மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!

மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

லேசா மழை தூறியபடியே இருந்துச்சு. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்குச் செல்லும் விரைவுப் பயணிகள் ரயில் புறப்படத் தயாரா இருந்தது. மழையில் நனைஞ்சபடியே ஒரு பெரியவர் வண்டியில் ஏறி, என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாரு. ‘பயணிகளின் கனிவான கவனத்துக்கு, செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் வண்டி புறப்படத் தயாராக உள்ளது’னு அறிவிப்பு சொல்லி முடிக்கிறதுக்குள்ள, ‘‘செங்கல்பட்டு, செங்கல்பட்டு... இந்த வார்த்தையைக் கேட்கும்போது, காதுல ஈயத்தைக் காய்ச்சு ஊத்தினதுபோல இருக்குங்கய்யா..’’ பக்கத்தில் உட்கார்ந்த பெரியவர்தான் இப்படிப் பேச்சை ஆரம்பிச்சாரு.    

மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!

ரயில் மெதுவா சென்னையை நோக்கி வேகமாக புறப்பட்டுச்சி... ‘‘அதோ, அங்க பாருங்கய்யா... அதுதான் செங்கழுநீர் மலர்...’’னு சொல்லிட்டு, செங்கல்பட்டு கதையைச் சொல்லத் தொடங்கினாரு.

‘‘இந்தப் பகுதியில உள்ள குளம், குட்டை, கால்வாய், ஏரினு நீர்நிலைங்க முழுக்கச் செங்கழுநீர் மலர், நிறைய பூத்துக் கிடந்திருக்கு. அதனாலதான், இந்த ஊருக்குச் செங்கழுநீர்ப்பட்டுன்னு பெயர் வந்திருக்கு.  காலப்போக்குல அந்தப் பெயர் மாறி, செங்கல்பட்டுன்னு நிக்குது. இதுல என்ன வேடிக்கைன்னா செங்கல் செய்யுற தொழில், இந்தப் பகுதியில நல்லா நடக்குறதால, இந்த ஊருக்குச் செங்கல்பட்டுனு பெயர் வந்துச்சுன்னும் வரலாறு தெரியாதவங்க சொல்லிக்கிட்டிருக்காங்க. ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம்னு  பெயருள்ள மலர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததுன்னு தாவரவியல் அறிஞர்கள் குறிப்பிட்டிருக்காங்க. செங்கழுநீர் மலர்ல மருத்துவக் குணம் உண்டுன்னும் சொல்றாங்க.

இந்த நகரோட ஒருபுறம் கொளவாய் ஏரியும், மறுபுறம் பாலாறும் ஓடுது. செங்கல்பட்டின் இருபுறமும் மலைகளால் சூழப்பட்ட பசுமையான நகரம். இந்த நகரைத் திம்மராஜாங்கிற அரசர் ஆட்சி செய்யும்போது, தினமும் கோட்டையில் ஏறி, காஞ்சிபுரம் வரதராஜர் கோயில்ல ஏத்துற தீபத்தைப் பார்த்து வணங்குறது வழக்கமாம். அப்படின்னா, கோட்டை எவ்வளவு உயரமா இருந்திருக்கும்னு கற்பனைசெய்து பாருங்க. அந்த மன்னருக்கு வயது முதிர்வு வந்திருக்கு. இதனால, கோட்டைமேல ஏறிக் காஞ்சிபுரத்தைப் பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கு. அந்தக் குறையைப் போக்க, செங்கல்பட்டு நகரத்துலயும், காஞ்சிபுரத்துல உள்ளதுபோல, ஏகாம்பரநாதர் கோயில், ராமர் கோயில், கோட்டை வாய் ஆஞ்சநேயர் கோயில்னு கட்டி வழிபட்டு வந்திருக்காரு.

