மகசூல்
நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மேக்கேதாட்டு அணை... அநியாயம் செய்யும் கர்நாடகம் அமைதி காக்கும் தமிழகம்!

மேக்கேதாட்டு அணை... அநியாயம் செய்யும் கர்நாடகம் அமைதி காக்கும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மேக்கேதாட்டு அணை... அநியாயம் செய்யும் கர்நாடகம் அமைதி காக்கும் தமிழகம்!

நதிநீர்த.ஜெயகுமார் - படங்கள்: க.தனசேகரன் - ரமேஷ் கந்தசாமி

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ‘கர்நாடகம் தண்ணீர் தரும் என்றால் மேக்கேதாட்டூ அணை கட்டுவதில் பிரச்னையில்லை’ என்ற வாதத்தை முன்வைத்தார் தமிழக அரசு சார்பில் வாதாடும் வழக்கறிஞர் சேகர் நாப்டே. இந்தக் கருத்துக்குத் தமிழகத்திலுள்ள எதிர்கட்சிகள், விவசாயச் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. காவிரிக்குக் குறுக்கே மேக்கேதாட்டூ அணையைக் கட்டுவதற்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு இருந்துவரும் நிலையில் இப்படியொரு கருத்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

மேக்கேதாட்டு அணை... அநியாயம் செய்யும் கர்நாடகம் அமைதி காக்கும் தமிழகம்!

இதுகுறித்துத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளரும் சங்க மாநிலச் செயலாளருமான வீரப்பன் நம்மிடம் விளக்கமாகப் பேசினார்.

“தமிழக வழக்கறிஞர் முன்வைத்த கருத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்குமுன் காவிரி நதிநீர்ப் பங்கீடு பற்றியும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்ததைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். காவிரி நடுவர் மன்றம் 1990-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொடர்ந்து 17 ஆண்டுகள் தீர விசாரித்து 05.02.2007-ல் ஒரு தீர்ப்பைக் கொடுத்தது. இதன்படி காவிரி நதிநீர்ப் படுகையில் 740 டி.எம்.சி தண்ணீர் (இதில் பாதியளவு குறையாமல்) கிடைத்து வருகிறது. இதில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி தண்ணீர் (192 டி.எம்.சி கர்நாடகாவிலிருந்து) கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி, கேரளாவுக்கு 30 டி.எம்.சி, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி என்று பகிர்ந்துகொள்ள வேண்டும். மீதியளவு நீர் ஆவியதால் மற்றும் சேதாரக் கணக்கில் போய்விடும். இந்த நீர்ப் பங்கீட்டை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த நீரின் அளவு போதாது; கூடுதலாக வழங்க வேண்டும் என்று நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கைத் தொடர்ந்தன. அந்த வழக்கு கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் விசாரணைக்கு வந்தது. முதற்கட்டமாகக் கர்நாடக அரசின் வாதம் நடைபெற்றது. அப்போதே கர்நாடக அரசு தவறான, வழக்குக்குத் தொடர்பில்லாத பல வாதங்களை எடுத்து வைத்தது. 

மேக்கேதாட்டு அணை... அநியாயம் செய்யும் கர்நாடகம் அமைதி காக்கும் தமிழகம்!



இதையடுத்துத் தமிழகத்தின் வாதம் தொடர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் நடந்த விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ‘கர்நாடகம் மேக்கேதாட்டூவில் அணையைக் கட்டித் தண்ணீரைக் கொடுத்தால், ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்குத்தான் ‘உச்ச நீதிமன்றம் ஆணையத்தை அமைத்து, தண்ணீரைப் பங்கீட்டுத் தரும் என்றால் மேக்கேதாட்டூ அணை கட்டுவதில் பிரச்னையில்லை’ என்ற கருத்தை வழக்கறிஞர் சேகர் நாப்டே பதிலாகக் கொடுத்துள்ளார்.  இந்தத் தகவல் தெரிந்தவுடன் தமிழ்நாடு பொதுப்பணித்துறை காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் ஆர்.சுப்ரமணியத்திடம் இதுகுறித்துத் தெரிவித்தோம். இதில் தமிழக அரசும் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்க்கிறது என்று தெளிவாகச்  சொல்லியது.

