
சுற்றுச்சூழல்ஞா.சுதாகர்
2015-ம் ஆண்டு டிசம்பர், கான்கிரீட் காடுகளாக மட்டுமே இருந்த சிங்காரச் சென்னை மாநகருக்கு இயற்கை பாடம் புகட்டிய மாதம் அது. நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்கள் முழுவதும் ஆக்கிரமிப்புகள்; நீர் வழித்தடங்கள் அனைத்திலும் குப்பைகள் என நாம் செய்த தவறுகளுக்கு மொத்தமாகப் பாடம் கற்றுக்கொடுத்துச் சென்றது வெள்ளம். ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், தவறுகள் அனைத்தையும் நாம் திருத்திக்கொண்டோமா என யோசித்தால் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கிறது.

இன்னும்கூட, நீர் நிலைகளில் கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்படவில்லை. பிளாஸ்டிக் குப்பைகள், கண்ணாடி பாட்டில்கள், பாலித்தீன் பைகள் என நீர் நிலைகளில் வீசும் குப்பைகள் பெரும்பாலும் கடலுக்குத்தான் செல்கின்றன. கூடவே, தொழிற்சாலைக் கழிவுகள் வேறு. இதனால், கடலின் சூழல் மாசுபடுவதோடு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கையும் கவலைக்குள்ளாகிறது. ஓர் ஆண்டில் 8 மில்லியன் டன் அளவு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன என்று சொல்கிறார்கள் கடலியல் ஆராய்ச்சியாளர்கள்.
‘இப்படிக் குப்பைகள் கடலில் சேர்ந்துகொண்டே இருந்தால் என்னாவது?’ என்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் கொடுப்பதோடு நீர் நிலைகளைச் சுத்தப்படுத்தும் முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகளை ‘ஓஷன் கன்சர்வன்ஸி’ எனும் அமைப்பு உலகளவில் முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்புடன் இணைந்து, தென்னிந்தியாவில் இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகிறது, ‘இன்டியன் மெரிடைம் ஃபவுண்டேஷன்’ (Indian Maritime Foundation-IMF) அமைப்பு.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீர்நிலைகளில் சேரும் குப்பைகளைச் சுத்தம் செய்து வருகிறது இன்டியன் மெரிடைம் ஃபவுண்டேஷன். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்று இந்த நிகழ்வு நடந்து வருகின்றது. அந்தவகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 69 இடங்களில் இப்பணிகளை முன்னெடுக்கவுள்ளது. மெரினா கடற்கரை உள்பட பல்வேறு நீர்நிலைகளில் கழிவுகளை அகற்றும் பணி நடைபெறும். பயிற்சியளிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மட்டுமே இதை மேற்கொள்வார்கள். பொதுமக்கள், பார்வையாளர்களாகப் பங்கேற்று, தன்னார்வலர்களை ஊக்குவிக்கலாம். இந்த நிகழ்வுக்கு ஊடக ஆதரவை விகடன் வழங்கியுள்ளது. நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்கள், விகடன் இணையதளத்தில் தொடர்ந்து பதிவேற்றப்படும்.
இணைவோம்... சூழலைக் காப்போம்!