மகசூல்
நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!

அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!

இயற்கையில் இனிக்கும் தக்காளி! மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: தி.விஜய்

தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்களில் காய்கறிகளுக்கு முக்கிய இடமுண்டு. அவற்றிலும் அன்றாடம் சமையலில் பயன்படுத்தக்கூடிய தக்காளி, வெங்காயம் போன்ற பயிர்களுக்கு எப்போதுமே சந்தையில் தேவை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தி இயற்கை முறையில் தக்காளிச் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கோயம்புத்தூர் அருகிலுள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சம்பத்குமார். இவர் சுழற்சி முறையில் தக்காளிச் சாகுபடியை மேற்கொண்டு வருவதால், தக்காளியில் தொடர்ந்து வருமானம் எடுத்து வருகிறார்.  

அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!

படித்தது உளவியல்... செய்வது உழவியல்

வயலில் தக்காளி பறிப்பில் ஈடுபட்டிருந்த சம்பத்குமாரைச் சந்தித்தோம். “எனக்குப் பூர்வீகமே இந்த ஊர்தான். சைக்காலஜி படிச்சுட்டு விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். இப்போ மொத்தம் ஆறு ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்றேன். அப்பா காலம் வரைக்கும் கொஞ்சம் தள்ளியிருக்குற ரெண்டு ஏக்கர் நிலத்துல மட்டும்தான் விவசாயம் செஞ்சோம். நான்தான் இயற்கை விவசாயத்துக்காக இங்க சும்மா இருந்த நாலு ஏக்கர் மானாவாரி பூமியைச் சீராக்கித் தயார் செஞ்சேன். அதுல போர்வெல் போட்டு வாழை, தக்காளினு இயற்கை முறையில் பயிர் பண்றேன். இந்த நிலத்துல முன்னாடி மானாவாரி விவசாயம்தான் செய்வோம். அதனால, கைப்பிடி ரசாயன உரத்தைக்கூட பயன்படுத்துனதில்லை. அதனாலதான் இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்க இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன். நான் இயற்கை விவசாயத்துக்கு வந்ததுக்குக் காரணம், பக்கத்துத் தோட்டத்துக் காரங்களான ராமசாமியும் அவர் மனைவி பூங்கோதையும்தான். அதுவும் ஒரு சவால் மூலமா என்னை இதுக்குள்ளாற கொண்டு வந்தாங்க” என்ற சம்பத்குமார், தக்காளிப் பழங்களைக் கூடையில் அடுக்கியபடியே இயற்கைக்கு மாறிய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

இயற்கைக்கு மாற்றிய சவால்

“ஆரம்பத்துல ரெண்டு ஏக்கர் நிலத்துல பருத்தி, வெங்காயம், கத்திரி, வாழைனு ரசாயன முறையில்தான் விவசாயம் செஞ்சோம். நான் விவசாயத்துக்கு வந்த பிறகும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லினுதான் பயன்படுத்திட்டு இருந்தேன். ராமசாமி, பூங்கோதை ரெண்டு பேருமே தீவிர இயற்கை விவசாயிகள். எந்த விவசாயியைப் பார்த்தாலும் அவங்ககிட்ட ‘பசுமை விகடன்’ புத்தகத்தைக் கொடுத்து இயற்கை விவசாயத்தோட மகிமையை எடுத்துச் சொல்லி, இயற்கைக்கு மாறச் சொல்வாங்க. என்கிட்டயும் பல தடவை, ‘இயற்கை விவசாயத்துக்கு வந்துடு’னு சொல்லிருக்காங்க.   

அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!

ஆனா, நான் அவங்க பேச்சைக் காதுல வாங்கிக்கவே இல்லை. கடைக்குப் போய் உரத்தை வாங்கினோமா, வயல்ல போட்டோமானு  விவசாயத்தைச் செய்யாம... சாணியையும் மூத்திரத்தையும் கலந்து இடுபொருள் தயாரிக்கிறதெல்லாம் வெட்டி வேலைனு எனக்குத் தோணுச்சு. அதெல்லாம் நமக்குத் தோதுப்படாதுனு விட்டுட்டேன். ஆனாலும் அவங்க ரெண்டு பேரும் என்னை மாத்துறதுக்குக் கடுமையா முயற்சி செஞ்சாங்க.

