நிச்சய வருமானம் கொடுக்கும் நேந்திரன் வாழை - 1 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 3 லட்சம் லாபம்!

மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்
உலகளவில் அதிகமானோர் விரும்பி உண்ணும் பழம் வாழைப்பழம்தான். தமிழில் ‘பழம்’ என்றாலே வாழைப்பழம் என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பெற்றிருக்கும் பழம், வாழைப்பழம்.

பலவித மருத்துவக் குணங்களைக் கொண்டிருப்பதால்தான் அதிகமானோர் விரும்பி வாங்கும் பழமாக இது இருக்கிறது. உண்பவர்களை உடல் ரீதியாக ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு தன்னைச் சாகுபடி செய்யும் விவசாயிகளையும் பொருளாதார ரீதியாக நன்கு வாழ வைத்துக்கொண்டிருக்கிறது வாழை. அதனால்தான், தண்ணீர் வளம், மண் வளம் கொண்டிருக்கும் பெரும்பாலான விவசாயிகள் வாழைச் சாகுபடியில் ஈடுபடுகிறார்கள்.
ரஸ்தாளி, பூவன், கற்பூரவல்லி, செவ்வாழை, மலை வாழை... என வாழையில் பல வகை இருந்தாலும் அவற்றில் சுவையிலும் வடிவத்திலும் தனித்தன்மை பெற்றுள்ளது நேந்திரன் வாழை. நேந்திரன் வாழையின் தோல் முழுவதுமாகக் கருத்துப்போனாலும் சுவை மாறாது. நன்கு பழுத்த பிறகும்கூட ஐந்து நாள்கள் வரை இருப்புவைக்க முடியும். கேரள மக்கள் விரும்பி உண்பது நேந்திரன் வாழையைத்தான்.
மேலும், அனைவரும் விரும்பும் சுவையான நொறுக்குத் தீனியான சிப்ஸ் தயாரிக்க நேந்திரன் வாழைக்காய்கள்தான் உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்படித் தேவைகள் அதிகம் இருப்பதால், நல்ல சந்தை வாய்ப்பும் இருக்கிறது நேந்திரன் வாழைக்கு. அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, நேந்திரன் வாழையை இயற்கை முறையில் தொடர்ந்து சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசேகரன்.

திருச்செந்தூர் தாலூகாவில் உள்ள குரும்பூர் கிராமத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வள்ளிவிளை கிராமம். இங்குதான் ஜெயசேகரனின் வாழைத் தோட்டம் உள்ளது. வாழை அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜெயசேகரனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாக வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.
“பிறந்தது வளர்ந்து எல்லாம் இந்தக் கிராமத்துலதான். விவசாயம்தான் குடும்பத்தொழில். அப்பா நெல், வாழைனு சாகுபடி செய்வாங்க. நான் ஸ்கூல், காலேஜ்ல படிக்கிறப்பவே களை எடுக்குறது, வாழை குலை வெட்டுறது, மார்க்கெட்டுக்குக் கொண்டு போகுறதுன்னு எல்லா வேலைகளையும் செய்வேன். அப்போ ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் செஞ்சோம். ஒரு கட்டத்துல மகசூலும் குறைஞ்சு போச்சு. தண்ணியும் பத்தாக்குறையாகிடுச்சு. அதனால தண்ணி இருக்கும்போது ஏதாவது விவசாயம் செய்வோம். மீதி நேரத்துல நிலத்தைச் சும்மா போட்டுடுவோம். அந்தச் சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ புத்தகம் வெளி வந்துச்சு. அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்.

