
ஓவியம்: ஹரன்
தண்ணீரில் தவிடு, பிண்ணாக்கு கலந்து கறவை மாட்டைக் குடிக்க வைத்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். மாட்டுக் கொட்டகைக்கு அருகில் இருந்த கட்டிலில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி அமர்ந்திருக்க... அவர்களைத் தேடி அங்கேயே வந்து விட்டார் ‘காய்கறி’ கண்ணம்மா. ஏரோட்டி வேலைகளை முடித்து விட்டு வந்ததும், அங்கேயே அன்றைய மாநாடு கூடியது.

ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் ஏரோட்டி.
“குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள்ல வெல்ல உற்பத்தி குறைஞ்சுட்டதால தமிழ்நாட்டு வெல்லத்துக்குக் கிராக்கியாகிடுச்சு. இப்போ வட மாநிலங்கள்ல வெல்லத்துக்குத் தேவை அதிகரிச்சுருக்குறதால தமிழ்நாட்டுல இருந்துதான் அதிக அளவு வெல்லம் போய்க்கிட்டுருக்கு. அதனால இங்க இருக்குற மார்கெட்கள்ல வெல்லத்துக்குத் தட்டுப்பாடா இருக்குதாம். சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டைச் சந்தை, நாமக்கல் மாவட்டம் பீலிக்கல்பாளையம் சந்தை, ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி சந்தை ஆகியவைதான் இங்க முக்கியமான சந்தைகள். இங்கிருந்து வழக்கமா வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுற வெல்லத்தோட அளவு இரண்டு மடங்கா அதிகரிச்சுருக்காம். அதனால இந்த மார்கெட்கள்ல வெல்லத்தோட விலையும் அதிகரிச்சுட்டே இருக்குதாம்” என்றார் ஏரோட்டி.
“தமிழ்நாட்டுலயும் வறட்சியால கரும்பு உற்பத்தி குறைஞ்சுதான இருக்கு. வெல்லத்தோட தட்டுப்பாட்டுக்கு அதுவும் காரணமா இருக்கும்” என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த மோர் கலந்த கேழ்வரகுக் கூழை டம்ளர்களில் ஊற்றி இருவருக்கும் கொடுத்தார்.
தொட்டுக்கொள்ளச் சுண்டைக்காய், கொத்தவரங்காய் வற்றல்களையும் கூடையில் இருந்து எடுத்துக் கொடுத்த காய்கறி, “ நம்ம ஊர்ல சர்க்கரை நோய் இருக்குறவங்ககிட்ட ‘தினமும் சப்பாத்தி சாப்பிடுங்க’னு டாக்டர்கள் சொல்றாங்க. அதே மாதிரி குண்டா இருக்குறவங்களும் சப்பாத்தி சாப்பிட்டா இளைச்சுடுவோம்னு நினைச்சுத் தினமும் சப்பாத்தி சாப்பிட்டுட்டு இருக்காங்க. ஆனா, இது தவறான பிரசாரம்னு பாரம்பர்ய மருத்துவர்கள் சொல்றாங்க. சப்பாத்தி வட மாநிலத்துக்காரங்களுக்கான உணவு. நாம அதைச் சாப்பிட்டா உடல்ல சூடு அதிகரிக்கும். குடல் கெட்டுப்போய்ச் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், மூல நோயெல்லாம் வர வாய்ப்பிருக்காம். அதுக்கான மாற்று கேப்பைதானாம். தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கான உணவு கேப்பைதான். இதுல இரும்புச்சத்து, கால்சியம் சத்து, பாஸ்பரஸ் சத்து எல்லாம் அதிகளவு இருக்குதாம். குறிப்பா, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு இதுதானாம். தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்குக்கூட கேப்பையை அவிச்சு பிழிஞ்சு பால் எடுத்துக் கொடுக்கலாம். இதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பர்ய மருத்துவர்கள் சொன்ன விஷயங்கள்தான்” என்று கடகடவெனக் கேழ்வரகு புராணம் ஒப்பித்தார்.
அதைத் தலையாட்டி ஆமோதித்த வாத்தியார் கூழைக் குடித்துக்கொண்டே ஒரு செய்தியை ஆரம்பித்தார்.
“சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர்ல இருக்குற அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டர் பணியிடம் காலியா இருக்குறதால, ஆஸ்பத்திரி ரொம்ப காலமா முடங்கிக் கிடக்கு. கோழிகள், ஆடுகள், மாடுகள், நாய்கள்னு எந்தப் பிராணிக்குமே தடுப்பூசிகூட இங்க போடறதில்லையாம். எப்போ போனாலும் மருந்து இல்லைனு திரும்ப அனுப்பி விடுறாங்களாம். கிட்டத்தட்ட ஆறுமாசமா இப்படி இருக்கறதால, காலநடை வளர்க்குறவங்க தனியார் மருத்துவமனையில் தான் அதிக விலை கொடுத்துத் தடுப்பூசி போட வேண்டியிருக்குதாம். சுற்று வட்டாரப்பகுதிகள்ல கிட்டத்தட்ட 25 ஆயிரம் கால்நடைகள் இருக்குதாம்.