எங்க பகுதியில பொதுவா வைகாசிப் பட்டத்துல எல்லோரும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வோம். சில வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு வைகாசிப்பட்டத்துல சின்ன வெங்காயம் விதைக்கலாம்னு முடிவு பண்ணினேன். ராமசாமியும் அதே முடிவுல இருந்தார். நிலத்தைத் தயார் செஞ்சுட்டு இருந்தப்போ, வழக்கம்போல ராமசாமி எங்கிட்ட இயற்கை பத்திப் பேச ஆரம்பிச்சார். நான் ரசாயன உரம்தான் அதிக விளைச்சலைக் கொடுக்கும்னு வாதம் பண்ணிட்டு இருந்தேன். அப்படியே வாக்குவாதம் முத்திடுச்சு. ஒரு கட்டத்துல நான், ‘ரெண்டு பேரும் ஒரு ஏக்கர் நிலத்துல சின்ன வெங்காயம் நடவு செய்வோம். நான் ரசாயன முறைப்படி சாகுபடி பண்றேன். நீங்க இயற்கையில சாகுபடி செய்யுங்க. யாருக்கு அதிக விளைச்சல் கிடைக்குதுனு பார்ப்போம். உங்களுக்குக் கூடுதல் மகசூல் கிடைச்சா, நான் இயற்கைக்கு மாறிடுறேன். எனக்குக் கூடுதல் மகசூல் கிடைச்சா, நீங்க இனிமே ரசாயனம்தான் பயன்படுத்தனும்’னு அவர்கிட்ட சவால்விட்டேன். அவர் ஒரு விநாடிகூட யோசிக்காம சவாலை ஏத்துக்கிட்டார்.   

அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!

பேசுனபடி ரெண்டு பேரும் சின்ன வெங்காயத்தை நடவு செஞ்சோம். நான் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்துனேன். ராமசாமி ஆளுங்களைவிட்டுக் களையெடுத்தார். இயற்கை இடுபொருள்கள், பூச்சிவிரட்டினு பயன்படுத்துனார். அவர் களை எடுக்குறதுக்கும் அறுவடைக்கும் மட்டும்தான் செலவு செஞ்சார். இடுபொருள்களைத் தோட்டத்துல கிடைச்ச பொருள்களை வெச்சே தயார் செஞ்சுக்கிட்டார். ஆனா, நான் எல்லாத்துக்கும் செலவு செஞ்சேன்.
அறுபது நாள்ல அறுவடை நடந்துச்சு. ரெண்டுபேர் தோட்டத்து வெங்காயத்தையும் பக்கம் பக்கமா கொட்டி வெச்சோம். ராமசாமியோட வெங்காயம் தளதளனு ஒரே அளவுல சிவப்பா, நல்ல ஊட்டமா இருந்துச்சு. ஆனா, என்னோட வெங்காயம் கொஞ்சம் கலர் கம்மியா இருந்துச்சு. சீரான அளவுல இல்லை. அதில்லாம எனக்கு 4 டன் மகசூல்தான் கிடைச்சது. ராமசாமி 7 டன் மகசூல் எடுத்தார். அன்னைக்கு மார்க்கெட் விலைக்குத்தான் என் வெங்காயம் விலை போச்சு. ஆனா, அவர் வெங்காயம் மார்க்கெட் விலையைவிட கிலோவுக்கு 7 ரூபாய் கூடுதலா வெச்சு வியாபாரம் செஞ்சார்” என்ற சம்பத்குமார் தொடர்ந்தார்.

