மகசூல்
நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“நதிகளைக் காப்பாத்தணும்னா... முதல்ல காட்டையில்ல காப்பாத்தணும்!”

“நதிகளைக் காப்பாத்தணும்னா... முதல்ல காட்டையில்ல காப்பாத்தணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நதிகளைக் காப்பாத்தணும்னா... முதல்ல காட்டையில்ல காப்பாத்தணும்!”

நியாயன்மார்களுக்கு ஜூ.கோ கடிதம்...கடிதம் ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

ய்யா நியாயன்மாரே... நீதிமாரே... இந்தத் தடவை நம்ம கச்சேரி உங்ககூடத்தான்.

‘நம்ம நாட்டுல மிச்சமிருக்கிற ஒரே நம்பிக்கை... நீதிமன்றங்கள்தான்’ங்கிற வசனத்தைச் சொல்லாத ஆளுங்க ரொம்ப ரொம்பக் குறைவு. இதையும் ரொம்பக் காலமாவே சொல்லிட்டிருக்கிறதால, நீதிமன்றங்கள்மேல மக்களுக்கு இருக்கிற நம்பிக்கை ஊசலாடிட்டேதான் இருக்கு. இருந்தாலும் உங்கள்ல சில நீதிபதிங்க கொடுக்கிற வீரமான, விவேகமான தீர்ப்புங்க, அப்பப்ப அந்த நம்பிக்கையைத் தூக்கி நிறுத்துதுங்கய்யா. இதுக்காகவே உங்க எல்லாருக்கும் கோடி கும்புடு. அதேசமயம், சில நீதிபதிங்க தீர்ப்புக் கொடுக்கிறப்ப, கொசுறா கொடுக்கிற அவதானிப்புகள் இருக்கே... பலசமயத்துல தலைச்சுத்திக் கீழ விழவைக்குதுங்கய்யா.   

“நதிகளைக் காப்பாத்தணும்னா... முதல்ல காட்டையில்ல காப்பாத்தணும்!”

சமீபத்துல சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் வழங்கின ஒரு தீர்ப்புல, ‘நம் முன்னோர்கள் இயற்கையையும் மரங்களையும் தெய்வமாக வணங்கினர். தெய்வ வழிப்பாட்டில் மாற்றுக்கருத்து இல்லாததால், இயற்கைவளங்கள் அப்போது காப்பாற்றப்பட்டன. ஆனால், பகுத்தறிவு என்ற பெயரில் மதரீதியான நடவடிக்கைகளை மூடநம்பிக்கை என்கிறோம். மதக்கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டோம். இப்போது இயற்கை அழிக்கப்பட்டுக் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம்’னு வருத்தப்பட்டிருக்கார்.

சென்னை, அண்ணாசாலை பக்கத்துல வணிகவளாகம் கட்டின ஒருத்தர், விதிமுறைப்படி பொதுப்பயன்பாட்டுக்காகக் குறிப்பிட்ட அளவு நிலத்தை மாநகராட்சிகிட்ட ஒப்படைச்சார். ‘அந்த நிலத்தை மாநகராட்சி சரியா பயன்படுத்தல. அதனால, நானே அந்த இடத்துல பூங்கா அமைச்சி பராமரிக்கிறேன்’னு சொல்லி அவர் போட்ட வழக்குலதான், மேலே சொன்ன பகுத்தறிவுப் பாடத்தைப் புரட்டியிருக்கார் நீதிபதி.