அப்போ பசுமை விகடன்ல ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி பத்தின அறிவிப்பு வந்துருந்துச்சு. திண்டுக்கல்ல நடந்த அந்தப் பயிற்சியில நான் கலந்துக்கிட்டேன். சுபாஷ் பாலேக்கர் சொன்ன விஷயங்களைக் கேட்டப்புறம்தான், ‘நம்ம நிலத்துல மகசூல் குறைஞ்சதுக்கு அதிகப்படியான ரசாயன உரம்தான் காரணம்’னு புரிஞ்சுக்கிட்டேன். இன்னும் சொல்லப்போனா விவசாயம் சம்பந்தமான என்னோட பல நாள் கேள்விகளுக்கு அங்க விடை கிடைச்சது.
பயிற்சியில கத்துக்கிட்ட விஷயங்களை அப்படியே அப்பாகிட்ட சொன்னப்போ அவர் ‘இயற்கை விவசாயமெல்லாம் சரிப்பட்டு வராது’னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் அப்பாவும் நானும் சேர்ந்து ரசாயனம் போட்டுத்தான் விவசாயம் செஞ்சுட்டு இருந்தோம். ஆனா, ‘இயற்கை விவசாயம் செஞ்சாத்தான் ஜெயிக்க முடியும்’னு நான் நம்பினேன்.
அதுக்கடுத்து ஈரோட்டுல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். ஆனா, அப்பா ஒத்துலைங்கிறதால உடனடியா ஜீரோ பட்ஜெட் முறையில விவசாயம் செய்ய முடியலை. அப்பாகிட்ட தொடர்ந்து பேசுனபிறகு, 2011-ம் வருஷம் எனக்குக் கொஞ்சம் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தார். அதுல ஒரு ஏக்கர் நிலத்துல ஜீரோ பட்ஜெட் முறையில ரெட்லேடி பப்பாளி சாகுபடி செஞ்சேன். அதுல நல்ல மகசூல் கிடைச்சது. ஆனாலும் அப்பா திருப்திப்படலை.
அடுத்து ஒன்றரை ஏக்கர் நிலத்துல நாடன், நேந்திரன், ரஸ்தாலின்னு சாகுபடி செஞ்சேன். ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறையில நல்ல தரமா வாழை விளைஞ்சதைப் பார்த்ததும் அப்பாவுக்கு முழு நம்பிக்கை வந்துடுச்சு. அப்போயிருந்து இப்போ வரைக்கும் இயற்கை முறையிலதான் வாழை விவசாயம் செய்றோம்.

ஜீரோபட்ஜெட் தொழில்நுட்பத்தோட, இயற்கை விவசாய நுட்பங்களான மீன் அமினோ அமிலம், நுண்ணுயிர் உரங்கள்னு முழு இயற்கை முறையிலதான் விவசாயம் செஞ்சுட்டு இருக்கோம். இயற்கையில விளையுற நேந்திரன் வாழை அவ்வளவு ருசியா இருக்கு” என்று சொன்ன ஜெயசேகரன், குலையிலேயே பழுத்திருந்த ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்தார். சுவை அருமையாக இருந்தது.
தொடர்ந்து பேசிய ஜெயசேகரன், “இது மொத்தம் 5 ஏக்கர் நிலம். முழுக்க வண்டல் மண்தான். ரெண்டு ஏக்கர் நிலத்துல நாடன் வாழை, ஒரு ஏக்கர் நிலத்துல ரஸ்தாலி, ஒரு ஏக்கர் நிலத்துல ஏலக்கின்னு போட்டு அறுவடை முடிஞ்சாச்சு. இப்போ ஒரு ஏக்கர் நிலத்துல இருக்குற நேந்திரன் அறுவடையில் இருக்கு. நேந்திரன் வாழை நட்ட உடனே ஊடுபயிரா தட்டைப் பயறையும் மக்காச்சோளத்தையும் விதைச்சு விட்டேன். ரெண்டு மாசத்துல 105 கிலோ தட்டைப்பயறு கிடைச்சது. மூணு மாசத்துல 302 கிலோ மக்காச்சோளம் கிடைச்சது. ரெண்டையும் வீட்டுத் தேவைக்காக வெச்சுக்கிட்டேன்.
