
ஓவியம்: ஹரன்
லேசாக மழை தூறிக்கொண்டே இருந்ததால் சீக்கிரமே வியாபாரத்தை முடித்துவிட்டுத் தோட்டத்துக்கு வந்துவிட்டார் ‘காய்கறி’ கண்ணம்மா. ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் வைத்துவிட்டுக் காய்கறியுடன் பேசிக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். சற்று நேரத்தில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி வர, “என்ன வாத்தியாரே வெள்ளையும் சொள்ளையுமா வந்திருக்கீரு” என்று கேட்டார் ஏரோட்டி.

“போஸ்ட் ஆபீஸ்கள்ல சூரியசக்தி மின் விளக்குகளை விற்பனை பண்றதா சொன்னாங்க. அதான் ரெண்டு மின் விளக்குகள வாங்கலாம்னு டவுன்ல இருக்கிற போஸ்ட் ஆபீஸ் போனேன். அங்க இன்னும் விற்பனையை ஆரம்பிக்கலையாம்” என்றார் வாத்தியார்.
“உடனே என்னய்யா அவசரம்” என்று கேட்ட ஏரோட்டி, “நேத்துதான்யா (21.08.17) தமிழ்நாட்டுல விற்பனையையே ஆரம்பிச்சிருக்காங்க. ‘கிரீன் லைட் பிளானெட்’ங்கிற தனியார் நிறுவனமும் அஞ்சல்துறையும் இணைஞ்சு விற்பனை செய்றாங்க. இப்போதைக்கு 20 போஸ்ட் ஆபீஸ்லதான் கிடைக்கும். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா போஸ்ட் ஆபீஸ்லயும் கிடைக்குமாம். இப்போதைக்கு 499 ரூபாய், 1,199 ரூபாய், 1,899 ரூபாய்னு மூணு மாடல்ல விற்பனைக்கு வெச்சிருக்காங்களாம். இந்த மின் விளக்குகள், கரன்ட் கனெக்ஷன் இல்லாத தோட்டத்து வீடுகளுக்கு உபயோகப்படும். ஒருநாள் முழுக்க சார்ஜ் ஏறுனா 24 மணி நேரம் வரை லைட் எரியுமாம். செல்போன் சார்ஜ் பண்ணவும் வசதி இருக்குதாம்” என்றார்.
“பரவாயில்லையே. வீடுகளுக்குக்கூட உபயோகப்படுத்தலாம்போல” என்று சொன்ன காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு சப்போட்டா பழங்களை எடுத்துக்கொடுத்துவிட்டு, “இப்போதான் சப்போட்டா சீசன் ஆரம்பிச்சிருக்கு. சந்தைக்கு வரத்து அதிகமா இருக்கிறதால விலை மலிவாயிருக்கு. இந்தப்பழம் நிறம் மங்கி இருக்கிறதால இந்தக்காலக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுறதில்ல. இந்தப்பழத்துல கால்சியம் சத்தும் பாஸ்பரஸ் சத்தும் அதிகமா இருக்கு. அதனால, எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. ராத்திரி நேரத்துல சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும். அதில்லாம பித்தத்தையும் உடல்சூட்டையும் குறைக்கும். இதோட மகிமை தெரிஞ்சவங்கதான் இதை வாங்கிச் சாப்பிடுறாங்க” என்றார் காய்கறி.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்த வாத்தியார், “கொஞ்ச நாளாவே பால் மாடு வளர்ப்பாளர்களும், காளான் வளர்ப்பாளர்களும் வைக்கோல் கிடைக்காம ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குறாங்க. அந்தளவுக்குத் தட்டுப்பாடா இருக்கு. தேனி மாவட்டத்துல கோடையில் நடவு போட்ட நெல், இப்போ அறுவடை நடந்துட்டு இருக்கிறதால வைக்கோல் கிடைக்குதாம். முன்பெல்லாம் ஒரு ஏக்கர் வைக்கோலை ரெண்டாயிரம் ரூபாயிலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரைதான் விற்பனை செய்வாங்க. இப்போ வியாபாரிகளோட போட்டி அதிகமா இருக்கிறதால, ஒரு ஏக்கர் வைக்கோல் முப்பதாயிரம் ரூபாய் வரை விற்பனையாகுதாம். நெல் மூலமா கிடைக்கிற வருமானத்தைவிட அதிகமா வைக்கோல்மூலம் வருமானம் கிடைக்குதாம். இதனால, நெல் சாகுபடி செஞ்ச விவசாயிகளுக்குச் சந்தோஷம். அதே நேரத்துல மாடு வளர்க்குறவங்களுக்குத் திண்டாட்டம்தான்” என்றார்.
