மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20

நோய்க்குத்தான் பத்தியம்... மருந்துக்கல்ல!மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு, மூ.சத்யவதி - படங்கள்: எல்.ராஜேந்திரன்

‘ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்’ என்று சொல்வார்கள். அது ‘கொன்றவன்’ இல்லை; ‘கொண்டவன்’ என்பதுதான் கொன்றவனாக  மருவி விட்டது. ஆயிரம் வேர்களைப் (மூலிகை) பற்றிய அறிவைக் கொண்டவன் அரை வைத்தியன் என்பது தான் அப்பழமொழியின் அர்த்தம். மூலிகைகள் பற்றிய அறிவோடு உடற்கூறு, நோய்கள், நோயைக் கணித்தல், நோயாளியின் வலிமை... போன்றவை பற்றிய அறிவையும் கொண்டிருப்பவன்தான் முழு வைத்தியன் என்று நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நமது மரபுசார் வைத்திய முறைகள் சுய மருத்துவம் மூலமாகவே பிறந்தன. இன்னமும் சுய மருத்துவம் மூலமாகத்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவை ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. ஆனால், ஆய்வுக்கூடத்தில் விரிவுபடுத்தப்படும் நவீன மருத்துவ முறை, ஆபத்தானது என்கிறது ‘சுயமருத்துவம்’.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20

வெளிநாடுகளிலிருந்து நிறைய தாவரங்கள் நம் நாட்டுக்குள் வந்துள்ளன. அவற்றுக்கு வேளாண் குடிமக்களே பெயர்களையும் சூட்டியுள்ளனர். அதோடு, இவற்றை மருத்துவ ஆய்வுக்குட்படுத்தி அவற்றின் மருத்துவப் பயன்பாடுகளையும் வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த இடத்தில் ஓர் உதாரணத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். பிரான்ஸ் நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு வந்த கிறிஸ்தவச் சகோதரிகள் இருவர், அந்நாட்டுத் தாவரமான ‘கிரீன் லெட்டியூஸ்’ என்ற கீரையையும் கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே புதுச்சேரியிலும் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி, இன்று வீடுகளில்கூட வளர்க்கப்படும் கீரையாக உள்ளது. அதுதான் ‘லெச்சகெட்ட கீரை’. இந்தப் பெயரை வைத்தவர்கள் நம் மக்கள்தான். கிராமங்களில் குழந்தை பெற்றெடுக்கும் தன்மையற்ற பெண்களை ‘லெச்சகெட்ட பொம்பளை’ என்று கேலியாகச் சொல்வார்கள். அந்தப் பெயர் இக்கீரைக்கு வரக் காரணம் இது பூத்துக் காய்ப்பதில்லை. இந்தத் தன்மையை வைத்துக் கீரைக்கு இப்பெயரைச் சூட்டிவிட்டனர். இது உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் அதிகம் பயன்படுவதால், தற்போது இதை ‘லெட்சுமி கடாட்ச கீரை’ என அழைக்கத் தொடங்கியுள்ளனர். எந்த மூலிகையாக இருந்தாலும், அது அடித்தட்டு மக்களிடமிருந்துதான் பரவலாகிறது. அடுத்து, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்துப் பாதுகாக்கப்படுகிறது.

இதன் அடுத்தகட்டம்தான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. இப்படிப் பாதுகாக்கப்பட்ட ஒரு மூலிகையையோ அல்லது அதன் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்தையோ சில பெரு வணிக நிறுவனங்கள் கையகப்படுத்த நினைத்து... அதில் சில ஆய்வுகளை மேற்கொண்டதாகப் பிரகடனப்படுத்துகிறார்கள். பிறகு அப்பொருளுக்குப் பல மடங்கு விலை வைத்து வணிகப்படுத்துகிறார்கள். அதனால், விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

ஏனென்றால் மூலிகைச் சாறு வகைகள், உணவுப்பொருள்கள் ஆகியவை ஒன்று அல்லது இரண்டு நாள்களில் கெட்டுப்போகும் இயல்புடையவை. அவற்றை ஆண்டுக்கணக்கில் கெட்டுப்போகாமல் வைக்க வேண்டுமென்றால் சில ரசாயனங்களைச் சேர்க்க வேண்டும். இதோடு மணமூட்டிகள், நிறமூட்டிகள் போன்றவற்றையும் சேர்த்தால்தான் சந்தைப்படுத்த முடியும். இவை அனைத்துமே உடலுக்குக் கேடு விளைவிக்கும் பொருள்கள் தான்.  ஏதோ... வீட்டில் தயாரிக்கும் மருந்துகள் அனைத்தும் பாதுகாப்பற்றவை என்பதுபோலச் சித்திரித்து ‘இயற்கையானதை நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாகத் தருகிறோம்’ என்று விளம்பரம் செய்கின்றன வணிக நிறுவனங்கள். ஆனால், உண்மையில் பாதுகாப்பற்றவை புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருள்கள்தான். இதற்குப் பல உதாரணங்களை நீங்களே அறிந்திருப்பீர்கள். மரபுசார் மருந்துகளை நாமே தயார் செய்து அவ்வப்போது உண்டு வருவது மிகவும் நல்லது.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20

