மகசூல்
நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000!

50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000!
பிரீமியம் ஸ்டோரி
News
50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000!

பல்லாண்டு பலன் கொடுக்கும் மலர்ச் சாகுபடி... மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்களில் முக்கியமானவை மலர்கள். காய்கறி மற்றும் கீரைகள் போன்ற பயிர்களும் தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்கள்தான் என்றாலும், அவற்றைவிட எளிதாக மலர்ச் சாகுபடி மேற்கொள்ள முடியும். மலர்ச் சாகுபடியில் ஒரு முறை நடவுசெய்துவிட்டுப் பல ஆண்டுகள் தொடர் மகசூல் எடுக்க முடியும். மேலும் சில சமயங்களில் மலர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக்கூட விலை கிடைக்கும். இப்படிப் பல காரணங்கள் இருப்பதால்தான், அனேக விவசாயிகள் மலர்ச் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சிவப்பு அரளியையும் நாட்டு ரோஜாவையும் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்பிரமணியன்.   

50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000!

சங்கரன்கோவிலிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியூர் கிராமத்தில்தான் சுப்பிரமணியனின் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம்.

நெசவிலிருந்து உழவுக்கு

“நெசவு, விவசாயம் ரெண்டும்தான் பூர்விகத்தொழில். முழுக்க நெல் சாகுபடிதான் செஞ்சோம். ஆரம்பத்துல குப்பை மட்டும்தான் போட்டுச் சாகுபடி செஞ்சோம். பசுமைப் புரட்சி வந்த பிறகு, நானும் ரசாயன உரம்போட ஆரம்பிச்சேன். அதுல வருஷா வருஷம் உரத்தோட அளவையும் பூச்சிக்கொல்லியையும் அதிகப்படுத்திட்டே போக வேண்டியிருந்துச்சு. அதோட தண்ணீரும் அதிகமாத் தேவைப்பட்டுச்சு. நிலமே இறுகிப்போச்சு. ஒரு கட்டத்துல செலவு கட்டுப்படியாகாம விவசாயத்தையே விட்டுட்டேன். 1998-ம் வருஷத்துல இருந்து 2008-ம் வருஷம் வரைக்கும் விவசாயமே செய்யலை. அண்ணன்கூடச் சேர்ந்து நெசவுத்தொழிலைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு கட்டத்துல நெசவுத்தொழிலும் நசிய ஆரம்பிச்சது. அப்போதான் என்னோட அண்ணன் மகாலிங்கம் ‘பசுமை விகடன்’ புத்தகத்தைக் கொடுத்து இயற்கை விவசாயத்தை ஆரம்பினு யோசனை சொன்னார்” என்ற சுப்பிரமணியன் தொடர்ந்தார்.

நம்பிக்கை கொடுத்த பசுமை விகடன்

“பசுமை விகடன்ல வெளிவந்த இயற்கை விவசாயக் கட்டுரைகளையும் இயற்கை விவசாயிகளின் அனுபவங்களையும் படிச்சப்போ ஒரு நம்பிக்கை வந்தது. வழி தெரியாம நடுக்காட்டுல நின்னவனுக்கு வழி காட்டினது மாதிரி இருந்துச்சு. உடனே ஒரு ஏக்கர் நிலத்துல குப்பை அடிச்சு இயற்கை முறையில சம்பங்கி சாகுபடி செஞ்சேன். தண்ணி பற்றாக்குறையால மகசூல் சொல்லிக்கிற மாதிரி இல்லை. அடுத்து பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுக்கிட்டுச் சிவப்பு அரளிப்பூவைச் சாகுபடி செஞ்சேன். அதுல நல்ல வருமானம் கிடைச்சது. அதோட இப்போ நாட்டு ரோஜாவையும் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.   

50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000!

இது மொத்தம் 4 ஏக்கர். கரிசல் மண் நிலம். இதுல இரண்டரை ஏக்கர் நிலத்துல 180 தென்னை மரங்கள் இருக்கு. ஐம்பது சென்ட் நிலத்துல சிவப்பு அரளியும் ஐம்பது சென்ட் நிலத்துல ரோஜாவும் சாகுபடி செய்திருக்கேன். ஐம்பது சென்ட் நிலத்தைச் செண்டுமல்லி நடவுக்காகத் தயார்படுத்திட்டு இருக்கேன். போன ரெண்டு வருஷமா செவ்வரளியும் ரோஜாவும் வருமானம் கொடுத்துட்டு இருக்கு.