அடுத்த செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, “நீலகிரி மாவட்டத்துல மலைப்பகுதியில் காட்டை ஒட்டின விவசாய நிலங்கள் இருக்கு. குறிப்பா மசினகுடி, வாழைத்தோட்டம் பகுதிகள்ல செழிப்பா விவசாயம் நடக்குது. இந்தக் காடுகள்ல யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றினு நிறைய மிருகங்கள் இருக்குது. ராத்திரி நேரத்துல, இந்த மிருகங்கள் தோட்டத்துக்குள்ள புகுந்து பயிர்களைக் காலி பண்றது சகஜமாகிடுச்சு. என்னென்னவோ வழிமுறைகளைக் கையாண்டும் இதைத் தடுக்க முடியலை. இப்போ இந்தப் பகுதி மக்கள் புதுசா ஒரு முறையைக் கண்டுபிடிச்சிருக்காங்க. நிலத்தைச் சுத்தி கம்பி வேலி போட்டு, அதுல பிளாஸ்டிக் பாட்டில்களை மூடியில்லாமத் தொங்க விடுறாங்க. ராத்திரி நேரத்துல வீசுற காத்து, இந்தப் பாட்டில்களுக்குள்ள போறப்ப விசில் சத்தம் மாதிரி எழும்புதாம். அதனால, மிருகங்கள் வர்றதில்லையாம். இப்போ நிறைய விவசாயிகள் இந்த முறையைத்தான் கையாள்றாங்களாம்” என்றார்.
“விதைச்சு அறுவடை பண்ணிச் சந்தைக்குக் கொண்டுபோய்க் காசாக்குறதுக்குள்ள விவசாயிக என்ன பாடுபட வேண்டியிருக்கு பாரு” என்ற வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
“நமக்கெல்லாம் ஆதார் கார்டு கொடுத்த மாதிரி ஆடு மாடுகளுக்கும் அடையாள அட்டை கொடுக்கப் போறாங்களாம். இதுக்காக நாடு முழுவதும் இருக்கிற கால்நடைகளைக் கணக்கு எடுக்கச் சொல்லியிருக்குதாம் மத்திய அரசாங்கம். கால்நடை சிகிச்சை மையங்கள், மருந்தகங்களுக்குக் கால்நடைகளைக்கொண்டு போய்ப் பதியணுமாம். ஆதார் நம்பர் மாதிரி ஒவ்வொரு மாட்டுக்கும் 12 இலக்க நம்பர் கொடுத்து, காது மடல்ல தோடு மாதிரி மாட்டி விட்டுடுவாங்களாம். அதை அந்த மாடு இறக்கிற வரைக்கும் கழட்டக்கூடாதாம். இதுமூலமா நாட்டில் இருக்குற கால்நடைகள், அதுகளுக்கு வர்ற நோய்கள்னு சிகிச்சை முறைகளை ஒருங்கிணைக்கப் போறாங்களாம். கால்நடைத்துறை மூலமா கொடுக்கிற மானியங்களுக்கு இந்தப் பதிவு அவசியமாம்.
இப்போதைக்குத் தமிழ்நாட்டுல ஏழு மாவட்டங்கள்ல கணக்கெடுப்பு பணியை ஆரம்பிச்சிட்டாங்களாம். இதுல நாட்டு ரகங்களுக்குத் தனிக் கலர்ல அடையாள வில்லைப் பொருத்துவாங்களாம். ஆனா, இப்படி அடையாள அட்டை வாங்குறதுல விவசாயிகளுக்கு உடன்பாடு இல்லையாம். இப்படி வாங்கிட்டா விற்பனை செய்றதுல சிக்கல் இருக்குமோனு பயப்படுறாங்களாம்” என்றார் வாத்தியார்.
அந்த நேரத்தில் டிராக்டர் வரும் சத்தம் கேட்க... “உழுறதுக்கு டிராக்டரை வரச் சொல்லியிருந்தேன். வந்துட்டாங்கபோல” என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்து செல்ல, மாநாடு முடிவுக்கு வந்தது.
பூச்சிகள்... உஷார்!
“பருவமழை தாமதம், வறட்சி போன்ற காரணங்களால் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காயம், வாழை, தக்காளி போன்ற பயிர்களில் சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ மற்றும் மாவுப்பூச்சிகள் ஆகியவற்றின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன” என்று கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், “தோட்டக்கலைப் பயிர்களில் காணப்படும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு ஐந்து மஞ்சள் ஒட்டும் பொறி என்ற விகிதத்தில் வைக்க வேண்டும். பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருந்தால் 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்கலாம். ஒரு கிலோ மீன் எண்ணெய் சோப்பை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
அதேபோல மிளகாயில் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் அமைக்க வேண்டும்.
வெண்டையில் மஞ்சள் தேமல் நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு 12 மஞ்சள் ஒட்டும் பொறிகள் என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும்” என்று பல்கலைக்கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பயிர்களைத் தாக்கும் நோய்கள் குறித்த விளக்கங்கள்பெற, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையம், பூச்சியியல்துறை, பயிர் நோயியல்துறை ஆகியவற்றை அணுகலாம்.
தொலைபேசி எண்கள்: பயிர் பாதுகாப்பு மையம்: 0422 6611237
பூச்சியியல் துறை: 0422 6611414
பயிர் நோயியல் துறை: 0422 6611226.