இயற்கைக்கு மாறின பிறகுதான் திருப்தியா விவசாயம் செய்றோம். விளைச்சலும் நல்லா இருக்குது. தரமான பொருளா இருக்குறதால நல்ல விலையும் கிடைக்கிது. பழம் தரமா இருக்குறதால நாகர்கோவில் வியாபாரிகள், கேரள வியாபாரிகள் எல்லாம் தோட்டத்துக்கே தேடி வந்து எடை போட்டு வாங்கிக்கிறாங்க. அதனால, கமிஷன் கடைக்குக் கொண்டுபோற செலவு, கமிஷன்னு எந்தச் செலவும் இல்லை. அறுவடைச் செலவு மட்டும்தான். அதனால, லாபம் அதிகமாக் கிடைக்கிது” என்ற ஜெயசேகரன் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“மொத்தம் 1,200 மரங்கள் இருக்கு. அதுல எப்படியும் நூறு, இருநூறு குலைகள் சல்லுக்காய்களாவும் (சிறிய அளவிலானவை), வெடிப்புவிட்ட காய்களாவும் ஆயிடும். அதெல்லாம் விலைபோகாது. ஆயிரம் குலைகள் அளவுக்குத்தான் தரமா விளையும். மொத்தம் 1,200 மரங்கள்ல இருந்து தரமான குலைகளா 1,080 குலைகள்தான் கிடைச்சது. குலைகள் குறைஞ்சபட்சமா பத்து கிலோவும் அதிகபட்சமா பதினேழு கிலோ வரையும் இருந்தது. மொத்தமா 1,080 குலைகளும் சேர்த்து 13,520 கிலோ இருந்தது. ஒரு கிலோ நேந்திரன் வாழைக்கு, குறைஞ்சபட்சமா 25 ரூபாயும் அதிகபட்சமா 42 ரூபாய் வரையும் விலை கிடைச்சது.
மொத்தம் 13,520 கிலோ வாழையை விற்பனை செஞ்சது மூலமா சுமார் 3,99,600 ரூபாய் வருமானம் கிடைச்சது. உழவுல இருந்து அறுவடை வரை 94,800 ரூபாய் செலவாச்சு. செலவு போக, 3,04,800 ரூபாய் லாபமாக் கிடைச்சுருக்கு” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடை கொடுத்தார்.
தொடர்புக்கு: ஜெயசேகரன், செல்போன்: 76678 56578
இப்படித்தான் சாகுபடி செய்யணும்
ஒரு ஏக்கர் பரப்பில் நேந்திரன் ரக வாழை சாகுபடி செய்யும் விதம் குறித்து ஜெயசேகரன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...
நேந்திரன் வாழைக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நடவுக்கு ஒரு மாதம் முன்பு தேர்வு செய்த ஓர் ஏக்கர் நிலத்தை டில்லர்மூலம் உழுது ஒரு வாரம் காயவிட வேண்டும். பிறகு ரொட்டவேட்டர்மூலம் உழுது காயவிட வேண்டும். இப்படிக் காயவிட்டால், களைகள் மற்றும் பூச்சிகள் கட்டுப்படும். பிறகு சொட்டு நீர்க் குழாய்களை அமைத்துவிட்டு விதைக்கிழங்கை ஊன்றும் அளவு அகலத்தில் முக்கால் அடி ஆழத்துக்குக் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஓர் ஏக்கர் நிலத்தில் 1,200 குழிகள் வரை எடுக்க முடியும். குழிகளை மூன்று நாள்கள் காயவிட்டு விதைக்கிழங்கை ஊன்ற வேண்டும்.
