Published:Updated:

விளையும் விலையும்! - 13

விளையும் விலையும்
பிரீமியம் ஸ்டோரி
News
விளையும் விலையும் ( விளையும் விலையும் )

விவசாயிகளுக்கு உதவும் ஆர்கானிக் சந்தைகள்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

‘முதலில் ஆசை காட்டி உள்ளிழுக்க வேண்டும். பிறகு அடிமையாக்க வேண்டும்’- இதுதான் பெருநிறுவனங்களின் சித்தாந்தம். மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் இப்படிச் செயல்பட்டுதான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் விவசாயிகளுக்கு உண்மையிலேயே உதவும் மாற்று வேளாண் சந்தைகளைக் கட்டமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஏற்கெனவே சில வெற்றிகரமான மாற்றுச்சந்தைகளைப் பற்றிப் பார்த்திருக்கிறோம்.  

விளையும் விலையும்! - 13

மாற்று வேளாண் சந்தையில் விளைபொருள் சந்தைக்கு வந்த பிறகு விற்பனைப் பணிகள் தொடங்குவதில்லை. அது பயிர் உற்பத்தியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. இடுபொருள்கள், சாகுபடி முறை, அறுவடை முறை என அனைத்திலுமே கவனம் செலுத்த வேண்டியது, அவசியம்.

தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ‘சிட்லிங்கி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ பற்றிப் ‘பசுமை விகடன்’ இதழில் ஒரு குறுந்தொடர் வெளியாகி வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றது. சிட்லிங்கியில் நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயிகள் ஒன்றிணைந்து விதைப்பிலிருந்து விற்பனை வரை கூட்டு முயற்சியால் சாதனை படைத்துள்ளனர்.

விளையும் விலையும்! - 13இப்பகுதியில், கிட்டத்தட்ட 1000 ஏக்கர் பரப்புக்கும் அதிகமான நிலம் இயற்கை விவசாயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கூட்டமைப்பிலுள்ள 90 சதவிகிதத்துக்கும் மேலான விவசாயிகள், சிறு விவசாயிகள்தான். சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசி ரகங்கள், காய்கறிகள், கீரைகள் என அவர்களுக்குத் தேவயானவற்றில் 70 சதவிகித அளவு உணவுப்பொருள்களை அவர்களே விளைவித்து உண்டு ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்களது தேவைபோக மீதியிருப்பதைத்தான் பதப்படுத்தி மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறார்கள். இதனால், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதோடு உள்ளூர்ப் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. இதுதான் மாற்றுச்சந்தைக்கான ஆகச்சிறந்த உதாரணம்.    

விளையும் விலையும்! - 13

சிட்லிங்கியில் நான் ஒரு ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, அந்த விவசாயிகளுக்கு மகசூல் கணக்கைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆழந்து கவனித்தபோதுதான், அவர்கள் விளையும் பொருள்களை எடைபோடுவதேயில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். எவ்வளவு விளைந்தாலும் அப்படியே மூட்டை பிடித்துச் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். விற்பனைக்குச் செல்லும் விளைபொருள்களை மட்டும்தான் எடை போட்டு அனுப்புகிறார்கள். அந்த விவசாயிகள், விளைச்சல் அளவைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. அவர்கள், இயற்கையில் விளைந்த ஆரோக்கியமான உணவை உண்பதால், மருத்துவமனைக்குச் செல்வதும் அரிதாகத்தான் இருக்கிறது.

விளையும் விலையும்! - 13

இதேபோலச் சிறப்பாகச் செயல்படும் இன்னொரு கூட்டமைப்பு, ஆந்திர மாநிலத்தில் இயங்கி வரும் ‘திம்பக்து கலெக்டிவ்’ எனும் கூட்டமைப்பு. இது வறட்சிப் பகுதியான அனந்தப்பூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. வறட்சியால் தவித்து வந்த நூற்றுக் கணக்கான விவசாயிகளைத் தற்சார்புள்ளவர்களாகவும் தன்னிறைவு கொண்டவர்களாகவும் மாற்றியுள்ளது இந்த அமைப்பு. இந்த அமைப்பின் கூட்டுறவுச் சங்கமான ‘தரணி’ நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயுள்ளது. சென்ற ஆண்டில் 550 விவசாயிகளிடமிருந்து 356 டன் அளவுக்கு 1 கோடியே 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களைக் கொள்முதல் செய்துள்ளது.    

