
ஓவியம்: ஹரன்
தோட்டத்துக் கொட்டகையின் கூரையைப் பிரித்து வேய்வதற்காக வாங்கப்பட்டிருந்த மூங்கில் குச்சிகளை அடுக்கிக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, கூடையை இறக்கி வைத்துவிட்டுப் புடவைத்தலைப்பால் முகத்தைத் துடைத்தபடியே தரையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
வேலையை முடித்துவிட்டு வந்த ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

“ஈரோடு மாவட்டத்துல பூதப்பாடி, அந்தியூர் பகுதிகள்ல இருக்குற ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு அதிகமா பருத்தி வந்துட்டு இருக்கு. இந்தப் பகுதிகள்ல ஜூன் மாசத்துல இருந்து ஆகஸ்ட் மாசம் வரை பருத்தி வரத்து இருக்கும். வாராவாரம் பூதப்பாடியில் புதன்கிழமையும், அந்தியூரில் திங்கள்கிழமையும் பருத்தி ஏலம் நடக்கும். இந்த வருஷம் ஜூன் மாசம் 21-ம் தேதியிலிருந்து பூதப்பாடியில் பருத்தி ஏலம் நடக்குது. அந்தியூர்ல ஜூன் 26-ம் தேதியிலிருந்து பருத்தி ஏலம் நடக்குது. ஏலம் ஆரம்பிச்ச சமயத்துல ஒரு கிலோ பருத்தி 45 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆனா, இப்போ கொஞ்சம் கொஞ்சமா விலை அதிகரிச்சு 54 ரூபாய் வரை ஏலம் போகுது. அந்தியூர்ல மட்டும் இதுவரை, ஒன்றரைக்கோடி ரூபாய்க்குமேல பருத்தி விற்பனையாகியிருக்கு. பூதப்பாடியில் ரெண்டே கால் கோடியைத் தாண்டிருச்சு. அடுத்த வாரங்கள்ல பருத்தி விலை இன்னமும் உயரும்னு சொல்றாங்க. நல்ல விலை கிடைக்கிறதால பருத்தி விவசாயிகள் சந்தோஷத்துல இருக்காங்க” என்றார்.
“விவசாயிங்க சந்தோஷமா இருந்தா நல்லதுதான்” என்று சொன்ன காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு பேரிக்காய்களை எடுத்துக்கொடுத்துவிட்டு, “திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள்ல பேரிக்காய் சீசன் ஆரம்பிச்சிருக்கு. இந்த ஊர்கள்ல இருந்து தமிழ்நாடு முழுக்கப் விற்பனைக்காகப் பேரிக்காய்ப் போயிட்டிருக்கு. ஆகஸ்ட் மாசம் வரைக்கும் பேரிக்காய் அறுவடையாகும். வால்பேரிக்காய் கிலோ 120 ரூபாய்னு விற்பனையாகுது. நாட்டுப் பேரிக்காய் 100 ரூபாய்க்கு விற்பனையாகுது. பேரிக்காய் சாப்பிட்டால் இதயக் கோளாறு, நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள் எல்லாம் வராதாம். இதுல இருந்து ஜாம், ஜெல்லி எல்லாம் தயார் செய்றாங்க” என்றார்.
“ம்... ஏகப்பட்ட விஷயம் சொல்ற கண்ணம்மா” என்ற வாத்தியார் பேரிக்காயை ருசித்துக்கொண்டே அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.
“சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சின்ல மத்தியத் தென்னை வளர்ச்சி வாரியத்தோட ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கு. அதுல, பொள்ளாச்சிப் பகுதியைச் சேர்ந்த தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் மோகன்ராஜும் கலந்துகிட்டார். அவர், ‘தமிழ்நாட்டுல பருவமழை இல்லாததால, தென்னை மரங்கள் காய்ஞ்சு போச்சு. அதனால, நிறைய விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டிட்டாங்க. தமிழக விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மறுநடவுக்குத் தேவையான தென்னங்கன்றுகளைக் கொடுக்கணும்’னு கோரிக்கை வெச்சுருக்கார். இதையடுத்து, உடுமலைப்பேட்டை பகுதியில் இருக்குற தென்னை வளர்ச்சி வாரியத்தோட பண்ணையில் தயாரா இருக்கிற தென்னங்கன்றுகளைத் தமிழக விவசாயிகள் மானிய விலையில் வாங்கிக்கலாம்னு தென்னை வளர்ச்சி வாரியம் அனுமதி கொடுத்திருக்கு. அந்தக்கூட்டத்துல சென்னையில் இயங்குற தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாத்தலாம்னும் முடிவு பண்ணிருக்காங்க” என்றார்.
அந்த நேரத்தில் கூரை வேய்வதற்கான ஆட்கள் வந்துவிட அவர்களை அழைத்துக்கொண்டுபோய்ச் சாமான்களை எடுத்துக்கொடுத்தார் ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.
தவறும் விளக்கமும்!
பசுமை விகடன் 10.7.2017 தேதியிட்ட இதழில், 72-ம் பக்கத்தில் ‘கடுகு மட்டுமல்ல... கத்திரி, மக்காச்சோளமும் நுழையும்!’ என்ற கட்டுரை இடம் பெற்றிருந்தது. அதில், ஆபத்தை விளைவிக்கும் களைக்கொல்லி கிளைஃபோசேட் (Glyphosate) என்பதற்குப் பதிலாக ‘கிளைக்கோசைடு’ என்று தவறாக இடம் பெற்றுவிட்டது.
பசுமை விகடன் 25.7.2017 தேதியிட்ட இதழில் ‘ஈஷா மையக் கட்டங்களுக்கு அவசர அனுமதி...’ என்ற கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் 14-ம் பக்கம் இடம்பெற்ற புகைப்படத்தில் ‘ஈஷா யோகா மையம் செல்லும்பாதை...’ என்பதற்குப் பதிலாக ‘சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்ட ஈஷா யோகா மையம்...’ எனவும், 16-ம் பக்கத்தில் இடம்பெற்ற புகைப்படத்தில் ‘ஆதியோகி சிலைக்குச் செல்லும் நடை பாதை...’ என்பதற்குப் பதிலாக ‘ஈஷா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விமான இறங்கு தளம்’ எனவும் தவறான புகைப்பட விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றுவிட்டன.
தவறான தகவல்கள் இடம் பெற்றமைக்கு வருந்துகிறோம்.
-ஆசிரியர்
மீன் வளர்ப்புக்கு தொலைநிலைக் கல்வி!
தூத்துக்குடி, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொலைநெறிக் கல்வித் திட்டத்தின்கீழ் வண்ண மீன் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கான சான்றிதழ் பாடங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துத் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகக் கல்விக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தொலைநிலை அஞ்சல் வழிச் சான்றிதழ் பயிற்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. வண்ணமீன் வளர்ப்புத் தொழில் நுட்பங்கள், நன்னீர் மீன் வளர்ப்புத் தொழில் நுட்பங்கள், இறால் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் போன்ற பயிற்சிகள் 750 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. மதிப்புக் கூட்டிய மீன் உணவுகள் தயாரித்தல் மற்றும் தரக்கட்டுப்பாடு போன்ற பயிற்சி 1,000 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: இயக்குநர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகக் கல்விக்கழகம்,
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வணிக வளாகம், 2-வது தளம், அசோக் நகர், சென்னை-600 083. தொலைபேசி: 044 24740748.