இந்த ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டரோட நவீன வசதிகள் எல்லாம் இருந்தும் நிர்வாகக் குறைபாடால முடங்கிக் கிடக்குதாம். டாக்டர் பணியிடம் காலியா இருக்குறதால, இன்சார்ஜா போட்ட டாக்டரும் இங்க வர்றதே இல்லையாம். டாக்டர் மட்டுமில்லாம மத்த பணியிடங்களும் காலியாத்தான் இருக்காம். மொத்தம் அஞ்சு பேர் வேலை செய்ய வேண்டிய இடத்துல ரெண்டு பேர்தான் பணியில் இருக்காங்களாம். அதனால இந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் லீவு போட்டாலும் ஆஸ்பத்திரியை மூடிட்டுப் போயிருவாங்களாம். இந்த ஆஸ்பத்திரியில் எந்த மருந்துமே இல்லையாம். முதலுதவி கூடச் செய்றதில்லையாம். இதைப்பத்தி விவசாயிகள் கால்நடைத்துறையில் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லையாம்” என்றார் வாத்தியார்.
“தமிழ்நாட்டு அரசாங்கமே ஸ்தம்பிச்சுப் போய்த்தான கிடக்குது. ஒரு வேலையும் உருப்படியா நடக்க மாட்டேங்குது. அவங்க கட்சிப் பிரச்னையே அவங்களுக்குத் தலைவலியா இருக்குறப்போ மக்கள் பிரச்னையை எங்க பார்க்கப் போறாங்க” என்ற ஏரோட்டி அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.
“உடுமலைப்பேட்டை பகுதிக்கான வட்டார வேளாண் விரிவாக்க மையம், ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துல செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இந்த அலுவலகம் இடிஞ்சு விழுற மாதிரி நிலையில் இருந்தது. அதில்லாம விரிவாக்க மையம் ஓர் இடத்துலயும், வேளாண் பொறியியல் துறை அலுவலகம் இன்னோர் இடத்துலயும் இருந்ததால விவசாயிகளுக்கு அலைச்சல் அதிகமா இருந்தது. அதனால எல்லா அலுவலகங்களையும் ஒரே இடத்துல கட்ட முடிவு செஞ்சு ஒன்றரைக் கோடி ரூபாய்ல புதுக் கட்டடம் கட்டி அதை முதல்வர் காணொளி மூலமா திறந்தும் வெச்சுட்டார். ஆனா, பணிகளை முடிக்காம அவசர கதியில திறந்துட்டதால இன்னமும் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வராம இருக்கு. இது வரைக்கும் கட்டடத்துக்கு மின் இணைப்பு கூடக் கொடுக்கலையாம்” என்றார்.
“விண்ணப்பிச்சா ஒரே நாள்ல மின் இணைப்பு கொடுப்போம்னு அமைச்சர் சட்டசபையில் சொன்னார். ஆனா, அரசு கட்டடத்துக்கே மின் இணைப்பு கொடுக்க முடியலையா” என்று காய்கறி நக்கலாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சடசடவெனத் தூறல் விழ, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
ஏரோட்டி சொன்ன கொசுறு:
மாநிலத் தீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்
கால்நடைகளுக்குப் பசுந்தீவன உற்பத்திக்காகத் தமிழ்நாட்டில் தீவன அபிவிருத்தித் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இறவைப் பாசன விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் கால் ஏக்கர் பரப்பில் கம்பு மற்றும் நேப்பியர் ஒட்டுப்புல் சாகுபடி செய்ய இரண்டாயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது. மேலும், தீவனச் சோளம், தட்டைப் பயறு ஆகியவற்றைச் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு விதைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் முதல் இலவச ஆடு, மாடுகள் வழங்கும் பணி துவங்க இருப்பதால், அந்தப் பயனாளிகளுக்குத் தீவனப்பயிர் மேம்பாட்டுத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. தீவனப்பயிர்ச் சாகுபடிக்குச் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க ஒரு ஏக்கர் நிலத்துக்கு 18,750 ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது. இம்மானியங்கள் பெற விரும்புவோர், அருகிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை அணுகினால் விவரங்கள் கிடைக்கும்
வாத்தியார் சொன்ன கொசுறு:
புதிய கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரியில் ‘பண்ணை அமைத்தல் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை’ தொடர்பான பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், “கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் நான்கு படிப்புகளில் ஒவ்வொரு படிப்புக்கும் 20 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மொத்தம் 80 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் புதிய கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரி துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் புதிய கல்லூரி துவங்கப்படும்” என்றார்.