நம் மருத்துவ மரபு ‘வணிகம் சாராதது; பாதுகாப்பானது, அறிவுபூர்வமானது’ என்ற எண்ணம் மனதளவில் இருந்தால்தான், அவற்றின் மீது நமக்கு நம்பிக்கை பிறக்கும். அதனால், சுய மருத்துவம் செய்து கொள்வதில் தவறேதுமில்லை.  மரபு சார்ந்த மருத்துவ முறைகளில் சுயமருத்துவம் தான் அடிப்படையானது. ஆனால், சுயமாக அலோபதி மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆபத்தானது.

என்னிடம் மருத்துவம் பார்க்க வந்த இளைஞர் ஒருவர், தாங்க முடியாத வயிற்று வலியால் துடித்துக் கொண்டிப்பதாகச் சொன்னார். எப்படி வந்தது என்று கேட்டபோது, அவர் சொன்ன விஷயம் என்னை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது. ஒரு முதியவர் அவரிடம் முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாள் இரண்டு மிளகு என நூறு நாள்கள் வரை தினமும் ஒவ்வொரு மிளகாகக் கூட்டிக்கொண்டே உண்டு வர வேண்டும்; நூறு நாள்கள் முடிந்ததும், தினமும் ஒரு மிளகைக் குறைத்து உண்டு வர வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சாப்பிட ஆரம்பித்த அந்த இளைஞருக்கு நாற்பது நாள்களிலேயே வயிற்று வலி வந்துவிட்டது. மிளகு, உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பொருள்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதை எப்படி உண்ண வேண்டும் என்ற நியதி உண்டு. அதை விடுத்து இப்படித் தவறான புரிதல்களைக் கொண்டால் கேடுகள்தான் நேரும். அதனால், எதற்குமே அளவு முக்கியம். ‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாகத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், எந்த வியாதிக்கு எந்தவிதமான மருத்துவம் மேற்கொண்டாலும் 3 நாள்களில் நோயின் அறிகுறிகள் குறையத் தொடங்கினால் மட்டுமே, அந்த மருந்தைத் தொடர வேண்டும். இல்லையென்றால், உடனடியாகச் சுய மருத்துவத்தை விடுத்து மருத்துவரை நாட வேண்டியது அவசியம். அவரிடம் நீங்கள் மேற்கொண்ட சுயமருத்துவத்தைச் சொல்ல வேண்டியதும் அவசியம். இத்தொடர் வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் பல வாசகர்கள் கேட்ட கேள்வி, ‘பத்தியம் உண்டா?’ என்பதுதான். சாதாரண மற்றும் நோயற்ற நிலைகளில் ஒரு மூலிகையை அரைத்துச் சாப்பிடுவதற்கோ, கஷாயம் செய்து குடிப்பதற்கோ எந்த உணவுக் கட்டுப்பாடும் இல்லை.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20

பத்தியம் என்று நமது மருத்துவ முன்னோர்கள் வகுத்தது நோய்க்குத்தானே ஒழிய மூலிகைக்கு அல்ல. எடுத்துக்காட்டாக, கீழாநெல்லியை அரைத்து எப்போது வேண்டுமானாலும் அளவுடன் உண்டு வரலாம். ஆனால், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் கொழுப்பு, புளிப்பு, உப்பு முதலான உணவுகளை நீக்கிவிட்டு கீழாநெல்லியை உண்டு வர வேண்டும். அப்போதுதான் நோய் குணமாகும். அதனால், பத்தியம் என்பது நோய்க்குதான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பத்தியம் தொடர்பான கேள்விகளுக்கு அடுத்தபடியாகப் பல வாசகர்கள் கேட்ட கேள்வி... ‘ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் போது சித்த மருந்துகளைச் சாப்பிடலாமா?’ என்பதுதான். நவீன ஆங்கில மருந்துகளை நாம் சாப்பிட்டாலும், நம் உணவுப் பொருள்களான சாம்பார், மிளகு ரசம், வத்தக்குழம்பு, அவியல், பொரியல் ஆகியவற்றைத்தானே  சாப்பிடுகிறோம். சித்த மருந்துகள் அனைத்துமே தாவரப் பொருள்களைக் கொண்டு செய்யப்படுபவை. அதனால், ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது தாராளமாகச் சித்த மூலிகை மருந்துகளைச் சாப்பிடலாம். ‘உணவே மருந்து... மருந்தே உணவு’ என்பதுதான் நமது உணவுக் கொள்கை.