ஒன்றரை கிலோ முதல் இரண்டு கிலோ வரை எடை இருக்கும் தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வுசெய்ய வேண்டும். அதேபோலக் கிழங்கில் முளை விட்டிருக்கும் இலைகள் ஈட்டிபோல இருக்க வேண்டும். கிழங்குகளைப் பீஜாமிர்தக் கரைசலில் மூழ்க வைத்து எடுத்து ஓலைப்பாயில் பரப்பி 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு அவற்றைக் குழிக்குள் ஊன்றித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கிழங்கு ஊன்றிய 3-ம் நாள், குழிக்குள் காற்று போகாதவாறு மண்ணை அழுத்திவிட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விரும்புபவர்கள் தட்டைப்பயறு, மக்காச்சோளம் போன்ற வாழைக்கு ஒத்த குறுகிய காலப் பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். குறிப்பாகத் தட்டைப்பயறுபோன்ற பயிர்களைச் சாகுபடி செய்தால் காற்றில் உள்ள நைட்ரஜன் கிரகிக்கப்பட்டு மண்ணில் நிலைநிறுத்தப்படும். மக்காச்சோளத்தின் வேரிலுள்ள ஒரு வகை நுண்ணுயிரி மண்ணில் உள்ள பாஸ்பேட் சத்தை வாழையின் வேர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும்படி மாற்றிக்கொடுக்கும். மேலும், இவை உயிர் மூடாக்காகவும் இருந்து களைகளையும் கட்டுப்படுத்தும். ஊடுபயிர்களை அறுவடைசெய்த பிறகு, களைகள் மண்டுவதைப் பொறுத்து அவற்றை அகற்ற வேண்டும்.
கிழங்கு நடவுசெய்த 21-ம் நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒரு முறை, 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 30-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 1லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து கைத்தெளிப்பான்மூலம் தெளித்து வர வேண்டும். நடவுசெய்த 4-ம் மாதத்துக்குப் பிறகு 15 நாள்களுக்கு ஒரு முறை, 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி மீன் அமினோ அமிலத்தைக் கலந்து கைத்தெளிப்பான்மூலம் தெளித்து வர வேண்டும். ஜீவாமிர்தம் தெளித்து ஒருவார இடைவெளியில் மீன் அமினோ அமிலம் தெளிப்பதுபோல அட்டவணையை அமைத்துக்கொள்ள வேண்டும். 5-ம் மாத முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில் நவதானியக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 6-மாதம் குலை தள்ளும் பருவம் என்பதால், மோர்க்கரைசலைத் தெளிக்க வேண்டும். குலை தள்ளிய பிறகு வாழை மரங்கள் சாயாமல் இருக்க, மரக்கட்டைகளால் முட்டுக்கொடுக்க வேண்டும். தொடர்ந்து ஊட்டக்கரைசல்களைக் கொடுத்து வந்தால், 9-ம் மாதத்துக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராகிவிடும்.
பீஜாமிர்தம்
நிழற்பாங்கான இடத்தில் ஒரு சிமெண்ட் தொட்டியை வைத்து, அதனுள் 50 லிட்டர் நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர், 40 கிலோ பசுமாட்டுச் சாணம், 1 கிலோ சுண்ணாம்பு பொடி, 1 கைப்பிடி நிலத்து மண், 200 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை இட்டுக் கடிகாரச் சுற்றில் கலக்க வேண்டும்.
ஒருநாள் முழுவதும் இப்படி வைத்துக் காலை, மதியம், மாலை எனக் கலக்கி வந்தால், பீஜாமிர்தம் தயார். இக்கரைசலில் விதை நேர்த்தி செய்தால் வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
ஜீவாமிர்தம்
200 லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் 10 கிலோ பசுமாட்டுச் சாணம், 8 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர், 2 கிலோ நாட்டுச்சர்க்கரை, 2 கிலோ தட்டைப்பயறு மாவு, ஒரு கைப்பிடி நிலத்து மண் ஆகியவற்றை இட வேண்டும். டிரம் நிரம்பும் வரை தண்ணீர் சேர்த்துக் கடிகாரச் சுற்றில் கலக்க வேண்டும். தினமும் மூன்று வேளைகள் என இரண்டு நாள்கள் கலக்கி வந்தால் ஜீவாமிர்தம் தயார்.
