
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017கண்காட்சிஇ.கார்த்திகேயன் - துரை.நாகராஜன் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன் - தே.தீட்ஷித்
ஈரோடு, திருச்சி ஆகிய மாநகரங்களில் 2015-ம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது ‘பசுமை விகடன்’. இந்த ஆண்டு நான்காவது நிகழ்வாக, மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெற்றது ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2017’. கண்காட்சியின் நான்கு நாள்களிலும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. கண்காட்சி மற்றும் கருத்தரங்குக்கு விவசாயிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

இயற்கை விவசாயியும், திரைப்பட நடிகருமான கிஷோர், கண்காட்சியைத் துவக்கி வைத்தார். கண்காட்சி அரங்குகளைச் சுற்றிப் பார்த்த கிஷோர், குத்து விளக்கேற்றிக் கருத்தரங்கையும் துவக்கி வைத்தார். நபார்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் நடராஜன், மைசூரு மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை முதன்மை விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ், சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரசன்னா ஐ.ஏ.எஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

கண்காட்சி அரங்குகளில் மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள், பாரம்பர்ய விதைகள், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள், மாடித்தோட்ட உபகரணங்கள், நர்சரிகள், நவீன உழவுக் கருவிகள், களையெடுக்கும் கருவிகள், கால்நடைப் பண்ணைக் கருவிகள், சோலார் பம்ப்செட்கள் என இயற்கை விவசாயத்துக்குத் தேவையான பலவும் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மைசூரு உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர் பயிர்ப் பதனீட்டுக் கழகம், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை தங்கள் ஆதரவை நல்கியிருந்தன. இவற்றில் சில நிறுவனங்கள் சார்பாக அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

கருத்தரங்கின் தொடக்கவிழாவில் நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல முதன்மைப் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா பேசும்போது, “சில மாதங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா நடைப்பெற்றது அதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். அவர்களில் பாதி பேர் வேஷ்டி அணிந்தும் மீதி பேர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தும் வந்திருந்தனர். இந்த ஜீன்ஸ் அணிந்து வந்தவர்களில் பெரும்பாலானோர், கம்ப்யூட்டர் சார்ந்த வேலையில் இருந்தவர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இதைப் பார்க்கும்போது விவசாயத்தின் பக்கமும் இளைஞர்கள் திரும்பிவிட்டனர் என்பதையே காட்டுகிறது.
‘வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான், சென்றவனைக் கேட்டால் வந்து விடு என்பான்’ என்பது சினிமா பாடல் வரிகள். அதாவது விவசாயத்தில் ஆதாயமில்லை என்று வெளியேறுவதும், விவசாயத்தைத் தவிர வேறு தொழில் இல்லையென்று விவசாயத்துக்கு வருவதும் உண்மையே. விவசாயி மகன் விவசாயத்துக்குப் போக விரும்பாத நிலையில், சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களும் கார்ப்பரேட் ஆள்களும் விவசாயத்தின் பக்கம் வரத்துடிப்பது ஆரோக்கியமானது. எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நபார்டு செயல்பட்டு வருகிறது.

விவசாயத்துக்கு மூன்று ‘எம்’ (M) தேவை. ஒன்று மணி (Money), அதாவது பணம் . இரண்டாவது ‘மான்சூன்’ (Monsoon) எனப்படும் பருவ மழை. மூன்றாவது ‘மார்க்கெட்’(Market) எனப்படும் சந்தை. இந்த மூன்றும் இருந்தால்தான் விவசாயம் செழிக்கும்.
பயிர்க்கடனுக்காக 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது நபார்டு. மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கியிருக்கும் 20 லட்சம் கிஸான் கிரெடிட் கார்டுகள் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்க இருக்கிறோம். மேலும், தமிழகத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு மூலம் 41 ஆயிரம் குளங்களைத் தூர்வாரி, அவற்றை மக்களே கண்காணிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறோம்” என்றார்.