பயிற்சிக்குப் பிறகு இயற்கை விவசாயம்

“அப்புறம்தான் எனக்கு இயற்கை விவசாயத்தோட அருமை புரிஞ்சது. உற்பத்தி செலவைக் குறைச்சு அதிக மகசூல், அதிக வருமானம் எடுக்கணும்னா இயற்கை விவசாயம்தான் செய்யணும் முடிவு செஞ்சு ராமசாமிகிட்ட என் தோல்வியை ஒத்துக்கிட்டு, ‘இயற்கை விவசாயத்துக்கு மாறிடுறேன்’னு சொன்னேன். அவர் இயற்கை விவசாயம் பத்தி நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். அதோட இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட சில புத்தகங்களையும் கொடுத்தார். அதுல பசுமை விகடனும் இருந்துச்சு. அவர்கிட்ட இருந்து பழைய பசுமை விகடன் புத்தகங்களையெல்லாம் வாங்கிப் படிச்சேன். அடுத்ததா பக்கத்துல நடக்குற இயற்கை விவசாயப் பயிற்சிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். இயற்கை இடுபொருள் தயாரிக்கிறது பத்தித் தெரிஞ்சுக்கிட்டதும், மொத வேலையா ஒரு நாட்டுப் பசுவை வாங்கிட்டு வந்தேன். இயற்கை இடுபொருள்கள், மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்கக் கத்துக்கிட்டேன்.   

அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!

மண்ணை வளப்படுத்திய பாக்கு மட்டைத்தூள்

இந்த நாலு ஏக்கர் நிலத்துக்குப் பக்கத்துலேயே குடியிருப்புகள் வந்துட்டதால, மனை பிரிச்சுப் போடுறதுக்கு நல்ல விலைக்குக் கேட்டு வந்தாங்க. விற்க மனசில்ல முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். ரசாயனம் படாத நிலங்கிறதால, இதுலேயே இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். வீட்டுக்கும் களத்துக்கும்னு அரை ஏக்கரை ஒதுக்கிட்டு மீதி நிலத்தை விவசாயத்துக்குத் தயார்படுத்தினேன். நல்லா உழுதுட்டு, பக்கத்துல இருக்கிற பாக்கு மட்டைத் தொழிற்சாலையில் கிடைச்ச பாக்குமட்டைத்தூளை அள்ளிக் கொண்டுவந்து நிலம் முழுக்கக் கொட்டிப் பரப்பினேன். அடுத்து வண்டல் மண்ணைக் கொண்டுவந்து பரப்பி மூணு மாசம் காயவிட்டேன். கொஞ்ச நாள்லயே இதெல்லாம் நல்லா மட்கி, நிலம் முழுக்கக் கறையான்கள் பெருகி மண் விபூதி மாதிரி ஆகிடுச்சு. அதுல ரெண்டு ஏக்கர் நிலத்துல வாழையும் ஒன்றரை ஏக்கர் நிலத்துல தக்காளியும் போடலாம்னு முடிவு பண்ணி முழுக்கச் சொட்டு நீர் அமைச்சேன்.

சுழற்சி முறையில் தக்காளிச் சாகுபடி

தக்காளி குறுகியகாலப் பயிர்ங்கிறதால அரை அரை ஏக்கராப் பிரிச்சுச் சுழற்சி முறையில சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். இயற்கை முறையில் தக்காளி நல்லா விளையுது. இப்போ நாலாவது ‘பறிப்பு ‘ அறுவடையாகிட்டு இருக்கு. எப்பவுமே தக்காளி விதைச்சதும் ஊடுபயிரா சின்ன வெங்காயம் விதைச்சு விட்டுடுவேன். தக்காளிக்குக் கொடுக்குற ஊட்டத்தை வெச்சே வெங்காயமும் நல்ல விளைஞ்சு வந்துடும். அதுல ஒரு வருமானம் கிடைச்சுடும்.