நீதிபதி சொல்லியிருக்கிறதைத் பகுத்தறிவோட ஆராய்ந்து பார்க்கிறப்ப... நூத்துக்கு நூறு உண்மைனுதான் தோணுது. இயற்கையையும் மரங்களையும் தெய்வமா வணங்கின முன்னோர்கள் இருந்தவரைக்கும், சூழலுக்கு ஆபத்தில்லைங்கிறதைத்தான் நீதிபதி அழுத்திச் சொல்றாருனு என் பகுத்தறிவுக்குத் தட்டுப்படுது. ஆனா, ‘பகுத்தறிவு என்கிற பெயரில் மதக்கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டோம். அதுதான் இப்போது இயற்கை அழிந்ததற்கும் காரணம்’னு அவர் சொல்லியிருக்கிறதைப் பகுத்தறிவோடு ஆராய்ஞ்சி பார்த்தா... ஒண்ணும் புலப்பட மாட்டேங்குது. ஒருவேளை அந்தப் பகுத்தறிவைக் கழட்டி வெச்சுட்டுப் பார்த்தா... புலப்படுமோ என்னமோ தெரியல.

அய்யா, நீதியரசரே... எந்தப் பகுத்தறிவுவாதி மரங்களை வழிபடாதீங்க... இயற்கையை வழிபடாதீங்கனு தடுத்தாங்க? வழிபாடுங்கிற பேர்ல இயற்கையை அழிக்காதீங்கனு வேணும்னா சொல்லியிருப்பாங்க.  

“நதிகளைக் காப்பாத்தணும்னா... முதல்ல காட்டையில்ல காப்பாத்தணும்!”

அப்புறம் முதல்லயே ஒரு விஷயத்தை இங்க வழியுறுத்திக்கிறேன் மன்னிச்சுக்கோங்க. இந்த மரத்தை வெட்டுறவன், மண்ணைக் கடத்துறவன், காட்டைக் காணாம அடிக்கிறவன், மலையைக் குடையறவன் இவனுங்களுக்கெல்லாம் ஒரு சாதி கிடையாது. பல சாதி இருக்கு. இதுல முக்கிய இடமே அரசியல் சாதிக்கும் ஆன்மிகச் சாதிக்கும்தான் இருக்கு. இந்த முகமூடிகளைப் போட்டுக்கிட்டு, இந்த ரெண்டு சாதிக்காரனும் அடிக்கிற கூட்டுக்கொள்ளைக்கு அளவே கிடையாது. இவனுங்க பேசுற பகுத்தறிவும் பக்திமார்க்கமும் பகல்வேஷம்தான்.

மரங்களை வெட்டித் தேர்கட்டச் சொன்னது யாரு?

மண்ணைத் தோண்டி, மலையைக் குடைஞ்சி கோயில் கோயிலா கட்டச் சொன்னது யாரு?

திருவிழாங்கிற பேர்ல கோடி கோடியாகச் செலவு செஞ்சு வானவேடிக்கைகளை வெடிக்கச் சொன்னது யாரு?

ஆறு, குளம், சாலைனு பொது இடங்களை ஆக்கிரமிக்கிறதுக்காகவே மரத்துக்குக் கீழேயும் சாக்கடைக்கு மேலேயும் கோயில்களைக் கட்டி உண்டியல வெக்கச் சொன்னது யாரு?

அனைத்து மதக் கடவுளுங்க பேர்லயும் ஆசிரமங்களையும் கல்விக்கூடங்களையும் அமைச்சி, காடுகளைக் காணாம பண்ணது யாரு?