அடுத்து, ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் நடராஜன் பேசும்போது, “பஞ்சபூதங்களுமே பஞ்சகவ்யாவில் அடங்கியுள்ளன. நிலம் - சாணம், நீர் - பசுமாட்டுச் சிறுநீர், நெருப்பு - பால், வாயு - தயிர், ஆகாயம் - நெய் ஆகும். பஞ்சகவ்யா ஒரு மனிதனின் உடல், மனம், ஆத்மா ஆகியவற்றைச் சீர்படுத்துகிறது. பஞ்சகவ்யாவை இலைகளின்மேல் தெளித்தால் வளர்சிதை மாற்றமும் ஒளிச்சேர்க்கையும் நன்கு நடைபெறுகிறது. மரத்தின் தண்டுப் பகுதிகள் வலிமையாகவும் கிளைகள் பெரியதாகவும் வளர்கின்றன. பஞ்சகவ்யா தெளிக்கப்படும் தாவரங்களின் வேர்கள் அடர்த்தியாகவும் ஆழமாகவும் பரவுகின்றன. பஞ்சகவ்யாவைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது மகசூல் கூடுகிறது. வறட்சியைத் தாங்கும் திறன் அதிகமாகிறது. விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் ஆடு, மாடு, முயல், பன்றி, மீன், இறால் எனக் கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணைத்தொழில்களிலும் பஞ்சகவ்யா பயன்படுத்தப்பட்டு வருகிறது. பஞ்சகவ்யா தயாரிப்புக்கு நாட்டு மாட்டின் சிறுநீரும் நாட்டு மாட்டுப் பாலும்தான் முக்கியம். பஞ்சகவ்யா சில நோய்களைத் தீர்க்கும் மாமருந்தாகவும் பயன்படுகிறது. பஞ்சகவ்யா பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு, மனிதர்களுக்கும் பயன்பட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளது பஞ்சகவ்யா. வெளியிலிருந்து வரும் இடுபொருள்களைக் குறைத்து, விவசாயிகளுக்கு வருமானத்தைக் கொடுக்கும் இயற்கை விவசாய நுட்பங்கள்தான் அவசியம். அந்த வகையில் வெளி நபர்களைச் சார்ந்திருக்காமல் சுயசார்புடன் பஞ்சகவ்யா இடுபொருளைத் தயாரித்துப் பயன்படுத்த முடியும்.
அடுத்த ஆண்டு பஞ்சகவ்யாவின் 20-ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நேரத்தில் பஞ்சகவ்யாவைப் பட்டி தொட்டியெல்லாம் கொண்டுசேர்த்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களுக்கும் முன்னோடி இயற்கை விவசாயிகளுக்கும், பசுமை விகடன் உள்ளிட்ட ஊடகங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்’’ என்றவர் ‘‘பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்த விவரங்களைத் தேவைப்படும் விவசாயிகள், தொலைபேசியிலோ கொடுமுடிக்கு நேரில் வந்து சந்தித்தோ தெளிவுபெறலாம்’’ என்று அழைப்பும் விடுத்தார் டாக்டர் நடராஜன்.

தொடர்ந்து அண்மையில் பசுமை விகடன் இதழில் தொடராக வெளிவந்த ‘பஞ்சகவ்யா’ கட்டுரைகளின் தொகுப்பு, ‘பஞ்சகவ்யா வெற்றி விவசாயிகளின் லாப அணிவகுப்பு’ என்ற பெயரில் விகடன் பிரசுரத்தின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் அறிமுக விழாவும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றது. நூலைத் திரைப்பட நடிகர் கிஷோர் வெளியிட, பிரசன்னா ஐ.ஏ.எஸ் பெற்றுக் கொண்டார்.
