
ஓவியம்: ஹரன்
சைக்கிளில் மாட்டுக்குத் தேவையான தீவனப்புல்லை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். முன்னரே வந்திட்டிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘காய்கறி’ கண்ணம்மாவும், மேட்டுத்திட்டில் அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தனர். ஏரோட்டி வந்து சேர்ந்ததும், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கிவைத்தார் வாத்தியார்.

“மாடு, ஒட்டகம் மாதிரியான கால்நடைகளை இறைச்சிக்காகச் சந்தையில விற்பனை செய்றதுக்கு, மத்திய அரசாங்கம் புது விதிகளைக் கொண்டு வந்தது. அதனால, வட மாநிலங்கள்ல இருந்து மாடு வாங்கிட்டு வர்றது பெரிய பிரச்னையா இருந்துச்சு. வளர்ப்புக்காக மாடுகளை வாங்கிட்டுப் போறவங்களை எல்லாம் பசு ஆதரவாளர்கள் தடுத்துப் பிரச்னை பண்ணிட்டு இருந்தாங்க. இதனால, நிறைய விவசாயிகள் கலக்கத்துல இருந்தாங்க. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அதுக்கு இப்போ முற்றுப்புள்ளி வெச்சிருக்கு.
‘இந்தப் புது விதிகளை அமல்படுத்தறதுக்கு இடைக்காலத் தடை விதிக்கணும்’னு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வ கோமதி ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செஞ்சிருந்தாங்க. அதே மாதிரி, மதுரையைச் சேர்ந்த ‘ஆசிக் இலாஹி பாவா’ங்கிறவரும், இந்தப் புதிய விதிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்துல மனு போட்டிருந்தார். இதையடுத்து இந்தப் புது விதிகளை அமல்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிச்சிருந்தது.
இந்த வழக்கு விசாரணையப்போ ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ‘இப்போ இருக்குற புதிய விதிகள் தொடர்பாக, பல்வேறு கருத்துகள் கொண்ட மனுக்கள் மத்திய அரசுக்கு வந்துருக்கு. அதன்படி மறுபரிசீலனை செஞ்சு புதிய விதிகள் கொண்டு வரப்படும். அது வரைக்கும் புதிய விதிகள் அமல்படுத்தப்பட மாட்டாதுனு உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவிச்சிருக்கு’னு சொல்லி அதுக்கான ஆதாரங்களையும் காட்டினார். அதனால, ‘புதிய விதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் வரை, தற்போதைய விதிகளை அமல்படுத்தக் கூடாது. அதுவரை தடை தொடரும்’னு உத்தரவு போட்டு வழக்குகளை முடிச்சு வெச்சிருச்சு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. இப்போதான் கொஞ்சம் விவசாயிகளுக்கு நிம்மதி வந்துருக்கு” என்றார் வாத்தியார்.

“ஒரு சோகமான செய்திய்யா” என்று ஆரம்பித்த ஏரோட்டி, “திருப்பூர் மாவட்டம், பல்லடத்துக்குப் பக்கத்துல இருக்குற மலையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரி நாதன், ‘கோடக் மஹிந்த்ரா பேங்க்’ல டிராக்டர் கடன் வாங்கியிருந்துருக்கார். மொத்தக் கடன் தொகை 5 லட்ச ரூபாய்ல 3 லட்சம் ரூபாயைத் திருப்பிக் கட்டிட்டார். கடுமையான வறட்சியால மீதித் தவணையை அவரால கட்ட முடியலை. அதனால, டிராக்டரை ஜப்தி பண்றதுக்குப் பேங்க் முயற்சி செஞ்சிருக்கு. அதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்குப் போட்டிருக்கார் வெள்ளியங்கிரி நாதன். அந்த வழக்குல பேங்குக்குச் சாதகமா தீர்ப்பு வரவும், வசூல் படையை அனுப்பி வெள்ளியங்கிரி நாதனோட டிராக்டரை எடுத்துட்டு் போயிட்டாங்க வங்கி அலுவலர்கள். உடனே, அந்த வசூல் படை மேலயும் பேங்க் மேலயும் பல்லடம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துருக்கார் வெள்ளியங்கிரி நாதன். ஆனா, அந்தப் புகாரைப் போலீஸ்காரங்க வாங்காததால, போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நின்னே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடிச்சு தற்கொலை செஞ்சுக்கிட்டார் வெள்ளியங்கிரி நாதன். பாவமா இருக்கு” என்றார்.
“பேங்க்குகளுக்கு இதே வேலையாப் போச்சு. விவசாயிகளுக்கு ஆசை காட்டி லோன் கொடுத்துடுறாங்க. விவசாயிகளும் தன்னோட நிலை தெரியாம கடன் வாங்கிட்டு அவஸ்தைப் படுறாங்க. இன்னும் எத்தனை உயிர்களைப் பேங்க்காரங்க எடுக்கப்போறாங்களோ...” என்று கவலைப்பட்டார் காய்கறி.