‘100 % ஆர்கானிக்’ என்ற கொள்கையுடன் செயல்படும் தரணி அமைப்பில் 2,103 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பு அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள 3 ஒன்றியங்களில் உள்ள 60 கிராமங்களில் பணி செய்கிறது. தரணி, உள்ளூர்ப் பொருளாதாரத்தை உண்மையிலேயே செழிக்கச் செய்கிறது. இதுவரை, 6 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை விவசாயிகளுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயைப் பெண்களுக்கும் ஊக்கத் தொகையாகக் கொடுத்திருக்கிறது.  

விளையும் விலையும்! - 13

உள்ளூர்ப் பொருளாதாரத்தில் எவ்வளவு வருமானம் வருகிறது என்பதுடன், எந்த விஷயங்களுக்காகச் செலவாகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. ‘நல்ல கீரை’ ஜெகன் சில வருடங்களுக்குமுன் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் சர்வே ஒன்றை மேற்கொண்டார். 115 வீடுகளில் செய்யப்பட்ட சர்வேயின் படி, முக்கியச் செலவுகளின் பட்டியலின் முதல் மூன்று இடங்களை முறையே ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி, ஆங்கில மருந்துகள் மற்றும் டாஸ்மாக் ஆகியவை பிடித்தன. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய். இந்தப் பணம் முழுக்கச் சில பெரு நிறுவனங்களுக்குத்தான் செல்கின்றன என்று அழுத்திச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதுதான் இன்றைய வேளாண் பொருளாதாரத்தின் நிலை.

இயற்கை வேளாண்மையை எடுத்துக் கொள்ளுங்கள். இடுபொருட்களுக்கோ பயிர் வளர்ப்பிற்கோ ஒருவர் சந்தையைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. செலவும் குறைவு. விளைபொருட்கள் உள்ளூரிலேயே பதப்படுத்தப்பட்டு மதிப்பு கூட்டப்பட்டால், மக்களின் வாழ்வாதாரமும் நஞ்சற்ற உணவை உண்பதால் ஆரோக்யமும் பெருகும். மருத்துவச் செலவு குறையும். இந்தக் கனவு சாத்தியப்பட வேண்டுமானால், மாற்றுச்சந்தை அமைக்க கூட்டு முயற்சி, பண்ணையிலேயே இடுபொருள்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டு மையங்கள், சமூகச் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் அண்மைச் சந்தை ஆகியவை அவசியம். இவையனைத்தும் இருந்ததால்தான் மும்பையின் ‘ஹரிபரி டோக்ரி’ பெல்காமின் ‘இயற்கைச் சங்கம்’, சிட்லிங்கி, திம்பக்து ஆகியவை வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் மக்கள் பிரச்னைகளுக்கான ஆய்வு மற்றும் பரப்புரை செய்யும் மையமான ‘தணல்’ அமைப்பு, 2003-ம் ஆண்டிலிருந்து இயற்கைச் சந்தையாகவும் செயல்படுகிறது. 2 பெண்கள் குழு, சில பகுதி நேர விவசாயிகள், பத்து நுகர்வோர் ஆகியோரைக்கொண்டு தன்னுடைய ‘ஆர்கானிக் பஜாரை’த் தொடங்கியது தணல். அந்தச் சமயத்தில் திருவனந்தபுரத்தில் வேறு இயற்கை அங்காடிகள் எதுவுமில்லை. ஆரம்பத்தில் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை மட்டும் செயல்படும் மாதச்சந்தையாக இருந்தது.   

விளையும் விலையும்! - 13

2007-ம் ஆண்டில் வாரம் இரு முறைச் சந்தையாக மாறியது. தற்போது வாரத்தில் ஆறு நாள்கள் செயல்படுகிறது. மேலும், மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையில் சிறப்புச் சந்தை நடத்தப்படுகிறது. அது திருவனந்தபுரத்தில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சூழலுக்குத் தீங்கில்லாத மாற்றுச் சந்தை, உயர்தர இயற்கை உணவுப் பொருள்களை நுகர்வோருக்குக் கொண்டு சேர்த்தல், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உறுதி செய்தல், உற்பத்தியாளர்-நுகர்வோர்க்கு இடையில் நல்லுறவு ஏற்படுத்துதல், பல்லுயிர் சூழல் அடிப்படையிலான இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், நுகர்வோருக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளைத் தணல் செய்து வருகிறது.