கர்நாடக மாநிலம், மைசூரு மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ராம.ராஜசேகரன் உடல் நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இவர் சார்பில் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை முதன்மை விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் பேசும்போது, “உலகளவில் ஊட்டச்சத்து மிகுந்த மொமஸ்தா, கினோவா, சியா என்கிற மூன்று சிறுதானிய ரகங்களை மைசூரு உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தின்மூலம் வெளியிட்டுள்ளோம். இந்தத் தானியங்கள் ஒரு கிலோ 1,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டில் விற்பனை செய்தால் ஒரு கிலோவுக்கு 2,500 ரூபாய் கிடைக்கும். இந்த விதைகளை எங்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்துச் சாகுபடி முறையையும் சொல்லித் தருகிறோம். இந்தத் தானியங்களைச் சாகுபடி செய்ய குறைவான தண்ணீரே போதும். எங்கள் ஆராய்ச்சி நிலைய இணையதளத்தில் ‘ஃப்ரீ டெக்னாலஜி’ என்ற ஆப்சனை கிளிக் செய்தால் தொழில்நுட்பங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளலாம். குதிரைவாலி, சாமை, வரகு, பனிவரகு போன்ற சிறுதானியங்களின் தோலை நீக்கக் குறைந்த விலையில் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளேன். சைக்கிள் போன்ற இந்த இயந்திரத்தில் அமர்ந்து பெடலைச் சுற்றினால் சிறுதானியங்களின் தோல் நீக்கப்பட்டுத் தானியம் தனியாகவும் தோல் தனியாகவும் வந்துவிடும். இந்த இயந்திரத்தின் வரைபடத்தை விரைவில் ஆராய்ச்சி நிலைய வெப்சைட்டில் பதிவேற்ற இருக்கிறோம். விவசாயிகள் இந்த வரைபடத்தை டவுன்லோடு செய்து கிரில், லேத் வேலைகள் செய்யும் ஒர்க்ஷாப்காரர்களிடம் கொடுத்து அவர்களே செய்து கொள்ளலாம். இன்றைய சூழ்நிலையில் சிறுதானியத்தை மதிப்புக்கூட்டி விற்பனைசெய்தால் மட்டுமே விவசாயிகள் லாபம் பார்க்க முடியும். மைசூரிலுள்ள ஆராய்ச்சி நிலையத்துக்கு விவசாயிகள் வந்தால் அனைத்து விதப் பயிற்சிகளும் வழங்கப்படும்” என்றார்.

சத்தீஸ்கர் மாநிலம், தாம்தரி மாவட்டத்தின் ஆட்சியராகப் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரசன்னா ஐ.ஏ.எஸ், “எங்கள் மாவட்டத்தில் 9 லட்சம் விவசாயிகளிடமிருந்து 70 லட்சம் டன் நெல்லை இரண்டு மாதங்களில் கொள்முதல் செய்திருக்கிறோம். சத்தீஸ்கரில் விவசாயிகள் நெல்லை கொடுத்த அடுத்த நிமிடமே அவர்களுக்குச் காசோலை கொடுத்துவிடுவோம். நேற்று ஒரு குவிண்டாலுக்கு 300 ரூபாய் போனஸாகக் கொடுத்தது சத்தீஸ்கர் மாநில அரசு. மேலும், வரும் தீபாவளிக்குள் விவசாயிகளுக்குப் போனஸாக வழங்க 2,100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதுபோல விவசாயிகளுக்குப் பல சலுகைகளைக் கடந்த 13 ஆண்டுகளாகச் சத்தீஸ்கர் அரசு செய்துவருகிறது. பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு, சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் நெல் கொள்முதல் அதிகமாகச் செய்யப்பட்டுள்ளது.
