மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!

மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும்  தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!

ஓவியம்: ஹரன்

காலை வெயிலோடு தென்றலும் தவழ்ந்து கொண்டிருந்த இதமான சூழ்நிலையில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் நாட்டு நிலவரங்களைப் பேசிக்கொண்டே நாளிதழ்களை வாசித்துக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்துசேர ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் வாத்தியார்.

“அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஒரு டன் கரும்புக்கு 3,500 ரூபாய் கொடுப்போம்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, அதுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கல. இதபத்தி தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதுக்கு இப்போதைக்குக் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்திக்கொடுக்க முடியாதுனு சட்டசபையிலேயே அமைச்சர் எம்.சி. சம்பத் திட்டவட்டமாகச் சொல்லிட்டார். ஆனா, ‘விவசாயிகளுக்குச் சேரவேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகை கிடைக்கிறதுக்கான நடவடிக்கைகளை எடுத்திட்டு இருக்கோம். நிலுவைத்தொகையைக் கொடுக்கலைனா கரும்பு ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்போம்’னு அமைச்சர் சொல்லியிருக்கார்” என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும்  தோட்டக்கலைத் துறைப் பணிகள்!

“தேர்தல் அறிக்கையில சொல்றதை யெல்லாம் நிறைவேத்துவாங்கனு எதிர்பார்த்தா ஏமாந்துதான் போகணும். முதல்ல நிலுவைத்தொகையை வாங்கித் தரட்டும். கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்கச் சொல்லிக் கேக்குறதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சொன்ன காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு சப்போட்டாப் பழங்களை எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார் ஏரோட்டி.

“ராமநாதபுரம் மாவட்டத்துல சுந்தரமுடையான், கீழ நாகாச்சி ஆகிய இடங்கள்ல அரசு மாதிரித் தோட்டக்கலைப் பண்ணை செயல்படுது. இங்கே பலவகையான மரக்கன்றுகளையும் பழ மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்றாங்க. ஊராட்சி மூலம் செயல்படுத்துற மரம் வளர்ப்புத் திட்டங்களுக்கும் மாவட்டத்துல செயல்படுத்தப்படுற மற்ற திட்டங்களுக்கும் இந்தக் கன்றுகளைத்தான் பயன்படுத்துவாங்க. அதேமாதிரி நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் மூலமா மரக்கன்று நடவு செய்யவும், இந்தக் கன்றுகளைத்தான் பயன்படுத்துவாங்க. ஆனா, போன வருஷத்துல இருந்து இந்த ரெண்டு பண்ணைகள்லயும் உற்பத்தி பண்ணுன மரக்கன்றுகள் அப்படியே தேங்கிப் போய்க்கிடக்கு.

கீழ நாகாச்சி தோட்டக்கலைப் பண்ணையில் புங்கன், தூங்குமூஞ்சி, அயல்வாகை, நீர்மருது, வேம்பு, தேக்கு, மகோகனி, மலைவேம்பு, மா, குமிழ், செம்மரம், ஆவி, தீக்குச்சினு 6 லட்சத்து 48 ஆயிரம் மரக்கன்றுகள் தேங்கிக்கிடக்கு. அதேமாதிரி சுந்தரமுடையான் தோட்டக்கலைப் பண்ணையில் மா, நெல்லி, சப்போட்டானு 4 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் தேங்கிக்கிடக்கு. இந்தக் கன்றுகளோட மதிப்பு ஒண்ணே கால் கோடி ரூபாயைத் தாண்டுமாம். கன்றுகள்லாம் ரொம்ப வளர்ந்த நிலையில இருக்குதாம். இந்தக் கன்றுகளைத் தேவைப்படுற விவசாயிகளுக்குக் கொடுக்குறதுக்கு அரசாங்கம் உத்தரவு போட்டா... கன்றுகள் வீணாகாம யாருக்காவது பயன்பட வாய்ப்பிருக்கு. ஆனா, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்” என்றார் ஏரோட்டி.