தணல் அமைப்பு, திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள வெங்கனூர் என்ற ஊராட்சியில், சிறு-குறு விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்குத் திருப்ப மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான், இந்த ஆர்கானிக் பஜார். இயற்கைக்குத் திரும்பிய விவசாயிகள் தங்கள் பொருள்களை வழக்கமான சந்தையிலேயே விற்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால், விற்பனை எளிதாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, பிறகு துவங்கப்பட்டதுதான் ஆர்கானிக் பஜார். அவுரங்காபாத்திலுள்ள ‘ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு நிறுவன’மும் (Institute of Integrated Rural Development -IIRD ) தணலுக்கு வழிகாட்டுகிறது. கேரளா மாநிலத்தில், நஞ்சற்ற பாதுகாப்பான உணவு மீதான அக்கறை பெருகி வருவதும், தணலின் வெற்றிக்குக் காரணமாக அமைந்து விட்டது,

டோக்கன் முறையில் காய்கறிகள், பழங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. தேன், ஊறுகாய், ரசாயனமற்ற குளிர்பானங்கள், சட்னி பவுடர், வற்றல், மரச்செக்கு எண்ணெய், அரிசிப் பிட்டு மாவு எனப் பல பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு ‘பாலீதீன் கேரி பேக்’ கிடையாது. நுகர்வோரே பை கொண்டுவர வேண்டும். தேவைப்படுபவர்கள் அங்கு விற்பனை செய்யப்படும் துணிப்பைகளை வாங்கிக் கொள்ளலாம். எண்ணெய், தேன், ஊறுகாய் போன்றவை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இச்சந்தையில் சேகரமாகும் கழிவுகள் கம்போஸ்ட் உரமாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பயோகேஸ் உற்பத்தியும் உண்டு. தற்போது மூன்று பெண்கள் உள்பட ஆறு பேர்கொண்ட குழுவால் தணல் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது உற்பத்தியாளர்-நுகர்வோர் கூட்டுறவு சங்கமாக மாறியிருக்கும் தணலின் ஆர்கானிக் பஜார் 300 விவசாயிகள், 600 வாடிக்கையாளர்களுடன் பணி புரிகிறது.

- விரிவடையும்

விளையும் விலையும்! - 13

போட்டி போட்டு வாங்குகிறார்கள்!

யற்கைக்குத் திரும்பிய விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்க இயற்கைச் சந்தை இல்லாமலிருப்பதையும் வழக்கமான சந்தையிலேயே குறைந்த விலையில் தங்கள் பொருட்களை விற்க வேண்டிய சூழலிருப்பதையும் தணல் கண்டு கொண்டது. இதனால், இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வமும் விவசாயிகளுக்குக் குறையத் தொடங்கியது. அப்போது தணலிலிருந்த ஆய்வாளர் ஒருவர் கலிஃபோர்னியா சென்றிருந்தார்.

அங்கே மிகச் சிறப்பாகச் செயல்படும் இயற்கைச் சந்தைகளைப் பார்த்த பிறகுதான் ஆர்கானிக் பஜார் யோசனை தணலுக்கு உதித்தது. வெங்கனூர், விலாப்பில்சலா, பலராமபுரம், விழிஞம், கட்டகடா, நெய்யத்திங்கரா, அருவிக்கரா மற்றும் திருவனந்தபுரம் மாநாகராட்சி ஆகிய பகுதிகளே, தணலுக்கு இயற்கைக் காய்கறிகளை சப்ளை செய்கின்றன. தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பிற பொருட்கள் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலுள்ள இயற்கை விவசாயிகளிடமிருந்து வருகின்றன. குறிப்பாகக் காய்கறிகள், பழங்களை வாங்குவதற்கு மக்கள் மத்தியில் போட்டி, போடும் சூழ்நிலை உள்ளது. இதனால், வரிசை முறையில் டோக்கன் பெற்றுத்தான், இயற்கை விளைப்பொருள்களை வாங்கும் நிலையும் உருவாகியுள்ளது.