மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...

மரம் செய விரும்பு! - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன்

யற்கை மனித குலத்துக்கு வழங்கியுள்ள வரங்களான தாவரங்களை நாம் முறையாகப் பாதுகாப்பதில்லை. கொளுத்தும் வெயிலுக்குப் பசுமைக்குடையாக இருப்பவை மரங்கள். தாய்க்கோழி தன்னுடைய குஞ்சுகளை இறக்கைக்கு அடியில் அணைத்துக் கொள்வதைப்போல, வெயிலுக்கும் மழைக்கும் குடையாக இருந்து அரவணைத்து, உயிர்களைக் காக்கும் பேரன்பு கொண்டவை மரங்கள்.  

மரம் செய விரும்பு! - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...

தரணியெங்கும் தாவரங்கள் செழித்தால்தான், மனிதகுலம் மகத்தான வளர்ச்சியடையும். ஆனால், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மரங்களை அழித்தொழித்துச் சோலைகளாக இருந்த சாலைகளைப் பாலைவனங்களாக்கி விட்டு, வெயிலில் வாடிக்கொண்டிருக்கிறோம்.

சாலையோரங்களில் அடர்ந்திருக்கும் மரங்களால், வெயிலின் தாக்கம் தெரியாமல் சுகமாக இருந்தன அன்றைய பயணங்கள். ஆனால், இன்றைக்கு நெடுஞ்சாலைகளில் நிழல் தேடி அலைய வேண்டிய அவல நிலை. நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதை மனிதகுலம் உணரத் துவங்கியுள்ளது. மரக்கன்றுகள் நடவு செய்வது, விதைப்பந்து எறிவது போன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான் அதற்குச் சான்று.

நாகரிகம் தழைத்த காலத்தில் ஊர்ந்து சென்று, குழுவாக வீடுகள் அமைத்து வாழ்ந்ததால் ஊர்கள் உண்டாயின. அங்கிருந்து பெரும் குழுக்களாய் நகர்ந்து சென்று குடியிருப்புகள் அமைத்ததால் நகரங்கள் உருவாகின. இப்படி இடம்பெயர்ந்து வாழ்ந்த காலம் முதலே மரங்களைச் சார்ந்துதான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தாங்கள் செல்லும் பாதைகள் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு பேணிக் காத்து வளர்க்க ஆரம்பித்தனர். இதைத்தான் அசோகர், ராணி மங்கம்மாள் போன்றோர் செய்தார்கள். ஆக, சாலையோரங்களில் மரங்களை நடுவதும், அதன் நிழலில் படைகளும், பாதசாரிகளும் ஓய்வெடுப்பது மன்னர் காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் நிகழ்வு.

தற்போது சாலைகளில் இருக்கும் பெரும்பான்மையான மரங்கள் அழிந்துவிட்ட நிலையில், அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டிய பெரும் கடமை நம் முன்னே சவாலாக நிற்கிறது. அதேபோல, அழகுக்காக மரங்கள் வளர்க்கும் ஆர்வமும் மக்களிடம் அதிகரித்து வருகிறது.

வெளிநாடுகளில் ‘அவென்யூ டிரீ’ (Avenue Tree) என்ற பெயரில் சாலைகள், வணிக வளாகங்கள், பொது இடங்கள், வீடுகள் எனப் பல இடங்களிலும் மரங்களை வளர்ப்பார்கள். அழகுக்காகவும் நிழலுக்காகவும் மட்டுமே இந்த வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. நம் ஊரிலும் இதேபோன்று மரங்களை வளர்க்கலாம். ஆனால், வெளிநாட்டு மரங்களுக்குப் பதிலாக, நம் நாட்டு மரங்களை வளர்த்தால் அழகுக்கு அழகும் கிடைக்கும். கூடவே மருத்துவப் பயனும் கிடைக்கும். குறிப்பாகக் கிராமப்புறச் சாலைகள், தெருவோரங்கள், கல்வி நிலையங்களில் இதுபோன்ற மரங்களை வளர்க்கும்போது, அழகுக்காக மட்டுமில்லாமல் வருமானமும் கிடைக்கும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலமாகப் பல்வேறு கிராம சாலையோரங்களில் நடப்படும் மரங்களை, நாட்டு மரங்களாகத் தேர்வு செய்தால் ஊரும் அழகாகும் கிராமத்துக்கு வருமானமும் கிடைக்கும். அப்படியான சில வகை மரங்களைப் பார்ப்போம்.   

மரம் செய விரும்பு! - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...