இதையெல்லாம் கேட்டதுமே ‘ஓ... நீ பகுத்தறிவுக்கு வக்காலத்தா... கறுப்புச் சட்டையா?’னு கட்டம் கட்டி, கழுவி ஊத்த ஆரம்பிச்சிடாதீங்க. ஏன்னா, இந்தச் சமூக வலைதளங்கள்ல கழுவி ஊத்துறத பார்க்கறப்ப, நாண்டுகிட்டு செத்துடலாம்னுகூட பலசமயங்கள்ல தோணுது. ஏன், இந்தப் புளுவேல் கேமை நாமளும் ஆடி, ‘டாஸ்க் டாஸ்க் டாஸ்க்கு டண்டண்’னு ஆட்டம் போட்டுப் போய்ச் சேர்ந்துடலாம்னுகூடத் தோணுது. ஆனா, ‘எந்தப் பிரச்னைக்கும் வாழ்க்கையை முடிச்சிக்கிறது தீர்வு கிடையாது. அந்த நம்பிக்கையை வெச்சே வாழ்ந்துகாட்டணும்’னு நாலு பேரு வாட்ஸப்புல அப்புஅப்புனு அப்புறாங்களா அதப் பாத்ததுமே, அட இந்தச் சமுதாயத்தையும் பூமியையும் இப்படியே விட்டுட்டு நாம போய்ச் சேர்ந்துட்டா, நாளைக்கு இதையெல்லாம் யார் காப்பாத்துவாங்கிற ஒரு எண்ணம் உள்ளுக்குள்ள உயிராகி, ‘என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்... சொல்லடி சிவசக்தி’னு மீசையை முறுக்கிக்கிட்டு கிளம்பிட வெக்குதுங்கய்யா? (இப்படிச் சொல்லிக்கிறதுக்கு வெக்கம் வெக்கமா வருதுங்கய்யா)

நான் என்ன சொல்ல வர்றேன்னா... இயற்கையை அழிக்கிறவங்க பட்டியல்ல பகுத்தறிவு பேசுற பலருக்கு இடமிருக்கு... ஆன்மிகம் அருள்கிற அநேகருக்கு இடமிருக்கு; அரசியல் வேஷம் போடுற அத்தனை பேருக்குமே இடமிருக்கு. இவங்க அத்தனைபேரோட அகத்துலயும் சுயநலம்கிற ஒரேயொரு ஒற்றுமைதான் இருக்கு. இதுதான் அவனுங்களோட சாதி, மதம், கட்சி, அடையாளம் எல்லாமே. இதைச் சாதிக்கிறதுக்காக ஒவ்வொருத்தணும் தன்னோட சாதி, மதம், கட்சி எல்லாத்தையும் தனக்குத் தோதா பயன்படுத்திக்கிட்டே இருக்கான். நீதி சமைக்கிற உங்களமாதிரி ஆளுங்களுக்கு, என்னை மாதிரியான தற்குறிகளைவிட இதெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லாவே தெரியும். அதனால, உங்க பகுத்தறிவு மூளையைக் கொஞ்சம் சுரண்டுங்க. நீதி தேவதை கண்ணைக் கட்டிக்கிட்டிருக்கிற மாதிரி, நீங்களும் கட்டிக்காதீங்க. கண்ணு, காது, மூக்கு எல்லாத்தையும் நல்லா தொறந்து வெச்சுக்கிட்டுப் பாருங்க. பகுத்தறிவு பேசுனதுதான் இயற்கையோட அழிவுக்குக் காரணம்னு வரலாற்றுல தவறா பதிவு செய்துடாதீங்க.   

“நதிகளைக் காப்பாத்தணும்னா... முதல்ல காட்டையில்ல காப்பாத்தணும்!”

ஏன் சொல்ல வர்றேன்னா... இப்ப இந்தக் கார்ப்பரேட் சாமியார் ஜக்கியையே எடுத்துக்கோங்க. அதாங்க, மிஸ்டுகால். நதிகளைக் காப்பாத்தறேன் பேர்வழினு சும்மா சீறிக்கிட்டு கிளம்பிட்டார். ஆனா, முதல்ல அவரு செய்ய வேண்டியது காட்டைக் காப்பாத்தறதைத்தான். இதப் போய் அவருகிட்ட சொல்றியேனு என்ன நாலு பேரு, நாலுவிதமா பேசினாலும் பேசுவாங்க. ஏன்னா, அவரோட வரலாறு அப்படி. காட்டை ஆக்கிரமிச்சிட்டார்னு இவரு மேலயே கோர்ட்ல கேஸு இருக்கு. இதுக்கு நடுவுல, மோடியை வெச்சு ஆதியோகி சிலையைத் தொறந்தவரு, தமிழக அரசுத்துறைகள்கிட்ட இருந்து சுத்தம்சுயம்பிரகாசம்னு சான்றிதழ் வாங்கிட்டாரு. ஆகக்கூடி, இவரு காட்டை ஆக்கிரமிக்கவே இல்லை. ஆனா, நதிகளைக் காப்பாத்தணும்னா... முதல்ல காட்டையில்ல காப்பாத்தணும். காடுகள் இருந்தாத்தானே அங்க இருக்கிற மரங்கள் மழையீர்ப்பு வேலையைச் செய்து மழையைக் கொண்டு வரும். அது நதியா பெருக்கெடுக்கும்.