வேகமாக இடம் வலமாகத் தலையாட்டிய ஏரோட்டி, “இந்த விவசாயி தற்கொலை செஞ்சிகிட்டத அறிஞ்ச விவசாய அமைப்புகள் திருப்பூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்காங்க. அங்கிருந்து கிளம்பி கோடக் மஹிந்த்ரா பேங்க்கை முற்றுகையிட்டிருக்காங்க. உஷாரான போலீசார் வங்கி சார்பாக வழக்கறிஞர் ஒருவரை வரவழைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. விவசாயிகள்கிட்ட பேசிய வங்கி தரப்பினர், ‘ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை விவசாயி வெள்ளியங்கிரியின் வீட்டிலேயே திரும்ப ஒப்படைப்பதாகவும், அவர் செலுத்த வேண்டிய மீதமுள்ள கடன்தொகையை ரத்து செய்துவிடுவதாகவும்’ உறுதியளிச்சிருக்காங்க. டிராக்டர் கிடைச்சிடுச்சி, போன உயிர் திரும்ப கிடைக்குமா?” என்று வருத்தப்பட்ட ஏரோட்டி தொடர்ந்தார்.
“கோதுமை மாவு இருந்தா மிஷின்ல போட்டுச் சப்பாத்தி செய்ய முடியும். ஆனா, கோதுமை மாவை மிஷின் மூலமா உற்பத்தி செய்ய முடியாது. ஒவ்வொரு விவசாயியும் அவனவன் தோட்டத்துல, அவன் வீட்டுக்குத் தேவையானதை மட்டும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சா அவ்வளவுதான். எல்லாரும் சோத்துக்குச் சிங்கி அடிக்கணும். இப்படியே போனா, அந்த நிலைமைதான் வரும்” என்று கோபாவேசமாகப் பொங்கினார். சற்று நேரம் அங்கு அமைதி நிலவ... அதைக் கலைக்கும் விதமாக, கூடையிலிருந்து ஆளுக்குக் கொஞ்சம் வறுத்த நிலக்கடலையையும் அச்சு வெல்லத்தையும் எடுத்துக் கொடுத்தார் காய்கறி.
“நிலக்கடலையில புரதச்சத்து அதிகம். இதைச் சாப்பிட்டா குளிர்ச்சியால ஏற்படுற ஆஸ்துமா நோய் ஓடிப்போயிடும். நெஞ்சுச் சளி நீங்கும். மாங்கனீஸ், பாஸ்பரஸ், தையாமின், நையாசின்னு நிறைய அத்தியாவசியமான சத்துகள் இதுல இருக்கு. இதைத் தொடர்ந்து சாப்பிட்டா தோல் பளபளப்பாகும். இது பல தொற்று நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை உடம்புக்குக் கொடுக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்ல உணவு. இதோட விலையும் குறைவு” என நிலக்கடலையின் பயன்களை விவரித்தார் காய்கறி.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் வாத்தியார்.
“கலைவாணன், பழனியப்பன் இவங்ககூட இன்னும் சில ஓய்வுபெற்ற வேளாண்மைத்துறை அலுவலர்கள் சேர்ந்து வருஷா வருஷம் மேட்டூர் அணையை எப்போ திறக்கணும்னு ஒரு பரிந்துரைக் கையேட்டை வெளியிடுவாங்க. பனிரெண்டு வருஷமா இவங்க கையேட்டை வெளியிட்டுட்டு இருக்காங்க. இந்த வருஷமும் தஞ்சாவூர்ல பரிந்துரைக் கையேடு வெளியிட்டுருக்காங்க. அந்தக் கையேட்டுல ‘இப்போ மேட்டூர் அணையில் தண்ணீர் அளவு அதிகரிச்சுட்டு இருக்கு. அதனால, காவிரிப் படுகைப் பகுதியில் நெல் சாகுபடி செய்யலாம். செப்டம்பர் மாசத்துக்குள்ள மத்தியக்கால நெல் ரகங்களை நேரடி விதைப்பா விதைக்கணும். நாற்று விட்டு நடவு செய்யும்போது, எதிர்பார்க்குற தண்ணீர் கிடைக்காட்டிச் சிக்கலாகிடும். அதனால, நேரடி விதைப்புதான் நல்லது. இந்த மாசத்துக்குள்ள விதைச்சாதான், பூக்குற பருவத்துல வடகிழக்குப் பருவமழை பெய்தாலும் பாதிப்பு இருக்காது. அதே மாதிரி, தண்ணீர் தட்டுப்பாடு இல்லாம, ஜனவரி மாசத்துல அறுவடைக்கு வந்துடும். அதனால, மேட்டூர் அணையை இப்போ திறக்கக் கூடாது. அணையில தண்ணீரைச் சேமிச்சு வெச்சுப் பயிருக்குத் தேவைப்படுற காலமான அக்டோபர் கடைசி வாரத்துல அணையைத் திறக்குறதுதான் நல்லது. விவசாயிகளும் அரசாங்கமும் இதைக் கருத்தில் எடுத்துக்கிட்டா பாதிப்பில்லாம நெல் சாகுபடி செய்யலாம்’னு சொல்லிருக்காங்க” என்றார்.
அந்த நேரத்தில், நிலத்தில் கட்டியிருந்த மாடுகள் கத்தவும், “இருங்கய்யா... வெயில் ஏறிப்போச்சு மாட்டுக்குத் தண்ணி காட்டிட்டு, நிழல்ல கட்டிப் புல்லை போட்டுட்டு வந்திடுறேன்” என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்து ஓட, மாநாடும் முடிவுக்கு வந்தது.
இந்த இதழில் ‘இ.எம்’ தொடர் இடம்பெறவில்லை.