
மாத்தி யோசிஓவியம்: ஹரன்
ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம்.... சென்னை, திருவான்மியூர்ல அடுக்குமாடி குடியிருப்புல வசிக்குற, காந்தியவாதி நண்பரைச் சந்திக்க அண்மையில் போயிருந்தேன். அப்போ அடுக்குமாடி வீடுகள்ல இருந்து டி.வி ஓடுற சத்தம் கேட்டது. எல்லா வீடுகள்லயும் தனியார் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத்தான் பார்க்கிறாங்கன்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. நல்ல காலம், அந்தக் காந்திய நண்பர் வீட்டுல டி.வி ஓடல. சில விசாரிப்புக்குப் பிறகு எங்களோட பேச்சு ‘பிக்பாஸ்’ பக்கம் திரும்புச்சு. பிக்பாஸ் பத்திக் கொஞ்சம் சுருக்கமா முன்னுரை கொடுத்தேன். உடனே அவர்,

‘கம்யூன் (Commune)னு சொல்லற கூட்டு வாழ்க்கை முறையை வெற்றிகரமா செயல்படுத்திக் காட்டினதுல, மகாத்மா காந்தி முன்னோடினு சொல்றது சரியா இருக்கும். தென் ஆப்பிரிக்காவுல இருக்கும்போதே கம்யூன் வாழ்க்கை முறையைப் பரிசோதிச்சுப் பார்த்திருக்காரு. அதுக்கு விதையா இருந்தது ஒரு குட்டிப் புத்தகம்னா ஆச்சர்யமாத்தான் இருக்கும். அதைப்பத்தி சத்திய சோதனையில காந்தி இப்படி எழுதியிருக்காரு’னு சொல்லிட்டுச் சத்தியசோதனையை எடுத்து, அந்தத் தகவலுள்ள அத்தியாயத்தை என்னைச் சத்தமா படிக்கச் சொன்னாரு.
‘நண்பர் ஸ்ரீபோலக் என்னை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். பிரயாணத்தின்போது படிக்க எனக்கு ஒரு புத்தகம் கொடுத்துவிட்டுப் போனார். அது எனக்குப் பிடித்த புத்தகமாக இருக்கும் என்றும் சொன்னார். ரஸ்கின் எழுதிய ‘கடையனுக்கும் கதிமோட்சம்’ (Unto This Last) என்ற நூலே அது. இந்த நூலைப் படிக்க ஆரம்பித்த பின் இடையில் கீழே வைக்க முடியவில்லை. அது என் உள்ளம் முழுவதையும் கவர்ந்துவிட்டது. ஜோகன்னஸ்பர்க்குக்கும் டர்பனுக்கும் இருபத்துநான்கு மணிநேரப் பிரயாணம். அங்கே மாலையில் போய்ச் சேர்ந்தது ரெயில். அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அந்நூலில்கண்ட லட்சியங்களுக்கு ஏற்ற வகையில் என் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு விடுவது என்று தீர்மானித்தேன்.
கடையனுக்கும் கதி மோட்சம் நூல், என் வாழ்க்கையில் நடைமுறையான மாற்றங்களை உடனே உண்டாக்கியது. இந்த நூல் பின்வருபவற்றைப் போதிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது:
1. எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.
2. தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்வதற்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான உரிமை இருப்பதால், க்ஷவரத் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புதான் வழக்கறிஞர் வேலைக்கும் உண்டு.
3. நிலத்தில் உழுது பாடுபடும் விவசாயியின் வாழ்க்கையும் கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே இவ்வுலகத்தில் வாழ்வதற்குகந்த மேன்மையான வாழ்க்கை.
இவற்றில் முதலில் கூறப்பட்டதை நான் அறிவேன். இரண்டாவதாகக் கூறப்பட்டிருந்ததை அரைகுறையாகவே அறிந்து கொண்டிருந்தேன். மூன்றாவதாகக் கூறப்பட்டதோ என் புத்தியில் தோன்றவே இல்லை. இரண்டாவதும் மூன்றாவதும், முதலாவதாகக் கூறப்பட்டிருப்பதிலேயே அடங்கியிருக்கின்றன என்பதை இந்நூல் எனக்கு வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியது. பொழுது புலர்ந்ததும் நான் எழுந்து, இந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவரத் தயாரானேன்’ ஒரே மூச்சுல வாசிச்சு முடிச்சேன்.
நண்பர் மேலும் தகவலைச் சொல்லத் தொடங்கினாரு... ‘இந்தச் சம்பவத்துக்குப் பிறகு டால்ஸ்டாய் போன்ற அறிஞர்களின் சிந்தனைகளும் காந்தியை வேகமா செயல்பட வெச்சிருக்கு. 1910ம் ஆண்டு டர்பன் நகரத்துல இருந்து 14 மைல் தொலைவுல 100 ஏக்கர் பரப்புல ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்ற பெயர்ல ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனச் சுமார் 20 பேர் அடங்கிய கூட்டு வாழ்க்கை முறையைச் செயல்படுத்தினாரு. இதுல தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும் அடக்கம். பண்ணையில இருந்த குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிற வேலைகளையும் காந்தியே செஞ்சாரு. தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கவும் முயற்சி செய்திருக்காரு.
தென்னாப்பிரிக்காவுல இருந்து வெளிவந்த ‘இந்தியன் ஒபினியன்’ இதழுக்கு அச்சகம் நிறுவி, பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டாரு. இந்த அச்சு இயந்திரத்தைச் சுத்தும் வேலைகளைக் காந்தியும் பண்ணையில இருந்த குழந்தைகளும் சேர்ந்து செய்திருக்காங்க. சமையல் தொடங்கிக் கழிவறையைச் சுத்தம் செய்வதுவரை பண்ணையில இருந்தவங்க தங்களுக்குள்ளேயே வேலைகளப் பிரிச்சு செய்துகிட்டாங்க. காந்தி, பண்ணையில இருந்தவங்களுக்கு வழிகாட்டியா மட்டும் இருக்கல. அவர்களோடு சேர்ந்து அனைத்து வேலைகளையும் செய்திருக்காரு. பிக்பாஸ்னா கட்டளை பிறப்பிக்கிறது மட்டும் கிடையாது. வேலையும் செய்யணும். அந்தவகையில கழிவறையைக்கூட சுத்தம் செய்து வாழ்ந்து காட்டினாரு நம்ம காந்தி.
காந்திக்குப் பின்னாடி வந்த ஓஷோகூட கூட்டு வாழ்க்கை முறையைச் செயல்படுத்திப் பார்த்தாரு. நம்ம நாட்டுல உள்ள ஆன்மிக ஆசிரமத்துத் தலைவர்கள்கூட ஒரு வகையில பிக்பாஸ்தான். இந்தக் காலத்துல கூட்டு வாழ்க்கை, கூட்டுக்குடும்பம்ங்கிறதைப் பார்ப்பதே அரிதா இருக்கு. மனுஷங்க தங்களுக்குக் கிடைக்காத ஒரு விஷயத்தை டி.வியில பார்த்து திருப்திபட்டுக்கிறாங்க’னு சொல்லி அந்தக் காந்திய நண்பர் ஆச்சர்யமூட்டினாரு.