“தோட்டக்கலைத்துறையிலதான் வேலை செய்ய ஆளே இல்லையே, அவங்க எப்படி நடவடிக்கை எடுப்பாங்க” என்ற வாத்தியார் தொடர்ந்தார்...

“முன்னாடி தமிழக வேளாண்மைத் துறையின் ஓர் அங்கமாத்தான் தோட்டக்கலைத் துறை இயங்கிட்டு இருந்துச்சு. 1979-ம் வருஷம் வேளாண்மைத் துறையிலிருந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையைப் பிரிச்சு தனித்துறையா ஆக்குனாங்க. ஆனா, அதுக்கான பணி வரன்முறையை அமைக்கவேயில்லை. 2015-ம் வருஷம்தான் அதுக்கான பணி வரன்முறையை அமைச்சாங்க. அதுக்கு இதுவரை தனியா தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்கவேயில்லை. இப்போ அந்தத் துறையில ஏகப்பட்ட பணியிடங்கள் காலியா இருக்குதாம்.

1,650 உதவித் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்கள்ல 850 பணியிடங்கள் காலியா இருக்குதாம். 523 தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்கள்ல 100 பணியிடங்கள் காலியா இருக்குதாம். 401 உதவி இயக்குநர்கள் பணியிடங்கள்ல 220 பணியிடங்கள் காலியா இருக்குதாம். 39 துணை இயக்குநர்கள் பணியிடங்கள்ல 15 பணியிடங்களும், 6 இணை இயக்குநர்கள் பணியிடங்கள்ல 2 பணியிடங்களும், 2 கூடுதல் இயக்குநர்கள் பணியிடங்கள்ல ஒரு பணியிடமும் காலியா இருக்குதாம். இதனால, அந்தத் துறையில எந்த வேலையுமே ஒழுங்கா நடக்கிறதில்லையாம்.தென்னை, வாழை, காபி, ஏலக்காய்னு முக்கியப் பணப்பயிர்கள் எல்லாம் தோட்டக் கலைத்துறையின் கீழதான் வரும். ஆனா, இந்தத் துறையில போதுமான அலுவலர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இல்லாததால, எல்லா வேலைகளும் தாமதமாகுதாம். அதனால, விவசாயிகள் ரொம்பச் சிரமத்துல இருக்குறாங்க” என்றார் வாத்தியார்.

“சீக்கிரம் இந்தப் பணியிடங்கள் எல்லாத்தையும் நிரப்பிடுவாங்க. அதுதான் தினமும் சட்டசபையில ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கான ஆள்களை வேலைக்கு எடுக்கப்போறோம்னு அறிவிச்சுட்டே இருக்காங்களே” என்று நக்கலாக  ஏரோட்டி சொல்ல அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.  

“வறட்சிக்கு மழை காரணமல்ல; மக்கள்தான்!”

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து அறியக் கடந்த இரண்டு மாதங்களாக ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்தர் சிங். இதுகுறித்தான ஆய்வறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி ஜூன் 30-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய  ராஜேந்தர் சிங், “மணல் கொள்ளை, தண்ணீர் வியாபாரம், நீர்நிலை ஆக்கிரமிப்பு, முறைகேடான நீர் உபயோகம் ஆகியவற்றைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தில் உள்ள 52 உபரிநீர் வடிநிலப் படுகைகளும், 38,720 பாசன ஏரி குளங்களும், 5 நதிகளும் காணாமல் போய்விடும். சூழல் தேவைக்காகக் குறைந்தபட்ச நீரோட்டத்தை ஆறுகளில் ஏற்படுத்த வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு மழை காரணமல்ல; மக்கள்தான்” என்றார். இந்நிகழ்ச்சிக்குத் தமிழக ஆறுகளின் வளம் மீட்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

- ஞா.சுதாகர்