மகசூல்
நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பயிர்க் காப்பீட்டுக் குளறுபடி... தவிக்கும் விவசாயிகள்!

பயிர்க் காப்பீட்டுக் குளறுபடி... தவிக்கும் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயிர்க் காப்பீட்டுக் குளறுபடி... தவிக்கும் விவசாயிகள்!

பிரச்னைதுரை.நாகராஜன்

சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் கொடியேற்றி உரையாற்றிய தமிழக முதல்வர் ‘எடப்பாடி’ பழனிச்சாமி, “தமிழக அரசின் தொடர் முயற்சியால், புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 1,882 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது” என்று பெருமையாகச் சொன்னார். தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர். பிரதமரின் ‘பசல் பீமா யோஜனா’ திட்டத்தின் மூலம், பேரிடர் மேலாண்மையை நிறைவேற்றியதற்காக வேளாண்மைத்துறைக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பெற்றுக்கொண்டார்.    

பயிர்க் காப்பீட்டுக் குளறுபடி... தவிக்கும் விவசாயிகள்!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் கடும் வறட்சி தாண்டவமாடும் நிலையில் கடும் விரக்தியில் இருக்கிறார்கள் விவசாயிகள். வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இன்னமும் இழப்பீட்டுத் தொகை வந்தபாடில்லை. இந்நிலையில் முதல்வர் பெருமையாக மேடையில் பேசிவிட்டு வேளாண்மைத்துறைக்கு விருதும் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்ட பிரீமியம் தொகையை மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தவேயில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது பற்றி நம்மிடம் பேசிய ‘தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க’ச் செயலாளர் சுந்தர விமல்நாதன், “பெரம்பலூர் மாவட்டத்துல கரும்பு, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, சோளம்னு எல்லாப் பயிர்களுக்கும் பயிர்க் காப்பீடு பிரீமியம் கட்டிருக்காங்க, ஆனா, மாவட்ட நிர்வாகம்  மத்திய அரசின் ‘அக்ரிகல்ச்சுரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்துக்கு விவசாயிகளோட பிரீமியத்தைச் செலுத்தலை. இழப்பீடு கேட்டுப்போற விவசாயிகளுக்கு அவங்க கட்டின பிரீமியம் தொகையைத் திரும்பக்கொடுத்துட்டு இருக்குறாங்க. அவ்வளவு அலட்சியமா செயல்பட்டுருக்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயத்துறை. இதனால, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுருக்காங்க. இந்த மாதிரிக் குளறுபடிகள் நடந்ததுக்கு விவசாயத்துறைமேல நடவடிக்கை எடுக்காம விருது கொடுக்குறாங்க. இதை எங்க போய்ச் சொல்றதுனே தெரியலை. பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைச்சு நுகர்வோர் நீதிமன்றத்துக்குத்தான் போகணும்” என்றார்.    

பயிர்க் காப்பீட்டுக் குளறுபடி... தவிக்கும் விவசாயிகள்!

“பிரதமர் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒவ்வொரு மாவட்டத்துலயும் அந்தந்த மாவட்ட கலெக்டர்தான் தலைவர். திட்டத்தை மாவட்டம் முழுதும்கொண்டு சேர்க்க வேண்டியது கலெக்டரோட கடமை. ஆனா, பெரம்பலூர் கலெக்டரும் விவசாயத்துறையும் மெத்தனமா இருந்ததால இப்போ விவசாயிகளுக்குக் கடும் பாதிப்பு. இதுக்கு முன்னாடி இருந்த கலெக்டர் நந்தக்குமார் பண்ணுன குளறுபடிதான் இதுக்குக் காரணம். இப்போ அவர் மாறிப் போயிட்டார், புதுசா வந்திருக்குற கலெக்டர்கிட்ட முறையிட்டா, ‘எனக்கு எதுவும் தெரியாது’னு கையை விரிச்சுட்டார். அதனால, அனைத்து விவசாயச் சங்கங்களின் சார்பில் போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம்” என்றார், தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ராஜா சிதம்பரம்.

இந்த விவகாரம் பற்றிப் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சுதர்சனிடம் பேசினோம். “பொதுவாகக் காப்பீடுகளுக்குக் காரீப் (ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை), ரஃபி (அக்டோபர் மாதம் மார்ச் மாதம் வரை) என இரண்டு பருவங்கள் மட்டுமே உண்டு. அப்போதைய மாவட்ட கலெக்டராக இருந்த நந்தக்குமார் இரண்டு பருவங்களுக்கும் சேர்த்து விவசாயிகளுக்கு அதிக நிவாரணத் தொகை கிடைக்கும் என்று, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விவசாயிகளைப் பிரிமீயம் கட்டச் சொன்னார். உண்மையில் விவசாயிகளுக்கு நல்லது செய்யும் நோக்கில்தான் அப்படிச் செய்தார். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் முழுக் கவனம் செலுத்தி, பெரம்பலூர் மாவட்டம் முழுதும் அத்திட்டத்தைச் செயல்படுத்தினார். விவசாயிகளிடம் வசூலித்த தொகையை மத்திய அரசின் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பியபோது அவர்கள் பருவம் முடிந்துவிட்டது என்று சொல்லிப் பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே சம்பந்தப்பட்ட மத்திய அரசின் துறைகளுக்கும் தகவலைத் தெரியப்படுத்தினோம். ஆனால், அந்த அதிகாரிகள் எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிரீமியம் தொகையை விவசாயிகளிடம் திரும்பக் கொடுக்கச் சொல்லிவிட்டனர். அதனால்தான் பிரீமியம் தொகையைத் திரும்பக் கொடுத்து வருகிறோம். நாங்கள் மெத்தனப்போக்கில் செயல்படவில்லை”என்றார்.

“நந்தக்குமார் ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது விவசாயத்துக்காகப் பல திட்டங்களை அம்மாவட்டத்தில் செயல்படுத்தினார். பெரம்பலூர் மாவட்டத்துக்கு மாற்றலாகி வந்த பிறகு, இம்மாவட்டத்திலும் காளான் வளர்ப்பு உள்ளிட்ட பல திட்டங்களை விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுத்தினார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்போது, அக்காலத்துக்குள் விவசாயிகளின் பணத்தைச் செலுத்தாமல்விட்டது தவறுதான். நல்ல நோக்கிலேயே செயல்பட்டார் என்றாலும் தற்போது பாதிக்கப்பட்டிருப்பது எங்களைப் போன்ற விவசாயிகள்தானே” என்பதுதான் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது.