மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா?

நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு  மானியம் உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா?

புறா பாண்டி

‘‘சம்பங்கி பூச்செடியில் மாவுப்பூச்சி தாக்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த வழிகாட்டுங்கள்?’’

கே.குமரேசன், திருவண்ணாமலை.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மலர் விவசாயி கலைச்செல்வன் பதில் சொல்கிறார்.

‘‘என்னுடைய தோட்டத்தில் உள்ள சம்பங்கியிலும்கூட மாவுப்பூச்சித் தாக்குதல் ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்திவிட்டோம். முதலில் மாவுப்பூச்சியின் கதையைத் தெரிந்துகொண்டால், அதைக் கட்டுப்படுத்த தயாராகிவிடுவோம். உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகைதான் ‘பாரா காக்கஸ் மார்ஜினேட்டஸ்’ (Para Coccus Marginatus) எனும் பப்பாளி மாவுப்பூச்சி. இப்பூச்சியின் தாக்குதல் தமிழ்நாட்டில் முதன் முதலாகப் பப்பாளியில் ஜூலை 2008-ம் ஆண்டு கோயமுத்தூர்ப் பகுதியில் கண்டறியப்பட்டது.

நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு  மானியம் உண்டா?

இப்பூச்சிகள் பப்பாளியை மட்டுமல்லாது மல்பெரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்திரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, சம்பங்கி... போன்ற பயிர்களையும் களைச்செடிகளையும் தாக்குகிறது. எதிர்காலத்தில் மக்காச்சோளம் போன்ற  பயிர்களையும் தாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இந்தப் பூச்சி பறவைகள், விலங்குகள், காற்று, தண்ணீர் மற்றும் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதில் பரவுகிறது.

நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு  மானியம் உண்டா?


இப்பூச்சியின் உடல் முழுவதும் மெழுகு மற்றும் மாவு போன்ற வெள்ளை நிறப் பொருள் உள்ளது. ஆகையால், இதை எளிதில் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஒரு வருடத்தில் இந்த மாவுப்பூச்சி 15 முறை இனப்பெருக்கம் செய்கிறது. இது அதிக முட்டையிடும் திறன் கொண்டது. ஒரு பூச்சி 500 முதல் 600 முட்டைகளை ஒரு வருடத்தில் இடும். இதனால், இதன் எண்ணிக்கை அதிகளவில் பெருகி மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்துகிறது. இலையின் அடிப்பகுதி, குருத்து, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக அடைபோல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும். சிவப்பு மற்றும் கறுப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். இந்த எறும்புகள் மூலம்தான் மாவுப்பூச்சி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வேகமாகப் பரவுகிறது. மாவுப்பூச்சியின் தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தால், சம்பங்கி பூவின் இலைகள் வாடிக் கருகிவிடும். இதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

களைகளை அகற்றி வயல்களைச் சுத்தமாக வைக்க வேண்டும். மாவுப்பூச்சி தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச்செடிகளை முதலில் அகற்ற வேண்டும். பூச்சிகள் உள்ள செடியை அழித்துவிட்டால் மேலும் பரவாமல் தடுக்க முடியும். வெயில் குறைவாக இருக்கும்போது (காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளபோது) இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த வெர்டிசீலியம் லெக்கானி எனும் உயிரியல் பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற விகிதத்தில் ஒட்டும் திரவத்தைச் சேர்த்துத் தெளிக்கலாம். மேலும், நன்மை செய்யும் பொறிவண்டுகள் கிரிப்டோலிமஸ் அல்லது ஸ்கிம்னஸ் என்ற வண்டுகளை ஒரு ஏக்கருக்கு 500 முதல் 600 எண்ணிக்கையில் வாங்கி வயலில் விட வேண்டும். இவை கிடைக்காத சூழ்நிலையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்பங்கொட்டைக் கரைசல் 5 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். வேப்பங்கொட்டைக் கரைசலைக் கட்டாயம் ஒட்டும் திரவம் கலந்துதான் தெளிக்க வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றினால் மாவுப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 97877 87432.

நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு  மானியம் உண்டா?

‘‘நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விரும்புகிறோம். இதற்கு அரசு மானியம் உள்ளது எனக் கேள்விப்பட்டோம். இதன் விவரங்களைச் சொல்லவும்?’’

கே.எல்லம்மாள்,
காஞ்சிபுரம்.

‘‘தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இதைத்தவிர நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்தச் செலவிலோ வங்கிக் கடனாகவோ  செலவிட வேண்டும். தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நிதி அளவு ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 25 சதவிகிதமும் இறுதியாக நபார்டு வங்கி மூலம் 25 சதவிகிதமும் மானியமாக வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு ரூ.45,750 வரை மானியம் வழங்கப்படுகிறது.

நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு  மானியம் உண்டா?

விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் இம்மானியத்தைப் பெறத் தகுதியானவர்கள். நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பதாரர் பெயரிலோ அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ போதிய நிலம் இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும் கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவர்களிடம் பண்ணைகள் அமைக்கப் போதிய நிலம் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே கொட்டகை அமைத்த பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்துக் கொள்ளவும் கோழிப் பண்ணைகளை விரிவாக்கம் செய்து கொள்ள ஆர்வமும் உள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வாய்ப்புகள் உள்ளன. தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மாவட்டந்தோறும் செயல்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் மூலம் 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். எனவே, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.’’

நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு  மானியம் உண்டா?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.