
மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்
சென்னைபோன்ற மாநகரங்களில் பரபரப்பாக இயங்கினாலும், பலரின் மனதில் ஓர் ஓரமாக மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் போன்ற எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது தங்களின் கனவை நனவாக்கிக்கொள்கிறார்கள். அப்படி ஒருவர்தான் மாலதி. தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்திவரும் மாலதி, மாடித்தோட்டத்தில் தனது விவசாயப் பயணத்தைத் துவங்கி தற்போது சொந்தமாக நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

இயற்கை விவசாயத்தின்மீது ஏற்பட்ட காதலால் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து, பல பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தகவல்களைத் திரட்டி வருகிறார் மாலதி. தாம்பரம் நகராட்சியில் மேடவாக்கத்துக்கு அருகிலுள்ள கோவிலாஞ்சேரியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். காலை வேளையில் கீரை வயலில் வேலை செய்துகொண்டிருந்த மாலதியைச் சந்தித்தோம்.
“12 வருஷத்துக்கு முன்னாடி என் வீட்டு கிச்சனுக்குச் சைடுல 2 அடி அகலம் 30 அடி நீளத்துல இருந்த காலி இடத்துலதான் முதல் முதல்ல விவசாயத்தை ஆரம்பிச்சேன். முருங்கை, தக்காளி, புடலை, திராட்சைனு அதுல செடிகளை நட்டேன்.
திராட்சையில நல்ல விளைச்சல் கிடைச்சது. அந்த விஷயம் நியூஸ் பேப்பர்ல கூட வந்துச்சு. அதனால எனக்கு இன்னும் ஆர்வம் அதிகமாகிடுச்சு. சில இயற்கை விவசாய ஆலோசகர்களைச் சந்திச்சு விவரங்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான் ஒண்ணே கால் ஏக்கர் நிலம் வாங்கி விவசாயத்தை ஆரம்பிச்சேன்.

இங்க பரவலா புடலை, சுரைக்காய், பரங்கிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், தக்காளி, மிளகாய், சோளம்னு விதைச்சுருக்கேன். வாழை, மா, தென்னை மரங்களும் இருக்கு. கீரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து 20 சென்ட் நிலத்துல 29 கீரைகளைச் சுழற்சி முறையில சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். பசுமை விகடன் மூலமா கத்துக்கிட்டுக் கால் ஏக்கர்ல ஒற்றை நாற்று முறையில் நெல் விதைச்சேன். அதுல நல்ல மகசூல் கிடைச்சது. மாட்டு எரு, மூலிகைப் பூச்சி விரட்டி, பஞ்சகவ்யானுதான் பயன்படுத்திட்டு இருக்கேன். இங்க விளையுற கீரை, காய்கறிகளைச் சென்னையில் இருக்குற ஆர்கானிக் கடைகள்லதான் விற்பனை செஞ்சுட்டு இருக்கேன்” என்று முன்கதை சொன்ன மாலதி தொடர்ந்தார்.
“இப்போ பயிர் பண்ணியிருக்குற 29 வகைக் கீரைகள்ல 20 வகைக் கீரைகள் அறுவடையில் இருக்கு. இன்னும் கீரைச் சாகுபடியை அதிகப்படுத்தலாம்னு இருக்கேன். வாரத்துல மூணு நாள் கீரைகளை அறுவடை செஞ்சு விற்பனை செய்றேன். செவ்வாய்க்கிழமை 300 கட்டுகள், வெள்ளிக்கிழமை 200 கட்டுகள், சனிக்கிழமை 200 கீரை கட்டுகள்னு விற்பனை செய்றேன். இது மூலமா வாரத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிது. வாரம் 4 ஆயிரம் ரூபாய் செலவாகும். அது போக, 20 சென்ட்ல இருந்து வாரம் 8 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கிது” என்ற மாலதி நிறைவாக,

“இங்க மழை நேரங்கள்ல கீரை பறிக்க முடியாது. கீரைகளுக்கு விலையும் குறைஞ்சுடும். ஆனா, அந்த நேரத்துல முடக்கத்தான், தூதுவளை, பொன்னாங்கன்னி, தண்டுக்கீரை மாதிரியான கீரைகளுக்கு விலை கிடைக்கும். இந்த மாதிரி திட்டமிட்டு விவசாயம் செய்றதாலதான் எனக்கு லாபகரமா இருக்கு” என்றார்.
தொடர்புக்கு: மாலதி, செல்போன்: 97910 72194
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!
20 சென்ட் நிலத்தில் கீரைச் சாகுபடி செய்யும் முறை குறித்து மாலதி சொன்ன விஷயங்கள் இங்கே...
தேர்வு செய்த 20 சென்ட் நிலத்தை நன்கு உழுது, தலா 200 கிலோ மண்புழு உரம், மாட்டு எரு ஆகியவற்றைத் தூவி ஓர் உழவு ஓட்ட வேண்டும். பிறகு நிலத்தின் அமைப்பைப் பொறுத்து விருப்பப்பட்ட முறையில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். பாத்திகளுக்கு இடையில் ஓர் அடி இடைவெளி விட வேண்டும். கீரை விதைகளோடு மணல் கலந்து, பாத்திகளில் தூவி, கையால் கிளறி விட்டுப் பாசனம் செய்ய வேண்டும். 6-ம் நாளுக்குமேல் விதைகள் முளைக்கத் தொடங்கும். அந்தச் சமயத்தில் களைகளை அகற்ற வேண்டும். 7 நாள்களுக்கு ஒரு முறை 40 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விடவேண்டும். ஒரே முறை அறுவடையாகும் கீரை வகைகளை 20 நாள்கள் முதல் 25 நாள்களுக்குள் அறுவடை செய்து விடலாம். தொடர் மகசூல் கொடுக்கும் கீரை வகைகளில் 30-ம் நாளுக்குமேல் அறுவடையை ஆரம்பித்து ஆறு மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்.
கல்லூரி மாணவிகளுக்கு விவசாயப் பயிற்சி
சென்னை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை தாவரவியல் பயிலும் மாணவிகளில் 13 பேரை மாலதியின் பண்ணைக்கு அழைத்துச்சென்று ‘பசுமை விகடன்’ சார்பில் விவசாயப்பயிற்சி கொடுத்தோம். காலை முதல் மாலை வரை மாணவிகள் மிக ஆர்வத்துடன் கீரை மற்றும் காய்கறிச் சாகுபடி குறித்த விவரங்களை அறிந்துகொண்டனர். அனைவரும், வயலில் இறங்கிப் பரங்கி விதைகளை நடவுசெய்தும் அசத்தினார்கள்.