மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா?”

நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா?”
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா?”

புறா பாண்டி

‘‘பாரம்பர்ய விதைநெல்லைச் சேமித்துப் பயன்படுத்தவுள்ளோம். எவ்வளவு ஈரப்பதம் இருக்க வேண்டும். அதை எப்படிக் கண்டுபிடிப்பது?’’

கே.புவனேஸ்வரி, திருவாரூர்.   

நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா?”

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி முனைவர் தேவநாதன் பதில் சொல்கிறார்.

‘‘விதைக்காக நெல்லைச் சேமிக்கும்போது, அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியமாகும். இதன் அளவு கூடினாலும் குறைந்தாலும் விதையின் முளைப்புத்தன்மை பாதிக்கப்படும். ஆகையால், விதையைச் சேமிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது விஞ்ஞான வளர்ச்சியால் மின்னணுக் கருவிமூலம் ஈரப்பதத்தை எளிதாக அறிந்துவிட முடிகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர் எந்தக் கருவியும் இல்லாமல் ஈரப்பதத்தை அறிந்து செயல்பட்டதைப் பாராட்டத்தான் வேண்டும். இப்போதும்கூட அந்த நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.

நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா?”



விதைநெல்லைச் சூரியஒளியில் உலர்த்துவதில்தான் நுட்பம் அடங்கியுள்ளது. நமக்கு வசதியான நேரத்தில் விதை நெல்லைக் காய வைக்கக்கூடாது. அதற்கென்று குறிப்பட்ட நேரம் உண்டு.

இதன்படி காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் களத்தில் கொட்டி, மூன்று நாள்களுக்கு உலர்த்த வேண்டும். நெல்லைக் கால்களால் தள்ளியபடி உலர்த்தும்போது, சலசலவென்று சத்தம் கேட்கும். நெல்லைக் அள்ளிக் கைகளில் வைத்துத் திருகிப் பார்த்தால் எளிதாகத் தோல் உரியும். இந்த அரிசியை வாயில் எடுத்துக் கடித்தால், ‘கடுக்’கென்று சத்தம் கேட்கும். இந்த அறிகுறிகளை வைத்து, நெல் 12% ஈரப்பதத்துடன் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். இந்தளவு ஈரப்பதம் இருந்தால் விதையின் முளைப்புத்திறன் 80% அளவுக்கு இருக்கும்.

நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா?”

சிலசமயம், தொடர் மழையின் காரணமாக, விதைநெல்லின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும். எனவே, அந்தச் சமயத்தில் நன்றாகச் சூரிய ஒளி அடிக்கத் தொடங்கியவுடன், ஏற்கெனவே சொன்னதுபோல காலை அல்லது மாலை நேரத்தில் உலர்த்த வேண்டும். சேமிக்கும்போது, வேப்பிலை, வசம்புத்தூள் (ஒரு கிலோ விதைக்கு 5 கிராம்) ஆகியவற்றைப் பயன்படுத்தினால், பூச்சிகள் தாக்காது. விதைநெல் மூட்டைகளை நேரடியாகத் தரையில் வைத்தால், பூமியின் ஈரப்பதம் விதைகளில் பரவ வாய்ப்பு உண்டு. பலகை, கற்கள் ஆகியவற்றின் மீதுதான் விதை மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். உலர்த்திச் சேமிக்கப்பட்ட விதையை, அதிகபட்சம் 12 மாதங்களுக்குள் விதைத்து விட வேண்டும். காலம் கடந்தால் முளைப்புத்திறன் குறையும். இது பாரம்பர்ய விதைகளுக்கும் பொருந்தும்.’’

‘‘மீன் குளத்தின்மீது கோழிக்கூண்டு அமைத்துக் கோழி வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இது சம்பந்தமாகக் கூடுதல் தகவல் சொல்லுங்கள்?’’


எம்.சிவராஜன், ஒரத்தநாடு.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மீன் வளர்ப்பு ஆராய்ச்சியாளர் முனைவர் ஜெ.செல்வநாதன் பதில் சொல்கிறார்.

‘‘நிச்சயமாக வளர்க்கலாம். இதை ஒருங்கிணைந்த பண்ணை எனச் சொல்வோம். மீன் குளத்தின்மீது கோழிக்கூண்டு அமைத்து, அதில் இறைச்சிக்கான கோழிகளை வளர்க்கலாம். இதன் மூலம் பலவிதமான நன்மைகள் உண்டு. கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனத்தை, கோழிகள் முழுமையாக உண்ணாது. இப்படி கழிக்கப்பட்ட தீவனத்தை மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம். கோழிப்பண்ணைகளில், கோழிகளின் கழிவை அகற்றுவது பெரிய வேலையாக இருக்கும். ஆனால், இந்த முறையின் மூலம் கோழியின் கழிவு நேராகக் குளத்தில் விழும். அது மீன்களுக்கு உணவாக அமையும். கழிக்கப்பட்ட உணவுகளும், கோழிக்கழிவுகளும் குளத்திற்குள் விழுவதன் மூலம், பாசிகள் நுண்ணுயிர்கள் உருவாகும். இவையும் மீன்களுக்குச் சிறந்த உணவாக அமையும். மீன் குளத்தில், திலேப்பியா இன மீன்களை வளர்க்கலாம். மீன் குஞ்சுகளைப் பிடித்து, கோழிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.

இதுதவிர ஒருநாள் முதல் 8 வாரம் வரையிலான கோழிக் குஞ்சுகளுக்குத் தினமும் 10 கிராம் என்ற அளவில் முதலில் மக்காச்சோளம் உள்ளிட்ட கலப்புத்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 8-ம் வார முடிவில் தினமும் 50 கிராம் என்ற அளவில், தினசரி தீவனத்தை அதிகரித்துக் கொடுத்து வர வேண்டும். இறைச்சி இனக்கோழிகள் ஒவ்வொன்றும் எட்டு வாரத்திலேயே (வயதிலேயே) ஒன்றரை கிலோ அளவு, எடை பெறுவதை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.   

நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா?”

பொதுவாக வெள்ளை லெக்கான் 500 கிராம் எடைக்கு மேல் வளர்வதில்லை. எனவே, இறைச்சிக்கான கோழிகள், வெள்ளை லெக்கான் கோழிகளைவிட 3 மடங்கு அதிக வளர்ச்சியைக் அடையும் தன்மை கொண்டுள்ளது. வழக்கமாக மிக வேகமாக வளரும் மீன்கள்கூட, ஒன்றரை கிலோ வரை எடையை அடைய பொதுவாக 6 மாதம் முதல் 12 மாதம் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், நல்ல தரமான 2 கிலோ தீவனத்தை இறைச்சிக் கோழி உட்கொண்டால், அதன் எடை ஒரு கிலோ என்ற அளவில் பெருகும். இந்த அளவு வளர்ச்சிப்பெற, கோழியின் முதல் 5 வாரம் மற்றும் வளர்ச்சியுள்ள காலமான 6-8 வாரம் தீவனம் கொடுப்பதில், அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மீன்களுடன் கோழி வளர்க்கும்போது, மீன்களுக்கு எனத் தனியாகத் தீவனச் செலவு செய்ய வேண்டியதில்லை. இதன் மூலம் மீன் வளர்ப்பில் செலவில்லாமல், லாபம் எடுக்க முடியும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94451 25178.

‘‘மானாவாரியில் ஆமணக்குச் சாகுபடி செய்யவுள்ளோம். ஆமணக்கு விதை எங்கு கிடைக்கும்?’’

கே.பக்கிரிசாமி, சிவகங்கை.

‘‘சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு மானாவாரி மற்றும் இறவையில் மகசூல் கொடுக்கும் ஆமணக்கு ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விதை இருப்புக்குத் தக்கபடி விவசாயிகளுக்குக் கொடுத்து வருகின்றனர்.’’

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம்-631 119. தொலைபேசி: 04282 293526.

நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா?”

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.