி மனிதர் தங்களின் ஆரோக்கியக் காவலனாக விளங்கிய மரங்களைத் தெய்வமாகவே வணங்கினார்கள். காலப்போக்கில் நேரடியாக மருந்துகள் நம் கைக்குக் கிடைத்து விடுவதால் மரங்களைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அதனால்தான் மனிதன் மரங்களை மறந்துவிட்டான். அதன் விளைவு, இலவசமாகக் கிடைத்த மருந்துப் பொருள்களை இன்று விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். பெயர் தெரியாத நோய்களோடு மருத்துவமனைகளில் முகாமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'



சமீபகாலமாக மனிதர்களைப் பீதியடையச் செய்வது பலவிதமான காய்ச்சல்தான். நாளிதழ்களில் ‘மர்மக் காய்ச்சல் பாதிப்பு’ என்ற செய்தியை அடிக்கடி படித்திருப்போம். சில காய்ச்சல்களைப் பரப்புவதில் கொசுக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. பரவலாகக் காணப்படும் இக்கொசுக்களை, இவ்வளவு நவீன வசதிகள் பெருகியிருக்கும் இந்தச் சூழ்நிலையிலும் அழிக்க முடியவில்லை. இதனால், மனிதர்களுக்குக் காய்ச்சலால் உயரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கொசுக்களையே அழிக்க முடியாத நாம், அணு உலைக் கழிவுகளை எப்படி அகற்றப் போகிறோம் என்பது கேள்விக்குறிதான்.  ஆனால், நம் முன்னோர் எந்த ஆய்வுக்கூடமும் இல்லாமல், ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளாமல், அனைத்துவித காய்ச்சல் நோய்களுக்கும் சரியான மருந்துகளைக் கொடுத்துக் குணப்படுத்தியுள்ளனர். அவற்றில் மலேரியா காய்ச்சலை ‘ஏழிலைப்பாலை’ மரத்தின் பட்டையைக் கொண்டு குணப்படுத்தியுள்ளனர்.

மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'

எதையும் அறிவியல் ஆய்வுகள் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளும் நவீன மருத்துவம், ஏழிலைப்பாலை மரத்தின் பட்டையை ஆராய்ச்சி செய்து... அதிலுள்ள அல்கலாய்டுகள் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் திறனுள்ளவை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

ஏழிலைப்பாலை மரம் மருத்துவத்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல; சிறந்த அலங்கார மரமும்கூட. இது நீண்டு, உயரமாக வளர்ந்து கிருஸ்துமஸ் மரம்போல காட்சி தரும். சாலையோரங்களிலும், ரயில் பாதையின் இரு பக்கங்களிலும், கால்வாய் கரைகளிலும், வீட்டோரங்களிலும், பூங்காக்களிலும் நடுவதற்கு ஏற்ற அழகு மரம். இந்த மரம் தீப்பெட்டித் தொழிலுக்குப் பெரிதும் உதவுகிறது. பென்சில், ஒட்டுப்பலகை, பள்ளிகளில் பயன்படுத்தும் கறும்பலகை, சிலேட்டுகளின் சட்டங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு மிகவும் ஏற்றது.

மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'


இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது இந்த மரம். இதன் தாவரவியல் பெயர் ‘அல்ஸ்டோனியா ஸ்கொலாரிஸ்' (Alstonia Scholaris). இது ‘அபோசைனேசியே' (Apocynaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ‘ஸ்கொலாரிஸ்' (scholaris) என்ற சொல், கல்வி சம்பந்தப்பட்டது. கல்வி தொடர்பான பொருள்கள் செய்யப்பயன்படுவதால், இதன் பெயருடன் ‘ஸ்கொலாரிஸ்’ என்ற சொல்லும் ஒட்டிக்கொண்டது.