நாம் அரிசியையும் கோதுமையையும் சாப்பிட்டுக் கொண்டே சிறுதானியங்கள் வளர வேண்டும் என்று நினைக்கிறோம். சிறுதானியங்களை நாம் சாப்பிட ஆரம்பித்தால்தான் அதிகளவு விளைவிக்க முடியும். நல்ல உணவுகளைத் தேடிச் சாப்பிட்டால்தான் அவை நிலத்தில் விளைவிக்கப்படும். என் சொந்த அனுபவத்தைச் சொல்கிறேன். சிறுதானிய உணவுகள்மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டவுடன், என் சொந்த ஊரான உளுந்தூர்பேட்டை பகுதியில் வசிக்கும் பெற்றோரைத் தொடர்புகொண்டு கம்பு 10 கிலோ வேண்டும் என்று கேட்டேன். பக்கத்துக் கிராமத்திலேயே நாட்டு ரகக்கம்பு உள்ளது என்று சொன்னார்கள். உடனே வாங்கி அனுப்பும்படி சொன்னேன். நான் பாரம்பர்ய கம்பு விஷயத்தில் இவ்வளவு தீவிரமாக இருப்பதைக் கேள்விப்பட்ட அந்தக் கம்பு விவசாயி, 2 கிலோவை எடுத்து வைத்துக்கொண்டு, 8 கிலோவை என் பெற்றோரிடம் கொடுத்துள்ளார். சத்தீஸ்கரிலிருந்து கம்பு கேட்கிறார்கள் என்றால், ஏதோ விசேஷம் இருக்கும் என்று என் அம்மா 2 கிலோ கம்பு தானியத்தை எடுத்துக்கொண்டார். அதைக் கொடுத்து அனுப்பிய ஆளுக்கு இந்தத் தகவல் எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் பங்குக்கு 2 கிலோ எடுத்துக்கொண்டார். இப்படியாக என்னுடைய கைக்கு 2 கிலோ கம்புதான் வந்து சேர்ந்தது. ஒரு பொருளுக்கான தேவை உண்மையாக ஏற்பட்டால், அதற்கான மதிப்பும் கூடும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எனக்குக் கம்பு தானியத்தைக் கொடுத்த விவசாயி, அடுத்த பருவத்தில் அந்தக் கம்பு தானியத்தை விதைத்து, நல்ல விளைச்சலும் லாபமும் பெற்றார். மீண்டும் சத்தீஸ்கர் அனுபவத்தைச் சொல்கிறேன்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்த ‘ஜீரா புல்’ என்ற நெல் ரகத்தை மீட்டெடுத்து, அம்மாநிலப் பழங்குடி மக்களிடம் கொடுத்துப் பயிர் செய்யச் சொன்னோம். ஆரம்பத்தில் 8 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ ஜீரா புல் அரிசி, இன்றைக்கு 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்குச் சந்தை வாய்ப்பைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல் விதை மீட்புக்குப் பசுமை விகடன் இதழ்தான் தூண்டுகோலாக இருந்தது. இதனால்தான், இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ள சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்தும் விவசாயிகளை அழைத்து வந்துள்ளேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.
சிறப்புரையாற்றிய முன்னோடி இயற்கை விவசாயியும் திரைப்பட நடிகருமான கிஷோர், “எனக்குப் பேச வாய்ப்பு கொடுத்ததற்காகவும் தமிழக விவசாயிகளிடம் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்ததற்காகவும் பசுமை விகடனுக்கு முதலில் நன்றி சொல்லியாக வேண்டும். இயற்கையை எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்துவிட்டோம். அதற்குக் காரணம் நம்முடைய படிப்பு. இந்த படிப்பு எப்படிப்பட்டது என்பதற்கு உதாரணமாக ஒரு கதை சொல்றேன். ‘கிராமத்துல ஒரு தாய், செக்குல மாட்டைப் பூட்டிவிட்டுட்டு, தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பல்கலைக்கழகப் படிப்பு படிச்ச அந்தத் தாயோட மகன், ஏம்மா மாடு அதுபாட்டுக்குச் சுத்திட்டிருக்கு, அது எங்காவது ஓடி போச்சுன்னா எப்படித் தெரியும் என்று கேட்டான். மாட்டுக் கழுத்துல மணி கட்டியிருக்கேன். மாடு ஓடினா சத்தம் கேட்கும் என்றாள் அந்தத் தாய். சுத்தாம, ஒரே இடத்துல நின்னுகிட்டா எப்படித் தெரியும் என்று மீண்டும் கேட்டான். மணிச் சத்தம் கேட்கலைன்னா தெரிஞ்சிடும் என்றாள் அந்தத் தாய். சரி மணியை ஆட்டிக்கிட்டு, வேலை செய்யாம, ஒரே இடத்துல மாடு நின்னுட்டு இருந்தா எப்படித் தெரியும் என்று கேட்டான். அது உன்ன மாதிரி பல்கலைக்கழகத்துல படிக்கலைப்பா. உங்கள மாதிரி குறுக்குபுத்தியெல்லாம் மாட்டுக்குக் கிடையாது என்று சொன்னாள் அந்தத் தாய். நம்முடைய படிப்பு இந்த நிலைமையிலதான் இருக்கு. இந்த மெக்காலே முறை படிப்பை வேண்டாம் என்று அப்போதே மகாத்மா காந்தி எச்சரித்தார். இப்போது படிப்பவர்களெல்லாம் கிராமத்தில் என்னுடைய படிப்புக்கு என்ன வேலை இருக்கிறது என்று நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.

