
புறாபாண்டிபடங்கள்: ரா.ராம்குமார்
‘‘என்னுடைய தோட்டத்தில் 10 நோனி மரங்கள் உள்ளன. அதில் நோனிப் பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. அதை அப்படியே சாப்பிடமுடியவில்லை. சாறு எடுத்துத்தான் குடிக்க முடியும் என்று சொல்கிறார்கள். அதன் வழிமுறைகளைச் சொல்லுங்கள்?’’
ஜி.கோயில்பிள்ளை, காட்பாடி.

தூத்துக்குடி மாவட்டம், காளாம்பட்டியைச் சேர்ந்த மூத்த வேளாண் வல்லுநரும் முன்னோடி நோனி விவசாயியுமான சீனிவாசன் பதில் சொல்கிறார்.
‘‘சில ஆண்டுகளாக நோனி சம்பந்தமான விவரங்கள் கேட்டு, பலரும் என்னைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள். பசுமை விகடன் இதழிலும், இது சம்பந்தமான தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சணத்தி வகையைச் சேர்ந்தது ‘வெண் நுணா’ என்னும் ‘நோனி’ மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நோனிப் பழச்சாற்றுக்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளில் வரவேற்பு அதிகம் உள்ளன.

இதை வளர்ப்பதும் எளிது. அதைவிட எளிமையானது இதிலிருந்து ஜூஸ் எடுப்பது. தற்போது எங்கள் தோட்டத்தில் நோனியைச் சாகுபடி செய்துள்ளோம். பொதுவாக ஒன்றரை வயது முதலே, நோனி காய்க்கத் தொடங்கும். நோனி மரத்தில் பழுக்காது. எனவே, நாம்தான் பழுக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும். நோனிக் காய்கள் முதலில் மஞ்சள் நிறமாக இருக்கும். பிறகு, வெண்மை நிறத்துக்கு மாறும். காயைத் தொட்டுப்பார்த்தால் கெட்டியாக இருக்கும். இதுவே அறுவடை செய்ய ஏற்ற நேரம். அறுவடை செய்த நோனியைத் தண்ணீரில் அலசி, நிழலில் காய வைக்கவும்.

அடுத்து, பாத்திரக் கடைகளில் அப்பளக் கூடை என்று விற்பார்கள். அதில் நோனியைப் போட்டுப் பழுக்க வைக்கலாம். இறுக்கமாக மூடும் வசதிகொண்ட பாத்திரம் இருந்தாலும்கூட போதும். 10 நாட்களில் நோனி பழுத்துச் சாறு இறங்கிவிடும். இதை வடிகட்டி வைத்து, அதிகபட்சம் ஓர் ஆண்டு வரைகூட பயன்படுத்தலாம். காலை வெறும் வயிற்றில் 15 மில்லி நோனிச்சாற்றுடன் 100 மில்லி தண்ணீர் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். இரவு உணவுக்கு அரை மணிநேரம் முன்பு, இதே அளவு குடிக்கலாம். ஆக, நாள் ஒன்றுக்கு 30 மில்லி குடித்தால் போதும்.

ஒரு சிலருக்கு நோனிச்சாறு ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளாது. அதாவது, நோனிச் சாற்றைக் குடித்தால் வயிற்றுப்போக்கு, உடம்பு நமைச்சல் எடுக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், நோனிச் சாற்றைக் குடிப்பதை ஒரு வார காலத்துக்கு நிறுத்த வேண்டும். பின்பு, மீண்டும் குடித்துப்பார்க்கலாம். எனக்கு 85 வயது ஆகின்றது. ஆனாலும், வயலில் இறங்கிக் களை கொத்துகிறேன், மண்வெட்டி பிடித்து வேலை செய்கிறேன். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு நோனிச்சாறுதான் மூல காரணம்.
நோனிச் சாற்றைக் குடிக்கத் தொடங்கினால், நோய் நொடிகள் எட்டிப்பார்க்காது. கடுமையான உடல் உழைப்பாளிகளான விவசாயிகள், தங்கள் நிலத்தில் நோனி மரங்களை வளர்த்து, ஆரோக்கியத்தைக் காப்பது அவசியம். வந்த நோயைப் போக்கும், வரும் நோயைத் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. மேலும், கோவைக்கு அருகிலுள்ள சூலூர் பகுதியில் வேலுச்சாமி என்பவரும், இயற்கை முறையில் நோனிச் சாகுபடி செய்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகள் வயதுகொண்ட 40 செடிகளிலிருந்து, மாதம் 40 லிட்டர் நோனிச்சாறு எடுத்து விற்பனை செய்து வருகிறார். 5 கிலோ பழத்திலிருந்து 1 லிட்டர் சாறு கிடைக்கும். ஒரு லிட்டர் நோனிச் சாற்றை மேட்டுப்பாளையத்தில் உள்ள விவசாயி, குறைந்தபட்சம் ரூ.800 முதல் விற்பனை செய்துவருகிறார். ஆனால், இதன் விற்பனை வாய்ப்பு பெரியளவில் இன்னும் பெருகவில்லை. அதேசமயம், இதற்கான தேவை அதிகமாக உள்ளது. அதை முறைப்படி சந்தைப்படுத்தும் கலையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே நோனி மூலம் லாபம் பெற முடியும். இதில் முக்கியமான தகவல் நோனி மரத்தை முற்றிலும் இயற்கை உரங்கள் மூலமே வளர்க்க முடியும் என்பதுதான்.’’
தொடர்புக்கு, செல்போன்: 82205 53461.
‘‘அலங்காரக் கோழிகள் வளர்க்க விரும்புகிறேன். இதன் விவரங்களைச் சொல்லவும்?’’
ஏ.அந்தோணி, வடக்கன்குளம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அலங்காரக் கோழியின ஆராய்ச்சி விஞ்ஞானி பதில் சொல்கிறார்.