என்னுடைய அனுபவத்தில் சர்க்கரை நோய், அதிகொழுப்பு நோய், அதிரத்த அழுத்த நோய் முதலான நாள்பட்ட நோய்களுக்குத் தொடர்ந்து ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் சித்த மருந்துகள் கொடுத்துள்ளேன். அவர்களுக்குப் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20

நமது மரபு சார்ந்த சித்த மருத்துவம் 32 அக மருந்துகள், 32 புற மருந்துகள் என மிகவும் சிறப்பான ஒழுங்கமைவில் பதிவு செய்து வைத்துள்ளது. இந்த 32 வகையிலும் ஒவ்வொரு வகையின் கீழ் ஆயிரக்கணக்கான மருந்துகள் நமது சித்தமருத்துவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளுக்குள் சாப்பிடக்கூடிய அக மருந்துகளில் முதல் 20 மருந்துகளை மக்களே தயாரித்துச் சாப்பிட்டு வந்துள்ளனர். இவற்றுக்குப் பெரிதும் பத்தியம் அவசியமில்லை. அக மருந்துகளில் மீதி 12-ஐ, சித்த மருத்துவர்கள்தான் தயாரித்து வழங்குவர். அவற்றை மருத்துவரின் பரிந்துரைப்படிதான் சாப்பிட வேண்டும். இவற்றுக்கு உணவுக் கட்டுப்பாடும் அவசியம். இது, நமது தமிழ் மரபு மருத்துவமான சித்த மருத்துவத்தின் தனிச் சிறப்பு.

விவாதங்களின்போது பலர் ‘சித்த மருத்துவத்துக்கு ஆதாரம் உண்டா?’ என்று அறிவாளித்தனமாகக் கேட்பார்கள். நவீன உணவு அறிவியலில், ‘ஒரு மாவுச்சத்துப் பொருளையும் ஒன்றுக்கு மேற்பட்ட புரதச்சத்துப் பொருள்களையும் சேர்த்து உண்டு வந்தால், மனித உடல் சிறப்பாக வளர்வதற்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் உருவாகும்’ என்ற உண்மையைச் சென்ற நூற்றாண்டில்தான் கண்டறிந்தனர். ஆனால், நமது தென்னிந்திய உணவுகளான இட்லி, தோசை, சாம்பார் அனைத்துமே இந்த அடிப்படையில்தான் உள்ளன. அதனால், நமது முன்னோரின் அறிவுக்கு ஆதாரம் கேட்கக்கூடாது.

சிலர் ‘எல்லா நோய்களுக்கும் சித்த மருந்துகள் உண்டா?’ என்று கேட்கிறார்கள். சித்த மருத்துவ நோய் வகைப்பாட்டியல் பேசும் ‘யூகி வைத்திய சிந்தாமணி’ எனும் நூலில் 4,448 வகையான நோய்களைப் பட்டியலிட்டுள்ளது. எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. ஆனால், எல்லா நோயாளிகளுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இல்லை. நோயாளியின் வலிமை, திண்மை, நோயின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தே நோயைக் குணமாக்க முடியும். எல்லா மருத்துவ முறைகளையும் பார்த்துவிட்டு, கடைசியில் சித்த மருத்துவரை நாடிவரும் பழக்கம்தான் மக்களிடம் உள்ளது. எனவே, நோய் முற்றிய நிலையில் தீர்க்க இயலாத சூழல்தான் உள்ளது.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20

சித்த மருத்துவம் குறித்த சிறப்புகளை உலகறியச் செய்ய வாய்ப்பளித்த ‘பசுமை விகட’னுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டியது அவசியம். தொடர்ந்து மூலிகைகள் குறித்த பயிற்சிகள் மற்றும் பல்வேறு வாழ்வியல் பயிற்சிகளைத் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள எமது உலகத்தமிழ் மருத்துவக் கழகத்தின் சார்பாக நடத்த இருக்கிறோம். அவற்றில் கலந்துகொண்டு வாசகர்கள் பயனடையலாம்.

அதோடு இன்னொரு முக்கியமான வேண்டுகோள்... வெளிநாட்டுக் குரோட்டன்ஸ் செடிகளை அழகுக்காக வீடுகளில் வளர்ப்பதை விடுத்து, வாழ்வதற்கு அவசியமான மூலிகைகளை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஆடாதொடை, தூதுவேளை, துளசி, நொச்சி, கண்டங்கத்திரி, ஓமவல்லி, பிரண்டை, மருதாணி உள்ளிட்ட மூலிகைகள் இருந்தாலே போதுமானது; ஆரோக்கியமான வாழ்வை நாம் மேற்கொள்ள முடியும். அதேபோல ஊருக்குப் பொதுவான இடங்களில் இலுப்பை, புன்னை, புங்கன், மருது, நாவல், கொன்றை, ஆல், அரசு, அத்தி, இத்தி முதலான அதிக மருத்துவக் குணங்கள் உள்ள மரங்களை வளர்க்க வேண்டும்.

நிறைவுற்றது.

தொடர்புக்கு,
மைக்கேல் செயராசு,
செல்போன்: 98421 66097.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20
நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20