கிழக்குத் தொடர்ச்சி மலையில ஆரம்பிச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைவரைக்கும் அங்குலத்துக்கு ஒருத்தர்ன்னு ஆசிரமம், காலேஜு, கெஸ்ட் ஹவுஸு, வழிபாட்டுத்தலங்கள்னு காட்டையே ஆட்டை போட்டுருக்காங்களே அவங்களையெல்லாம் முதல்ல வெளியேத்தணும். அது ஈஷா, காருண்யா, அமிர்தானந்தா... இன்னும் அப்துல்காதர்னு யாரா இருந்தாலும் வெளியேறணும். இதுக்கு மிஸ்டுகால் எல்லாம் தேவையில்ல... ஜக்கி நினைச்சாலே போதும், தன்னால நடந்துடும். முன்மாதிரியா ஒருத்தர் வெளியில வந்தா, மத்தவங்கள்லாம் தன்னால கிளம்பிடுவாங்க... இல்ல, கிளம்ப வேண்டிய கட்டாயம் வந்துடும். இதைச் செய்துட்டுல்ல, நதியைக் காப்பாத்த கிளம்பணும். காடே இல்லாம நதியைக் காப்பாத்தி, காட்சிப்பொருளா வைக்கறதுக்கா? ஆக, இன்னிக்கு நதிகளின் பிறப்பிடமா இருக்கிற காடுகள் கபளீகரம் ஆகறதுக்கு முக்கியக் காரணமே... ஆன்மிகம், கல்வி, உல்லாசங்கிற பெயரால் நிகழ்த்தப்படுற ஆக்கிரமிப்புகள்தான். இவங்க அத்தனை பேருக்கும் எதிரா உங்க சாட்டையைச் சுழற்றுங்க நியாயன்மாரே!

பொதுவா இந்த மனுஷப்பயலுகளுக்குப் பசுமையைப் பார்த்ததுமே குஷி பிச்சுக்கும். காரணம் அவனோட கருவறை காடுதானே. அங்க இருந்துதானே பொறந்து வளர்ந்தான். அடுத்தகட்டமா அவனுக்குக் குஷியைக் கொடுக்கிறது தண்ணீர். இது ரெண்டுக்கும் அடிநாதமா இருக்கிறதே காடுங்கதான். அதையெல்லாம் காலி பண்ணிட்டு நாளைக்குச் செங்கல்லையும் மணலையும் பார்த்தா குஷிப்பட முடியும்?

உங்க தீர்ப்புலயே, ‘சமுதாய முன்னேற்றம் என்பது இயற்கை வளங்களை அழிக்கும்விதமாக இருக்கக் கூடாது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத நிலையான வளர்ச்சியே தற்போது தேவை’னு நல்லா சொல்லியிருக்கீங்க. இதுக்காக உங்களுக்குக் கண்டிப்பா பாராட்டு விழா நடத்தியே ஆகணும். இயற்கையை உண்மையா நேசிக்கிறவங்க... இந்த மண்ணை மாற்றமில்லாம வணங்குறவங்களுக்கெல்லாம் உங்களோட இந்தக் கருத்துல மாற்றுக்கருத்து இருக்கவே முடியாதுங்க. இதுக்காக நீங்க வீதியில இறங்கி போராடினா, உங்களோட கைகோக்க உண்மையான பகுத்தறிவுவாதிங்க மட்டுமல்ல... சுயநலமற்ற ஆன்மிக மற்றும் அரசியல்வாதிங்ககூட முன்வருவாங்க. நீங்க தயாரா?