‘‘பொழுதுபோக்கு போலவும் செல்லப்பிராணி போலவும் அலங்காரக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் அலங்காரக் கோழி வளர்ப்பு, பெரியளவில் இல்லையென்றாலும், இதன்மூலம் பலன் பெற்ற சிலர் தொடர்ந்து அலங்காரக் கோழிகளை வளர்த்து வருகிறார்கள்.
அமெரிக்கன் கிரில், சில்வர் சில்கி, சில்வர் பெசன்ட், போலீஸ் கேப், குட்டைவால் கோழி, ஃபீனிக்ஸ் கோழி, பிரம்மா, பேந்தம், கொச்சின் பேந்தம், பிளாக்மினி கொச்சின், பூட்டேட் பேந்தம், பஞ்சுக்கோழி, டேபிள் ஃபைட்டர், செப்பரேட்டர், மினி வொய்ட் ரோஸ்கேப், கடக்நாத், கிராப்... எனப் பல வகையான அலங்காரக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
கோழிகளின் முட்டையிடும் திறன், வளர்ச்சி வேகம், உருவ அமைப்பு, குணநலன்களைப் பொறுத்து முட்டைக் கோழி, இறைச்சிக்கோழி, சண்டைக்கோழி, அலங்காரக்கோழி என்று இனம் பிரிக்கப்படுகின்றன.

அலங்காரக்கோழிகள் பெரும்பாலும் வெளிநாடுகளைத் தாயகமாகக் கொண்டவை. சின்ன உருவம், நளினமான நடை, பல வண்ண இறகுகள், கால் நுனியில் அடர்த்தியான ரோமம், இதெல்லாம் பெரும்பாலான அலங்காரக்கோழிகளின் அடையாளம். உயரம் குறைவாக, தத்தித்தத்தி நடக்கும் ஜப்பான் பேந்தம் ரகக்கோழிகள் அதிகமாக முட்டை வைக்கும்.
ஒற்றைக் கொண்டை, கால் நிறைய ரோமம் உள்ள கொச்சின் பேந்தம் ரகக்கோழிகள் நீண்ட நாள் அடைகாக்கும். தலையில் தொப்பி மாதிரி கொண்டை இருக்கும் போலீஸ் கேப், அரிவாள் மாதிரி வாலும், காலில் பின்னோக்கிய ரோமமும் இருக்கும் பூட்ஸ் பேந்தம், உலக அளவில் குறைந்து வரும் சீ பிரைட் இனம் என்று நிறைய இனங்கள் இருக்கின்றன.
நம்நாட்டுச் சண்டைக்கோழிகளைப்போல இருக்கும் இங்கிலீஷ் பேந்தம் ரகத்தை வெளிநாடுகளில் ‘டேபிள் ஃபைட்டர்’ என்று சொல்வார்கள். மேஜையின்மீது வைத்தே சண்டைப் போட்டி நடத்துவார்களாம். இது நீண்ட நாள் அடைகாக்கும். சேவலும் பெட்டையும் சேர்த்தே குஞ்சுகளைப் பாதுகாக்கும்.

அலங்காரக் கோழிகளில் அதிகம் விற்பனையாகும் ஆறு இனங்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு இனத்திலும் 4 பெட்டை, 1 சேவல் என 8 வாரம் தாண்டாத குஞ்சுகளை வாங்க வேண்டும். ஓர் இனத்துக்கு 5 கோழிக் குஞ்சுகள் வீதம் 6 இனங்களுக்கு 30 கோழிக் குஞ்சுகள். ஒன்றின் விலை 250 ரூபாய். இந்தக் கோழிகள் முட்டைப் பருவத்துக்கு வருவதற்கு 25 வாரங்கள் ஆகும். ஒரு கோழி ஆண்டுக்குச் சராசரியாக 60 முட்டைகள் வரை கொடுக்கும். மொத்தம் 24 பெட்டைகளிலிருந்து 1,440 முட்டைகள் வரை கிடைக்கும். சிறிய இன்குபேட்டரை வாங்கி வைத்துக்கொண்டால் முட்டைகளைக் குஞ்சுகளாகப் பொறித்து விற்பனை செய்யலாம்.
அழகுக் கோழிகள் வளர்ப்புமூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை லாபம் எடுக்கும் விவசாயிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். சென்னையிலுள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின், கோழியின ஆராய்ச்சி மையத்தில், அலங்காரக் கோழி பராமரிப்புத்துறை செயல்பட்டு வருகிறது. இங்கு தொடர்புகொண்டால் கூடுதல் விவரங்களைப் பெறலாம்.’’
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், கோழியின ஆராய்ச்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600051.
தொலைபேசி: 044 25552650.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.