மஞ்சள் கொன்றை

இது சித்திரை மாதம் பூக்கும். பூவெடுக்கும் காலத்தில் மரம் முழுக்க இலைகளே இல்லாமல் பூக்களாகத் தொங்கும். மஞ்சள் சர விளக்கைக் கட்டித் தொங்கவிட்டதுபோல சரம் சரமாகப் பூக்கள் தொங்கும் அழகு அலாதியானது. கேரளாவில் கொண்டாடப் படும் சித்திரை விசு பண்டிகையின்போது, இந்த மலரை வைத்துதான் வழிபடுவார்கள். இந்த மரங்களைப் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், கிராமப்புறச் சாலைகள், தெருவோரங்களில் வரிசையாக வைக்கலாம். எட்டு அடி இடைவெளியில் இந்த மரங்களை வரிசையாக வைத்துவிட்டால், பூக்கும் காலத்தில் பாதையின் இரு ஓரங்களிலும் மஞ்சள் வண்ணத்தைத் தெளித்துவிட்டது போல அழகாக இருக்கும். மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்தக் கன்றுகளை நட்டு ஊர், கல்வி நிறுவனங்களை அழகாக்கலாம்.

மரம் செய விரும்பு! - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...புங்கன்

ஒரு தெரு முழுவதும் குளுகுளு வசதி செய்ய வேண்டுமானால் ‘ஏசி’ போடத் தேவையில்லை. தெருவோரத்தில் வரிசையாகப் புங்கன் மரங்களை நடவு செய்தாலே போதும். வெயிலின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு, குளிர்ச்சியைக் கொடுக்கும். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ‘மிதைல் ஐசோ சயனைடு’ என்னும் கொடிய நஞ்சுள்ள காற்றையே உறிஞ்சிக்கொள்ளும் திறன் புங்கனுக்கு உண்டு. போபாலில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டபோது, அந்தப் பகுதியில் நடப்பட்டிருந்த புங்கன் மரங்கள் விஷவாயுவை உறிஞ்சிக்கொண்டு பட்டுப் போயிருந்தன.

கோடைக்காலத்தின்போது மரங்கள் இலைகளை உதிர்த்து, மொட்டையாகக் காட்சியளிக்கும். அப்போது புங்கன் மட்டும் ‘பச்சைப் பசேல்’ என இளம் தளிர் இலைகளுடன் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி தரும். இதைத் தெருக்கள், சாலையோரங்களில் வரிசையாக நட்டு வைத்தால், அழகுக்கு அழகு கிடைப்பதுடன் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பும் விதைகள் மூலம் வருமானமும் கிடைக்கும்.

பூவரசு


மரம் செய விரும்பு! - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...

பூவரசு, பசுமை மாறா மரம். எப்போதும் ‘பச்சைப்பசேல்’ எனக் காட்சியளிக்கும். அடர்த்தியான நிழல் கொடுக்கக்கூடியது. ஆண்டு முழுவதும் பூக்கள் இருக்கும் என்றாலும், ஜனவரி மாதத்தில் அதிகமாகப் பூக்கள் பூக்கும். இந்த மரங்கள் அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடக்கூடியவை. இதன் காய்கள் இயற்கைச் சாயம் தயாரிக்கப் பயன்படுகின்றன. இம்மரங்களைக் கிராமப்புறச் சாலையோரங்களில் வளர்க்கலாம்.

இதேபோன்று வேப்ப மரங்களையும் சாலையோரங்களில் வைக்கலாம். அதன் விதைகள், இலைகள் மூலமாக வருமானம் கிடைக்கும். கிராம மக்களின் கை வைத்தியத்துக்குத் தேவையான மருந்தையும் வேம்பு கொடுக்கும்.

இந்த வரிசையில் புளிய மரம், ஏழிலைப் பாலை, சொர்க்க மரம், தூங்குமூஞ்சி, வாகை, சிங்கப்பூர் செர்ரி, மகோகனி, பன்னீர் புஷ்பம் போன்ற மரங்களையும் வளர்க்கலாம். இந்த மரக்கன்றுகள் அனைத்தும் வனத்துறை மற்றும் தனியார் நர்சரிகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இனிவரும் மழைக்காலத்தைக் கவனத்தில் கொண்டு, சாலையோரங்கள் எங்கும் இந்த மரக்கன்றுகளை நடவு செய்யுங்கள். ஓரிரு ஆண்டுகளில் சாலைகள் முழுக்கச் சோலைகளாக மாறியிருக்கும்.

- வளரும்