மீண்டும் காவிரி வழக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ‘கர்நாடகம் மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதை எதிர்க்கிறோம். அது சம்பந்தமாக வேறொரு வழக்கும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அதில் முழுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம்’ என்று தெரிவித்தார் வழக்கறிஞர் நாப்டே.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு மனுவில் தெரிவிக்கப்படாத, உள்ளடங்காத, வழக்கின் எல்லைக்குள் வராத விஷயங்களின்மீது பல கருத்துரைகளையும் யோசனைகளையும் தெரிவிக்கிறது. இவை இந்திய அரசியல் சாசனச் சட்டப் பிரிவுகள் 129, 131 மற்றும் 132 ஆகியவற்றுக்கு முற்றிலும் மாறானவை. உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை மீறியவை. இந்நிலையில் தமிழ்நாட்டில் போதுமான அணைகளைக்கட்டி ஏன் நீரைத் தேக்கி வைக்கவில்லை என்று கேட்கிறது உச்ச நீதிமன்றம். இதேபோன்று மேக்கேதாட்டூவில் கர்நாடகா புதிய அணையைக் கட்டித் தமிழ்நாட்டுக்குப் போதிய தண்ணீரைத் தருவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் கட்டுப்படும் புதிய ஆணையத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று கருத்துத் தெரிவிக்கிறது. இவை மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்படாதவை. எனவே இதைப் பற்றி விவாதிக்க, கருத்துக் கூற உச்ச நீதிமன்ற அமர்வுக்கு இடமில்லை, வாய்ப்புமில்லை.

நடுவர் மன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சமே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசைக் கட்டாயப்படுத்தவில்லை உச்ச நீதிமன்றம்.

இதேபோல 2016-ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் 6 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிடாத கர்நாடக அரசை உச்ச நீதிமன்றம் கண்டிக்கக்கூட இல்லை. ஆகஸ்ட் 2017 வரை 94 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை 20 டி.எம்.சி தண்ணீரைக்கூட விடவில்லை. இப்படிப் பல செயல்கள் உத்தரவை மீறி நடந்து கொண்டிருக்கும்போது, உச்ச நீதிமன்றம் தேவையற்ற யோசனைகளைக் கூற சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை; தார்மீக உரிமையும் கிடையாது. காவிரி விஷயத்தில் பல நிகழ்வுகளில் உச்ச நீதிமன்றம், தம் அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாகவே தெரிகிறது. இதனால், தமிழக மக்கள், அரசியல் கட்சிகள் காவிரி வழக்கு சம்பந்தமான விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  

மேக்கேதாட்டு அணை... அநியாயம் செய்யும் கர்நாடகம் அமைதி காக்கும் தமிழகம்!

காவிரி நடுவர் மன்றம் 17 ஆண்டுகள் தீர விசாரித்து அளித்த இறுதித் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் ஓரிரு மாதங்களில் மாற்றிவிட முடியாது. காவிரி நடுவர்மன்ற மேல்முறையீட்டு வேலைகளை இன்னொரு தீர்ப்பாயம்தான் செய்ய முடியுமேதவிர, இப்போதைய உச்ச நீதிமன்ற அமர்வு அல்ல. சட்டச் சிக்கல் ஏதாவது இருந்தால் மட்டுமே (அரசியல் சாசன சட்டப் பிரிவு 132-ன் படி விசாரித்து) அதை விளக்கித் தெளிவுபடுத்தலாம்.

தற்போது தமிழ்நாட்டில் மக்களின் நலன் கருதிச் செயல்படும் அரசு இல்லாததால் பெரும் சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்டிருக்கின்றன. இதைவிட உலக நாடுகளுக்கெல்லாம் உபதேசம் செய்யும் இன்றைய மத்திய அரசு, தமிழ்நாட்டு விவசாயிகளைப் பற்றியோ தமிழ்நாட்டு மக்களின் நேர்மையான கோரிக்கைகள் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தமிழகத்தை ஓர் அநாதை மாநிலம்போல ஓரவஞ்சனையோடு நடத்துகிறது.

