
விழாகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

கடந்த ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை விதைகள் அமைப்பின் ஏற்பாட்டில் 48 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது இந்நிகழ்வு. இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள், வணிகர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு விதைப்பந்துகளை உருவாக்கினார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டை விதைகள் அமைப்பின் இணைச் செயலாளர் சிவநேசன், “நாற்பத்தெட்டு மணிநேரத்தில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 111 பந்துகள் உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தோம். அந்தச் சாதனை பல தரப்பினரின் பங்களிப்பால் சாத்தியமாகியுள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட நேரத்தில் அதிக எண்ணிக்கையில் இங்குதான் விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றிருக்கிறார்கள். விதைகள் வாங்க எங்கள் அமைப்பில் உள்ளவர்கள் இணைந்து 3 லட்ச ரூபாய் கொடுத்தார்கள். ஆனால், ஆச்சர்யப்படும் விதமாகப் பணத்தின் மதிப்பைவிட 40 லட்சம் விதைகள் எங்களைத் தேடி வந்தன.

ஒரு காலத்தில் பட்டுக்கோட்டையைச் சுற்றிலும் ஏராளமான காடுகள் இருந்தன. காலப்போக்கில் அவற்றில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. வனத்துறையினரிடம் ஆலோசித்து அந்தப் பகுதிகளில் விதைப்பந்துகளை வீச இருக்கிறோம். ஏரி, ஆற்றங்கரை, கல்லூரி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பொது இடங்களிலும் விதைப்பந்துகளை வீசி, மரங்களை வளர்க்கப்போகிறோம். தமிழகத்தின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் எங்களிடம் விதைப்பந்துகளை வாங்கிச் சென்று பரப்பலாம்” என்றார்.
தொடர்புக்கு, செல்போன்: 94864 80666