இதில் இன்னொரு சூழ்ச்சியும் அடங்கியிருக்கிறது. இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுமென்றால் அதற்குத் தொழிற்சாலைகள் பெருக வேண்டுமாம். இந்தத் தொழிற்சாலைகளுக்குக் குறைந்தளவு கூலியில் வேலை செய்ய ஆட்கள் தேவை. அதனால், இந்த நகரங்களுக்குக் கவர்ச்சி முலாம் பூசி, மார்க்கெட் செய்து மக்களை, நகரங்களை நோக்கி இழுக்கிறார்கள். நகரங்களில் ஏதோ பெரிய சொர்க்கம் இருப்பதுபோல கட்டமைக்கிறார்கள்.
உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து உணவுச் சங்கிலியில் இருப்பதால்தான் பூமி இயங்குகிறது என்று படித்திருப்போம். ஆனால், இந்த உலகமயமாக்கல், நுகர்வோரிஸம் மனிதன் மட்டுமே வாழ வேண்டும். மற்ற உயிரினங்கள் எதுவும் தேவையில்லை என்று வலியுறுத்துகிறது. நாம் விழிப்போடு இருந்தால்தான் இயற்கையோடு இணைந்த ஒட்டுமொத்த உயிர்களையும் காப்பாற்ற முடியும்.
‘ஓடினேன் ஓடினேன் சாவின் எல்லை வரை ஓடினேன்’ என்று இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறோம். ஒன்று சாக வேண்டும் அல்லது திரும்பி வர வேண்டும். அப்படித் திரும்பி வரும்போது இயற்கையில் அதிகமான இழப்புகள் இருக்கும். இதனால்தான் நான், இயற்கைக்கு உகந்த ஃபுகோகா, நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கரின் ஜீரோபட்ஜெட் என இயற்கை விவசாயத்தின் பல நுட்பங்களைப் பண்ணையில் பயன்படுத்தி வருகிறேன்.
இதில் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். நடிப்பு போக மீதி நேரங்களில் விவசாயம் செய்து வருகிறேன். என்னுடைய மனைவிதான் முழு நேரமாக விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார். அடிப்படையில் நான் கன்னடக்காரனாக இருந்தாலும், இயற்கை விவசாயத்தில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்திலும் பல கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால், அழிந்துபோகும் ஓர் உலகத்தைக் காப்பாற்ற இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும். இயற்கையோடு வாழ இயற்கை விவசாயம்தான் கற்றுத் தரும். நான் ஏன் பசுமை விகடனுக்கு நன்றி சொன்னேனென்றால், இந்த இயற்கை விவசாயத்தை மக்களிடையே பரப்பும் முக்கியமான பணியைச் செய்து வருகிறது. அதற்காகத்தான்” என்றார் நம்பிக்கையோடு.
கருத்தரங்கில் பேசிய வல்லுநர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள், கண்காட்சியில் பங்கேற்றவர்களின் உரை வீச்சுகள்...
- அடுத்த இதழில்...