மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!

மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

‘‘பட்டு வேட்டி, பட்டுப் புடவை எடுக்கக் காஞ்சிபுரம் வரையிலும் காரில் போறோம். நீங்களும் வர்றீங்களா..?’’னு நண்பர் அழைப்பு விடுத்தாரு. அவரோட வண்டியிலேயே புறப்பட்டுப் போனேன். கொஞ்ச நேரத்துல எங்களோட பேச்சு பட்டு சம்பந்தமான வரலாற்றுப் பக்கம் திரும்புச்சு.   

மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!

எனக்குத் தெரிஞ்ச பட்டு பத்தின தகவல்களைச் சொல்ல ஆரம்பிச்சேன். அதை உங்களோடவும் பகிர்ந்துக்கிறேன்.

சீனா தேசத்துல கி.மு. 2696-ம் வருஷம் ஹூவாங்டி மன்னரின் மனைவி லெய்ஸூ அரண்மனைத் தோட்டத்தில உட்கார்ந்து தேநீர் குடிச்சுக்கிட்டிருந்திருக்காங்க. அப்போ மல்பெரி மரத்திலிருந்து ஒரு கூடு தேநீர் குவளைக்குள்ள தவறுதலா விழுந்திருக்கு. அதை எடுத்துப் பார்த்த அரசிக்கு ஆச்சர்யம் தாங்கல. கூட்டிலிருந்து நீளமான, மென்மையான, உறுதியான நூல் வந்திருக்கு. கொஞ்சம் யோசித்துப் பார்த்தப்போ பட்டுப் பூச்சியில் இருந்துதான் பட்டு நூல் வந்திருக்குனு அரசி தெரிஞ்சுக்கிட்டாங்க. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் பட்டு பிரபலமாச்சுனு ஒரு கதை சீனாவுல உலா வருது.

தரமான பட்டு நூலைத் தயாரிக்கச் சீனாக்காரங்க பல வழிமுறைகளைக் கையாண்டிருக்காங்க. ஒரு பட்டுப் பூச்சி 500 முட்டைகள் வரை இட்ட பிறகு செத்துடும். முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் ஒரு மாதம் வரை மல்பெரி இலைகளைத் தின்னு, நல்லா வளரும். பிறகு தன்னைச் சுற்றி 3 நாள்கள்ல ஒரு கூட்டை உருவாக்கும். அந்தக் கூட்டுப்புழுக்களைக் கொதிக்கும் நீரில் போட்டால் புழு செத்துடும். அந்தக் கூட்டை எடுத்துச் சுத்தம் செய்தா, மென்மையான நூல் கிடைக்கும். அந்த நூலை நூற்றால், பட்டுத் துணியை நெய்ய முடியும். இந்தத் தகவல் இப்போ உலகம் முழுக்கத் தெரியும்.

ஆனா, ஆரம்பகாலத்துல பட்டுப்புழு வளர்ப்பையும் பட்டுத் துணி நெய்யறதையும் சீனா நாட்டுக்குள்ளேயே ரகசியமா வெச்சிருந்தாங்க. அரண்மனையோட அந்தப்புறத்துல உள்ள பெண்களுக்கு மட்டும் பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுத் துணி நெய்யும் வேலையில ஈடுபட்டிருக்காங்க. உலகம் முழுக்கச் சீனாவுல இருந்து போகும் பட்டுக்கு ஏக கிராக்கி இருந்திருக்கு. பட்டு ரகசியத்தை வெளியில சொன்னா, மரணதண்டனை விதிக்கும் அளவுக்குச் சட்டம் போட்டு வெச்சிருந்தாங்களாம்.

இந்தப் பட்டு ரகசியத்தைத் தெரிஞ்சுக்க ரோமானிய அரசர், சீன இளவரசியைக் கல்யாணம் செய்துகிட்டாரு. அந்த ரோமானிய அரசர், சீனாக்காரனுங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு, பட்டுப்புழுவையும் பட்டுக்கூட்டையும் தன்னோட நாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயிருக்காரு. ஆனாலும், அந்த மன்னருக்குப் பட்டு வளர்ப்பு முறையை முழுமையா தெரிஞ்சுக்க முடியல. கடைசியில ஜப்பான் நாட்டுக்காரங்க ஒரு திட்டம் போட்டாங்க. அதாவது, பட்டுப் புழுவை வளர்க்கத் தெரிஞ்ச 4 சீனப் பெண்களைக் கடத்திக்கிட்டுப்போய்க் கல்யாணம் செய்துகிட்டாங்களாம். இந்தப் பெண்கள்தான் பட்டுப்புழு வளர்ப்பை, ஜப்பான்காரங்களுக்குக் கத்துக் கொடுத்திருக்காங்க. ஜப்பான் நாட்டுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா... இந்தியா உட்பட உலகம் முழுக்கப் பட்டுபுழு வளர்ப்பு போய்ச் சேர்ந்திருக்கு.

இப்போ வரையிலும்கூட பட்டுப்புழு வளர்ப்புல சீனாதான் முன்னணியில நிக்குது. மல்பெரி இலையைத் தீவனமா கொடுத்து, பட்டுப்புழு வளர்க்குற முறைதான் உலகம் முழுக்க 90% இருக்கு. ஆனா, மல்பெரியைத் தவிர, ஆமணக்கு இலைகள் மூலமும் பட்டுப்புழு வளர்க்குற நுட்பம், அசாம் மாநிலத்துல இருக்கு. இந்தப் பட்டுக்கு ‘எரி பட்டு’னு பேரு. மல்பெரி பட்டைவிட, கொஞ்சம் தரம் குறைவா இருந்தாலும் ஆமணக்குப் பட்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கு.

மத்த உடைகளைக் காட்டிலும், பட்டு ஆடைகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறோம்னு நினைக்கலாம். பட்டு ஆடைகளை உடுத்தும்போது, உடலுக்கு உற்சாகம் கொடுக்குதுன்னு அறிவியல்பூர்வமா கண்டுபிடிச்சிருக்காங்க. பள்ளிப் பாடப்புத்தகம் தொடங்கி யூடியூப் வரையிலும்கூட பட்டுத் துணியில சீப்பைத் தேய்ச்சிப் பார்க்கும்போது மின்னோட்டம் இருக்கிறதை தெரிஞ்சுக்கலாம்ங்கிற செய்தி இருக்கு.

இந்தியளவுல கர்நாடகா மாநிலம் பட்டுப்புழு வளர்ப்புல வேகமா செயல்படுது. விவசாயத்தோடு ஆடு, மாடுகளையும் வளர்க்குற மாதிரி, கர்நாடக விவசாயிங்க பட்டுப்புழு வளர்ப்பையும், விவசாயத்தோடு சேர்த்து செஞ்சு, கூடுதல் லாபம் எடுக்கிறாங்கனு நான் சொல்லி முடிக்கும்போது எங்களோட வண்டி காஞ்சிபுரத்தை நெருங்கிடுச்சு.