மோர்க்கரைசல்
20 லிட்டர் பசும்பாலைக் காய்ச்சி உறை ஊற்றினால் 12 லிட்டர் தயிர் கிடைக்கும். இதைக் கடைந்து தண்ணீர் சேர்த்து 24 லிட்டர் அளவு மோராக்கிக்கொள்ள வேண்டும். பிறகு மோரை ஒரு வாரம் வரை புளிக்கவிட்டு 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் புளித்த மோர் எனக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
தண்டுத்துளைப்பான்... கவனம்
குலை தள்ளும் பருவத்தில் வாழை மரத் தண்டில் தண்டுத்துளைப்பான் தாக்கக்கூடும். தண்டில் துளை ஏற்பட்டு பிசின் போன்ற திரவம் வடிந்தால் தண்டுத்துளைப்பான் தாக்கியுள்ளது என அர்த்தம்.
10 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ வேப்பங்கொட்டைத்தூள், அரைக் கிலோ பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் எனக் கலந்து குலை தள்ளும் பருவத்தில் 5 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தால், தண்டுத்துளைப்பான் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
நவதானியக் கரைசல்
பாசிப்பயறு, உளுந்து, கொண்டைக்கடலை, மொச்சை, கானம், கம்பு, எள், தட்டைப்பயறு, கோதுமை ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் எள்ளை மட்டும் தனியாகவும் மற்றவற்றை ஒன்றாகச் சேர்த்தும் முளைகட்டவிட வேண்டும். எள் முளைக்க ஒரு நாள் கூடுதலாக ஆகும் என்பதால்தான் எள்ளைத் தனியாக, ஒரு நாள் முன்னதாகவே முளைகட்டவிட வேண்டும்.
அனைத்தும் முளைவிட்ட பிறகு, மாலை நேரத்தில் அவற்றை எடுத்து மொத்தமாகச் சேர்த்து ஆட்டு உரலில் கூழ் பதத்துக்கு ஆட்ட வேண்டும். இக்கூழை 190 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் சேர்த்துக் கலந்து இரவு முழுவதும் வைத்திருந்தால் நவதானியக்கரைசல் தயாராகிவிடும். இதை வடிகட்டி மாலை நேரத்தில் வெயில் இறங்கிய பிறகு, கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
மீன் அமினோ அமிலம்
1 கிலோ மீன் கழிவை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு அதன்மீது 1 கிலோ நாட்டுச்சர்க்கரையைத் தூவி காற்றுப்புகாதவாறு 35 நாள்கள் மூடி வைத்திருந்தால் மீன் அமினோ அமிலம் தயார். 35 நாள்கள் கழித்துத் திறந்து பார்க்கும்போது பழ வாசனை வந்தால் கரைசல் சரியான முறையில் தயாராகியிருக்கிறது என அர்த்தம்.
வாடல்நோய்க்குச் சூடோமோனஸ்
நடவு செய்த 3-ம் மாதத்துக்குமேல் வாழைக்கன்றின் இலைகள் மஞ்சள் நிறமாகவும் கன்று சுருங்கியும் காணப்பட்டால், வாடல்நோய் தாக்கியுள்ளது என அர்த்தம். இந்நோய் தாக்கினால் கன்று பட்டுப்போய்ச் சரிந்து விடும். நடவு செய்த 3, 4 மற்றும் 5-ம் மாதங்களில் செயலூட்டப்பட்ட சூடோமோனஸ் கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட்டால் வாடல் நோய் தாக்காது.
200 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி 1 கிலோ சூடோமோனஸ், 1 கிலோ நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்தால் செயலூட்டப்பட்ட சூடோமோனஸ் கரைசல் தயாராகிவிடும். இதையும் மூன்று வேளைகளும் கலக்கிவிட வேண்டும்.