இப்போது உச்ச நீதிமன்றத்திலுள்ள மேல்முறையீட்டு வழக்கு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் ஒவ்வொரு மாநிலமும் கூடுதலாக நீர்ப் பங்கீட்டைக் கேட்பதேயன்றி, உச்ச நீதிமன்றம் ஒரு நதிநீர்த் தீர்ப்பாயமாகச் செயல்படக் கூடாது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் கர்நாடக அரசு மாற்றிட உச்ச நீதிமன்றம் எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள். எந்தவொரு தீர்ப்பையும், ஒப்பந்தத்தையும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மதிக்காத கர்நாடக அரசின் வாதங்கள் அனைத்தையும் ஒதுக்கித்தள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் காலத்தே அமைக்காத மத்திய அரசு ஆகியவற்றை வழிக்குக் கொண்டுவந்து சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதே உச்ச நீதிமன்றத்தின் தலையாயப் பணியாக இருக்க வேண்டும்.

மாறாகக் கர்நாடகாவின் பொய் பரப்புரைகளைக் கேட்டு, வழக்கின் நோக்கையே திசை திருப்பும் முயற்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது” என்று காரமாகச் சொல்லி முடித்தார்.    

கர்நாடக அரசின் அண்டப் புளுகு... ஆகாசப் புளுகுகள்!

கா
விரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன. இதில் கர்நாடக அரசு பொய்யான பல தகவல்களைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் பொறியாளர் வீரப்பன் சொல்லிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

 1924-ம் ஆண்டு போடப்பட்ட காவிரி நதிநீர் ஒப்பந்தம் 18.02.1954-லியே காலாவதியாகிவிட்டது. எனவே தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம், காவிரி ஆற்றிலிருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீரைத் தரவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. எனவே, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய அளவை 192 டி.எம்.சி-யிலிருந்து 102 டி.எம்.சி-யாகக் குறைக்க வேண்டும்.

தமிழ்நாடு மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரைச் சேமித்து வைக்கப் போதுமான அணைகளைக் கட்டி வைக்கவில்லை. இருப்பினும் தம் பாசன நிலப்பரப்பைக் கூட்டிக்கொண்டு வருகிறது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் ஏராளமான நிலத்தடிநீர் இருப்பில் உள்ளது. இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

என்று மூன்று முக்கியப் புளுகு மூட்டைகளை அவிழ்த்துள்ளது கர்நாடகம். இவையெல்லாம் பச்சைப்புளுகு என்று கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் (மத்திய நீர்வள ஆணையம்) நன்றாகவே தெரியும். இருப்பினும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவர், தமிழ்நாட்டு சார்பு வழக்குரைஞரிடம் ‘ஏன் தமிழக அரசு போதுமான அணைகளைக் கட்டித் தண்ணீரைத் தேக்கிவைத்துக் கொள்ளவில்லை’ என்று கேள்வி கேட்பது முற்றிலும் அறியாமை. இதைவிடத் தமிழ்நாட்டில் இந்நாள் வரை (2017) கட்டப்பட்ட, கட்டப்பட்டு வருகின்ற அணைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளாமலும்தெரிந்துகொள்ள விருப்பமில்லாமலும் இருப்பது வேதனையான விஷயம்.

கர்நாடக அரசின் கேள்விகளுக்கு நியாயமான பதில்கள்


 1924-ம் ஆண்டு முதல் காவிரி நதிநீர் ஒப்பந்தம் தொடர்ந்து செயல்பாட்டிலிருக்கிறது. அது எப்போதும் காலாவதி ஆகவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தண்ணீர்ப் பங்கீட்டின் அளவுகள் மட்டுமே திருத்தப்பட்டிருக்கின்றன. மற்றபடி எதுவும் மாற்றப்படவில்லை.

 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் 11-வது பத்தி இப்படிச் சொல்கிறது. ‘பத்திகள் 4 முதல் 8 முடியவுள்ள வரையறைகளிலோ செயல் திட்டத்திலோ மாற்றம் வேண்டும் என்று விரும்பினால், ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்து 50 ஆண்டுகள் முடிவடைந்தவுடன் (18.02.2017) மறுபரிசீலனை செய்து, இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றம் செய்து கொள்ளலாம்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் காலாவதியாகும் என்று சொல்லாமல் மறு கண்காணிப்புக்கு உரியது என்றே தெளிவாகத் தெரிவிக்கிறது.

1924-ம் ஆண்டு ஒப்பந்தம் தொடர்ந்து செயல்பாட்டிலுள்ளது என்பதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் உச்ச நீதிமன்ற தெளிவுரையும் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும் கர்நாடகா தொடர்ந்து இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்கிறது.

தண்ணீர் சேமிப்பில் தமிழ்நாடு!