பூச்சித்தாக்குதல் இல்லை

ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா ரெண்டையுமே பதினஞ்சு நாளுக்கு ஒருமுறை சொட்டு நீர் மூலமா தக்காளிக்குக் கொடுத்துட்டு இருக்கேன். இயற்கை விவசாயத்துல தக்காளி ரொம்ப அருமையா வருது. என் வீட்டைச் சுத்தி குடியிருப்புகள் இருக்குறதால குப்பைகள் நிலத்துக்கு வந்துடும். அதனால, நிலத்தைச் சுத்தி வேலி அடைச்சு ‘கிரீன் நெட்’ போட்டு வெச்சிருக்கேன். ஒரு தூசு தும்புகூட உள்ள வராது. பக்கத்துல விவசாயம் இல்லங்கிறதால, இதுவரை மூணு பறிப்பு தக்காளிக்கும் பூச்சிகள் வரலை. இருந்தாலும், இப்போ அறுவடையில் இருக்குற தக்காளிக்கு அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம் ரெண்டையும் தயாரிச்சுத் தெளிச்சிருக்கேன். இயற்கைக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு. நேந்திரன் வாழையையும் இயற்கை முறையிலதான் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்” என்ற சம்பத்குமார் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

கோடையில் மகசூல் குறைவு

“போன முறை சித்திரை மாசம் தக்காளி விதைச்சேன். நல்ல வெயில் காலங்கிறதால மகசூல் கொஞ்சம் குறைவுதான். வழக்கமா அரை ஏக்கர் நிலத்துல 10 டன் அளவுக்குமேல தக்காளி கிடைக்கும். ஆனா, போன முறை ஆறு டன்னுக்குக் கொஞ்சம் கூடுதலாத்தான் மகசூல் கிடைச்சது. நடவு செஞ்ச அம்பதாவது நாளுக்குமேல அறுவடையாகும். அதுல இருந்து மூணு மாசம் வரை தக்காளி பறிக்கலாம். ஆனா, இந்த முறை அதிக வெயில்ங்கிறதால அறுபத்தஞ்சாம் நாளுக்குமேலதான் பறிப்புக்கே வந்துச்சு. அதேமாதிரி ரெண்டு மாசத்துலயே காய்ப்பும் முடிஞ்சுடுச்சு.

மொத்தம் 6 டன் தக்காளியை வியாபாரிகளுக்கு விற்பனை செஞ்சேன். மீதியை அக்கம்பக்கத்துல இருக்குறவங்களுக்குத் தினமும் சில்லறையா விற்பனை செய்தேன். அதனால, 6 டன் தக்காளிக்குத்தான் கணக்கு இருக்கு. பறிப்பு ஆரம்பிச்சதுல இருந்து ஒரு கூடை (10 கிலோ) தக்காளிக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் வரைதான் விலை கிடைச்சது. அந்த விலையில் 5 டன் தக்காளியை விற்பனை செஞ்சேன். கடைசியாப் பறிச்ச 1 டன் தக்காளிக்கு நல்ல விலை கிடைச்சது. ஒரு கூடை 1,200 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமா கணக்குப் பார்த்தா 6 டன் தக்காளி விற்பனை மூலமா சுமார் 2,85,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. சில்லரையா விற்பனை செஞ்சதையும் சேர்த்தா இன்னமும் கூடுதலாத்தான் வரும். ஆனா, அதுக்கு எங்கிட்ட கணக்கில்லை.

அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!

ஊடுபயிரிலும் வருமானம்

ஊடுபயிராப் போட்ட வெங்காயத்துல 350 கிலோ கிடைச்சது. அது கிலோ 70 ரூபாய்னு விற்பனையாச்சு. அந்த வகையில 24,500 ரூபாய் கிடைச்சது. ஆக, அரை ஏக்கர்ல மொத்தம் 3,09,500 ரூபாய் வருமானம் கிடைச்சது. பாக்கு மட்டைத்தூள், வண்டல் மண் கொட்டுனதுல இருந்து, சொட்டுநீர், உழவு, நாத்து, நடவு, பறிப்புனு மொத்தம் அரை ஏக்கருக்கு 49,600 ரூபாய் செலவாச்சு.