அரளியை மொட்டாகப் பறிக்க வேண்டும்

ரெண்டு பூக்கள்லயுமே பங்குனி மாசத்துல இருந்து புரட்டாசி மாசம் வரைக்கும் அதிக மகசூல் கிடைக்கும். ஐப்பசி மாசத்துல இருந்து மார்கழி மாசம் வரைக்கும் உள்ள காலங்கள்ல மகசூல் குறைஞ்சுடும். இடைப்பட்ட மாசங்கள்ல நடுத்தரமா மகசூல் கிடைக்கும். சிவப்பு அரளியைச் சாயங்கால நேரத்துல மொட்டா பறிக்கணும். பூ விரிஞ்சுட்டா விலை குறைஞ்சுடும். சாயங்காலம் பறிச்சு மறுநாள் காலையில மார்கெட்டுக்குக் கொண்டுபோவேன். ரோஜாவைக் காலை நேரத்துல பறிக்கணும். ரோஜாவைப் பொறுத்தவரைக்கும் ஒரு நாள் பறிக்காம விட்டுட்டா அடுத்த நால் கூடப் பறிக்கலாம். ஆனா, அரளியை அன்னன்னிக்குப் பறிச்சுடணும்.

சிவப்பு அரளியில் குறைந்த பட்சமா 3 கிலோவும் அதிகபட்சமா 16 கிலோவும் தினசரி மகசூல் எடுத்துருக்கேன். ரோஜாவில் குறைந்தபட்சமா 2 கிலோவும் அதிகபட்சமா 10 கிலோவும் தினசரி மகசூல் எடுத்துருக்கேன். சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுலதான் பூக்களை விற்பனை செஞ்சுட்டு இருக்கேன்” என்ற சுப்பிரமணியன் நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.  

50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000!

15 ஆண்டுகள் தொடர் மகசூல்

“சிவப்பு அரளி, ரோஜா ரெண்டுமே பல்லாண்டுப்பயிர். ஒரு முறை நிலத்தைப் பண்படுத்தி நடவு செஞ்சுட்டா போதும். பதினஞ்சு வருஷத்துக்குமேல வருமானம் எடுக்கலாம். நான் ரெண்டு வருஷத்துக்குமேல வருமானம் எடுத்துட்டு இருக்கேன். கடைசி நாலு மாசத்துக்கான கணக்கைச் சொல்றேன். சிவப்பு அரளி எப்பவும் கிலோ 30 ரூபாய்க்குக் குறையாம விற்பனையாகும். ரோஜா எப்பவும் கிலோ 70 ரூபாய்க்குக் குறையாம விற்பனையாகும். முகூர்த்த நேரங்கள், திருவிழா நேரங்கள்ல நல்ல விலை கிடைக்கும். நான் ஒரு கிலோ அரளியை 300 ரூபாய் வரை விற்பனை செஞ்சுருக்கேன். அதேமாதிரி ரோஜாவுக்கு அதிகபட்ச விலையா கிலோவுக்கு 100 ரூபாய் கிடைச்சுருக்கு.

மே மாசம் ஒண்ணாம் தேதியில இருந்து இன்னிக்கு வரை (02.09.17), 897 கிலோ சிவப்பு அரளி கிடைச்சுருக்கு. அதை விற்பனை செஞ்சதுல சுமார் 74,580 ரூபாய் கிடைச்சுருக்கு. அதே மாதிரி இந்த நாலு மாசத்துல (01.05.17 - 02.09-17) 538 கிலோ ரோஜா மகசூல் கிடைச்சுருக்கு. அதை விற்பனை செஞ்சதுல சுமார் 45,090 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. ரெண்டுலயும் சேர்த்து சுமார் 1,19,670 ரூபாய் வருமானமாக் கிடைச்சுருக்கு.