மிழ்நாட்டில் நீரைச் சேமித்து வைக்க 84 அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்திய விடுதலைக்கு முன்பு முல்லைப் பெரியாறு, பேச்சிப்பாறை, மேட்டூர் அணைகள் மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்கம்.

1948-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரையான ஆட்சிக் காலத்தில் வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, வீடூர், மணிமுத்தாறு, சிற்றாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் 7 அணைகள்.

1967-ம் ஆண்டு முதல் 2011 வரையான ஆட்சிக்காலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவை தவிர 1990-2016 வரை சிற்றாறுகள், இடையாறுகள், பெரும் ஓடைகள் ஆகியவற்றில் 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 2017 முதல் 2020 ஆண்டுகளில் மேலும் 200 சிறிய தடுப்பணைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், கண்மாய்கள் மற்றும் குளங்களின் மழைநீர் கொள்ளளவு 390 டிஎம்சி அளவுக்கு உள்ளன. எனவே அணைகள் நீர்த்தேக்கங்கள் கட்டப்படவில்லை என்பது முற்றிலும் கடைந்தெடுத்த பொய்.
புதிதாக அணைகள் கட்டுவதற்குப் பெரிய ஆறுகளும் தேவையான நீர்வரத்தும் இல்லை. அணைகள் கட்ட நீர்வரத்து மற்றும் நிலவியலமைப்பு இரண்டும் தேவை. பாலாறு, காவிரி, சிறுவாணி ஆகிய ஆறுகளில் தமிழகத்துக்குத் தேவையான நீரை வழங்காத ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளைத் தட்டிக் கேட்க வேண்டிய உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் அமைதி காக்கின்றன. இப்படியிருக்கும் சூழ்நிலையில் வராத தண்ணீரை நம்பி எங்கே போய்ப் புதிய அணைகளைக் கட்டுவது?

அதிகரிக்கிறது கர்நாடகம்... சுருங்குகிறது தமிழகம்!

1971
-ல் கர்நாடகாவின் பாசனப் பரப்பு 6.68 லட்சம் ஏக்கர். இதையும் 25 லட்சம் ஏக்கருக்குமேல் கூட்டிட, கர்நாடகா பாசனத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆனால் 1971-ல் 28.20 லட்சம் ஏக்கராக இருந்த தமிழகப் பாசனப்பரப்பு 23.00 லட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது. இதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக 12 லட்சம் ஏக்கரில் முழுமையான பாசனம் செய்யப்படவில்லை. போதிய மழை பெய்யவில்லை என்பதைவிடக் கர்நாடகா காவிரி நீரைக் காலத்தே திறந்துவிடவில்லை என்பதே முக்கியக் காரணம்.

2017 ஜூன் முதல் ஜூலை வரை 10 டி.எம்.சி, 34 டி.எம்.சி மற்றும் 44 டி.எம்.சி தண்ணீரைத் கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றுவரை வெறும் 10 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. 2017, செப்டம்பருக்குள் எவ்வளவு திறந்து விடுவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்?

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நிலத்தடிநீர் இல்லை!

கா
விரி பாயும் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான பயிர்கள் நிலத்தடி நீரையே நம்பியுள்ளன. அதுவும் காவிரியில் கடந்த 5 ஆண்டுகளில் போதுமான நீரைக் கர்நாடகா திறந்து விடவில்லை. இதனால், நிலத்தடி நீரை உறிஞ்சியே விவசாயம் நடைபெறுகிறது.

2015-ம் ஆண்டு கணக்குப்படி தஞ்சை மாவட்டம் 150 சதவிகிதம் அளவுக்கும், திருவாரூர் மாவட்டம் 120 சதவிகிதம் அளவுக்கும், நாகை மாவட்டம் 140 சதவிகிதம் அளவுக்கும் இருப்புக்குமேலே நிலத்தடி நீரைப் பயன்படுத்தியுள்ளன. இதனாலேயே நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடல் (உப்பு) நீர் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை இருக்கும் ஊர்களுக்கு ஊடுருவிவிட்டது. நிலத்தடி நீர் உப்பாகிவிட்டதால், எந்த விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைத் கள விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை வைத்தே டெல்டா பாசனப் பகுதியில் மிகுதியான நிலத்தடி நீர் உள்ளது என்னும் கர்நாடகாவின் கூற்று எவ்வளவு பொய்யானது என அறிந்து கொள்ள முடியும்.