இதன் இலைகள் ஏழு ஏழாக இருப்பதால் இது ஏழிலைப்பாலை என அழைக்கப்படுகிறது. வால்மீகி முனிவர் ராமாயணத்தில் இதை ‘சப்த சாதா’ எனக் குறிப்பிட்டுள்ளார். வட இந்தியாவில் இதை ‘சப்த பர்னா’ என்றழைக்கின்றனர். தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளிலும் மலைக்குன்றுகளிலும் இது காணப்படுகிறது.

ஏழிலைப்பாலை இலையுதிராமல் நீண்டு வளரும் மரமாகும். சுமார் 20 மீட்டர் முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. வளர்ந்த நிலையில் விண்ணோக்கிக் கூம்பிய வடிவில் இருக்கும். குடையில் கம்பிகள் இருப்பதுபோல் மரத்தில் ஆங்காங்கே கிளைகள் உருவாகியிருக்கும். மரத்தின் பட்டை தடித்திருக்கும். பட்டையின் உள்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். கிளையின் நுனிப்பகுதியில், ஒரு சுருளைப் போன்று 5 முதல் 7 இலைகள் ஒரே கொத்தில் உருவாகிக் கூட்டிலைகள்போல் இருக்கும். ஆனால், அவை கூட்டிலைகள் இல்லை; ஒவ்வொன்றும் தனித்தனி இலைகளாகும். இதன் இலைகள் மாவிலையைப் போன்று தடித்த கறும்பச்சை நிறத்தில் இருக்கும். இலையின் கீழ்புறம் வெண்மையாக வெள்ளைப்பொடி தூவியதுபோல காட்சியளிக்கும்.

மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'

கிளைகளின் நுனிகளில் பூங்கொத்து உருவாகும். நீண்ட காம்புகளையுடைய இப்பூங்கொத்துகளில் பச்சை, வெள்ளை நிறப்பூக்கள் உருவாகி விண்ணோக்கி இருக்கும். இப்பூங்கொத்துகள் இருக்கும் சமயத்தில் பார்த்தால் மரம் பூக்களால் அலங்காரம் செய்ததுபோல காட்சியளிக்கும். அந்த அழகைக் காணக் கண் கோடி வேண்டும். இப்பூக்கள் மணமுடையவை. மரத்தின் அருகே சென்றால், நறுமணத்தால் மனம் மயங்கும்.

செப்டம்பர்-நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இந்த மரங்கள் பூக்கும். ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் தவிட்டுப் பறவைகள், ஏழேழு பறவைகளாகச் சேர்ந்து இதன் அருகே தத்தித்தாவி, இனிய குரலெடுத்துப் பாடி, ஆடி இம்மரத்தைச் சுற்றி வருவதைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறேன். நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் இந்த அழகைக் கண்டு ஆனந்தமடையுங்கள். இதன் காய்கள் நீளமாக, சன்னமான கம்பியைப் போன்று இரட்டையாக உருவாகும். மரம் முழுவதும் இந்த நெற்றுகள் சடை சடையாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு அழகிய இளம்பெண் தன் கருங்கூந்தலைச் சிறு சிறு சடையாகப் பின்னித் தொங்க விட்டிருப்பது போன்று இருக்கும்.

இதன் நெற்றுகளில் மெல்லிய பஞ்சு போன்ற குஞ்சத்துடன் சிறு விதைகள் இருக்கும். இவை காற்றின் மூலம் பறந்து, நிலத்தில் ஆங்காங்கே விழும். விழுந்த இடத்தில் வளர்வதற்கேற்ற சூழல் இருந்தால் அங்கேயே முளைத்து மரமாகிவிடும். இதன் நெற்றுகளைச் சேகரித்து, விதையெடுத்து நாற்றங்காலில் செடியாக வளர்க்கலாம். தமிழ்நாட்டில் அனைத்து நர்சரிகளிலும் வனத்துறையிலும் இதன் கன்றுகள் தாராளமாகக் கிடைக்கின்றன. தேவைப்படுவோர் வாங்கிப் பயனடையலாம்.

- வளரும்