தினமும் பூ பறிக்க 100 ரூபாய் கூலி கொடுக்கணும். அதுபோக இடுபொருள் செலவுதான். இந்த நாலு மாசத்துல பறிப்புக்கும் இடுபொருள் தெளிப்புக்கும் 16,700 ரூபாய் ஆகியிருக்கு. அதைகழிச்சா 1,02,970 ரூபாய் லாபமா நின்னுருக்கு. எப்படியும் மாசத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும். இப்போ தண்ணீர்ப் பற்றாக்குறை. அதனால மகசூல் குறைவுதான். அதுலேயே நிறைவான லாபம் கிடைச்சுடுது. மழை, தண்ணி நல்லா கிடைச்சதுன்னா நல்ல லாபம் எடுக்கலாம்” என்று சொல்லி நமக்கு விடைகொடுத்து விட்டு பூ மார்கெட்டுக்குக் கிளம்பத் தயாரானார், சுப்பிரமணியன்.

தொடர்புக்கு: சுப்பிரமணியன் செல்போன்: 97897-67808. 

இப்படித்தான் சாகுபடி செய்யணும்..!

50
சென்ட் பரப்பில் சிவப்பு அரளி மற்றும் 50 சென்ட் பரப்பில் ரோஜா சாகுபடி செய்வது குறித்துச் சுப்பிரமணியன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:   

50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000!

மலர்ச் சாகுபடியைப் பொறுத்த வரையில் பட்டம் கிடையாது. அதனால், பருவ மழைக்கு முந்தைய காலங்களில் நடவு செய்யலாம். தேர்வு செய்த 50 சென்ட் நிலத்தை ஒவ்வொரு உழவுக்கும் ஐந்து நாள்கள் இடைவெளிவிட்டு மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, 2 அடி ஆழம், 2 அடி விட்டத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பிறகு சொட்டு நீர்ப் பாசனக் குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும். குழி எடுத்த மறு நாள், ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ செம்மண், 10 கிலோ மட்கிய சாணம், அரைக் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட்டு 3 நாள்கள் ஆறவிட வேண்டும். பிறகு குழிக்கு ஒரு கன்று என மூன்று மாத வயதுடைய செவ்வரளிக் கன்றுகளை நடவுசெய்து குழியை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

கன்று நடவு செய்த 10-ம் நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பசுமாட்டுக் கோமியம் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். இது பூச்சிகளைத் தடுக்கும். கன்று நடவுசெய்த 20-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். நடவுசெய்த 35-ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை செடியைச் சுற்றிக் களைகளை அகற்றி 5 கிலோ மட்கிய எருவைத் தூவிவிட வேண்டும்.  

50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000!

நடவுசெய்த 3-ம் மாதத்தில் அரளிச் செடிகளில் லேசாக மொட்டு தென்படும். 4-ம் மாதத்தில் பூ பூக்கத் தொடங்கும். 7-ம் மாதத்துக்குப் பிறகு மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். தொடர்ந்து இதே முறையில் பராமரித்து வந்தால், 15 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம்.

ரோஜா:

அரளிக்குப் போலவே நிலத்தை உழுது தயார் செய்து, 2 அடி ஆழம், 2 அடி விட்டத்தில் குழிகள் எடுக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். நடவு, பராமரிப்பு, அனைத்தையும் அரளிக்குச் சொன்னது போலவே செய்துவர வேண்டும். ரோஜா நடவுசெய்த 3-ம் மாதத்தில் மொட்டுகள் தென்படும். 4-ம் மாதத்தில் பூக்களைப் பறிக்கத்துவங்கலாம். 9-ம் மாதத்துக்குமேல் மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை ரோஜாவில் மகசூல் எடுக்கலாம்.

கவாத்து அவசியம் !

டவுசெய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பருவ மழைக்கு முன்பாக அரளிச் செடியில் உயரமாக வளர்ந்த பக்கக் கிளைகளையும் மேல் கிளைகளையும் மட்டும் ஓர் அடி உயரத்துக்குக் கவாத்து செய்ய வேண்டும். பருவ மழைக்கு முன்பாக ரோஜா செடிகளை ஓர் அடி உயரம் மட்டும் இருக்குமாறு கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்வதால் பக்கக் கிளைகள் அதிகம் வளர்ந்து பூக்கள் அதிகமாகப் பூக்கும்.