இப்படிக்கு,

ஜூனியர் கோவணாண்டி

பின்குறிப்பு: (இந்தியாவோட பெருமைக்குரிய சட்டங்களின்படி தீர்ப்பைத்தான் விமர்சிச்சிருக்கேனுங்க அய்யா. நீதிபதியை இல்லீங்க அய்யா (எதுக்கும் நாமளும் ஜாக்கிரதையா இருக்கணும்ல!)

பல நூறு ஏக்கர் நிலங்களை ஒப்படைக்க வேண்டியிருக்கும்!

நீ
தியரசரே... வெறும் கான்கிரீட் கட்டடங்களா கட்டி வெச்சுட்டா.. மூச்சுமுட்டியே இந்தச் சென்னைவாசிங்க செத்துப் போயிடுவாங்கனுதான், கட்டடங்கள கட்டும்போது போதுமான இடத்தைத் திறந்த வெளியிடமா ஒதுக்கி, அதுல பார்க் அமைச்சி, மரங்களை வளர்த்துப் பராமரிக்கணும்னு சட்டம்போட்டு வெச்சிருக்காங்க. அதுக்காகத்தான் மாநகராட்சிகிட்ட நிலத்தை ஒப்படைக்கச் சொல்றாங்க. இப்ப, பராமரிக்கிறதுக்காகச் சம்பந்தபட்டவர்கிட்டயே அந்த நிலத்தைத் திரும்ப ஒப்படைக்கச் சொல்லியிருக்கீங்க. நிசத்துல பார்த்தா... இப்படிச் சட்டப்படி ஒப்படைச்ச நிலங்கள் எல்லாமே கிட்டத்தட்ட சம்பந்தபட்டவங்கிட்டயே ஒப்படைக்கிற நிலையிலதான் மாநகராட்சியால பராமரிக்கப்படுது. சொல்லப்போனா, இப்படி ஒப்படைச்ச நிலங்களோட நிலையைக் கண்டுபிடிக்கிறதுக்காக, சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில குவாரிகளோட தகிடு தத்தங்களைக் கண்டுபிடிக்கிறதுக்காகக் குழு போட்ட மாதிரி, ஒரு குழுவே போடலாம். திட்டமிட்டேதான் இந்த நிலங்களை மாநகராட்சி இப்படிப் பராமரிக்குதுனு தோணுது.

நிலத்தத் திரும்ப ஒப்படைக்கணும்னு முடிவெடுத்துட்டா... சென்னை முழுக்கவே பல நூறு ஏக்கர் நிலங்கள ஒப்படைக்க வேண்டியிருக்கும். அதேசமயம், பெரும் வணிக நிறுவனங்கள், அரசியல்கட்சிகள், அமைப்புகள் எல்லாம் இப்படி மாநகராட்சிக்கு நிலத்தை ஒதுக்கித் தந்துட்டதா பம்மாத்துக்காட்டிட்டு, அவங்களோட பராமரிப்புல வெச்சுக்கிட்டு ஆட்டம் காட்டுறதுதான் நிறைய இருக்கு. உதாரணத்துக்குச் சொல்லணும்னா... அண்ணா அறிவாலயம், சென்னை பார்க் ஹோட்டல். இதுதொடர்பாகூட உங்க கோர்ட்லயே கேஸெல்லாம் போட்டுப் பலகாலமா தூங்கிக்கிட்டுதான் இருக்குதுங்கய்யா. அதையெல்லாம் கையில எடுங்க.