
புறாபாண்டி
‘‘சோலார் பம்ப்செட் அமைக்க நபார்டு வங்கி மானியம் வழங்கி வருவதாக என் நண்பர்கள் சொன்னார்கள். இந்த மானியத்தைப் பெறுவது எப்படி?’’
சுந்தர் தியாகராஜன், சென்னை.

சென்னையில் செயல்பட்டுவரும் நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் எஸ்.கண்ணன் பதில் சொல்கிறார்.
‘‘சூரியசக்திமூலம் இயங்கும் சோலார் பம்ப்செட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சோலார் பம்ப்செட்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் நபார்டு மானியம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள், மாநில, மாவட்டக் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகளிலிருந்து கடன்பெற்று சோலார் பம்ப்செட் அமைத்திருந்தால் நபார்டுமூலம் மானியம் கிடைக்கும். இந்த மானியம் மத்திய அரசின் ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்’ (The Ministry of New and Renewable Energy) தேர்வுசெய்துள்ள பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். தகுதியுள்ள விவசாயிகள் சோலார் பம்ப்செட் அமைக்க வங்கியில் கடனுதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். வங்கி அலுவலர்கள் விவசாய நிலத்தை நேரடியாகப் பார்த்து, ஆய்வு செய்த பிறகு கடன் வழங்குவார்கள். கடன் வழங்கியபின் குறிப்பிட்ட வங்கி, நபார்டுக்கு மானிய விண்ணப்பத்தை அனுப்பும்.

விண்ணப்பங்களின் தகுதிக்கேற்பவும் மத்திய அரசின் மானியத்தொகை கையிருப்புக்கு ஏற்றவாறும் மானியத் தொகையை வங்கிக்கு அளிக்கும். இரண்டு குதிரைத்திறன் முதல் அதிகபட்சம் 5 குதிரைத்திறன் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை சம்பந்தப்பட்ட விவசாயி சோலார் பம்ப்செட் வாங்கிய நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் கடன்தொகை பெற்றால் மானியம்பெறும் நடைமுறைகளை வங்கிகளே செய்துவிடும். இதனால், மானியம் பெறுவதற்கு விவசாயிகள் சிரமப்படத் தேவையில்லை. மானியத்தொகை போக மீதியுள்ள கடன் தொகையை விவசாயிகள் திரும்பச் செலுத்த வேண்டும். அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் கடன் தொகையைச் செலுத்திவிட வேண்டும்.

இந்தத் திட்டத்தின்கீழ் மானியம்பெற்ற விவசாயிகள் கடன் தொகையைச் செலுத்தாமல், காலம் தாழ்த்தினால் மானியம் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின்மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களிலும் சோலார் பம்ப்செட்டுகள் அமைக்க முடியும். இவைதான் கடந்த ஆண்டு வரை உள்ள நடைமுறை.
ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை, இந்தத் திட்டத்தின்மூலம் மானியம் வழங்குவது சம்பந்தமாக மத்திய அரசு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. மத்திய அரசு உத்தரவிட்டால் அரசின் வழிகாட்டுதல்படி திட்டம் செயல்படுத்தப்படும்.’’
‘‘ஊறுகாய்ப் புல் தயாரிக்கும் நுட்பங்களையும் அதற்கு ஏற்றத் தீவனப்புல் வகைகளையும் சொல்லுங்கள்?’’
கே.பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை.
திருச்சி பகுதியிலுள்ள சொஸைட்டி ஃபார் புவர் பீப்பிள் டெவலப்மென்ட் என்கிற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ராஜூ பதில் சொல்கிறார்.

‘‘வெயிலில்தான் நிழலின் அருமை தெரியும். அதுபோல, ஊறுகாய்ப்புல்லின் மகிமை வறட்சியான நேரத்தில்தான் தெரியும். இதை அனுபவப் பூர்வமாக நாங்கள் உணர்ந்துள்ளோம். திருச்சி மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் ஊறுகாய்ப் புல் தயார்செய்யும் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்துள்ளோம். இதன்மூலம் ஏராளமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். திருச்சி வேளாண்மைக் கல்லூரி முன்னாள் முதல்வரும் மூத்த விஞ்ஞானியுமான ராஜாகண்ணுதான் இதைச் செய்முறை பயிற்சியாகச் செய்துகாட்டினார்.
அந்தத் தொழில்நுட்பத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கோ-3 அல்லது கோ-4 தீவனப்புல்லை நடவுசெய்த 40-ம் நாள் அறுவடை செய்து அதே வயலில் இரண்டு மணி நேரம் போட்டு வைக்க வேண்டும். பிறகு சிறு சிறு கட்டுகளாகக் கட்டவேண்டும், தரையில் ஆழமாகக் குழிதோண்டி, அதன் உள்ளே பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, அதன்மீது புல் கட்டுகளைச் சீராக அடுக்க வேண்டும். காலால் கட்டுகளை நன்கு மிதித்து, காற்றை வெளியேற்ற வேண்டும்.

பிறகு, ஒரு டன் புல்லுக்கு 4 கிலோ என்ற விகிதத்தில் கல் உப்பைத் தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ வெல்லத்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். உள்ளே அடுக்கப்படும் புல் கட்டுகளின் எடைக்கு ஏற்பக் கல் உப்பு, வெல்லக் கரைசல் ஆகியவற்றின் அளவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் அடுக்கு முடிந்ததும், மீண்டும் அதன்மீது புல் கட்டுகளை அடுக்கிக் காலால் மிதித்து, காற்றை வெளியேற்றிக் கல் உப்பு, வெல்லக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இதேபோல் குழி நிரம்பும் அளவுக்கு அடுத்தடுத்த அடுக்குகளை அமைக்கலாம்.
பிறகு, பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, அதன்மீது குவியலாக மண்ணைக் குவிக்க வேண்டும் (கோபுரம் வடிவில்). அப்போதுதான் மழைநீர் உள்ளே இறங்காது. காற்றும் தண்ணீரும் உள்ளே செல்லக் கூடாது. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை மூடியிருக்க வேண்டும். அதன்பிறகு, மண்ணை அப்புறப்படுத்தி பிளாஸ்டிக் ஷீட்டை நீக்கித் தேவையான அளவு தினந்தோறும் இந்த ஊறுகாய்ப் புல்லைக் கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். தினமும் புல் எடுத்தவுடன் மீதமுள்ளவற்றைப் பிளாஸ்டிக் ஷீட்டால் மூடிவிட வேண்டும். அதன்மீது மண் போடத் தேவையில்லை. மழைக் காலத்தில் கோ-3, கோ-4 நடவுக்கு 20 நாள் முன்பாகத் தனியாக 15 சென்ட் நிலத்தில் தீவனச் சோளத்தை விதைக்கவேண்டும். (அப்போதுதான் ஒரே சமயத்தில் அறுவடை செய்து, ஊறுகாய்ப்புல் தயாரிப்புக்குப் பயன்படுத்த முடியும்). முக்கால் டன் தொழுவுரம் போட்டு, எட்டு கிலோ விதையைத் தூவினால் போதும். 60-ம் நாள் அறுவடை செய்துவிடலாம். இதை ஒருமுறை மட்டும் சாகுபடி செய்தாலே போதும். இதேபோல கோ-3 அல்லது கோ-4 புல்லை முதல் தடவை, வெறும் 5 சென்ட் பரப்பில் மட்டும் முழுமையாக அறுவடை செய்து, இரண்டையும் சேர்த்துப் பதப்படுத்தி வைத்துக்கொண்டால் வறட்சி நிலவும்போது ஒரு மாடு மற்றும் ஐந்து ஆடுகளின் தீவனத்தேவையைச் சமாளிக்கலாம்.
ஒரு மாட்டுக்குத் தினமும் 20 கிலோ, ஆட்டுக்கு மூணு கிலோ அளவில் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். ஜூலை முதல் பிப்ரவரி மாதம் வரைக்கும் இந்தத் தீவனப் புல் நன்றாக வளரும். இந்த எட்டு மாதத்துக்குத் தீவனப் பிரச்னை இருக்காது. மார்ச் முதல் ஜூன் வரைக்கும் கடுமையான வறட்சி இருக்கும். அப்போதுதான், தீவனத் தட்டுப்பாடு வரும். அதைச் சமாளிக்கத்தான் ஊறுகாய்ப்புல் கை கொடுக்கும். கம்பு, சோளம் உள்ளிட்ட புல் வகைப்பயிர்களில் மட்டுமே ஊறுகாய்ப்புல் தயாரிக்க முடியும். முயல் மசால், குதிரை மசால் போன்றவற்றில் ஊறுகாய்ப்புல் தயாரிக்க முடியாது. ஆக, இதுதான் தீவனப்புல் தயாரிக்க ஏற்ற காலகட்டம். இந்தப் பருவத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.’’
தொடர்புக்கு, செல்போன்: 98424 81968.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.