அது போக 2,59,900 ரூபாய் லாபமாக் கிடைச்சது. வெங்காயத்துக்குனு எந்தச் செலவும் இல்லை. விதை வெங்காயம் கூட வீட்டுல இருந்ததுதான்” என்ற சம்பத்குமார் நிறைவாக,

கவனித்துப் பார்த்தால் வெற்றி நிச்சயம்

“அதிக அளவுக்கு மகசூல் கொடுக்கக்கூடிய வீரிய ரகத் தக்காளியைத் தேர்வு செஞ்சது, இயற்கை முறையில செழிம்பா ஊட்டம் கொடுத்தது, கண்ணும் கருத்துமா பிள்ளையைப் பாத்துக்குறதுபோல பாத்ததுனாலதான், பயிரும் பூமியும் ஏமாத்தாம விளைச்சலைக் கொடுத்திருக்கு. அதில்லாம சுழற்சி முறையில பிரிச்சுச் சாகுபடி பண்றதால, வருஷம் முழுக்க அறுவடை நடந்துட்டு இருக்கு. தொடர் வருமானமும் கிடைச்சுடுது. ஒரு நேரம் விலையில்லாமப் போனாலும், இன்னொரு நேரத்துல நல்ல விலை கிடைச்சுடுது. இப்போ அடுத்த பறிப்புத் தக்காளி அறுவடையாகிட்டு இருக்கு. சராசரியா ஒரு கூடை முந்நூறு ரூபாய்னு விலை போய்ட்டு இருக்கு. எனக்கு நல்ல செம்மண் பூமி, தண்ணிக்கும் பிரச்னை இல்லை. மயில் தொல்லை இருக்கிறதால ராத்திரியும், பகல்லயும் தோட்டத்துலதான் கிடையாக் கிடப்பேன். அப்படிப் பாத்துக்கிட்டதால தான் இந்த மகசூல் கிடைச்சுருக்கு. இல்லாட்டி, விவசாயம் பண்ணா நஷ்டம்தானுங்கனு பேசிக்கிட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்” என்று நிதர்சனத்தைச் சொல்லி விடைகொடுத்தார்.  

தொடர்புக்கு, சம்பத்குமார்: செல்போன்: 99439 94308.

அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ரை ஏக்கர் நிலத்தில் தக்காளிச் சாகுபடி செய்யும்விதம் குறித்துச் சம்பத்குமார் சொன்ன விஷயங்கள் இங்கே...

தக்காளி செம்மண் பூமியில் நன்கு வளரும். வீரிய ரகத் தக்காளிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் விதைக்கலாம். அந்தந்தப்பகுதி சீதோஷ்ண நிலைக்குத் தகுந்த ரகங்களைத் தேர்ந்தெடுத்துச் சாகுபடி செய்ய வேண்டும்.
தேர்வு செய்த அரை ஏக்கர் நிலத்தில் பதமாகத் தண்ணீர் கட்டி, மண் விபூதிபோல பொலபொலவென ஆகுமாறு நன்கு உழ வேண்டும். பிறகு, பாக்கு மட்டைத்தூள்போன்ற தாவரக்கழிவுகளை நிலத்தின்மீது இரண்டு அங்குல உயரத்துக்குக் கொட்டிப் பரப்ப வேண்டும். தாவரக்கழிவுகள் கிடைக்காதவர்கள், பசுந்தாள் உரப் பயிர்களை விதைத்து, பூ எடுக்கும் சமயத்தில் மடக்கி உழுதுவிடலாம். அவை நன்கு மட்கிய பிறகு 7 லோடு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி நிலத்தைச் சமன் செய்ய வேண்டும்.

பிறகு சொட்டு நீர்ப் பாசனக் குழாய்களை அமைத்து நிலத்தை ஈரப்படுத்தி... வரிசைக்கு வரிசை 3 அடி, செடிக்குச் செடி ஒன்றரை அடி இருக்குமாறு தக்காளி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்யும் முன் 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் தயார் செய்யப்பட்ட கரைசலில், நாற்றுகளின் வேர்ப்பகுதியை முக்கி நடவு செய்ய வேண்டும்.  மண் மிகவும் இளகி இருந்தால்தான் விரலால் லேசாக மண்ணைப் பறித்து நாற்றை அழுத்த முடியும். மண் இறுகி இருந்தால் அழுத்தும்போது நாற்றின் வேர்ப்பகுதி முறிந்துவிடும். இதனால், முளைப்புத் தாமதமாகும். அல்லது முளைக்காமலே போய்விடும். மாலை நான்கு மணிக்கு மேல்தான் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது இரவில் கிடைக்கும் குளிர்ச்சியால் செடிகள் வாடாமல் இருக்கும்.

நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஊடுபயிர் சாகுபடி செய்ய நினைப்பவர்கள், தக்காளி நாற்றுகளை நடவு செய்த மறுநாள் விதைக்கலாம். முதல் மூன்று நாள்களுக்குத் தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. புல் களைகள் முளைத்தால் தக்காளிச் செடிகளுக்கு ஊட்டம் கிடைக்காமல் போய்விடும். அதனால், நிலத்தில் எப்போதும் களைகளே இல்லாத அளவுக்கு அகற்றி வர வேண்டும்.

நடவு செய்த 15, 30 மற்றும் 45-ம் நாள்களில் வடிகட்டிய 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைச் சொட்டு நீரில் கலந்துவிட வேண்டும். நாமே பஞ்சகவ்யா தயாரித்தால், அதையும் வடிகட்டி சொட்டு நீரில் கரைத்து விடலாம். இயற்கை இடுபொருள்களை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். செடிகளின் வளர்ச்சியைப் பொறுத்து இடுபொருள்களின் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பத்து லிட்டர் மாட்டுச் சிறுநீரில் அரைக் கூடை சாணியைக் கரைத்து நான்கு நாள்கள் கழித்து அக்கரைசலில் மேலாக இருக்கும் தெளிவை மட்டும் வடிகட்டி... 10 நாள்களுக்கு ஒருமுறை சொட்டு நீரில் கலந்துவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மாட்டுச் சிறுநீரை நேரடியாகப் பயிருக்குக் கொடுக்கக் கூடாது. செடிகள் கருகிவிடும். அதனால், தண்ணீரில் கலந்துதான் கொடுக்க வேண்டும். அதேபோலத் தொழுவுரம் இடும்போது மாட்டுச் சாணத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். கோழி எரு தக்காளிக்கு உகந்ததல்ல.

நடவு செய்த 30-ம் நாளுக்குமேல் பூ எடுத்து 45-ம் நாளுக்குமேல் காய்க்கத் தொடங்கும். ஆரம்பத்தில் நான்கு அல்லது ஐந்து கிலோ அளவில்தான் தக்காளி கிடைக்கும். 50-ம் நாளுக்குமேல் முழு மகசூல் கிடைக்க ஆரம்பித்துவிடும். சந்தைத் தேவையைப் பொறுத்துத் தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பறிக்கலாம். செடிகளில் காய்ப்பு குறைந்தால், சொட்டு நீருடன் ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும்.

அடுத்த சில நாள்களிலேயே புதுத் தழைவு எடுத்துப் பூக்கள் எடுக்கத் தொடங்கும். நன்கு பராமரித்தால், வீரிய ரகத் தக்காளியில் அரை ஏக்கர் நிலத்தில் 9 டன் முதல் 10 டன் வரை மகசூல் எடுக்க முடியும்.

பூச்சிகளை அழிக்க விளக்குப் பொறி

பூ
ச்சித் தாக்குதலிலிருந்து பயிரைக் காப்பற்ற வயலில் இரவு நேரத்தில் விளக்குப் பொறிகள் வைக்கலாம். மஞ்சள் வண்ணக் காகிதத்தில் விளக்கெண்ணெயைத் தடவி ஆங்காங்கு தொங்க விட்டாலும் பூச்சிகள் பறந்து வந்து அவற்றில் ஒட்டிக்கொள்ளும். அதையும் மீறி, பூச்சிகள் தென்பட்டால் மூலிகைப் பூச்சி விரட்டிகளைத் தெளிக்கலாம்