
உயிர்ப்பிப்போம்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
ஏரி, ஏந்தல், தாங்கல், கண்மாய், குளம்... இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ பெயர்களைச் சூட்டி நீர்நிலைகளை அழைத்தனர் நம் முன்னோர்கள். அதற்குக் காரணம் தண்ணீரின் அருமை, பெருமைகளை அவர்கள் அப்போதே உணர்ந்திருந்ததுதான். ஒருசொட்டு மழைநீரையும் வீணாக்காமல் இந்த நீர்நிலைகள் அனைத்திலும் நீரைச் சேமித்துப் பயன்படுத்தினர். வாழ்க்கையும் சுதந்திரமாக இருந்தது. ஆனால், மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்ய நினைத்த ஆங்கிலேய அரசு, ‘பொதுப்பணித்துறை’ என்பதை உருவாக்கி, நீர்நிலைகளைத் தன்வசப்படுத்திக் கொண்டது. அதுநாள்வரை நீர்நிலைகளின் மீது உள்ளூர் மக்களுக்கு இருந்த அதிகாரங்கள் பறிபோய்விட்டன.
சுதந்திர இந்தியா பிறந்த பிறகு, நீர்நிலைகளுக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பொதுப்பணித்துறையின் அதிகாரங்கள் மேலும் கடுமையாக்கப்பட, ஆண்டுதோறும் கோடைக்காலத்தில், நீர்நிலைகளைக் கிராமத்து மக்களே தூர்வாரிப் பராமரிக்கும் ‘குடிமராமத்து’ எனும் இயக்கம் முற்றாகத் தடைபட்டுப்போனது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் மெள்ள ஆக்கிரமிப்புக்குள்ளாயின. முறையாகத் தூர்வாருவதும் நின்றுபோனது.
தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டும்கூட நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும் என்கிற உணர்வு, நம் அரசுகளுக்கு வராமல் போனதுதான் சோகம். அதேசமயம், ‘பராமரிக்கிறோம்’ என்று சொல்லிப் பணத்தை ஒதுக்குவது மட்டும் வாடிக்கையாகிப் போனது. இப்போதும்கூட, பல நூறு கோடி ரூபாய்களை ஒதுக்கி, ‘இதோபார் குடிமராமத்துத் திட்டம்’ என்று படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நீர்நிலைகள்தான் உயிர்பெற்றபாடில்லை.
ஏரி, குளங்கள், ஆறுகள் என நீர்நிலைகளின்மீது சம்பந்தபட்ட கிராமத்து மக்களின் உரிமை உயிர்ப்பிக்கப்பட வேண்டும். ஊர்மக்கள் அடங்கிய குழுக்களிடம் மீண்டும் அவை ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தக் காலம்போலவே உண்மையான குடிமராமத்து உருவாகி, நீர்நிலைகளும் உயிர்ப்பிக்கப்படும்!
-ஆசிரியர்