
நாட்டு நடப்புஐஷ்வர்யா - படங்கள்: மீ.நிவேதன்
“டெல்லியில் விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்தை ‘கவன ஈர்ப்புப் போராட்டம்’ என்று விமர்சிக்கின்றன தேசிய ஊடகங்கள். கடன், வறட்சி, விலையில்லாமை என நாட்டின் 98 மில்லியன் விவசாயிகளின் பிரச்னையை வெறும் கவனம் ஈர்க்கும் நிலையில்தான் ஊடகங்கள் வைத்திருக்கின்றன” என்று குற்றம் சாட்டுகிறார் கிராமப்புறங்களுக்கான இதழாளர் மற்றும் எழுத்தாளர் சாய்நாத்.

மக்களுக்கான கிராமப்புற இந்தியாவின் காப்பகம் (People’s Archive For Rural India - PARI) என்கிற ஆன்லைன் இதழின் நிறுவன ஆசிரியரான சாய்நாத், அண்மையில் ‘பூவுலகின் நண்பர்கள்’ ஒருங்கிணைப்பில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கில் ‘விவசாய நெருக்கடிகளும் இந்திய ஊடகங்களும்’ என்கிற தலைப்பில் பேசினார். இதழியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ரவீந்திரன், கருத்தரங்கு நிகழ்வைத் துவக்கி வைத்தார்.
விவசாயிகள் பிரச்னை மக்களைச் சென்றடையாத காரணங்கள், விவசாயிகள் மீது ஊடகங்கள் காட்டும் அக்கறை போன்ற விஷயங்கள் குறித்துக் கருத்தரங்கில் பேசப்பட்டன.
கருத்தரங்கில் பேசிய சாய்நாத், “1980-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டங்களில் ஊடகத்துறையில் அரசியலுக்கும் விளையாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டன. 1980-ம் ஆண்டுக்கு பிறகான காலகட்டங்களிலிருந்து அந்த இடத்தை பொருளாதாரம் மற்றும் வணிகத்துறை குறித்தான தகவல்கள் பிடித்துக் கொண்டுள்ளன.
விவசாயம் குறித்து எழுதும் பத்திரிகையாளர்கள், பெரும்பாலும் விவசாயத்துறை அமைச்சர் குறித்து மட்டும்தான் எழுதுகின்றனர். விவசாயிகளின் மிக முக்கியப் பிரச்னையான கடன் குறித்து எழுதுவதில்லை. நாட்டின் முக்கியத் தேசியப் பத்திரிகைகள் தங்களது முதல்பக்கத்தில் வெறும் 0.67% மட்டுமே விவசாயிகள் பிரச்னை குறித்து எழுதியுள்ளன. அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 69% அளவு இருக்கும் கிராமப்புற மக்களைப் பற்றிய செய்தி முதல்பக்கத்தில் மிகக் குறைவான அளவில்தான் பேசப்படுகிறது. வெறும் வறட்சியின் காரணங்களால் மட்டும் தற்கொலை செய்துகொள்ளுவது இல்லை.

விவசாயிகள் தற்கொலை அதிகம் நடந்த மகாராஷ்டிராவின், விதர்பா பகுதியில் நெல்வயல் செழித்திருந்த நிலையிலும் சிலர் தற்கொலைக்குத் தள்ளப் பட்டிருந்தார்கள். காரணம், சாகுபடி செலவு அதிகமாகி கடன் சுமை அதிகரித்திருந்தது. இந்த கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டு ஒரே நாளில் 7 விவசாயிகள் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அரசு வங்கியான, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவனம், அதே தேதியில் அதானிக்கு மிகப் பெரிய அளவிலான கடன் தொகையை வழங்கியது. தற்கொலை செய்தும் கொள்ளும், விவசாயிகளின் மிக முக்கியப் பிரச்னையாக கடன் சுமைதான் உள்ளது. ஆனால், நம்மை ஆளும் அரசுகள் இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லாமல், உண்மையை மறைத்து வேறு காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டனர் என்று திரித்துப் பொய் சொல்கிறார்கள். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிலை.
விவசாயிகள் தற்கொலைப் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இல்லை என்பதற்குக் காரணம், தமிழகத்தின் மாநிலக் குற்ற ஆவணக் காப்பகத்தினர் விவசாயிகளின் தற்கொலையை ‘இதர தற்கொலைகள்’ என்னும் பிரிவில் சேர்த்துள்ளனர் என்பதுதான். உண்மையான எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், தமிழகம்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும். ஊடகங்களும் எவ்வித ஆராய்ச்சியும் செய்யாமல் அரசு தரப்பு கொடுக்கும் புள்ளி விவரங்களையே பிரசுரிக்கின்றன” என்ற சாய்நாத் நிறைவாக,
“ஊரக இதழியலுக்கான கள இதழியலாளர்கள் மிகவும் குறைவாகத்தான் உள்ளனர். நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் மீட்டெடுப்பதற்கு, விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை நாட்டுக் எடுத்துச் சொல்ல, கள பத்திரிகையாளர்களின் (இதழியலாளர்கள்) தேவை அதிகமாக உள்ளது. நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் குரலை, உலகுக்குச் சொல்ல ஊரகப்பகுதி பத்திரிகையாளர்களாகப் பணியாற்ற இதழியல் துறையில் உள்ளவர்கள் முன்வர வேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் நினைத்தால், விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று அழைப்பு விடுத்தார் சாய்நாத்.