மன்னர் ஆட்சி மறைஞ்சி, ஆங்கிலேயர் கைக்குச் செங்கல்பட்டு போயிருக்கு. பாண்டிச்சேரியில இருந்த பிரெஞ்சுக்காரங்களுக்குச் செங்கல்பட்டுமேல ஒரு கண்ணு இருந்திருக்கு. சமயம் பார்த்து அடிச்சு, ஆங்கிலேயரை ஜெயிச்சிருக்காங்க. அதுக்குப் பக்க பலமா, ‘துபாஷி’ ஆனந்தரங்கம் பிள்ளை இருந்திருக்காரு. இந்தத் தகவலை ‘ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு’ல தெளிவா எழுதி வெச்சிருக்காரு. கொஞ்ச காலத்துல, திரும்பவும் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரங்களுக்கும் சண்டை வந்திருக்கு. அப்போ ஆங்கிலேயருங்க வெற்றி பெற்றிருக்காங்க. இதுக்குப் பிறகு, சுதந்திரம் அடையும் வரையிலும் செங்கல்பட்டு ஆங்கிலேயர்களுக்கு முக்கிய இடமா இருந்திருக்கு.

அந்தக் காலத்து ஆட்களுக்குக் காஞ்சிபுரம் மாவட்டம்னா தெரியாது. செங்கல்பட்டு ஜில்லான்னு சொன்னாத்தான் புரியும். இப்போ சென்னையில உள்ள சைதாப்பேட்டை வரை அதன் எல்லை இருந்துச்சி. சைதாப்பேட்டை பனகல் மாளிகையிலதான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருந்துச்சின்னு சொன்னா இப்போ சில பேருக்கு ஆச்சர்யமாத்தான் இருக்கும். சில நிர்வாகக் காரணங்களால செங்கல்பட்டு மாவட்டங்கிற பெயரை மாத்தி, காஞ்சிபுரம்னு வெச்சாங்க. ஆட்சியர் அலுவலகமும் காஞ்சிபுரத்துக்கு இடம் மாறினது ’’னு சொல்லி மூச்சை இழுத்துவிட்டு, ஆசுவாசப்படுத்திக்கிட்டு, பேச்சைத் தொடர்ந்தாரு...

‘‘என்னடா இந்தக் கிழவன், இவ்வளவு தகவல் சொல்றானேன்னு நினைக்கிறீங்க தானே? அரசுப் பள்ளிக்கூடத்துல முப்பது வருஷம் வாத்தியார் வேலை பார்த்தேன். கொஞ்சம் வரலாற்று ஆர்வமும் உண்டு. அதனாலதான் ஊர்ப் பெயரை மாத்திச் சொல்றதைக் கேட்கும்போது கோபம் வருது. இப்போ எல்லாப்பகுதியிலும் பாரம்பர்ய நெல் ரகத்தைப் பத்திப் பேசத் தொடங்கியிருக்காங்க. இந்தச் செங்கல்பட்டுப் பகுதியிலகூட நிறைய பாரம்பர்ய நெல் ரகம் இருந்திருக்கு. அதுல பெயர் வாங்கின ரகம் ‘செங்கல்பட்டுச் சிறுமணி’. இது சாப்பாட்டுக்கும் இட்லி செய்றதுக்கும் ஏத்த ரகம். காஞ்சிபுரம் இட்லிக்கு இந்த ரகத்தைத்தான், அந்தக் காலத்துல பயன்படுத்தினதாகக்கூட சொல்வாங்க. சின்ன வயசுல சிறுமணி அரிசில செய்த இட்லியோட சுவை, இன்னும்கூட நாக்குல ஒட்டிக்கிட்டிருக்கு. இந்தப் பகுதி முழுக்கச் சிறுமணி நெல் சாகுபடி செய்றதைக் கண்கூடா பார்த்திருக்கேன். பணி ஓய்வுக்குப் பிறகு, இப்பத்தான் ரெண்டு ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். அடுத்த பருவத்துல ‘செங்கல்பட்டுச் சிறுமணி’யைச் சாகுபடி செய்யணும், இந்த அற்புதமான பாரம்பர்ய விதையை வாங்கத்தான் வண்டலூர் வரையிலும் போய்க்கிட்டிருக்கேன்...” அவர் சொல்லி முடிக்கும்போது ரயில் வண்டலூரைத் தொட்டு நின்னது.